Sat12022023

Last updateSun, 19 Apr 2020 8am

இந்திய நாசகாரமீன்பிடியும் சந்தர்ப்பவாத அரசியலும், இனவாதமும்

தமிழக மீனவர் படுகொலை: எல்லை தாண்டுவது தான் பிரச்சினையா?” என்ற தலைப்புடன் ”புதிய ஜனநாயகம்” கட்டுரையொன்று வெளியிட்டுள்ளது. அதே வேளை ம.க.இ.க.வின் ஆதரவு இணையத் தளமான ”வினவு” ,  ”நாகபட்டின மீனவர் வாழ்க்கை! சிறப்பு  ரிப்போர்ட் ” என்ற தென்னிந்திய மீன்பிடிச்சமூகம் சார்ந்த கட்டுரையையும் வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரைகளின் உள்ளடக்கம் மீனவர் கொலையின் பின்னணியில் உள்ள பல பிரச்சனைகளை, முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைப்பது போல புதைத்து விட்டு, சந்தர்ப்பவாதத் தளத்தில் நின்று பிரச்சனையைக் கையாளுகிறது.

நான் உட்பட எமது தோழர்கள் பலரால் எழுதப்பட்ட பல கட்டுரைகள் மீனவர் கொலையின் பின்னணியில் உள்ள பல சிக்கலான அம்சங்களை ஆதாரங்களுடனும், அரசியல் ரீதியாகவும் சுட்டிக் காட்டியிருந்தன.  ம.க.இ.க சார்ந்த எந்த அமைப்புக்களும் இரு கரையிலும் வாழும் மீனவர்களின் பரந்துபட்ட பிரச்சனையாக இதை அணுகி ஒன்றிணைந்த போராட்டமொன்றை முன்னெடுக்கத் தயாராகவில்லை. இதன் அர்த்தம்; நாம் முன் வைத்த ஆதாரங்களும், அரசியல் ஆய்வுகளும், எமது அமைப்பான புதிய ஜனநாயக மக்கள் முன்னணினால் முன்வைக்கப்பட்ட அரசியல் கோசங்களும்,  ம.க.இ.க சார்ந்தவர்களால் புரிந்து கொள்ளப்படவில்லை அல்லது அவர்களை அது சென்றடையவில்லை,. அதனால் தான் அவர்கள் விபரம் அறியாது, சந்தர்ப்பவாத சாக்கடையில் அரசியல் நடத்துகின்றனர் என யாராவது நினைத்தால்,  அது தவறான புரிதல்.

 

இந்தக் கட்டுரையாளரைப் பொறுத்தளவில் ம.க.இ.க சார்ந்த அமைப்புக்களின் மீனவர் பிரச்சனை சார்ந்த அரசியல் நிலைப்பாடு, மீனவர் துன்பத்தை வைத்து, மூன்றாந்தர அரசியல் செய்யும் இந்திய தமிழினவாதிகளின் அரசியலிலிருந்து பெரிதும் வேறுபட்டதல்ல. இந்த இருபகுதியும் இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டத்தின் நண்பர்களாக காட்டிக் கொண்டு முதலைக் கண்ணீர் வடித்தாலும், இவர்களால் கொடுக்கப்படும் அரசியல் முதன்மை என்பது அவர்களின் தேசத்தின் நலன் சார்ந்ததே.

இன்று இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் இனவாத அரசியலைத் தோற்கடித்து; தமிழ் மக்களுக்கான தீர்வைப்பெற எச்சசொச்ச புலம் பெயர் புலிகள் உட்பட பல சீரழிந்த புலம் பெயர் அரசியல்வாதிகள், மேலாதிக்க இந்தியப் பாசிச அரசுக்கு வால்பிடிக்க முயல்வதுடன், தென்னிந்திய இனவாதிகளான சீமான், வை.கோ, நெடுமாறன் போன்ற சீரழிந்த மூன்றாந்தர அரசியல்வாதிகளை இலங்கைத் தமிழ்மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக தலையில் வைத்து கொண்டாடுகின்றனர்.

மறுபுறத்தில் இடதுசாரிகள் எனவும் மக்கள் சார்ந்த அரசியல் செய்பவர்கள் எனவும் தம்மைக் கூறும் இலங்கைத் தமிழர்களில் ஒருபகுதியினர்,  ம.க.இ.க போன்ற இந்திய அமைப்புக்களை எதிர்காலத்தில் இலங்கையில் நடைபெறப்போகும் புரட்சியின் நட்புச் சக்திகளாகவும் பங்காளிகளாகவும் மதித்து, அவர்களுக்கு சிரம்தாழ்த்தி அரசியல் செய்கின்றனர்.

மேற்கண்ட இந்தக் காரணத்தினால் இலங்கை தமிழினவாதிகளும், புலம்பெயர் புரட்சிக்காரர்களும் கூட, இந்திய இனவாதிகளாலும்,  ம.க.இ.க போன்ற அமைப்புகளாலும், இலங்கைக் கரையில் நடைபெறும் இந்தியர்களின் நாசகார மீன் பிடியை மூடி மறைத்து, இந்திய மீன்பிடிசார் பெரும் மூலதனக்காரர்களுக்கு சார்பாக நடாத்தும் அரசியலைத் தட்டிக் கேட்க முடியாதோராகவுள்ளனர். ஏன் புலிகளின் பின் ஏகப்பிரதிநிதித்துவம் கதைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட இது வரை ஓர் அறிக்கை கூட விடவில்லை. இந்த சந்தர்ப்பவாத அரசியலானது இந்திய நாசகார மீன்பிடியால் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்களில் பெரும் பகுதியினரின் நாளாந்த சீவியத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. இதில் கவலைக்குரிய விடயமென்னவென்றால் இந்திய நாசகார மீன்பிடியால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் புலிகளுடன் நின்று கடைசி வரை போரிட்ட பல போராளிகளும், அவர்கள் சார் சமூகமும் ஆகும்.  இலங்கை அரசுக்கும், அதன் அடிவருடிகளுக்கும் எதிரான மனப்பான்மையும், தமிழ் தேசிய உணர்வும் கொண்ட இந்த தொழிலாளிகளை தமிழ்த் தரகுகளுக்கும், இனவாதிகளுக்கும், திடீர் அரசியல்வாதிகளுக்கும் இன்று தேவையில்லைத் தான். ஆனால் சிறு மனிதாபிமான தளத்தில் நின்றாவது இவர்களால் இந்த மக்களுக்காக குரல் கொடுக்க முடியாதுள்ளது, இவர்களின் இந்திய விசுவாசம். இங்கு ஆரம்பத்தில் கூறியது போல ம.க.இ.க சார்ந்த அமைப்புகள் பல கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளன. அக் கட்டுரைகளில் பேசப்படும் விடயங்களுக்கான பதில்கள் எமது தோழர்களாலும், என்னாலும் எழுதப்பட்டிருந்தாலும், அவர்களின் சில கருத்துக்களுக்கும், சில தவறான தகவல்களுக்கும் மீண்டும் மீண்டும் பதில் சொல்லப்பட வேண்டிய நிலை உள்ளது. பதில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டிய காரணங்களில் முதன்மையானது அக் கட்டுரைகளில் காணப்படும் இனவாதத்தை உள்ளடக்கிய கருத்துகளாகும்.

இந்திய கடற்கொள்ளையும், அதை மூடிமறைக்கச் சொல்லப்படும் காரணங்களும்

இந்திய தொழிலாளர்கள், நீரோட்டத்துடன் வலைகள் அடித்து செல்லப்படுவதனால் தான் எல்லை தாண்டுகின்றார்களே ஒழிய, இலங்கையின் கடல் பகுதியில் மீன் பிடிக்கவல்ல, என பல தடவைகள் ம.க.இ.க சார்ந்த அமைப்புகளின் கட்டுரைகளும், இந்திய நாசகார மீன்பிடிக்கு ஆதரவாக சந்தர்ப்பவாத துணை போகும் சில புலம் பெயர் “புரட்சியாளர்களும்” அத்துமீறலை நியாயப்படுத்துகின்றனர். உதாரணமாக பங்குனி 2011 புதியஜனநாயகம் இதழில், எல்லை தாண்டிய கடற்கொள்ளை இவ்வாறு நியாயப்படுத்தப்படுகிறது. “விசைப்படகுகளில் சென்று வீசுகிற வலைகளைக் கடல் தன் நீரோட்டத்துக்கு ஏற்ப பல மைல்கல் தூரம் இழுத்துச் சென்றுவிடுவதாகவும், இழுத்துச் செல்லப்படும் வலைகளை நீரோட்டத்தின் போக்கில் சென்றுதான் வெளியே எடுக்க முடியும் என்றும், பருவநிலைக்கு ஏற்ப மாறும் இத்தகைய கடல் நீரோட்டங்கள், பாக்குநீரினையில் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள பிரச்சனை தான் என்றும் கூறுகின்றனர் தமிழக மீனவர்கள்”

வழமை போன்று எல்லை தாண்டிய இந்திய நாசகார மீன்பிடியை ஆதரிப்போர் அனைவரும் சில சொற்கள், சொற்பதங்கள் போன்றவற்றின் பின்னாலும், இலகுவாக தெரிந்து கொள்ளக் கூடிய  தரவுகளை நேர்மையாக எழுதாமல், அதற்கு நேர்மறையான பொய்களை “மீனவர்கள் சொல்கின்றார்கள்” என்ற சொல்லாடல்களை உபயோகிப்பதன் மூலமும் தமது அரசியல் அங்கிடுதத்திதனத்தை வெளிப்படுத்துகின்றனர்.

உதாரணமாக, மேற்கண்ட புதியஜனநாயகத்தின் கட்டுரையில் “வீசுகிற வலைகளைக் கடல் தன் நீரோட்டத்துக்கு ஏற்ப பல மைல்கல் தூரம் இழுத்துச் சென்றுவிடுவதாகவும்” “இழுத்துச் செல்லப்படும் வலைகளை நீரோட்டத்தின் போக்கில் சென்று தான் வெளியே எடுக்க முடியும்” என்று சொல்லப்படுகிறது. இந்திய எல்லை தாண்டிய நாசகார மீன்பிடி, றோலர்கள் எனப்படும் இழுவைப் படகுகளாலேயே இலங்கைக் கரையோரத்தில் நடைபெறுகிறது. மூவாயிரத்துக்கும் அதிகமான இழுவைப் படகுககள் பாக்குநீரிணையில் இயற்கை அழிவை ஏற்படுத்தும் மீன் பிடியில் ஈடுபடுகின்றன. இவற்றில் ஈராயிரத்துக்கும் அதிகமானவை மன்னார் கரையோரத்திலிருந்து பருத்தித்துறை முனை வரையான பிரதேசத்தில் மீன்பிடிக்கின்றன. இவைகள் அனைத்தும் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டா இலங்கையில் கரைப்பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கும் உள்ளான பகுதிக்கு வருகின்றன?

அடுத்ததாக, இழுவைப்படகின் பின் கடையால் பகுதில் பிணைக்கப்பட்ட மடியையே இயந்திர வலுவின் உதவியுடன் படகு இழுத்துச் செல்கிறது. (இந்தத் தொழில்நுட்பம் பற்றி அறிய இந்தக் கட்டுரையை வாசிக்கவும்) மடியின் அல்லது வலையின் அசைவுகள் முழுவதும் படகின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அப்படி இருந்தால் தான் மீன்களை குறிவைத்து மடியின் உதவியுடன் பிடிக்க முடியும். ஒரு இழுவைப் படகின், (அல்லது புதியஜனநாயகம் கட்டுரை பாவிக்கும் சொல்லான விசைப்படகு) வலுவும், இழுதிறனும் நீரோட்டத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாததாக இருந்தால் அதனை நீரோட்டமும், கடல் அலையும் உள்ள எந்தக் கடலிலும் பாவிக்க முடியாது. குறிப்பாக பாக்குநீரிணையில் பாவிக்கவே முடியாது. இந்நிலையில் “வீசுகிற வலைகளைக் கடல் தன் நீரோட்டத்துக்கு ஏற்ப பல மைல்கல் தூரம் இழுத்துச் சென்றுவிடுவதாகவும்” “இழுத்துச் செல்லப்படும் வலைகளை நீரோட்டத்தின் போக்கில் சென்று தான் வெளியே எடுக்க முடியும் ”………….. என தவறான கருத்துகளை தமது அரசியலுக்குத் தக்கதாக பாவித்தபடி “பாக்குநீரிணையில் மட்டுமன்றி உலெகெங்கும் உள்ள பிரச்னை தான் என்றும் கூறுகின்றனர் தமிழக மீனவர்கள்” என மீனவர்களை சாட்சிக்கு இழுப்பது அரசியல் நேர்மையான விடயமல்ல. தன் தொழிலையும், தன்னைத் தானே மதிக்கும் பெருமையும் கொண்ட எந்தத் தொழிலாளியும் மேற்படி கருத்தை கூறியிருக்க முடியாது.

இதேவேளை இலங்கையில் பாவிப்பது போன்று வலைப்படுப்பு தொழில் இந்தியர்களாலும் செய்யப்படுகிறது. இன்று நைலோன் வலைபடுப்புத் தொழில் இந்தியர்களால் நாட்டுப் படகுகளிலும், கட்டுமரங்களிலும் கரையோரத்திலிருந்து ஐந்துக்கும் பத்து கிலோ மீற்றருக்கும் உட்பட்ட பகுதியிலேயே செய்யப்படுகிறது. இவர்கள் எல்லை தாண்டுவதுமில்லை, இவர்கள் எல்லை தாண்டி கடற்படையால் பாதிக்கப்பட்டதாக எந்தவித ஆதாரமுமில்லை. ஏன் இவர்கள் பாவிக்கும் வலை கூட அதில் கற்கள் கட்டப்பட்டதான ஒரு கிலோ மீட்டர் வரை நீளமானவையாகும். இவ்வலைகள் இலங்கையைத் தேடி நீரோட்டத்தில் இலங்கைக் கரை வரை அடைவதென்பது சாத்தியமில்லாத விடயம்.

மேலும், “விசைப்படகு” என்ற சொல் திட்டமிட்டதாக எந்தவித விளக்கமும் இன்றி இந்திய பெரும் மூலதன மீன்பிடிக்கு ஆதரவானவர்களால் பாவிக்கப்படுகிறது. இங்கு இவர்களால் “விசைப்படகு ” என்று கூறப்படுவது இயந்திரம் இணைக்கப்பட்ட படகுகளையே. இயந்திரம் கட்டுமரங்களிலும், வள்ளங்கள் எனப்படும் நாட்டுப்படகுகளிலும் கூட இணைக்கலாம். ஆகவே இன்று மீனவர் பிரச்சனை பற்றி விவாதிக்கும் போது எந்தவகையான “விசைப்படகு” என விபரிப்பதுடன் அதில் எந்த வகை வலைகள், உபகரணங்கள் மீன்பிடிக்கப் பாவிக்கப்படுகிறதென்பதை பகிரங்கமாக முன்வைத்து விவாதிப்பது நேர்மையானதாகும். அதை விடுத்து “பெரிய விசைப்படகு”, “சிறிய விசைப்படகு” என்ற சொற்பதங்களைப் பாவிப்பது விவாதத்தில் முக்கியமான விடயங்களை மறைப்பதற்கேயாகும். உதாரணமாக “பெரிய விசைப்படகு” என்ற சொல்லுக்குப் பதிலாக இழுவைப்ப்படகு என்ற சொல்லை பாவிப்பதை இந்திய நாசகார மீன்பிடியை ஆதரிப்போர் தமது கட்டுரைகளிலும், விவாதங்களிலும் தவிர்க்கின்றனர். காரணம் இவர்கள் அதை பாவித்தால், இவர்கள்

1. இந்திய மீன்பிடி சார் பெரும் பணக்கார வர்க்கத்திற்கு துணைபோவது

2. இயற்கை அழிவை ஊக்கிவிப்பது

3. இருகரையிலுமுள்ள கரையோர வறிய மீனவர்களின் பட்டினிச்சாவுக்கு மறைமுகமாக வழிவகுப்பது

4. இலங்கைத் தமிழ் மக்களின் நண்பர்களாக காட்டிக் கொள்ளும் இவர்கள்; அவர்கள் தேசத்தின் (அது தமிழ் ஈழமாக இருந்தாலென்ன இலங்கையாக இருந்தாலென்ன ) கடல் வளத்தை இந்திய மூலதனம் கொள்ளயடிப்பதற்கு துணைபோவதுடன், இலங்கையில் இனமுரண்பாட்டை பாவித்து இந்திய மேலாதிக்கத்திற்கு இலங்கையில் வழிவகுத்தல் போன்ற பல அரசியல் அயோக்கியத்தனங்கள் சந்திக்கு வராமல் பாதுகாத்துக் கொள்வதற்கு துணை நிற்கிறார்கள்.

அடுத்ததாக இந்திய மீன்பிடிசார் பணமுதலைகளின் ஏகபோக கடற்கொள்ளைக்கு வக்காலத்து வாங்குவோர், ரோலர் பாவித்து இலங்கைக் கரையில் நடைபெறும் நாசகார மீன்பிடியை மூடிமறைக்கச் சொல்லும் காரணங்கள் “கடலில் மீனவர்களுக்கு எல்லை தெரியாததனால், எல்லைமீறி மீன்பிடித்தனர் ” , “திசை தெரியாது, இருளில் இலங்கைக் கரையை அடைந்தனர்” போன்றவையாகும்.

மீனவத் தொழில் இலங்கை போன்று இந்தியாவிலும் சாதி, குறிப்பிட்ட சமூகம் சார்ந்த தொழிலாகும். இச் சமுகங்ககளில் மீனவத் தொழில் பரம்பரை பரம்பரையாக செய்யப்படும் தொழிலாகும். இதன் அடிப்படையில் இத்தொழிலை தொழிலாளர்கள் சிறுவயது முதலே தொழிலில் ஈடுபடுவதன் மூலம் கற்றுக்கொள்கின்றனர். அடிப்படையில் ஆரம்பத்தில் தொழில் “கற்கையில்” ஈடுபடும் மீனவ இளையோர்கள் கற்பது இயற்கை பற்றிய அறிவையே. காற்றின் வகைகள், மேகத்தின் நிறமும் தன்மையும், அதில் உதித்து மறையும் விண் மீன் சொல்லும் அறிகுறிகள், கடலின் நீரோட்டத்தின் தன்மை, கடல் வாழ் தாவரங்களின் காலநிலைக்கேற்ற மாற்றம், மற்றும் இவ் இயற்கை சார்ந்த அறிகுறிகளுகான கலைச்சொற்கள் போன்ற இன்னும் பல இயற்கைசார் அறிவை சிறுவயதிலிருந்தே பெறுகின்றனர். இந்தவகையில் ஒரு சாதாரண மீனவனால், உதாரணமாக கச்சைதீவுக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான கடற்பகுதியில் எந்தவித கருவியுமின்றி சீரான காலத்தில் நள்ளிரவில் கூட தொழில் செய்ய முடியும். ஏன் மாதகல், வல்வெட்டித்துறை போன்ற பிரதேசங்களில் இருந்து பல ஆண்டுகளாக கட்டுமரங்களில் நள்ளிரவில் நட்சத்திரங்களின் உதவியுடனும், இருகரைகளில் கரையோர வெளிச்சங்களின் உதவியுடனும் இந்தியக் கரைக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொண்ட வரலாறுகள் உண்டு. ஆனாலும் அது பழைய காலம் என யாராவது சொல்ல வந்தால் ஒருவகையில் அதுவும் உண்மை தான். இன்று நாம் வாழும் தொழில்நுட்பம் வாய்த்துள்ள காலத்தில் நட்சத்திரங்களை வைத்து திசை அறிவதும் கடற்றொழில் செய்வதும் சிரமம் தான். அதனால் தான் இன்று இந்திய மீனவர்கள் உலகத்தரம் வாய்ந்த அமெரிக்காவிலும், நோர்வே, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன கருவிகளை தமது இழுவைப் படகுகளில் பொருத்தியுள்ளனர். வினவு தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரையில் இலங்கைக் கடற்படை எந்த எந்தக் கருவிகளை இந்திய மீனவர்களிடமிருந்து பறிக்கின்றனர் என விளக்க பின்வருமாறு குறிப்பிடுகின்றனர் “மீன் இருப்பதைக் காட்டும் கருவி, எக்கோ கருவி, திசைகாட்டும் ஜி.பி.எஸ். ஆகியவற்றை பிடுங்கிக் கொள்வது”.

ஆகவே இவ்வளவு நவீன கருவிகளை இந்தியப் படகுகள் பொருத்தியிருப்பதாக வினவு இணையமே ஒத்துக்கொள்கிறது. ஆனால் அவர்கள் இந்திய நாசகார மீன்பிடிக்கு வக்காலத்து வாங்கி எழுதியுள்ள கட்டுரைகளில் மேல் கூறியது போன்று “கடலில் மீனவர்களுக்கு எல்லை தெரியாததனால், எல்லைமீறி மீன்பிடித்தனர்” “திசை தெரியாது, இருளில் இலங்கைக் கரையை அடைந்தனர்” போன்ற முன்னுக்குப் பின் முரணாக, தவறான தகவல்களை முன் வைத்து தமது மீன்பிடி சார்ந்த அரசியலை தகவமைக்க முயல்கின்றனர். இவ்வாறாக மீனவ சமுதாயத்தின் அறிவையும் அனுபவத்தையும் குறைத்து மதிப்பிடும் நடத்தையானது தலைக்கனம் மிகுந்த மேற்தட்டு வர்க்க அரசியல் செயற்பாடாகும்.

இனவாதமும் இலங்கையின் மீன்பிடிச்சமூகமும்

இந்திய மீன்பிடி மூலதனதிற்கு சாமரம் வீசுவோர், இந்திய நாசகார இழுவைப்படகுகள் இலங்கையில் மீன்பிடிக்க முன்வைக்கும், மிக கீழ்த்தரமான காரணம் என்னவெனில் “சிங்களவன் பிடிக்கிறான். இந்திய தமிழர்கள் நாங்கள் அங்கு மீன்பிடித்தால் என்ன” என்ற இனவாதக் கருத்தாகும். இக்கருத்து மீனவர்கள் சொல்கிறார்கள் என்ற பெயரில் இவ்வாறு சொல்கிறது வினவு “

முள்ளிவாய்க்கால் போருக்கு பிறகு இப்போது சிங்கள மீனவர்கள் அதிகம் வருகிறார்களாம். இவ்வளவு நாட்கள் புலி பயத்தில் இருந்தவர்கள் இப்போது அடிக்கடி வருகிறார்கள்.” இவ்வளவு நாட்கள் நீங்க சம்பாதிச்சிட்டீங்க, இனி நாங்க சம்பாதிக்கிறோம், இங்கு வராதே” என்றுதான் அவர்கள் சொல்வார்களாம். இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் எப்போதாவது தான் வருவதாக நாகை மீனவர்கள் சொல்கிறார்கள்.

இலங்கை கடற்படையின் முக்கிய நோக்கம் தமிழ் மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி, மிரட்டி பாக் நீரிணை மீன்வளத்தை சிங்கள மீனவருக்காக பாதுகாப்பதுதான் என்று நாகை மீனவர்கள் கூறுகிறார்கள்”

இந்த மாதிரியான இனவாதமும் சந்தர்ப்பவாத அரசியலும் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இலங்கை, இந்திய தமிழினவாதிகள் அனைவராலும் முன்வைக்கப்படுகிறது. இதனை அம்பலப்படுத்தி பல கட்டுரைகள் எமது தோழர்களால் இங்கு எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் திரும்ப திரும்ப இவர்கள் இந்திய மீனவர்கள் கொலை செய்யப்படும் பிரச்சனையில் இனவாதத்தைக் கக்கிய வண்ணமேயுள்ளனர். இதற்கெதிராக குரல் கொடுத்தால் இலங்கை அரசின் கைக்கூலி என்றும், முன்பு கடற்புலிகளாக போரிட்டு இன்றும் இலங்கை அரசிற்கும், அவர்களில் அடிவருடியான அரசியல்வாதிகளுக்கும் எதிரான அரசியல் கருத்தைக் கொண்ட மாதகல், பருத்தித்துறை மீனவர்களை டக்ளசின் ஆதரவு பெற்ற துரோகிகள் என்றும் முத்திரை குத்துகின்றனர். காரணம் இந்த மீனவர்கள் சிங்கள மீனவர்களால் தமக்குப் பிரச்சனை இல்லை என ஊடகங்களுக்கு கூறியதும், இந்திய இழுவைப்டகுகளை எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் சிறைப் பிடித்ததுவுமேயாகும். ஆனால் இந்திய மேலாதிக்கம் இலங்கை அரசுடன் சேர்ந்து இந்திய இழுவைப் படகுகளை விடுதலை செய்ததுடன், பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் குறை ஒன்றையும் நிவர்த்தி செய்யவில்லை. இதைப் பற்றி மேற்படி இனவாதிகள் இதுவரை ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர் சங்கங்களுடன் இணைந்து இன்று தென்னிலங்கை மீனவசமூகம் அவர்களின் உரிமைக்காகவும், நட்டஈடு பெற்றுக்கொடுப்பதற்காகவும் போராடுகின்றனர். இந்த தென்னிலங்கை மீனவர்கள் சிங்கள, மற்றும் சிங்கள மக்களுடன் கலந்த தமிழர்களும் ஆவர் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

மேலும் ”வினவு”வும், தமிழினவாதிகளும் கூறுவது போல சிங்கள மீனவர்கள் பாக்கு நீரிணையில் தொழில் செய்வதில்லை. அவர்கள் பருத்தித்துறை கரையோரத்தை தாண்டுவதுமில்லை. அவர்கள் வரவேண்டிய தேவையுமில்லை. அவர்கள் பிடிக்கும் மீனினம், இந்தியர்கள் எல்லை கடந்து இழுவைப்படகுகள் மூலமும், சுருக்கு வலைகள் மூலமும் மீன்பிடிக்கும் இலங்கையின் கடற்பகுதியில் காணப்படுவதில்லை. அத்துடன் அவர்களின் ஓடு கயிறு மூலம் மீன்பிடிக்கும் முறை இந்தியர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் பகுதிகளில் பாவிக்க முடியாது. ஆகவே இந்த இனவாத சக்திகளின் குள்ள நரித்தனத்தை நன்கறிந்து, இருகரை சிறுமீனவர் சமூதாயம் வளர பாடுபடும் சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

மணலை மைந்தன்

17/03/2011