Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

சிதைக்கப்பட்ட பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் முழுதும் மரணத்தில் வாழும்!

மழை போல் பொழிந்து தள்ளபட்டுக்கொண்டிருந்த குண்டுகளிடம் இருந்து தப்ப பதுங்கு குழிகளை தேடி பாய்ந்து ஓடினார்கள். காடுகளிற்குள் பாம்புகள் சீறிக் கொண்டிருந்த பற்றைகளிற்கு பக்கத்தில் பயந்து ஒளிந்திருந்தார்கள். ஆண்களிற்கும், பெண்களிற்கும் மரணம் அங்கு பொதுவாக இருந்தது. ஆனால் பெண்கள் மீது அங்கு இன்னுமொரு கொலை நடந்தது. அது மரணத்தை விட கொடுமையானது. மரணத்துடன் எல்லாம் முடிந்து விடும். ஆனால் கரும் பச்சை சீருடை அணிந்தவர்களால் சிதைக்கப்பட்ட பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் முழுதும் மரணத்தில் வாழும். அவர்கள் சிறுமிகள், இளம் யுவதிகள், நடுத்தரவயது பெண்கள், உடல் தளர்ந்த முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்கவில்லை. இறந்த பெண் போராளிகளின் உடல்களை கூட வெறி கொண்டு சிதைத்தார்கள்.

பிரான்சிஸ் காரிசன் எழுதிய ஈழம், சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் என்ற நூலில் வன்னி போர்ப் பிரதேசத்திற்கு வெளியில் வவுனியாவில் மணிமொழி என்ற பெண்ணிற்கு வவுனியா காவல் நிலையத்தில் நடந்த கொடுமைகளை பதிவு செய்கிறார். மணிமொழி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். அது முடிந்து விட்டது என்று அவர் நினைக்கையில் இன்னொரு சி.ஜ.டி வந்தான். அவனும் அவரை வன்புணர்வு செய்தான். 'அவர்கள் மிருகங்களைப் போல. நான் அழுதேன். அந்த நேரம் நான் நாற்பது நாள் கர்ப்பிணி. இரத்தம் கசிந்தது. கருச்சிதைவு ஏற்பட்டது. இலஞ்சம் கொடுத்து வீடு வந்த பிறகு நான் இருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். எனக்கு நிம்மதி என்பதே இல்லாமல் போய் விட்டது"

இவை யுத்தத்தின் மரணப்பிடிக்குள் சிக்குண்டு உலகத்தின் பார்வைக்கு வராமல், பதிவுகள், சாட்சியங்கள் எதுவுமின்றி அப் பெண்களினதும், அவர்களினது குடும்பத்தினரினதும் மனங்களில் மட்டும் காலகாலத்திற்கும் தேங்கிப் போய் நிற்கும் கொடுமைகள் என்றால் போர் நடக்காத மற்றப்பிரதேசங்கள், இன ஒடுக்குமுறைக்கு உட்படாத சிங்கள இனப்பெண்களிற்கும் இதே மாதிரி கொடுமைகள் தான் நடக்கின்றன. ஒவ்வொரு தொண்ணூறு நிமிடத்திற்கும் ஒரு இலங்கைப் பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள். ஒவ்வொரு வருடமும் பாலியல் வன்முறைகள் கூடிக்கொண்டே செல்கின்றன. 2008இல் 1582 பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 1157 பேர் பதினாறு வயது கூட தாண்டாத சிறுமிகள். 2012 இல் 1653 பெண்கள்வன்கொடுமைக் ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் 1405 பேர் சிறுமிகள்.

இப்படியான குற்றச்சாட்டுக்கள் எழும் போதெல்லாம் இலங்கை அரசின் நற் பெயரைக்கெடுக்க சதி, தேசத்தை காட்டிக் கொடுக்கும் பயங்கரவாதிகளின் பச்சைப்பொய்கள், இலங்கையை இன்னொருசொர்க்கமாக மாற்ற இருக்கும் ஜனாதிபதிக்கு அபகீர்த்தி உண்டு பண்ணும் அயோக்கியர்களின் அலம்பல்கள் என்று அதிபர் முதல் அமைச்சர் பெருமக்கள் வரை அலறித் திரிவார்கள்.

அவர்களால் மாற்றவோ, மறுக்கவோ முடியாது. ஏனெனில் இந்த புள்ளிவிபரங்களை கொடுத்தவர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா. கொடுத்த இடம் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றம். பொலிசில் முறைப்பாடு செய்த வன்முறைகளே இத்தனை ஆயிரம் என்றால் பதிவு செய்யப்படாத வன்கொடுமைகள் எத்தனை ஆயிரம் இருக்கும். அரசியல்வாதிகளாலும், அதிகார வர்க்கத்தாலும்,ஆயுதப்படைகளாலும் கதறக், கதற கசக்கி எறியப்பட்ட பின்பு காற்றோடு கலந்த கதறல்கள் எத்தனை ஆயிரம் இருக்கும்.

சிறுவயது பெண்கள் பெரும்பாலும் அவர்களிற்கு தெரிந்தவர்களாலேயே வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். குடும்பத்தவர்கள், உறவினர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள், மதகுருக்கள் என்று பலதரப்பினராலும் அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். கட்டற்ற ஊடகவளர்ச்சி காரணமாக வீட்டிற்குள்ளேயே வந்து விழும் அழிவுக் கலாச்சாரத்தின் கழிவுகள், அதிகரித்து வரும் மதுபாவனை, வறுமை காரணமாக மனைவிகள் வெளிநாட்டிற்கு வேலைக்கு போக தனித்து விடப்படும் கணவர்கள், பாலியல் கல்வியை பள்ளிகளில் கற்பித்தால் உலகமே அழிந்து விடும் என்று ஊளையிடும் கலாச்சாரக்காவலர்கள் என்பன இக்குற்றங்களிற்கு பெரும்பாலான காரணிகளாக அமைகின்றன.

காவல் துறையும், நீதி மன்றங்களும் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று சீர்திருத்தவாதிகள் கோருகின்றனர். களவு, கொலை, ஊழல், லஞ்சம், அதிகார துஸ்பிரயோகம் என்று உடல் முழுக்க சேறு பூசிக்கொண்டிருக்கும் இலங்கையின் அதிகாரவர்க்கம், குற்றங்களின் பிறப்பிடம் எப்படி நடவடிக்கை எடுக்கும். பெண்கள் தமக்கு எதிரான வன்முறைகளிற்கு எதிராக போராட துணிச்சலாக முன்வரவேண்டும். வன்முறைகளிற்கு எதிரான அமைப்பாக அணி திரள வேண்டும். சமுதாயத்தின் மற்றப்பிரச்சனைகளிற்காக போரிடும் முற்போக்கு அணிகளுடன் இணைந்து போராட வேண்டும்.

ஏனெனில் பெண்களிற்கு எதிரான வன்முறைகளை வெறுமனே சட்டம், ஒழுங்கு, நீதி என்பவற்றால் நிறுத்தி விட முடியாது. ஓரளவிற்கு முதலாளித்துவ ஜனநாயகம் நிலவுகிற நாடுகளிலே கூட சட்டங்களினாலே பாலியல் குற்றங்களை குறைக்க முடியவில்லை, தடுக்க முடியவில்லை. பெண்களை போகப் பொருளாக, நுகர்வுப் பண்டமாக மட்டும் சித்தரிக்கும் வணிகக் கலாச்சாரம், முதலாளித்துவ பொருளாதாரம் இருக்கும் வரை அவள் விடுதலையாக முடியாது. அவளை அசுத்தமானவளாக, சமமற்றவளாக நடத்தும் மதங்களை உடைக்காமல் அவள் விடுதலை பெறமுடியாது. உயர்வு, தாழ்வு இல்லாத சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் இணையானவர்கள் என்னும் பண்பாடு நிலவும் வாழ்க்கை முறையில் ஏனைய விலங்குகள் உடைபடும் போது பெண்ணின் விலங்குகளும் உடைபடும்.