Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பாடசாலைகளுக்குள் மதங்களும்

கல்வி என்பது, தமிழ், சிங்கள (ஆங்கில) மொழிப் பாடசாலைகளாக இல்லாமல், மதத்தின் பெயரில் பாடசாலைகளை அமைத்தல், மத அடையாளங்களை பாடசாலை முகப்பில் உருவாக்குவது, மத உடைகளைப் புகுத்துவது, மத வழிபாட்டை கல்விக்கூடங்களில் கொண்டு வருவது… என்பது, இன்று சர்வசாதாரணமாகி வருகின்றது. இதற்கு எதிராக குரல்கள் சமூகத்தில் எழுவதில்லை. எல்லா மத அடிப்படைவாதங்களுக்குமான, விளைநிலமாக இலங்கை இருக்கின்றது. இலங்கை தேர்தல் அரசியல் கட்சிகள் இனம் அல்லது மதம் அல்லது இரண்டும் சார்ந்த, அதிகார மையங்களாக இருக்கின்றது. அரசு மதம் சார்ந்ததாக இருக்கின்றது.

இலங்கை எங்கும் வீதிக்கு வீதி கோயில்கள், புதிது புதிதாக தோன்றுகின்றது. இதன் பொருள், சமூகம் தனது சுய பகுத்தறியும் ஆற்றலை இழந்து வருகின்றது என்பது தான். சமூகத்தின் பொதுவான வாழ்வியல் நெருக்கடிகள் அதிகரித்து வருவதும், அதற்கான சமூகக் காரணத்தை கண்டறியாத வண்ணம், கோயில்களின் தஞ்சமடையுமாறு அதிகார கட்டமைப்புகள் வழிகாட்டுகின்றது.

இந்த வகையில் அரசு மதங்களை முன்னிலைப்படுத்துகின்றது. மதம் வாழ்வின் எல்லா இடங்களிலும் தலையிடுகின்றது. அரசு நிகழ்வுகள் எல்லாம், மத நிகழ்வுகளில் இருந்து தொடங்குகின்றது.

மத சார்பற்ற அரசு என்ற முதலாளித்துவ தேர்தல் அரசியலும், அரசு நிர்வாகக் கட்டமைப்பும் இலங்கையில் கிடையாது. மதசார்பான அரசும், அரசியலும், அதிகார கட்டமைப்புகளும், மதரீதியான ஒடுக்குமுறை தொடங்கி குறித்த ஒரு மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்றதன் மூலம், சமூகத்தில் மதரீதியான சிந்தனைமுறையும், பிளவுகளும் உருவாக்கப்படுகின்றது.

இலங்கை மக்கள் மொழிரீதியான தங்கள் அடையாளப் பெயர் முறையை இழந்து வருவதும், மதரீதியான பெயர்களை இட்டுக் கொள்வதும் நடந்தேறுகின்றது. மத உடைகள், மத அடையாளங்கள், மதப்பெயர்கள், மதக் குடியிருப்புகள் … என்று, பிறரில் இருந்து தன்னை வேறுபடுத்தும் அதேநேரம், பிறரை வெறுக்கின்ற சிந்தனையுமாக, மனித மனங்கள் நஞ்சூட்டப்பட்டு கிடக்கின்றது.

மதரீதியான வன்முறைக்கு ஏற்ற சமூகமாக, தன்னளவில் தாங்களாகவே பிரிந்திருக்கின்றனர். மத அடையாளங்களைக் கொண்டு மனித அடையாளங்;களை வன்முறைக்குள்ளாக்கும், மத வெறுப்புகள் கொண்ட உடை முதல் குடியிருப்பு வரை, தங்களைத் தாங்கள் தனிமைப்படுத்திய மத வெறி சமூகமாக பிரிந்து வருகின்றது.

இது இன்று பாடசாலைகளிலும் புகுந்து வருகின்றது. இனம், மதம், சாதி, பால் .. என்று எல்லா அடையாள வேறுபாடும் கடந்து சிந்திக்கின்ற, செயற்படுகின்ற மாணவ பருவம் நஞ்சூட்டப்படுகின்றது. பாடசாலை சூழல், தன்னையும் தன்னைச் சுற்றிய மத அடையாளங்கள் மூலமான இடைவெளியை, கல்விக்கூடங்களில் புகுத்தப்பட்டு இன்று கல்வியாக்கப்படுகின்றது.

இன்று இந்த அடிப்படையில் இலங்கை பாடசாலை கட்டிட அமைப்பு முறை மத அடையாளத்தை பெற்று வருகின்றது. பாடசாலை பெயர்pல் மதப் பெயர் புகுத்தப்படுகின்றது. பாடசாலை முகப்புக்களில் மத அடையாளங்கள் திணிக்கப்பட்டு, புதுப்பிக்கப்படுகின்றது. மாணவ மாணவிகள் (குறிப்பாக மாணவிகள்) மேல் மத உடைகளை திணிப்பது நடந்து வருகின்றது.

கல்விக்கூடங்கள் முதல் கல்வி கற்கும் மாணவ மாணவிகளை மதரீதியாக பிரித்துவிடுகின்ற செயல் நடந்தேறுகின்றது. மத அடிப்படைவாதமானது ஆணாதிக்க மதக்கூறுகளாக இருப்பதால், கல்விக்கூடங்களில் பெண்கள் மீதான கண்காணிப்பு முறையாகவும், அதையே பாடசாலைகளின் ஒழுக்கமாகவும் முன்வைக்கப்படுகின்றது.

மறுபக்கத்தில் கோட்டு சூட்டு ரை சப்பாத்து என்று, மேற்குநாடுகளின் நவதாராளவாத அதிகார வர்க்க உடையை அணிவதே, சமூகத்தின் மேனிலை அந்தஸ்தின் அடையாளமாக கருதும் சிந்தனை கொண்டு, பாடசாலை மாணவர்களின் உடையாகத் திணிக்கப்படுகின்றது.

இவையெல்லாம் மாணவ மாணவிகளின் ஒழுக்கம், கட்டுப்பாட்டின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டு, மண்ணிற்கும் வாழ்க்கைக்கும் முரணான பண்பாடுகள் கல்விக்கூடங்களில் உருவாக்கப்படுகின்றது.

மத அடிப்படைவாதம் எதை சமூகத்தின் பண்பாடாக, அடையாளமாக, ஒழுக்கமாக முன்வைக்கின்றதோ, அதுவே பாடசாலைகளில் புகுந்திருக்கின்றது. நவதாராளவாதத்தில் எது சமூகத்தின் அந்தஸ்த்துக்குரிய மரியாதைக்குரியதாக கருதப்படுகின்றதோ, அது கல்விக்கூடங்களில் புகுத்தப்படுகின்றது.

மதத்துக்கும், போலி அந்தஸ்துக்கும் வெளியில் கல்வி, ஒழுக்கம், வாழ்க்கை போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டிய இன்றைய தலைமுறை, அதற்கான வாய்ப்பை இழந்து இருக்கின்றது. கற்றுக் கொடுக்கப்பட வேண்டியது, கற்றுக் கொடுக்கப்படுவதில்லை.

தன்னைச் சுற்றிய கேள்விகளாலானதே, மனிதனின் வளர்ச்சி விதி. கேள்வியே கேட்க முடியாத மத அடையாளங்கள், சமூக அந்தஸ்தால் இறுக்கப்பட்ட சமூகமாக, புதிய தலைமுறை உருவாக்கப்படுகின்றது.

இன்று மதப் பயங்கரவாதக் குண்டுவெடிப்பு இஸ்லாமியம் மட்டும் கிடையாது, மாறாக எல்லா மதத்தினுள்ளும் இருக்கின்ற அடிப்படைவாத கூறுதான், பயங்கரவாதத்தின் மூலம். மதத்தை முன்னிலைப்படுத்தி நிற்கும் கல்விக்கூடங்களிலும், மதக் கல்வியிலும், மதப்பண்பாட்டு நிகழ்வுகளிலும் மத அடிப்படைவாதமும், பயங்கரவாதமும் உள்ளார்ந்து இருக்கின்றது. முரண்பாடுகள் கொண்ட மதவாத சமூகமாக, சமூகம் உருக்குலைந்து வருகின்றது.

கல்விக்கூடங்கள் கடவுள் வழிபாட்டை தனிமனிதத் தேர்வின் கூறாகவும், மதத்தை வரலாற்று பாடமாகவும் கற்றுக் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றது. இதுதான் அடிப்படைவாத மதத்துக்கு எதிரான கல்விக் கொள்கையாக இருக்க முடியும். இதை முன்வைத்து தான், மதம் சாராத மாணவ சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இதுதான் சமூக அக்கறையாளர்களின், குரலாகவும், சமூக பொறுப்புணர்வாகவும் இன்று இருக்க முடியும்.