Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சம உரிமைப் போராட்டங்களும் போராடும் மக்களும்

இலங்கையில் இன்று தினமும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிக்கப்படும் குடிமக்கள் ஒன்று கூடி நின்று தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக கண்டன ஆர்ப்பாட்டம் - கவனயீர்ப்புப் போராட்டம் - மனுக் கொடுக்கும் ஊர்வலம் - மறியல் போராட்டம் - உண்ணாவிரப் போராட்டம் என்ற வடிவங்களில் செயற்பட்டு வருகின்றனர்.

2009ல் யுத்தத்தில் வெற்றி கொண்டவர்களின் அடக்குமுறை நடவடிக்கைகள் நாடு பூராவும் பரவியிருந்தது. தோற்கடிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பரிகாசம் செய்யப்பட்டு பலவித துன்புறுத்தல்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தனர். சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன.

உண்மைகளை மூடி மறைக்கும் நடவடிக்கையினால் பல குடிமக்கள் கொல்லப்பட்டனர் - இன்னும் பலர் கடத்தப்பட்டுக் காணாமலேயே போயினர். உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடிய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த அரச பயங்கரவாத நடவடிக்கைகள் இலங்கையின் அடித்தளக் குடிமக்களை இன-மத-சாதி-பிராந்திய தடைச் சுவர்களை உடைத்துக் கொண்டு வெளியே வந்து ஒன்றிணைய வைத்தது. படிப்படியாக இலங்கையின் இனப்பிரச்சனையின் தாற்பரியத்தையும் அதன் பின்னணி நோக்கங்களையும் அதனால் லாபம் ஈட்டுபவர்கள் யார் என்பதனையும் புரிந்து கொண்ட குடிமக்கள் ஓரணி சேர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தனர்.

சர்வாதிகார ஆட்சிக் காலத்திலேயே சிறை-சித்திரவதை-கொலை-கடத்தல்-காணாமல் போதல் என்ற எதிர்வினை அனுபவங்களுடன் தென்னிலங்கையில் தொடங்கப்பட்ட இந்தக் குடிமக்களின் போராட்டங்கள் இன்று நாடு பூராவும் பரவலாக்கப்பட்டு மக்கள் மத்தியில் விரிவடையத் தொடங்கியுள்ளது.

இந்தப் போராட்டங்கள் யாவும் நாடளாவிய சாதரண குடிமக்களின் வாழ்க்கைக்கான அன்றாட அடிப்படை அத்தியாவசிய தேவைகளை வேண்டியே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர்-குடியிருப்பு-குடியுரிமை-வேலை வாய்ப்பு-சம்பளம்-கல்வி-சுகாதாரம்-சுற்றாடல்-விவசாயம்-மீன்பிடி-நீதி-ஓய்வூதியம் ஆகிய அனைத்து துறைகளிலும் மக்களுக்கு எதிராகவே சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இது புதிய தாராளவாத உலகப் பொருளாதார பொறிமுறைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டி செயற்படுத்தப்படும் திட்டங்களாகும். இதற்கான தரகர்களாகவும் - முகவர்களாகவும் எமது அரசாங்கங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

அதேவேளை இனவாதத் தணலில் குளிர் காயும் அரசியல் தலைமைகளின் இருப்புக்கு இப் போராட்டங்கள் அச்சுறுத்தலாக இருப்பதனால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை தவறாது மேற்கொண்டு வருகின்றனர். இப் போராட்டங்கள் நல்லாட்சிக்கு எதிரானதாக தெற்கிலும் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு குந்தகமானதென வடக்கிலும் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

குறிப்பாக இப் போராட்டங்களில் தமிழ் மக்கள் இணைந்து விடக் கூடாது என்பதில் எமது தலைமைகள் மிகவும் தீவிரமாக செயற்படுகின்றன. அதனால் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பிரித்தாளும் தந்திரங்களை கடைப்பிடித்து வருகின்றனர். தென்னிலங்கை மக்களின் ஒருமைப்பாட்டை நம்ப கூடாதென்றும் அந்நியர்களின் அனுசரணையுடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் எனவும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

இலங்கையில் வாழும் அடித்தள மக்களின் ஒருமைப்பாட்டுப் போராட்டங்கள் தங்களின் இருப்புக்கும் சுயலாப அரசியல் முன்னெடுப்புக்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்பதனை உணர்ந்துள்ளதால் அதனைத் தடுப்பதற்கு இனவாதக் கோஷங்களையே மீண்டும் மீண்டும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

விடுதலைப் போராட்ட ஆரம்பங்களில் வட-கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் வென்றெடுக்க வேண்டிய உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் அதன் அடிப்படையில் தங்களுக்கான ஒரு அரசியல் பாதையை வகுத்துக் கொள்ளவும் வேண்டி வெகுஜன அமைப்புக்கள் கட்டியமைக்கப்பட்டு உரையாடல்கள் - கருத்தரங்குகள் பொதுக் கூட்டங்கள் இடம்பெற்றன. அவற்றை முடக்குவதற்காக "நூறு கூட்டங்களுக்கு ஒரு துப்பாக்கி சமம்" என்ற சிந்தனைப் போக்கை ஊக்கப்படுத்தி மக்கள் சக்தியை மரணிக்கச் செய்தவர்கள் இந்த இனவாத அரசியல் சக்திகளே.

சுதந்திர இலங்கைக்கு முன்னர் 1930களில் எமது முன்னைய இளைஞர் சமுதாயம் தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்து செயற்பட்டு அன்றைய இனவாத சக்திகளால் முடக்கப்பட்ட இலங்கைக் குடிமக்களுக்கான சுதந்திரப் பயணத்தை இன்று தொடரவேண்டிய வரலாற்றுக் கடமை எமக்கு உண்டு. அன்றே அவர்கள் "ஆங்கிலேயர் எழுதிய அரசியல் சாசனம் நாட்டை நாசப்படுத்தும்" என்றும் "சுதந்திர இலங்கையை இன-மத-சாதி-பால்-பிராந்திய வேறுபாடுகளைக் களைந்து நின்று கட்டி எழுப்ப வேண்டும்" எனக் கூறியே உழைத்தனர். 68 வருட இலங்கையின் வரலாறு அதனையே இன்று எமக்கு வலியுறத்தி நிற்கிறது.

"தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் எந்த நேரமும் சிங்கள மக்களை வெறுப்புணர்வுடன் நோக்குகின்றார்கள் என்ற ஒரு தவறான கருத்து எமது முன்னைய அரசியல் தலைவர்களால் சிங்கள மக்கள் மத்தியில் வேண்டுமென்றே விதைக்கப்பட்டிருந்தது. இந்தத் தவறான கருத்தை சிங்கள மக்களின் மனத்திலிருந்து நீக்குவதற்கு இன்றைய அரசியல் தலைவர்கள் முன் வரவேண்டும். அரசியல் இலாபத்திற்காகவே அவ்வாறு அவர்கள் செய்தார்கள் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்."

(காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் 12.03.16 சனிக்கிழமை அன்று இலங்கை ஜனாதிபதி பங்குபற்றிய ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு வடமாகாண முதலமைச்சர் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி)