Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

கல்வி : தனியார்மயத்திற்கு சார்பான தர்க்கங்களும் மிகப்பெரிய பொய்களும்

நாட்டின் அரசியல் கருத்தாடலானது பெரும்பாலும் இரு முக்கிய போராட்டங்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கின்றது. ஒன்று, டெலிகொம் நிறுவனத்தில் மனிதவலு (Man Power) ஊழியர்களின் பணி உரிமைகளுக்காக நடக்கும் தொழிலாளர் போராட்டம். இரண்டாவது, கல்வியை வியாபாரப் பண்டமாக ஆக்குவதற்கு எதிராகவும், சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகவும் நடக்கும் மாணவர் போராட்டம். கட்சி என்ற வகையில் நாம் அவ்விரண்டு போராட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதோடு அது விடயத்தில் செயல்ரீதியில் தலையீடு செய்கின்றோம்.

 

நவதாராளமய முதலாளித்துவ மறுசீரமைப்பு என்ற வகையில் தொழில் சட்டங்களும் தொழில் உரிமைகளும் செல்லுபடியாகாத, தொழிலாளர்களை தாம் விரும்பியவாறு அடிமைகளாக பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு மேன் பவர், சமயாசமய, ஒப்பந்தம் போன்ற பெயர்களில் தொழிலாளர்களை உருவாக்குவதற்கு எதிராகவே டெலிகொம் தொழிலாளர்களின் போராட்டம் நடக்கின்றது. கல்வி தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்தில் கட்சி தலையிடுவதானது அது நவ தாராளமய முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டம் என்ற அடிப்படையில்தான். அது நவதாராளமய முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாவது எப்படி? 

"நவ தாராளமயம்" என்ற வார்த்தையின் கருத்து "புதிய சுதந்திரம்" என்பதாகும். முன்னெப்போதும் கிடைக்காத புதிய சுதந்திரம் எப்படி கிடைக்கும்? நவதாராளமய முதலாளித்துவம் என்பது முன்னர் நிலவிய அரசை மையமாகக் கொண்ட முதலாளித்துவத்திற்கு ஒப்பீடாக மூலதனத்திற்கு அதிக சுதந்திரத்தையும், "புதிய சுதந்திரத்தை" யும் வழங்கும் காலகட்டமாகும். அதன்படி அதுவரை விற்க முடியாதிருந்த, விலைக்கு வாங்க முடியாத, விலைமதிக்க முடியாதவை என அறியப்பட்ட அனைத்தும் விற்பனைப் பண்டங்களாக ஆக்கப்படுவதோடு, அதுவரை ஒப்பீட்டளவில் பாதுகாக்கப்பட்டிருந்த துறைகளிலும் மூலதனம் தனது செயற்பாட்டை தொடங்குகின்றது. "பொருளாதாரமற்ற பொருட்கள்" என அறியப்பட்டிருந்த அனைத்தும் "பொருளாதாரப் பொருட்களாக" ஆக்கப்பட்டுள்ள நிலை என்ற வகையில் இது விஞ்ஞான ரீதியில் அறியப்படுகின்றது. மூலதனத்தைக் கொண்டு ஆக்கிரமிக்கப்படும் பல துறைகளை இவ்வாறு அறிய முடியும். 

1.சமூக பாதுகாப்புச் சேவைகள்- கல்வி, சுகாதார சேவைகள் போன்றவை. 

2.கலாச்சாரம் - கலை, விளையாட்டு போன்ற சகல கலாச்சார அம்சங்களையும் விற்பனைப் பொருட்களாக ஆக்குதல். 

3.இயற்கை சூழல் - நீர், வனாந்திரங்கள் போன்றவை. 

4.மனித உடல் - உதிரம், சிறுநீரகம் போன்றவை தொட்டு மனித மரபணு வரை. 

5.மனித சிந்தனை - அறிவுச் சொத்துடமை என பெயரிடப்படும் ஆக்கத்திறன் கொண்ட சிந்தனைகளும் கற்பனைகளும். 

கல்வியை விற்பனைப் பண்டமாக ஆக்கி அதனை விற்பதிலும், கல்வித்துறைக்குள் மூலதனம் நுழைவதிலுமான நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வருவது இந்த நவதாராளமய முதலாளித்துவ திட்டத்தின் பிரதிபலனாகத்தான். நாணய நிதியம், உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் இத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக உலகம் பூராவும் வளர்முக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றது. எனவேதான் இது உலக மட்டத்தில் வியாபித்த ஏகாதிபத்திய உபாயமாக உள்ளது. அது ஒடுக்கப்பட்ட வர்க்கப் பிரிவுகளின் கல்வியை இல்லாமலாக்கியதுடன் கல்வியை சமூகத்தின் மேட்டுக்குடி வர்க்கத்திற்குரிய சிறப்புரிமையாக ஆக்குகின்றது. எனவே நாம் அதற்கு எதிராக செயற்பட வேண்டும். 

அது மாத்திரமல்லாது, இலங்கை ஆளும் வர்க்கத்தின் முக்கிய பொருளாதார உபாயமாக இருப்பதும் "வெளிநாட்டு முதலீடுகளை என்ற பெயரில் மேற்கொள்ளும் உலக மூலதன ஆதிக்கத்திற்கு இலங்கையை இரையாக்குவதால் இத்திட்டத்திற்கு தேசிய மட்டத்தில் அநுக்கிரகமும் கிடைக்கின்றது. முந்தைய அரசாங்கத்தின் "பஞ்ச பல கேந்திர" பொருளாதாரத் திட்டத்தின் கல்வி மையமாக இலங்கையை ஆக்கி வெளிநாட்டு மாணவர்களை இலங்கைக்கு ஈர்த்துக்கொள்ள ஆலோசிக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தின் குறுகிய கால பொருளாதார திட்டத்தில் உயர்கல்வியை விற்று பணம் சம்பாதித்தல் சம்பந்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கல்வியை தனியார்மயப்படுத்துவது இலங்கை ஆளும் வர்க்கத்தின் முதன்மைத் தேவையாக உள்ளது. 

அரச செலவீனங்களைக் குறைத்து வரவுசெலவுத் திட்ட இடைவெளியை குறைக்குமாறு ஏகாதிபத்திய நிறுவனங்களிலிருந்து வரும் அழுத்தமும், சமூக பாதுகாப்புச் சேவைக்கான அரச மானியங்களை வெட்டுவதும் உள்நாட்டு ஆளும் வர்க்கத்தின் உபாயமார்க்கமாக உள்ளதால் இந்த செயற்பாடு மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விளைவாக பிள்ளைகளின் கல்விச் செலவீனம் உட்பட இதுவரை அரசின் கைவசமிருந்த சகல துறைகளினதும் சுமை மக்கள் தலையில் போடப்பட்டு வருவதால் பொருளாதார ரீதியிலும் சமூகரீதியிலும் முரண்பாடுகள் மேலும் அதிகரிக்கும். 

எனவே உலக ஏகாதிபத்தியத்தினதும் தேசிய ஆட்சியாளர்களினதும் தேவைகளின் மீது மேற்கொள்ளப்படும் பிற்போக்குத்தனமான திட்டம் என்ற வகையில் கல்வி விற்பனைப் பண்டமாக்கப்படுவதை அறிந்துகொள்ள முடியும். அதோடு ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அரசியல் அதிகாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்தின் ஒரு பகுதி என்ற வகையில் அவற்றிற்கு எதிரான அரசியல் கருத்தாக்கத்தையும் ஒருங்கிணைந்த பலத்தையும் எமது வர்க்கத்திற்குள் உருவாக்க முன்வர வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகள் மீது மேற்கொள்ளப்படும் வெட்டுகளுக்கு எதிராக, அந்த அரசியல் திட்டத்தின் ஒரு பகுதி என்ற வகையில் நாம் செயற்படுகின்றோம்.

இப்போராட்டத்தோடு சம்பந்தப்பட்டுள்ள அநேக பிரிவுகள் வேறு பாடநெறிகளை கற்பிப்பதையும், தனியார் பட்டங்களை வழங்குவதையும் எதிர்ப்பதில்லை என்பதுடன் அவர்கள் சைட்டம் மருத்துவக் கல்லூரியை மாத்திரமே எதிர்க்கின்றார்கள். அது மாத்திரமல்ல சைட்டம் மருத்துவக் கல்லூரியை அவர்கள் எதிர்ப்பது கூட அதன் தரம் குறைவு என்ற பிரச்சினையை முன்வைத்துத்தான். எமது கட்சி சைட்டம் நிறுவனத்தை மாத்திரம் எதிர்க்கவில்லை. கல்வியை தனியார்மயமாக்கும் சகல முயற்சிகளையும் நாங்கள் எதிர்க்கின்றோம். அதன் தரக்குறைவால் மாத்திரமல்ல இலவசக் கல்விக்கு அதனால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் காரணமாகவுமே நாம் சைட்டம் நிறுவனத்தை எதிர்க்கின்றோம்.

தரம் சம்பந்தமான பிரச்சினை எழாத கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவப் பட்டம் உட்பட ஏனைய பட்டங்கள் விற்பதனை நாம் எதிர்த்தோம். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைப்பதற்கான மருத்துவ(திருத்தச்) சட்டமூலம் 2014 மார்ச் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது அதற்கு எதிராக ஒரு வாக்கு மாத்திரமே கிடைத்தது, அந்த வாக்கு எமது கட்சியின் தோழர் அஜித் குமாரவின் வாக்காகும். அதே போன்று அக்வயனாஸ், என்.எஸ்.பீ.எம். போன்ற தனியார் பல்கலைக்கழகங்களுக்கு எதிராகவும் மாணவர் அமைப்பு போராடியதை இந்த வாதத்தை முன்வைப்பவர்கள் மறந்துவிட்டார்கள். பாடசாலைகளில் கட்டணம் அறவிடுவதற்கும் பாடசாலைக் கல்வியை தனியார்மயமாக்குவதற்கும் எதிராக அமைக்கப்பட்டுள்ள "கல்வி ஓர் உரிமை" என்ற அமைப்பில் எமது கட்சியும் செயற்படுகின்றது. ஆகவே நாம் எல்லாவிதத்திலும் கல்வி தனியார்மயத்திற்கு எதிராக போராடுகின்றோம். என்றாலும் சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தை நீர்த்துவிடச் செய்வதோ பின்போடுவதோ அவசியமில்லை. எந்தவொரு போராட்டத்தையும் பரவலான மக்கள் போராட்டத்திற்கான கருத்தாக்கத்தையும் குறிப்பிட்ட இடத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். அப்போது முழு வயலையும் கொத்துவதை ஒரே நேரத்தில் ஏன் தொடங்க முடியாதென கேட்பது முட்டாள்தனமாகும். சைட்டம் போராட்டம் என்பது கல்வி தனியார்மயத்திற்கு எதிரான போராட்டங்களில் சமூக அங்கீகாரத்தை அதிகமாகப் பெற்ற போராட்டமாகும் என்பதுடன் கல்வியை வியாபாரப் பண்டமாக்குவதற்கு எதிராக சமூக பலத்தை அங்கிருந்துதான் கட்டியெழுப்ப வேண்டும். அதனை அங்கிருந்து ஏனைய துறைகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும். பாடசாலைகளில் பணம் அறவிடுதல், பாடசாலைக் கல்வியின் தரத்தை குறைத்து டியூசனை பரவலாக்குதல் போன்ற சகல திட்டங்களுக்கும் எதிரான போராட்டம் வரை இதனை வளர்க்க வேண்டும். 

நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கு சார்பானவர்கள் எழுப்பும் முக்கிய வாதமானது அதன் மூலம் கல்வி வாய்ப்புகளை விரிவாக்குவதே அரசின் தேவையாக உள்ளது என்பதுதான். உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களில் அநேகமானோர் பல்கலைக்கழக வாய்ப்பை இழக்கின்றமையால் தனியார் பல்கலைக்கழகங்கள் அவசியமென அரசாங்க அமைச்சர் பிரதானிகள் அடிக்கடி கூறுகின்றார்கள். உண்மைதான், அதிகமான மாணவர்கள் கல்வி வாய்ப்பை இழந்துள்ளார்கள். என்றாலும் தனியார்மயத்தின் மூலம் அதற்கு தீர்வு கிடைக்குமா? 2014/15 மேல் படிப்பிற்காக தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 149,572 ஆகும். இவர்களில் அரச உயர் கல்விநிறுவனங்களுக்கு உள ; வாங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,643. விகிதாசாரப்படி பார்த்தால் 17.14 வீதமாகும். அதன்படி மேற்படிப்பை இழந்தவர்களின் எண்ணிக்கை 123,929. அதாவது, 82.86 வீதம். இதற்குக் காரணம் உயர்கல்வியை பரவலாக்குவதில் அரசாங்கத்தின் இயலாமைதான். மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்கு 6 வீதம் ஒதுக்குவதாக இந்த அரசாங்கம் வாக்குறுதியளித்தாலும் 2017ம் வருடத்திக்கு தேசிய உற்பத்தியில் 2.4 வீதமே ஒதுக்கப்பட்டுள்ளது. கல்விக்கு போதுமானளவு ஒதுக்கீடுகளை வழங்காமைதான் கல்வி வாய்ப்பை இழப்பதற்கு முக்கிய காரணம். ஆகவே, தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவதால் இந்தப் பிரச்சினை தீரப் போவதில்லை. மக்களில் பெரும்பாலானோருக்கு தமது பிள்ளைகளை தனியார் பல்கலைக்கழகமொன்றுக்கு அனுப்பும் ஆற்றல் கிடையாது. பிரதமரே நாடாளுமன்றில் கூறியதைப் போன்று நாட்டின் மொத்த சனத்தொகையில் 43வீதமானோரின் ஒருநாள் வருமானம் இரண்டு டொலருக்கும் குறைவாகும். அவர்களால் 120 லட்சம் பணம் செலுத்தி ஒரு போதும் பட்டம் பெற முடியாது. உயர் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும் நேர்மையான எண்ணம் அரசாங்கத்திற்கு இருக்குமாயின் ஏற்கனவே உள்ள வாய்ப்புகளை வெட்ட வேண்டிய அவசியம் கிடையாது. பதிவுக் கட்டணம் ஏற்கனவே 15000 - 20000 ரூபாவாக இருந்ததோடு வெளிவாரி பட்டப் படிப்பிற்கான பதிவுக்கட்டணம் இப்போது 75,000 - 150,000க்கு இடைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வெளியிட்டுள்ள இல: 2016/13 சுற்றுநிருபத்தின்படி தேசிய பல்கலைக்கழகங்களின் பாடநெறிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது . பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இப்புதிய பரிந்துரைகளுக்கேற்ப சகல பல்கலைக்கழகங்களும் ஒரு கற்கை வருடத்திற்காக உள்ளக பாடநெறிகளுக்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு சமமான தொகையினரே வெளிவாரி பாடநெறிகளுக்கு உள்வாங்க முடியும். இதன்படி வருடாந்தம் சுமார் 14,000 மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பை இழக்கின்றனர். பதிவுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையால் சமூகத்தின் அடிமட்ட மக்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாமலாக்கப்படுகின்றது. 

அதேபோன்று திறந்த பல்கலைக்கழகம் ஒழிக்கப்பட்டு வருவதோடு சில பிரதேச பீடங்கள் செயலற்று காணப்படுகின்றன. உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை நிர்மாணித்து கொடுத்த தொழில் நுட்பக் கல்லூரிகளும் விவசாயக் கல்லூரிகளும் மானியங்கள் வெட்டப்படுவதன் ஊடாக அழிந்து வருகின்றன. "உயர்தரம் சித்தியடைந்த சகலருக்கும் பல்கலைக்கழக நுழைவை உறுதி செய்!" என்ற கோஷம் இடதுசாரிய கட்சிகளாலும் மாணவர் அமைப்புகளாலும் உயர்த்திப் பிடிக்கப்படுகின்றதேயன்றி இப்போது இந்த வாதத்தை முன்வைப்பவர்களால் அல்ல. இந்தக் கோஷத்தை எதிர்காலத்தில் நாம் மேலும் விருத்தி செய்ய வேண்டும். ஆகவே, தற்போதுள்ள கல்வி வாய்ப்புகளைக் கூட வெட்டும் ஆட்சியாளர்கள் தனியார் பல்கலைக்கழகங்களை அறிமுகம் செய்வது வாய்ப்புக்களை பரவலாக்கும் நோக்கத்திலல்ல என்பது வெளிப்படை. சமூகத்தின் அடித்தட்டு வர்க்க பிள்ளைகளின் கல்வி வாய்ப்புகள் அதனால் ஒருபோதும் அதிகமாகப்போவதில்லை.

மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் ஊடாக வெளிநாடுகளுக்கு வெளிநாட்டுச் செலாவணி சென்றடைவதால் பணத்தை எஞ்ச வைப்பதற்காக தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பது இன்னொரு முட்டாள்தனமான வாதமாகும். அரசாங்கம் கூறுவதைப் போன்று மேற்படிப்பிற்காக வருடாந்தம் வெளிநாடு செல்வோரினால் வெளிச் செல்லும் வெளிநாட்டுச் செலாவணி 15,000 மில்லியனாகும். இந்த எண்ணிக்கை எங்கிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதை அவர்கள் வெளிப்படுத்தாமையால் இத்தரவு சந்தேகமாக உள்ளது. அது சரியானதென கற்பனை செய்தாலும், நாட்டில் பணம் இல்லாமலாவதை தடுப்பதற்காக முதலாவதாக தலையீடு செய்ய வேண்டிய துறை கல்வியல்ல. 2016ல் பால்மா இறக்குமதிக்காக 31,842 மில்லியன் ரூபா வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டது. பழங்களுக்காக 5637 மில்லியன் ரூபா வெளிநாட்டுக்கு சென்றது. இவை எமது நாட்டில் உற்பத்தி செய்யக் கூடியவையாகும். நாட்டைச் சுற்றி கடல் இருந்த போதிலும் 2016ல் 49,016 மெட்ரிக் டொன் டின் மீன் இறக்குமதி செய்யப்பட்டது. இலங்கைக்குத் தேவைப்படும் சீனியில் 10சத வீதமே இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது. 6,23,971 மெட்ரிக் டொன் சீனி இறக்குதிக்காக கடந்த வருடம் பெருந்தொகை பணம் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டது. பல்தேசியக் கம்பனிகளின் பொறியில் சிக்கி விவசாய இரசாயனப் பொருட்கள், இரசாயன உரம் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் சுமார் 1,00,000 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. இவற்றைப் பற்றியெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் கல்விக்காக பெருமளவு பணம் வெளிநாட்டுக்கு செல்வதாகக் கூறுவது வஞ்சகமாகும். அதன் நோக்கம் நவதாராளமய மறுசீரமைப்பை நடைமுறைபடுத்துவதேயன்றி நாட்டில் பணத்தை எஞ்ச வைப்பதல்ல. இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படுவதால் மாணவர்கள் வெளிநாடு செல்வது நிறுத்தப்பட மாட்டாது. அநேகமானோர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தேடிச் செல்வதற்கு மனோவியல் காரணிகளும் சமூக அதிகாரம், அந்தஸ்து சம்பந்தமான காரணிகளும் உள்ளன. உதாரணத்திற்கு சைட்டம் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட பின்பும் மருத்துவ பட்டப்படிப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியும், அதனூடு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் கல்வி தனியார்மயமும் காரணமாக ஏற்பட்டுள்ள சமூக கருத்தாடல்களில் அதற்கு சார்பாக உருவாகியுள்ள அடிப்படை தர்க்கமானது பொய் என்பது இதன் மூலம் தெரிய வருகின்றது. கல்வியை விற்கும் அரசாங்கத்தின் நோக்கம் கல்வி வாய்ப்புகளை விஸ்தரிப்பதோ அல்லது நாட்டின் வெளிநாட்டுச் செலாவணியை எஞ்சவைப்பதோ அல்ல. அவற்றை தமது வங்குரோத்தையும் மற்றும் மக்கள் எதிர்ப்பையும் மூடி மறைப்பதற்கு முன்வைக்கப்படும் மூடுகை மாத்திரமே. இத்தருணத்தில் இந்த அழிவைத்தரும் திட்டத்திற்கு எதிராக சகலரினதும் பலத்தை ஒருங்கிணைக்க வேண்டும். எமது கட்சி அதற்காக உருவாக்கும் பொது மேடைக்கு வருவது அந்த சமூக அதிகாரத்தை வலிமைப்படுத்தும் நோக்கத்தில்தான்.