Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இலக்கியம், அரசியல் பேசும் இஸ்லாமிய ஆண்கள் மத அடிப்படைவாதிகளே

பெண் என்பவள் இயற்கை விதிப்படி உயிரை அழிப்பவளல்ல. சமூகத்துக்கே உயிர் கொடுப்பவள். இதன் வழி பாத்திமா மஜிதா, ஸர்மிளா செயித், தங்கள் கருத்துகள் மூலம், முஸ்லிம் சமூகத்திற்கு உயிர் கொடுக்க முனைகின்றனர். அந்த கருத்து உயிர் வாழ்வதற்கே போராடுகின்ற பொது அவலத்தைக் காண்கின்றோம். உண்மையில் குண்டு வைத்த பயங்கரவாதியை விட, மத அடிப்படைவாதம் சமூகத்தில் புரையோடிக் கிடப்பதைக் காட்டுகின்றது.

இலங்கையில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக, முஸ்லிம் சமூகத்தின் (குறிப்பாக ஆண்களின்) குரல்கள் எழவில்லை. இலக்கியம், அரசியல், முற்போக்கு, பெண்விடுதலை, சமூக அக்கறை குறித்து பேசும் முஸ்லிம் சமூக ஆண்கள், ஆணாதிக்க இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தைக் கடந்து எதையும் முன்வைக்கவில்லை. பச்சோந்தி போல் நிறத்தை மாற்றிக் கொண்டு, அடிப்படைவாத கட்டமைப்பில் குந்தி இருக்கின்றனர்.

இலக்கியம், பெண்ணியம், அரசியல், சமூகம் குறித்து வாய் கிழிய பேசுகின்ற இந்த முஸ்லிம் ஆண்கள், பாத்திமா மஜிதா, ஸர்மிளா செயித் கருத்தை மற்றவர்களுக்கு கொண்டு சென்றதுமில்லை. இந்த இருவரின் கருத்தை பெருமளவில் பிறருக்கு கொண்டு சென்றது, முஸ்லிம் சமூகத்தைச் சேராதவர்கள் தான். முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் எப்படி புரையோடி இருக்கின்றது என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. அது எப்படி ஆணாதிக்க தன்மை கொண்டதாக உள்ளது என்பதையும் இது அம்பலமாக்குகின்றது.

இலக்கியம், அரசியல் பேசக் கூடிய ஆண்கள் இந்த இரு பெண்களையும் மறுப்பது எப்படி என்பது குறித்து தான், தங்கள் இஸ்லாமிய சிந்தனைமுறையால் மண்டையை உடைத்துக் கொண்டு இருகின்றனர். இலக்கிய அரங்கில் தங்களை முன்னிறுத்த, மீண்டும் இப் பெண்கள் தங்கள் சமூக சார்ந்த எதார்த்தம் மூலம் சவாலாக மாறி இருக்கின்றனர். குறிப்பாக இலங்கையில் நடந்த இலக்கிய சந்திப்பில் ஸர்மிளா செயித்துக்கு எதிராக பொங்கி எழுந்த, இஸ்லாமிய ஆணாதிக்க இலக்கிய – அரசியல் வாதிகள், அன்றும் - இன்றும் தங்கள் மத அடிப்படைவாதத்தில் இருந்தபடி உள்ளனர் என்பதே உண்மை.

இன்று தேர்தல் அரசியல்வாதிகள் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் கொண்டிருந்த உறவு என்பது, மத அடிப்படைவாதம் சார்ந்ததுதான். இதுபோல் தான் இலக்கியம் பேசுகின்றவர்களின் உறவுகளும், சிந்தனைகளும் இருந்தன, இருக்கின்றது என்பதே உண்மை. தன் சமூகத்துக்குள் நடந்தது என்ன என்பதை சொல்ல முடியாத அளவுக்கு, அவர்கள் வாழ்க்கை முறையே இஸ்லாமிய அடிப்படைவாதம் சார்ந்த நடைமுறையைக் கொண்டிருக்கின்றது.

மத வழிபாடு என்பது தனிமனித உரிமை என்பதைக் கடந்து, தன் சொந்த குழந்தைக்கே மதத்தை திணிக்க கூடாது. மதம் சார்ந்த உடையை அணியக் கூடாது. இதுதான் ஜனநாயகப் பண்பாடு. இதைக் கடந்த மத அடையாளங்கள் அனைத்தும், பிறர் உரிமையில் தலையிடுவதாக, கட்டுப்படுத்துகின்ற அதிகாரமாக, ஆணாதிக்க தன்மை கொண்டதாக மாறுகின்றது. மதச் சமூகத்தை முன்னிறுத்தி ஒருவன் தன்னை அடையாளப்படுத்துவானாயின், அது மதவாதமும், மத அடிப்படைவாதமும் கூட.

மதப் பயங்கரவாதத்தை தங்கள் இறையியல் கோட்பாடு முன்வைக்கவில்லை என்று கூறுவதன் மூலம், யாரும் தப்பிச் செல்ல முடியாது. பயங்கரவாதத்தை செய்யும் போது, தனக்கு ஏற்ற கோட்பாட்டை அந்த மத நூலில் இருந்து எடுத்துக் காட்டி செய்கின்றான். அதேநேரம் தனக்கு ஏற்றவாறு விளங்கிக் கொள்ளவும், விளக்கிக் கொள்ளும் வண்ணமும், பல நூற்றாண்டுக்கு முந்தைய மனித வாழ்க்கை முறைகளே - இன்றைய மதக் கோட்பாடாக இருக்கின்றது. எப்படி வேண்டுமென்றாலும் இவற்றை தங்கள் தனிப்பட்ட தேவைக்கு ஏற்ப திரித்துக் கொள்ள முடியும். மத நூல்களைப் புரட்டி பழைய வாழ்;க்கையை திணிக்கும் மதப்பிரச்சாரம் என்பது, மனித மூளையை களிமண்ணாக்குவது தான்.

மனித வாழ்வியல் துயரத்திற்கு வழிபாடு தீர்வு தரும் என்றால் அது உன் உரிமை. அதை மதமாக்கி, வேறு ஒருவருக்கு திணிப்பது என்பது, நீ நம்பும் வழிபாட்டுக்கே எதிரானது.

 

இலங்கையில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் இருக்கின்றனர். ஆனால் மத அடிப்படைவாத சிந்தனைக்கு எதிராகவா என்றால் இல்லை. மத அடிப்படைவாதம் என்பதும், அந்தச் சிந்தனை முறை என்பதும் சமூகம் முழுக்க புரையோடியுள்ள புற்றுநோயாக மாறி இருக்கின்றது. இந்த உள்ளடக்கம் எல்லா மத அடிப்படைவாதங்களுக்கும் பொருந்தும். இலங்கை இஸ்லாமிய அடிப்படைவாதம் எப்படி வளர்ந்தது என்பது குறித்து, இரு பெண்களும் தெளிவாகவே அடையாளப்படுத்தி இருக்கின்றனர்.

மதங்கள் உலகம் முழுக்க பரவிய போது, அந்தந்த நாட்டுப் பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளுடன் ஒன்றிணைந்த, ஜனநாயகக் கூறுகளை உள்ளடக்கியதாகவே இருந்தது. 1980 களில் தொடங்கி உலகமயமாதல் மனித பண்பாட்டுக் கூறுகளை அழித்து வர்த்தக பண்பாட்டை உலகெங்கும் கொண்டு வந்த அதே காலத்தில், மத அடிப்படைவாதமானது அந்தந்த மனிதக் சமூக கூறுகளை அழித்து, அதற்கு பதில் பல நூற்றாண்டு முந்தைய குறித்த ஒரு சமூகத்தின் ஒற்றை மதப் பண்பாட்டை திணிக்கத் தொடங்கியது. இதைத்தான் இலங்கையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ, பவுத்த மத அடிப்படைவாதங்களின் பின்னால் பொதுவில் காண முடியும்.

 

 

இந்த மதப் அடிப்படைவாதம் முதல் பயங்கரவாதம் வரை, அனைத்தும் ஆணாதிக்க அதிகாரத்தின் குரலாகவும், வெளிப்பாடாகவும் இருக்கின்றது. பெண்ணை ஆணின் அடிமையாக்குகின்றது. ஆணாதிக்க சமூகத்தையும், குறிப்பாக தனிப்பட்ட ஆணின் நலன் சார்ந்ததாக இருப்பதால், சமூகத்தில் வேகமாக ஊடுருவி விடுகின்றது.

குற்றவாளி, மதவாத அமைப்பு மட்டும் இன்றைய பிரச்சனையல்ல, மாறாக சிந்தனை முறை வாழ்க்கை நடைமுறை அனைத்தும் தகர்க்கப்படல் வேண்டும்.