Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 8

பணப்பிரச்சினைக்குத் தீர்வு

நாம் ஏற்கெனவே வந்த நோக்கங்களில் ஒன்றான பணப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவது. அதற்காக நாட்டில் ஏற்கெனவே இருந்த மற்றத் தோழர்களுடன் கதைத்தோம். நாம் எவருமே முன்பு ரெலோவில் இருந்தோம் என்பதைத் தவிர வேறு எந்தவகையான உறவுகளும் நிர்ப்பந்தங்களும் கட்டுப்படுத்தலும் இல்லாத நிலையில் இருந்தோம். ஆனால் இந்தியாவில் இருந்த பெண் தோழிகளின் நிலையினைக் கருதித்தான் அந்தப் பிரச்சனைகள் தீரும் வரை தொடர்ந்து வேலை செய்வதென முடிவெடுத்தோம். அதாவது, யார் விரும்பினாலும் அவர்கள் சொந்த வாழ்க்கைக்குச் செல்லலாம் என்ற நிலையில் இருந்தோம்.

நானும் என்னுடன் வந்த தோழரும் பெண் தோழிகளின் பிரச்சினை முடியும்வரை சேர்ந்து வேலை செய்வதென்ற முடிவில் இருந்தோம். அன்றைய எமது சந்திப்பில் பணத்தை ஏற்பாடு பண்ணிக்கொண்டு திரும்பவும் இந்தியா செல்வதற்கு முடிவு செய்யப்பட்டது. எனது நிலைமைகளை வீட்டிற்குத் தெரியப்படுத்தி நான் நாட்டில் இருப்பது நல்லதல்ல என்றும் திரும்பவும் இந்தியா போக முடிவுசெய்து விட்டேன் என்றும் கூறினேன். அவர்களைப் பொறுத்தவரையில் என்னைப் பிரிவது கவலையாக இருந்தாலும் அது நல்ல முடிவாகவே அவர்களுக்கும் பட்டது.

ரெலோவில் இருந்த சுதன், தாஸ் குழுவினரின் தயவில் நாட்டில் ஏற்கெனவே நின்றார். அவரில் பற்றுக்கொண்டவர்களும் வெளியேறிய உறுப்பினர்களுமாகப் பத்துப் பேரளவில் இந்தியா போவதற்குச் சுதனால் படகு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர். அவர்களுடன் அவர்கள் ஒழுங்கு செய்த படகில் நாம் இருவரும் திரும்பவும் இந்தியா போகப் புறப்பட்டோம்.

திரும்பவும் இந்தியா செல்லல்

இந்த முறை எனது இந்தியப் பயணம் முந்தியதைப் போன்றதல்ல. மிகவும் மாறுபட்டிருந்தது. முன்பு மனதில் இருந்த சந்தோசம், எதிர்பார்ப்பு, எதிர்காலத்தினைப் பற்றிய நம்பிக்கை, நாட்டு விடுதலை எல்லாமே இப்போதைய பயணத்தில் இருக்கவில்லை. இந்தியா திரும்பிப் போகின்றோம் என்பதைத் தவிர மனதில் எந்த ஒரு மகிழ்ச்சியும் இல்லை. வெறும் உணர்ச்சியற்ற நடைப்பிணம் போல இருந்தேன். அதைவிட படகின் பயணத்தில் ஏற்பட்ட கஸ்ரங்களை அனுபவங்களை ஒரு வாரத்தில் திரும்பவும் பெறப்போகின்றேன் என நினைத்து அது வேறு கவலையாக இருந்தது.

படகில் ஏறியவுடன் அதன் முன் பக்கத்தில் உட்கார்ந்து நேவியினைப் பார்க்குமாறு கூறினார்கள். படகில் யாருமே முன்னுக்கு இருக்க விரும்புவதில்லை. ஏனெனில் படகின் வேகத்திற்கு அதிகமாக தூக்கிக் குத்தப்படுவது முன்பக்கமாகும். ரெலோவில் இருந்து பிரிந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தோழர் நவம் ( இவர் தற்போது இலண்டனில் வசிக்கிறார்) என்பவருடன் சேர்ந்து முன் பக்கத்திலே இருந்தேன். இரண்டு மாதத்திற்குப் பின் அவர் என்னைக் காண்கின்றதனால் பல விடயங்கள் பேசிக் கொண்டு போகலாம் எனக் கூறினார்.

இந்த முறை படகு அலைகளுடன் சேர்ந்து போனதால் ஒருவிதமான குலுக்கல் இல்லை. ஒரு துளி கடல் நீர் எம்மில் படவில்லை. எவருமே சத்தியும் எடுக்கவில்லை. நாம் மாதகல் பகுதியில் இருந்து புறப்படும் போது சுமார் மாலை 6.30 மணி இருக்கும். கரையில் இருந்து பார்க்கும் போது நேவியின் கப்பல்களில் ஒன்று வலது பக்கத்திலும் மற்றது இடது பக்கத்திலும் நிற்பதைக் கவனித்தோம். எனினும் பயணத்தினை ஒத்திவைக்காமல் இரு கப்பலுக்கும் நடுவாக நாம் போய் விடலாம் என்ற முடிவை ஓட்டிகள் எடுத்தனர்.

சுமார் 7.15 மணி அளவில் ஒரு வெடிச் சத்தம் கேட்டது. சில நிமிடங்களின் பின் மூன்று நான்கு வெடிச் சத்தங்கள் கேட்டன. நேவியின் இரு கப்பல்களிலிருந்தும் எமது படகை நோக்கி ஷெல் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. நாம் வந்த படகில் மூன்று மோட்டார்கள் பொருத்தி இருந்தாலும் இரண்டு மோட்டார்களின் உதவியால் தான் இதுவரை பயணம் செய்தோம். மூன்றாவது மோட்டாரை ஆரம்பிக்க முயற்சித்தனர். அந்த நேரம் பார்த்து மூன்றாவது மோட்டர் வேலை செய்யவில்லை. அதுவரை எமது படகுக்கு தொலைவில் விழுந்த ஷெல்கள் இப்போது எமது படகுக்கு முன்னால் விழத் தொடங்கின. அதாவது அவர்களின் ஷெல் தாக்குதல்களின் எல்லைக்குள் நாம் நிற்கின்றோம் என்று தெரிந்தது. எல்லோரும் பதட்டப்பட்டோம். மீண்டும் எனக்கு சீ என்று போய் விட்டது.

ஒரு வழியாக மூன்றாவது மோட்டாரை இயக்கினார்கள். அதற்குப் பின் எமது படகின் வேகம் அதிகரித்து நேவியின் தாக்குதலில் இருந்து தப்பினோம். இரவு பதினொரு மணியளவில் வேதாரண்யம் வந்தடைந்தோம். அடுத்த நாள் காலை சென்னைக்குப் புறப்பட்டோம். எம்மோடு வந்தவர்கள் முன்னாள் ரெலோ உறுப்பினர்களாகவும் அவர்களின் உறவினர்களாகவும் இருந்ததினால் எமக்கும் அவர்களுக்கும் நெருக்கமான அரசியல் உறவுகள் இல்லாதபடியாலும் நாம் அவர்களை எம் வீட்டிற்குக் கூட்டிச் செல்ல விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்கு வேறு இட வசதிகள் இல்லாததனால் அவர்கள் இடம் எடுக்கும் வரை அவர்களை தற்காலிகமாக எங்களுடன் தங்க வைக்க வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது.

ரமேசுக்கு மரண தண்டனை

அந்தப் படகினில் வந்தவர்களில் சிலர் ரமேசுடன் சென்றனர். சிலர் வெளிநாடுகளுக்குப் போவதற்குமான முயற்சிகளில் ஈடுபட்டனர். அந்தநேரத்தில் ரமேஸ் குழுவினர் சுதனையும் தம்மோடு சேர்க்க முற்பட்டனர். ஆரம்பத்தில் சுதன் ரெலோவுடனும் புலிகளுடனும் முரண்பட விரும்பவில்லை. ஆனால் ரமேசின் வற்புறுத்தலின் பின் ரமேசுடன் சேர்ந்து புலியுடன் சேர உடன்பட்டார். ஏற்கெனவே கூறியது போல் ரமேஸ் தனக்கு விரும்பியவர்களை ரெலோவிடம் இருந்து பிரித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ரெலோவின் திட்டப்படி ரெலோவின் உறுப்பினர்களில் சிலர் சுண்டல் வியாபாரிகளாகவும் மற்றும் பல மாறுவேடங்களில் மரீனா கடற்கரையில் நின்றார்கள். ரமேஸ் அங்கு ஒரு ரெலோ உறுப்பினரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ரமேஸ் அந்த இடத்திற்கு வந்தவுடன் ஏற்கெனவே தயார் நிலையில் இருந்த ரெலோ உறுப்பினர்கள் ரமேசைப் பிடித்து பின்னர் மரணதண்டனை வழங்கியதாக செய்தி எமக்கு வந்தது.

இனி ரமேசின் பிரச்சினை நமக்கு இருக்காது என்பதனால் எமக்கு கொஞ்ச நிம்மதி ஏற்பட்டது. சில மாசங்களின் முன்பு இதே ரமேஸ், சுதனின் பிரச்சினைகளுக்காகப் போராடிய எமக்கு ரமேசின் மரணதண்டனைச் செய்தி நிம்மதியைத் தந்தது, அன்று ரமேசுடன் போவதற்கு முடிவெடுத்த சுதன் இந்த செய்தியைக் கேட்டதும் உடனடியாக ரெலோவுக்கு தூது அனுப்பினார். இரு தினங்களுக்குள் ரெலோவின் பிரதேசத்துக்குள் வீடு எடுத்துப் போய் விட்டார். ரமேசையும் சுதனையும் நம்பி ரமேசுடன் ரெலோவை விட்டுப் பிரிந்து புலிகளுக்குள் வந்தவர்கள் புலிகளாக மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் சுதனோ தனது உயிரைப் பாதுகாப்பதற்காக ரெலோவின் பாதுகாப்பினைத் தேடி ரெலோவின் பிரதேசத்துக்குள் வந்து விட்டார்.

அந்தநிலையில் சில மாசங்களின் பின் புலிகளில் இருந்து இரண்டு உறுப்பினர்கள் எம்மைச் சந்திக்க வந்தனர். அவர்களில் ஒருவர் மனோ மாஸ்ரரின் அபிமானி. அவர் மனோமாஸ்ரர் கொல்லப்பட்டபின் தனக்குப் புலிகளில் தொடர்ந்தும் இருக்க முடியவில்லை என்றும் புலியை விட்டு விலகப் போவதாகவும் தங்களுக்கு தங்குவதற்கு இடம் தர முடியுமா என்றும் கேட்டார். மற்ற நபர் புலிகளை விட்டு வந்து புதிய ஸ்தாபனம் ஒன்றை அமைத்து எம்முடன் சேர்ந்து வேலைசெய்ய விருப்பம் தெரிவித்தார்.

எமது நிலைமையோ நாளாந்தம் வாழ்க்கைக்கே பணம் இல்லாத பரிதாப நிலை. எம்முடன் பெண் தோழிகளும் இருந்தனர். எமக்கே பாதுகாப்பில்லை. எம்மால் உங்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது. ஆனால் இருப்பதற்கு இடம் தரலாம் என்;றோம். மீண்டும் ஒரு வாரத்தின் பின்னர் திரும்பவும் வந்தார்கள். தாங்கள் தங்கி இருக்கும் முகாமிலிருந்து 100 பேர் வரையில் புலிகளை விட்டு ஆயுதங்களுடன் பிரிவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றும் தங்களுக்கு இடம் ஒழுங்கு செய்யுமாறும் கூறினார்கள். இருநூறு பேர் வரையில் ஆயுதங்களுடன் வருகிறார்கள் என்று கேள்விப்பட்டதுடன் எனக்கு முதலில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. எனினும் 100 பேர் வரையில் வருபவர்களில் யார் யார் வருகிறார்கள்? அதன் விளைவு நமக்கு என்னவாக இருக்கும் என்பதில் தெளிவாக இருந்ததினால் நாம் அவர்களை முழுவதாக மறுத்து விட்டோம். அதாவது 100 பேருடன் இங்கு வரவேண்டாம் என்றோம். இந்த நிலையில் நாம் மலிவான வாடகையில் ஒரு சிறிய இடத்தினை ஆண்களுக்கு என எடுத்தோம்.

மதகுரு அன்ரன் சின்னராசா கல்வி கற்க உதவுதல்

அந்தக் காலகட்டத்தில் எம்முடன் இருந்த பெண்களில் சிலர் படிப்பதற்காக பெற்றோர்களின் உதவியுடன் தனியாகப் போய் விட்டனர். ஒரு சிலரின் மனநிலை வேறாக இருந்தது. நம் நாட்டின் விடுதலைக்காகப் போராட வந்தவர்கள் நாங்கள். இனி ரெலோவில் இருந்து போராட முடியாது. பிரிந்த நாமோ புதிய ஸ்தாபனத்தைக் கட்டப் போவதில்லை. அதனால் வேறு இயக்கத்தில் சேர்ந்து போராட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தனர். நாம் எவருமே அவர்களின் முடிவுக்குக் குறுக்கே நிற்கவில்லை.

அந்த நிலையில் புலிகளைச் சேர்ந்த மதகுரு அன்ரன் சின்னராசா அவர்களின் தொடர்பு அவர்களுக்குக் கிடைத்தது. இந்தப் பெண்கள் செல்லும் தேவாலயத்துக்கும் அந்தத் தேவலாய மதகுரு இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் மதகுரு அன்ரன் சின்னராசாவை அறிமுகப்படுத்தினார். அதன் விளைவாக அன்ரன் சின்னராசா இந்தப் பெண்கள், பாடசாலையில் அனுமதி எடுத்து படிப்பதற்கு வசதிகள் செய்வதாகக் கூறினார். நாமோ அது நல்ல விடயம் என்றும் எம்மால் தனிப்பட்ட நபர்களைப் படிக்க வைக்க முடியாது என்றும் படிப்பதானால் எல்லாரையும் தான் படிக்க வைக்க வேண்டும். ஆனால் அதற்கோ எங்களிடம் வசதி இல்லை. மதகுரு உங்களுக்கு வசதி செய்வார் என்றால் நல்ல விடயம். அவருடன் போங்கள் என்று சொன்னோம். எனவே அவர்களின் விருப்பப்படி 5 பேர் அளவில் மதகுருவுடன் போய் விட்டனர். (அப்போது இந்த மதகுரு புலிகளுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.)

போனவர்களில் மூவர் தாம் படிப்பதற்காகப் போகவில்லை. இப்படியே இங்கே இருக்க முடியாது. புலிகளுடன் சேர்ந்து போராடப் போகின்றோம் என்று கூறினர். அதை நாம் ஏற்கெனவே எதிர்பார்த்தபடியால் மகிழ்ச்சியுடன் அவர்களை அனுப்பி வைத்தோம். அவர்கள் புலிகளில் சேருவதற்கு விரும்பினாலும் அன்று வரையும் புலிகளுக்கு பெண்களைச் சேர்ப்பது சம்பந்தமாக எந்த எண்ணமும் இருக்கவில்லை. ஆரம்பத்தில் தாதிமார் பயிற்சி போன்றவற்றைப் படிப்பது என்ற கருத்துக்கள் தான் புலிகளிடம் இருந்தன. அதன் பின்னர் தான் அவர்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டது. புலிகளின் முதல் பெண் படைப்பிரிவினர் எம்மிலிருந்து போன பெண் தோழிகள் தான். சோதியா மற்றும் சிலர். இவர்களின் பெயர்கள் நினைவில் என்னிடம் இல்லை. யாராவது இதனை முழுமைப்படுத்தினால் சந்தோசப்படுவேன்.

புலிகள் எம் வீட்டில் அடைக்கலம்

அந்தக் காலகட்டத்தில் புலிகளிடமிருந்து விலகி பதினெட்டுப் பேர் வரையில் எங்களிடம் வந்தார்கள். அவர்களில் அகிலன் (இவர் கம்பர்மலையை சேர்ந்தவர் மனோமாஸ்ரரின் கொலையினால் அதிருப்தியடைந்து புலிகளில் இருந்து வெளியேறியவர்) மற்றவர் வேணு (மட்டக்களப்பை சேர்ந்தவர்). இவர்கள் மூவரையே என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடிகிறது. இவ்வாறு புலிகளில் இருந்து பிரிந்து வந்த மிகுதிப் பேரின் விபரங்களை தெரிந்தவர்கள் பதிவுசெய்யவும்.

அவர்களுக்கு இருப்பிட வசதிகளை நாமும் வேறு சிலரும் செய்திருந்தோம். அவர்கள் நான் வீட்டில் இல்லாத சமயத்தில் எமது வீட்டிற்கு வந்திருந்தனர். நான் வீட்டிற்கு வந்தபோது எனக்குத் தெரியாத பன்னிரண்டு பேர் எமது வீட்டில் இருப்பதைக் கண்டு நான் வீட்டிற்குச் செல்லவில்லை. அவர்கள் வந்தவுடன் அவர்களை வீட்டில் விட்டு விட்;டு எமது தோழர்கள் கடைக்குச் சென்று விட்டனர்.

ஏற்கெனவே எம்முடன் கதைத்த இரு புலி உறுப்பினர்களும் வீட்டில் இல்லாததால் எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. யார் இவர்கள் வீட்டில் இருந்த மற்றத் தோழர்கள் எங்கே என்ற கேள்விகள் எனக்கு ஏற்பட்டிருந்தன. எமது இருப்பிடத்திற்கு மேலேயுள்ள வீட்டின் உரிமையாளரிடம் போய் நிலைமைகளைக் கேட்டேன். அவரோ இவர்கள் ஊரிலிருந்து வந்திருப்பதாக மற்றத் தோழர் சொன்னதாகக் கூறினார். நான் இவர்கள் யாரையும் ஊரில் பார்க்காதபடியால் வீட்டிற்குச் செல்லாமலே வெளிவீதியில் நின்று வீட்டில் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

அந்த வீட்டின் உரிமையாளரைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லித்தான் ஆக வேண்டும். மற்றைய வீட்டு உரிமையாளர்கள் எங்களிடம் அதிகபட்ச வாடகை வாங்குவது தவிர வேறு எந்த உதவியும் செய்ததில்லை. ஆனால் இவரோ குறைந்த வாடகை வாங்கியதுடன், தன்னால் முடிந்த உதவிகளையும் இடைக்கிடை செய்து வந்தார். உதாரணமாக, கூப்பன் (ரேசன்)அட்டையில் மலிவு விலையில் வாங்கக்கூடிய பொருட்களை வாங்கித் தருவார். அயல் வீடுகளில் உள்ள பாவிக்காத கூப்பன் அட்டைகளையும் வாங்கித் தருவார். வாடகை கொடுக்கப் பணம் இல்லாவிட்டால் எம்மிடம் பணம் கேட்டு எம்மை நெருக்குவதில்லை. அதற்காக அவர் ஒன்றும் வசதியானவரும் இல்லை. மற்ற வீட்டின் உரிமையாளர்களோ எம்மிடம் எவ்வளவு பணம் பறிக்கலாம் என்றும் வெளிநாட்டுப் பொருட்கள் கிடைக்குமா என்றும் எதிர்பார்த்தவர்கள்.

கூப்பன் அட்டையில் சாமான்கள் வாங்குவதே ஒரு தனிக்கலை. அதாவது பொருட்களின் அளவுகள் பார்த்துக் கொடுக்கும்போது அரைவாசியை வெட்டி விடுவார்கள். பணம் முழுவதற்கும் கொடுத்தாலும் அவர்கள் தருவதைத் தான் வாங்க வேண்டிய நிலையில் தான் சாதாரண மக்கள் இருந்தனர். ஆனால் நாம் கடைக்குப் போகும்போது எம்மை மரியாதையாகவும் கொடுக்கும் அளவில் அரைவாசி இல்லாமல் முக்கால் வாசியைத் தருவார்கள். நாம் இயக்கக்காரர் என்பதால்தான் அவ்வாறு நடந்தார்கள். அதை அறிந்த எம் வீட்டுக்காரரும் அயலவர்களும் தமக்குத் தேவையான சிலவற்றையும் எம்மிடம் கொடுத்துக் கடையில் வாங்கிக் கொண்டனர். பின்பு எமது பழக்கத்தினால் கூப்பன் அட்டை இல்லாமலே கடைக்காரரும் எமக்குத் தேவையான பொருட்களை வழங்கினர். அக்கூப்பன் கடைக்காரரின் உணர்வுபூர்வமான ஆதரவு இருந்ததினால் பல சலுகைகளை நாம் பெற்றோம்.

அரச வைத்தியசாலைகளுக்குச் சென்றால் கூடச் சாதாரண மக்களின் கஷ்டங்களைப் போன்ற கஷ்டங்களை நாம் எதிர்நோக்கவில்லை. போராளிகள் என்பதினால் இலவச மருத்துவமும் வெகுவிரைவில் டொக்ரரின் விசேஷ கவனிப்பும் எமக்குக் கிடைத்தது. அந்த நிலை எல்லாம் ராஜீவ் கொலைக்குப் பின் மாறி விட்டது.

எமது வீட்டிற்கு வந்தவர்கள் யார் என்பது எமது தோழர் மூலம் தெரிந்த பின்புதான் நான் வீட்டிற்குப் போனேன். அதுவரை காலமும் எமது சாப்பாடு எம்மிடம் இருக்கும் பணத்தைப் பொறுத்தும் நாம் விரும்பியபடியும் இருந்தது. இப்போதோ 15 பேருக்கு மேல் வீட்டினில் இருப்பதால் கட்டாயம் சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆண்களின் சமையல் என்பது பணத்தின் இருப்பைப் பொறுத்தே அமைந்தது. சோறும் பருப்பும் உருளைக்கிழங்கு போட்ட ஒரு குழம்பும் ஒரு முட்டையும் தான் பொதுவான சாப்பாடு. வித்தியாசமாகச் சாப்பிடுவது என்பது ஒரு நாள் பருப்பு அதிகமாகவும் மற்றைய நாள் உருளைக்கிழங்கு அதிகமாகவும் மாற்றி மாற்றிச் சாப்பிடுவதும், அரிசியை வடித்து கஞ்சியைக் குடிப்பதும், குழம்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கஞ்சியைக் குழம்பில் ஊற்றி கட்டியாகவும் பார்ப்பதற்குக் குழம்பாகவும் சமைப்பதுமே. அவ்வாறு பலவிதமான சமையலைப் பயின்றோம். சிலவேளைகளில் மத்தியானம் சோறு. இரவில் சோறு. காலை பழஞ்சோறு என்றெல்லாம் சாப்பிட்டிருக்கின்றோம். பாண் மற்றும் வேறுவிதமாகச் சமையல் செய்து சாப்பிடுவதென்பது எம்மிடம் இருக்கும் பணத்தைப் பொறுத்துத்தான் அமையும்.

சாப்பாடு சம்பந்தமாக ஒரு சில சம்பவங்களை சொல்லித்தான் ஆகவேண்டும். நாம் ரெலோவில் இருந்தபோது ஒரு நாளைக்கு 7 ரூபா வீதம் பணம் தந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் பலர் ஒன்றாக இருந்து சமைக்கும்போது அந்தப் பணத்தில் ஒரு நாகரீகமான சாப்பாட்டினை சாப்பிடக் கூடியதாக இருந்தது. அப்படி ஈ.பி.ஆர்.எல்.எஃவ், ஈரோஸ் போன்ற இயக்கங்களிலும் ஒரு நிலைமை இருந்ததாகக் கேள்வி. ஆனால் புலிகளிடம் மாத்திரம் சுமார் 50 ரூபா வரையில் செலவழித்து ஒருவருக்குத் தேவைக்கு மிஞ்சிய வகையில் சாப்பாடு போட்டு வளர்த்தனர் என்றும் சாப்பாடு மற்றும் பணப்பிரச்சினை எதுவும் புலிகளில் ஏற்படாதவாறு பிரபாகரன் பார்த்துக் கொண்டார் என்றும் கேள்வி. அதாவது தலைமைக்கு அவற்றால் பிரச்சினை ஏற்படாதவாறு நடந்து கொண்டார்.

ஆனால் மற்ற இயக்கங்களில் உதாரணமாக ரெலோவில் தேவையான பணம் இருந்தும் உணவு சம்பந்தமாக தலைமைகள் அதிக கவனம் செலுத்தவில்லை. போராளிகளில் பலர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டடிருந்தனர். அதனால் ரெலோவில் பல விளைவுகளை ஏற்பட்டிருந்தன. நான் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு ரெலோவில் நடந்ததாகக் கூறப்படும் சாப்பாட்டுடன் சம்பந்தப்பட்ட இரு சம்பவங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

சுமார் 300-450 பேர் வரையில் இருந்த கொட்டிலில் சாப்பாடு சமைப்பதென்பது இலேசான காரியமல்ல. அத்துடன், சுகாதார வசதிகளையும் யாரும் கணக்கெடுத்துக் கொள்வதில்லை. சோற்றின் கஞ்சியை வடிப்பதற்கு சாக்கினைப் பயன்படுத்தினார்கள். கஞ்சி வடித்தபின் சாக்கினை கொட்டிலின் மேலோ புல்லின் மீதோ போட்டு விடுவார்கள். அதனில் ஈ, இலையான் முதலியன உட்காரும். அடுத்தநாள் மீண்டும் அந்தச் சாக்கினையே கஞ்சி வடிப்பதற்கு உபயோகிப்பர். அதனை அறிந்த ஒரு போராளி சமையல் முறையையும் அதன் கேவலங்களையும் அறிந்து தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒரு கதை உலாவியது.

இரண்டாவது சம்பவம் காலையிலோ, இரவிலோ சுண்டல் கடலை சாப்பாடு சம்பந்தப்பட்டதாகும். கடலையில் நாலு தரங்கள் உள்ளன. தரங்குறைந்த புழுத்துப் போன நாலாவது தரமான கடலையைத் தான் எமக்குச் சாப்பாடாகத் தந்தார்கள். நாம் இருந்த கொட்டில்களுக்கு அண்மையில் பலவகையான வீடுகளும் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. எமது சாப்பாடுகளும் நாம் விரும்பிய இடங்களில் சாப்பிடக் கூடியதாக இருந்தது. இவ்வாறு கடலையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு போராளியின் கடலையைப் பார்த்த வீடுகட்டும் கூலித் தொழிலாளியான ஒரு பெண், மாட்டிற்கு (காளைக்கு) போடும் கடலையை மனிதன் சாப்பிடுகிறானே என்று கவலைப்பட்டு, தான் கொண்டுவந்த தோசையை அவருக்குக் கொடுத்ததாகவும், அதைச் சாப்பிட்ட அந்தப் போராளி அதை எல்லோருக்கும் சொல்ல, பலரும் சாப்பிடும் நேரத்தில் சாப்பாட்டினை அந்தக் கூலித் தொழிலாளர்களின் பார்வையில் படக்கூடியதாகச் சாப்பிடத் தொடங்கினர். அவர்களின் நோக்கம் மற்றைய போராளிக்கு நடந்த மாதிரி தங்களை யாராவது கவனிப்பார்களா என்பதாகும். சாப்பிடுவதற்கும் சரி தேநீர் குடிப்பதற்கும் சரி கியூவில் நின்று சிறைக்கைதிகள் போல் சாப்பிட வேண்டியிருந்தது. அதனை தட்டிக்கேட்ட ஒருவரை நாலு நாட்களுக்கு மேல் மலசலகூடத்தில் அடைத்து வைத்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டது.

1. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1

2. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 2

3. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 3

4. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 4

5. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 5

6. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 6

7. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 7