Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தேசிய இனப் பிரச்சினை பற்றிய எமது கொள்கை நிலைப்பாடு

தேசிய இனப் பிரச்சினை சார்ந்த எமது கொள்கை நிலைப்பாடானது, ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்கி, அவர்களின் பொருளாதார மற்றும் சமூக கலாச்சார அபிவிருத்தியினை பெற்றுக் கொள்வதற்கான, மிகவும் விஞ்ஞானபூர்வமான வழிகளை ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையிலான ஒன்றையே கொண்டு இருப்பதுடன்

1. இலங்கை ஒரு பன்மைத்துவ சமூகத்தை கொண்டதுடன் சிறுபான்மையினர் தேசிய இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இந்த தேசிய இன ஒடுக்குமுறைகள் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் அரசாங்கம் ஒன்றின் கீழேயே இல்லாதொழிக்கப்படும். அதேவேளை ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் உத்தரவாதப்படுத்துகின்ற ஒரு முற்றுமுழுதான சுய தன்னாட்சி அலகுகள் இனம், கலாச்சாரம், பொருளாதாரச் சிறப்பம்சங்கள் மற்றும் செறிவு என்பவற்றைக் கருத்தில் கொண்டு விஞ்ஞானபூர்வமாக வடிவமைக்கப்பட்ட வரையறைகளுக்கு அமைய உருவாக்கப்படும்.

2. இனப் பிரச்சினையானது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் ஆட்சியின் கீழ் மட்டுமே முற்றுமுழுதாக தீர்க்கப்பட முடியும் என்ற போதிலும், நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு நிரந்தரமான இனப் பிரச்சினைக்கான தீர்வு தமிழ், முஸ்லீம் சமூகங்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களுடன், ஏற்கனவே இருக்கக்கூடிய குறைந்தளவிலான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களுடன், மக்களுக்கான பரந்த உரிமைகளை வெல்லுதற்கான போராட்டங்களுடன் ஒன்றுபட்டு நின்று, அந்த உரிமைகளை ஒரு பரந்த சோசலிஸ சமூக மாற்றத்துக்கான போராட்டத்துடன் ஒருங்கிணைத்தல் மூலம் மேற்கொள்ளப்படும்.

3. (அ) வடக்கு, கிழக்கு, மலையக மற்றும் பிற தோட்டப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் பண்பாட்டில் மற்றும் மொழியியல் அடிப்படையில் ஒரு தனியான பொது அடையாளத்தைக் கொண்டவர்கள். அத்தோடு சமூகங்கள் மத்தியில் தனித்துவ அடையாளத்தை உடையவர்கள். மொழி, பண்பாடு, பொருளாதாரம் மற்றும் பல்வேறு பிற அம்சங்கள் அடிப்படையாகக் கொண்டு ஒரு இனமாக அவர்கள் வழமையான முதலாளித்துவ அரசாங்கங்களால் ஏற்றத்தாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
முதலாளித்துவ பிரதிநிதித்துவ கட்டமைப்புகளில் கூட அவர்கள் விசேட அடக்குமுறைகள் மற்றும் அதிகாரத் தலையீடுகள் என்ற வழி முறைகளால் அநீதிக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். ஆகவே இனப் பிரச்சினைக்கு முடிவு எட்டப்படும்.

(ஆ) இந்த இனவொடுக்குமுறையுடன் கூடவே தோட்டங்கள் தனியார் சொத்தாகவுள்ள காரணத்தினால் பொதுநல சேவைகள் இல்லாமலும் முதலாளித்துவ சுதந்திரங்கள் கூட இல்லாமலும் தோட்டங்களில் அடிமைப்படுத்தப் பட்டிருக்கின்ற மலையகம் மற்றும் தெற்குப் பகுதியிலும் ஏனைய தோட்டப் பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்கள். இம் மக்கள் விசேட பொருளாதார, சமூக பண்பாட்டு அரசியல் அடக்குமுறையை முகம் கொள்கிறார்கள். அவர்கள் அடையாளம் தனித்துவமானது. ஒரு இலங்கைப் பிரஜை அனுபவிக்கின்ற இருப்பிடம், கல்வி, சுகாதார பராமரிப்பு, நிலம், பொதுப் போக்குவரத்து, மாதாந்த ஊதியம் மற்றும் மற்றைய தொழிலாளர்களுக்கு உள்ளவாறான உரிமைகள் வழங்கப்படுவதற்கும் தோட்டத் தொழிலாளர்கள் சமூகத்தின் கலாச்சார வாழ்வினை கட்டியமைப்பதற்கும் அவர்களது அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

(இ) பல்வேறு மாகாணங்களில் பரந்தும் கிழக்கில் செறிந்தும் தனித்துவமான மத மற்றும் கலாச்சார அடையாளங்களுடன் வாழும் முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான முதலாளித்துவ அரசின் அடக்குமுறையை, ஒடுக்குமுறையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

4. முப்பது வருட கால யுத்தத்திலிருந்து விடுபட்டு வந்த இலங்கைச் சமூகம் விசேட சவால்களை எதிர் கொள்கிறது. அவற்றை வெற்றி கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. அதன் நிமித்தமாக பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு போராட்டத்துக்காக சமூக சக்திகள் அணிதிரட்டப்படும்.

(அ) வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டை ஒழித்து சிவில் நிர்வாகத்தை நிறுவுவதற்கு போராடும் அதேவேளை, மக்களின் ஜனநாயக இருப்பினை மறுத்தலுக்கு எதிராகவும் மற்றும் நாடு முழுவதுமான இராணுவ மயமாக்கலுக்கு எதிராகவும் போராடுதல். அதேவேளை மேலதிக படையணிகளை திருப்பியழைத்தல் மூலம் வடக்கு மக்கள் மேலான அடக்குமுறைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தல் மற்றும் இராணுவத்தை முகாம்களுக்குள் மட்டுப்படுத்தி அவர்களை நாடு முழுவதும் சிவில் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தல். புதிய உயிரியல் தடய இலத்திரனியல் அடையாள அட்டையினை மட்டுமல்லாது தேசிய அசமத்துவத்தைப் பேணுகின்ற அடையாள அட்டைகளையும் ஒழித்தல். மற்றும் முதலாளித்துவவாதிகளின் தேவைகளுக்கு உகந்ததான பிரித்து வைக்கின்ற அடையாளமுறைகள் யாவற்றையும் ஒழித்தல். வடக்கு செல்வதற்கு விசேட அனுமதி பெறுதல் மற்றும் வீடுகளில் குடும்பத்தினர் உள்ளடங்கிய புகைப்படங்களை தொங்கவிட வேண்டும் போன்ற அச்சுறுத்தல்களை இல்லாதொழிக்கப் போராடுதல்.

(ஆ) மாகாண சபைகள் தேசிய இனப் பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வல்ல என்பதில் மாறாத நிலைப்பாட்டில் உள்ள அதேவேளை, இலங்கையின் முதலாளித்துவ அரசு மற்றும் இனவாதத்தின் பல்வேறு கருத்தாக்கங்கள் என்பனவற்றால் வடக்கு-கிழக்கு மற்றும் ஏனைய மாகாணசபைகளுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிராக போராடுதல். அத்தோடு இனவாத அடிப்படையில் மாகாண சபைகளை கலைத்தல் என்பது உள்ளடங்கலான சர்வாதிகாரத் தலையீடுகளுக்கு எதிராக போராடுதல்.

(இ) வடக்கு மற்றும் கிழக்கில் அபகரிக்கப்பட்ட நிலங்களை அம்மக்களிடம் திருப்பி ஒப்படைத்தல் மற்றும் விவசாயம் மற்றும் பிற தேவைகளுக்காக ஏற்படும் நிலப் பிரச்சினைகளை நியாயமாகத் தீர்த்தல்.

(ஈ) காணாமல் போனோர்கள் குறித்த முழுமையான விசாரணை, அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டித்தல், உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குதல் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல், இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் வாழுகின்ற மக்களை அவரவர் நிலங்களில் மீளக் குடியமர்த்தல், மக்களுடைய பங்களிப்புடன் மீளக் குடியமர்த்தப்படுபவர்களின் தேவைகளை நிறைவேற்றுதல், போரினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நியாயமான இழப்பீடுகளை வழங்குதல். போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் அதனால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளுக்காகவும் விசேட அரச திட்டம் ஒன்றை ஏற்படுத்தல்.

(எ) ஆயுதமேந்திய குழுக்களின் ஆயுதங்களைக் களைதல். சட்டத்துக்கு முரணான வகையில் மறைவில் நடாத்தப்படும் அரச பயங்கரவாதத்தினை முற்றிலும் நீக்குதல்.

ஏ) தேசிய மொழிகள் மேலான பாகுபாடுகளின் வரலாற்று பிரச்சினைகளை தீர்க்கும் வண்ணம் சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை தேசிய மொழிகளாக உருவாக்குதல்.

நிறைவாக

இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்யும் பேரினவாத தலைவர்களும் அவர்களின் கட்சிகளும், ஒடுக்கப்படும் தேசிய இன மக்களுக்கு எக்காலத்திலும் நியாயமான, அம்மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவல்ல தீர்வினைத் தரப் போவதில்லை. ஒடுக்கப்படும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே எமக்கான தீர்வை நாமே பெற்றுக்கொள்ள முடியும். அப் போராட்டத்துக்கான முன்னிலை வகிக்கும் முன்னிலை சோசலிசக் கட்சிக்கு, இத்தேர்தலில் இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் தமது ஆதரவை வழங்க வேண்டும். இடதுசாரிகளின் கைகளைப் பலப்படுத்த சுட்டியல் சின்னத்துக்கு உங்கள் வாக்குகளை அளிக்குமாறு சகோதரத்துவத்துடன் வேண்டுகோள் விடுக்கிறோம்.

முன்னிலை சோசலிசக் கட்சி