Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின் போராட்டம்” தளர்வை நோக்கிச் சரிந்திருப்பதாகத் தெரிகிறது.  கடந்த வாரம் கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் வைத்துப் பொலிசாரினால் கொல்லப்பட்ட மாணவர்கள் கஜன், சுலக்ஸன் ஆகியோரின் மரணத்துக்கு நீதியான தீர்வு கிட்டும்வரை பல்கலைக்கழக இயக்கத்தை தவிர்ப்பது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் விடுத்திருந்தனர். இந்த அறிவிப்பு பகிரங்க வெளியில் வந்தபோது பல்கலைக்கழக நிர்வாகமோ, மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளோ மாற்று அபிப்பிராயங்களையும் மறுப்புகளையும் தெரிவித்திருக்கவில்லை. ஆகவே, “நீதி கிடைக்கும்வரை இயங்கா மறுப்பு நடவடிக்கை“ அநேகமாக வெற்றியடையும் என்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கேற்ற மாதிரி, பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் அமையவில்லை.

கொல்லப்பட்ட மாணவர்களின் உணர்ச்சிகரமான இறுதிச்சடங்குகளின் பிறகு அரசியற் கட்சிகளின் ஏற்பாட்டில் ஒரு ஹர்த்தால் நடந்தது. அதுவும் உணர்ச்சி வசப்பட்ட ஒரு ஏற்பாடே. ஆனாலும் வடபகுதி துக்கத்தில் தோய்ந்தாகக் காண்பித்தது. மறுநாள் கடைகளிலும் தெருக்களிலும்  தீபாவளிப்பண்டிகைக்கான ஏகப்பட்ட சனக்கூட்டம். இந்த நாட்களில் நாட்டையே உலுக்கிய துயரச்சம்பவம் நடந்ததா? என்று யாரும் சந்தேகப்படக்கூடியமாதிரியே களைகட்டின வடக்கின் நகரங்கள். தொடர்ந்து தீபாவளிப்பண்டிகை. மாணவர்களும் தீபாவளிப்பண்டிகையோடு வீடுகளுக்குச் சென்று விட்டனர். பலர் பண்டிகைக் கொண்டாட்டங்களில் கரைந்து விட்டனர். பலர் முகப்புத்தகம், இணையம் போன்றவற்றில் பிஸியாகியாகிப் போனார்கள்.

இத்தகைய பின்னணியில் தொடர்ந்தும் பல்கலைக்கழகத்தில் “இயங்கா நிலை”யை எப்படிப் பேணுவது என்று ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாமல் மாணவர் அமைப்புப் பிரதிநிதிகள் குழம்பினர். ஏற்கனவே விடுத்திருந்த “இயங்கா நிலை“ அறிவிப்பை கனதியான முறையில் நடைமுறைப்படுத்துவதாக இருந்தால், அதற்கு முழுமையான அளவில் மாணவர்களுடைய ஒத்துழைப்பும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆதரவும் தேவை. ஆனால், அதற்குரிய மாதிரி ஒரு கூட்டுத்தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இதற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டது. மாணவர் ஒன்றியம் சீராகச் செயற்படவில்லை என. இதற்குக் காரணம், மாணவர் ஒன்றியத்தின் செயற்படு காலம் முடிவடைந்திருப்பதால், புதிய நிர்வாகம் தெரிவு செய்திருக்கப்பட வேணும். ஆனால், அது நடக்கவில்லை. அதனால், எந்தத்  தீர்மானங்களையும் உரிய முறையில் எடுக்கவும் செயற்படுத்தவும் முடியாதிருக்கிறது என்று இருந்தாலும் பழைய நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று பல்கலைக்கழகத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், புதிய நிர்வாகம் தெரியப்படாத காரணத்தினால், பழைய நிர்வாகத்தினர் சற்றுத்தளர்வடைந்த நிலையிலேயே உள்ளனர். இதனால் உரிய தீர்மானங்களை எடுப்பதிலும் செயற்திறனிலும் ஆர்வம் குறைந்த நிலையே காணப்படுகிறது.

இந்த நிலையில்தான் பல்கலைக்கழகத்தின் “இயங்கா நிலை“ அல்லது “செயற்பாட்டு முடக்கம்“ என்பது சோர்வடைந்து தோல்வியான ஒரு நிலையை எட்டியிருக்கிறது. ஏனென்றால், இப்படி ஒரு தீர்மானம் அறிவிக்கப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. “முதற்கோணல் முற்றும் கோணல்“ என்பதைப்போல, இந்தப் போராட்டத்தை திட்டமிட்ட முறையிலும் முன்னெடுத்த முறையிலும் தவறுகளும் பலவீனங்களும் இருந்துள்ளன. இதனாலேயே இது இப்படிச் சிதைவை நோக்கித்திரும்பியுள்ளது. சரியான வழிகாட்டலும் திறமையான தலைமைத்துவமும் இல்லாமையே இதற்குக்காரணம். இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைப்பது என்பது விரிந்த தளத்தில், அது எவ்வாறு முன்கொண்டு செல்லப்பட வேண்டும் என்று தெளிவாகச் சிந்தித்துத் திட்டமிட்டிருக்க வேணும். குறிப்பாகத் தனியே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் இந்தப் போராட்டம் என்றில்லாமல், இதை இன்னும் விரிவாக்கி, ஏனைய பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்புடன் நடத்தியிருக்கலாம். அதற்கான சாத்தியங்களும் இருந்தன.

இந்த மாணவர்களின் கொலையை அடுத்து. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளுடன் இதற்கான பேச்சுகளை நடத்தியிருந்தனர். இருந்தும் அதற்கான பதிலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் உரிய முறையில் கொடுக்கவில்லை..

ஆனால், கூட்டுச் செயற்பாட்டுக்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தயாராகவே இருந்தனர். அந்த வாய்ப்பை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் தவற விட்டனர். அதற்குக் காரணம், அவர்களின் பின்னணியில் இருந்து இயக்கும் அரசியற் சக்திகளே. அந்தச் சக்திகள்தான், மாணவர் ஒன்றியத்தின் புதிய தெரிவிலும் குழப்பங்களையும் தாமதங்களையும் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. இதில் இரண்டு கட்சிகளின் கைகள் உள்ளன. ஒன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. மற்றது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அல்லது தமிழ் மக்கள் பேரவை. இவை தமது செல்வாக்கை மாணவர் அமைப்புகளின் மீது கொண்டிருப்பதற்காக ஏட்டிக்குப்போட்டியான அரசியல் நடவடிக்கைகளையும் வழிகாட்டல்களையும் மேற்கொள்கின்றன. இந்த இரண்டு பட்ட நிலையில் மாணவர் அமைப்பு மட்டுமல்ல, பல்கலைக்கழக நிர்வாகமே ஒரு குழப்பமான நிலைக்குள்தான் சிக்குண்டிருக்கிறது. இதனால் எதைப்பற்றியும் உரிய முறையில் வெளிப்படையாகப் பேசவோ, தீர்மானம் எடுக்கவோ, செய்பாட்டுத்திட்டத்தை முன்னெடுக்கவோ முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்தமாதிரியான உறுதிப்பாடற்ற  நிலைமைகளினால், ஒரு சில பீடங்களைத்தவிர்ந்த ஏனைய பீடங்கள் வழமையைப்போல இயங்கத் தொடங்கின. இது பலருக்கும் குழப்பங்களை உண்டாக்கியது. ஏன் இந்த இரண்டு பட்ட நிலை என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் உருவாகியது? இந்தத் தளர்வு நிலையைப் பயன்படுத்தி, கணிசமான விரிவுரையாளர்களும் உத்தியோகத்தர்களும் பல்கலைக்கழகத்தை மெல்ல இயங்கு நிலைக்குக் கொண்டு வந்தனர். “இல்லை, நாம் தொடர்ந்து எமது மாணவர்களின் கொலைக்கான நீதி கிடைக்கும் வரை, முறையான உத்தரவாதம் கிட்டும்வரை தொடர்ந்து போராட வேணும்“ என்று தெரிவித்த ஒரு தொகுதி மாணவர்கள் “இயங்கா நிலை“யைப் பேண முற்பட்டனர். இதேவேளை பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளை மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், சந்திப்பதற்கு இன்னொரு புறத்தில் ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. நிர்வாகமும் இதற்கு ஏற்றமாதிரி காய்களை நகர்த்தியது. இந்த நிலையில் மாணவர் பிரதிநிதிகள் அமைச்சரைச் சந்திப்பதா? இல்லையா? என இரண்டு பட்ட கருத்துகள் உருவாகின. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அணி, சுவாமிநாதனைச் சந்திக்க வேணும் என்று சொன்னது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவான அணியினர் இதைத் தவிர்க்க வேணும் என்றனர். இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதற்கு என்ன செய்வது என்று தெரியாது, “இயங்கா நிலையைப்பற்றி“ எந்த முடிவும் எடுக்கமுடியாமல் பலர் மெல்லக் கலைந்து சென்றனர்.

இந்த நிலை ஏன் உருவாகியது என்றால், முன்னரே குறிப்பிட்டதைப்போல. ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும்போது, அதைத் திசை திருப்புவதற்காக இப்படி எதிர்பாராத நடவடிக்கைகளை வெவ்வேறு சக்திகள் முன்னெடுக்கும். அந்த நிலையில் எப்படி அதைக் கையாள்வது, அது தொடர்பான முடிவுகளை எப்படி எடுப்பது என்பதை தொடக்கத்திலேயே தீர்மானித்திருக்க திட்டமிடப்பட்டிருக்கவும் வேணும். இதற்குத்தான் சரியான வழிகாட்டல்கள் தேவை என்பது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் பெரும் போராட்டங்களில் பங்கெடுத்த ஒரு அமைப்பு. இனவன்முறையினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாராமரித்தது, புயலினால் பாதிக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு களத்திற்குச் சென்று உதவியது, தமிழ் பேசும் மக்களுடைய போராட்டத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லும் அரசியற் போராட்டங்களுக்கும் கலை வெளிப்பாடுகளுக்கும் ஆதரவளித்துக் களமாக இருந்தது, ஒடுக்கப்பட்ட மக்களுடைய நீர்ப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பல கிணறுகளை அமைத்துக் கொடுத்தது எனப் பெரியதொரு பங்களிப்புப் பட்டியல் உண்டு. அப்பொழுது பன்முகச்சிந்தனைகளின் மையமாகவும் பல்வகைச் சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் இடமளிக்கும் பண்போடும் இருந்தது. பின்னாளில் இதெல்லாம் ஒடுங்கி, ஒற்றை மையச் சிந்தனைக்குட்படத்தொடங்கியது. அத்தகைய ஒற்றைச் சிந்தனையாளர்களின் கைகளே விரிவுரையாளர்களிடத்திலும் மேலோங்கியது. இதனால் குறுகிய அடிப்படையிலேயே செயப்பாடுகளும் எடுக்கப்படும் தீர்மானங்களும் அமைந்தன. இப்போது நடந்து கொண்டிருப்பதும் இதுதான். இதனால்தான் பின்னாளைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் போராட்டங்கள் எதுவும் வெற்றியடையாமல், ஒரு சில நாள் அதிர்வுகளோடு முடிந்து போவனவாக உள்ளன. போராட்டம் என்பது பல் பரிமாணத்தில், மேலும் பரிமாணமடைந்து வளர்ந்து நம்பிக்கையுட்டும் வகையில் அமைய வேணும். அதற்குப் பல தரப்பிலிருந்தும் ஆதரவு அலைகள் உருவாக வேணும். இதுவே போராட்டத்தின் அடிப்படை விதி.

ஆனால், இப்பொழுது நடந்திருக்கும் இயங்கா நிலைப் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் ஏனைய பீடங்களின் உதவியையே – ஆரவையே பெற்றுக்கொள்ள முடியாமல் சுருங்கி விட்டது. இப்போது அமைச்சர் சுவாமிநாதன் வழங்கிய வாக்குறுதிகளின்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மாணவர்கள் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி சில வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார். மாணவர்களின் கொலைதொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு ஒரு மாதத்தில் விவரம் தரப்படும் என்று கூறியிருக்கிறார். இந்தப் பதில் மாணவர்களுக்குத் திருப்தியைத் தரவில்லை.  ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முன்பாக, அவரைச்சந்திக்கும் மாணவர் அணி எப்படி இந்த விவகாரத்தை உணர்ச்சிபுர்வமாகவும் அறிவுபுர்வமாகவும் கையாள வேணும் என்று முறையாகத் தீர்மானிக்கப்படவில்லை. எல்லாமே ஒரு அவசர ஏற்பாடாக நடந்து முடிந்திருக்கிறது. இதனால் உரிய முறையில் தயார்ப்படுத்தல்களைச் செய்வதற்கு முடியவில்லை.

மாணவர்களின் கொலையை அடுத்து ஏனைய மாணவர்கள் கொந்தளிப்புடன் உணர்சிகரமாகவே இருந்த காட்சி மனதில் தோன்றுகிறது. அப்பொழுது “இந்தப் பிரச்சினைக்கு நீதியான தீர்வு கிட்டாது என்றால், அது ஒரு யுகப்புரட்சியில் கொண்டு போய் விடும்“ என மாணவர் படை கொந்தளித்துக் கொண்டிருந்தது. இப்படிக் கொந்தளித்துக்கொண்டிருந்த மாணவர்களின் உணர்சியைப் புரிந்து கொள்ள முடியும்.  அது தவிர்க்க முடியாத ஒன்று என்பதும் விளங்கக் கூடியதே. கொலை நடந்த விதமும் மாணவர்களுடைய நிலையும் உணர்ச்சிக்கான ஊற்றாக இருந்தன. கொல்லப்பட்ட மாணவர்களின் மரண நிகழ்வுகளும் மிகவும் உணர்ச்சிகரமாகவே நடந்தன. அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இந்தக் கொலையை வைத்துத் தங்கள் நலன்களை அடைய வேண்டாம் எனப் பகிரங்கமாகவே மாணவர்கள் தெரிவித்திருந்தனர். கஜனின் வீட்டில் நடைபெற்ற இரங்கற் கூட்டத்தில் உரையாற்ற முற்பட்ட வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் குருகுலராஜா மாணவர்களின் எதிர்ப்பினால், தன்னுடைய அஞ்சலி உரையைப் பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலைகூட ஏற்பட்டது. அப்போது ஏனைய அரசியல்வாதிகளும் மிகக் கவலையோடு மௌனமாக இருந்தனர். மாணவர்கள் இறந்த கவலையை விட. அஞ்சலி உரையைக்கூட ஆற்றமுடியாத அளவுக்குத் தள்ளப்பட்டு விட்டோம் என்ற கவலையே இவர்களுக்கிருந்தது. இதற்கெல்லாம் காரணம் வழிகாட்டிகள் வழியடைப்பாளர்களாக மாறியிருந்தமையே.

எல்லாவற்றையும் தொகுத்துக் கூட்டிக்கழித்துப்பார்த்தால், முதலில் ஒரு போராட்டத்தின் தேவை, அதன் தாற்பரியம், அதை முன்னெடுக்கும் விதம், அது உண்டாக்கப்போகும் சாதகபாதக நிலைமைகள், அதை பிற சக்திகள் எப்படிக் கையாள முற்படும் அல்லது தடுக்கமுனையும் என்ற முன்னெச்சரிக்கை, இறுதி வெற்றி அல்லது இறுதி விளைவு என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளப்படும் ஒரு விளக்கம் தேவை. அதுவே ஒருங்கிணைந்த பலத்தை உண்டாக்கும். இந்தப் பலத்தை மேலும் பன்மடங்காக்குவது எப்படியென்றும் சிந்திக்க வேணும்.

இதேவேளை இன்னொன்றையும் இங்கே குறிப்பிடுவது அவசியம். தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தால், அதை அரசாங்கமோ எதிர்த்தரப்புகளோ திசைதிருப்பவும் அதைப் பலவந்தமாக அடக்கவும் முற்படலாம். அதற்கு வேறு சாயங்களைப் புசலாம் என்று ஒரு தரப்பினர் சந்தேசம் தெரிவிக்கின்றனர். இது அதிகப்படியான சிந்தனை என்றாலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அப்பால், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களையும் உள்ளடக்கி, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தால் ஒரு சந்தர்ப்பத்தில் கூட இதற்கு பயங்கரவாத முத்திரையோ புலி முத்திரையோ குத்த முடியாமல் போகும். ஆக, தமது பலவீனங்களுக்கு மற்றவர்களிடம் குறைகாண்பதற்குப் பதிலாக, அவற்றை எப்படிக் களைவது சிறப்பு என்று சிந்திக்க வேணும். அதுவே அறிவின் மாண்பு.

-சிவராசா கருணாகரன்