Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதியமும் -- தமிழ்த்தேசியமும்….. பகுதி-10

ஒடுக்கப்பட்ட மக்களின் தினமான டிசம்பர்-13

தமிழரசுக் கட்சி தனது வாக்கு வங்கிக்காக, தன் நடவடிக்கைகளை ஓடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் முன்னெடுத்து, சிற்சில கணிசமான பிரமுகர்களைக் தனதாக்கிக்கொண்டதினால் ஏற்பட்ட விளைவுகளை சென்ற பதிவினில் பார்த்தோம்.

இருந்த போதிலும் மகாசபை ஓடுக்கப்பட்ட மக்களுக்கான தன் தொடர் செயற்பாட்டை முன்னெடுத்த வண்ணமேயிருந்தது. இதற்கு வலுவேற்றும் வண்ணம் 7-12-58-ல் யாழ்.ஸ்ரான்லிக் கல்லூரியில் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டிற்று. எம்.சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழ் காங்கிரஸ் கட்சியைத் தவிர ஏனைய கட்சிகள் கலந்துகொண்டன. இதில் டிசம்பர் 13-ந் திகதியை ஓடுக்கப்பட்டமக்களின் தினமாக கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது.

இத்தீர்மானத்தின் அடிப்படையில் யாழ்-நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கன்டி பேரின்பநாயகம், எஸ். கே. வேலாயுதபிள்ளை, டாக்டர் வி.ரி. பசுபதி, செனட்டர் பி.நாகலிங்கம், அ. அமிர்தலிங்கம், வி. பொன்னம்பலம், ஆகியோர் உரையாற்றினர்.
தவிரவும் 20-10-58-ல் மகாசபை தேனீர்க்கடைப் பிரவேசத்திற்கான அறைகூவல் ஒன்றை விட்டது. அவ்வறைகூவலிற்கான பிரசுரத்தில் மார்கழி 13-ந் திகதிக்கு முன்பாக சகல தேனீர்க்கடைகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவமாக திறந்துவிடப்பட வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அன்றைய (டிசம்பர்-13) தினத்தில் யாழ் நகர தேனீர்க்கடைகளின் முன் சத்தியாக்கிரகம் நடாத்தப்படும் எனவும், அறிவித்தது.

மகாசபையின் மேற்படி அறைகூவலை ஏற்று (டிசம்பர் 13-ற்கு முன்பாக) முதன்முதலாக, யாழப்பாண நகரின் ஆரியகுளம் சந்தியில் உள்ள தேனீர்க்கடை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. இந்நிகழ்வு எம்.சி. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து யாழ் நகரிலுள்ள சுபாஸ் கபே, வை.சி.கு. தேனீர்க்கடை உட்பட பல தேனீர்க்கடைகள் சமத்துவமாக திறந்துவிடப்பட்டன. அத்தோடு இதன் செயற்பாட்டால் பலாலி ஆசிரியர் பயிற்சிக்கலாசாலைக்கும் ஓடுக்கப்பட்ட மாணவர்களை அனுமதிக்கும் நிலையும் ஏற்பட்டது. மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் கிராமங்களில் பாடசாலைகளை நிறுவ வேண்டும் எனும் கோரிக்கை மகாசபையால் முன்வைக்கப்பட்து. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியும் உறுதுணையாக இருந்தது. இதில் அன்றைய பருத்தித்துறை தொகுதியின் கம்யூனிஸ்ட் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பொன். கந்தையாவின் செயற்பாடுகள் மேலும் வலுச்சேர்த்தன.

பொன். கந்தையாவின் செயற்பாடுகள்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைகலைகளை அமைக்கும் தீர்மானத்திற்கு மகாசபையுடன் உறுதியாகச் செயற்பட்டார். கல்வி வசதிகளை பின்தங்கிய கிராமங்களில் விருத்தி செய்யவும், ஆசிரியர்களின் எண்ணிக்iயை அதிகரிக்கவும், கல்விக்கான பிறதுறை ஊக்குவிப்புகளிற்கும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பயன்படுத்தி செயற்பட்டார். அத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உயர்சமூகத்தின் மத்தியிலுள்ள பல நல்லெண்ணம் கொண்ட முற்போக்காளர்களை உருவாக்கினார். இவருடைய காலத்தில்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து பல சமாதான நீதிபதிகள், சத்தியப்பிரமாண ஆணையாளர்கள் உருவாகினார்கள். இருந்தபோதிலும் அதிலும் சாதிவெறி கொண்ட அகம்பாவ நிகழ்வுகளும் நடைபெற்றன.

இவ்வேளையில் இச்சாதிவெறி கொண்ட நிகழ்வுகளுக்கு எதிராக கர்னகடுரமாகப் போராடியதை அன்றைய அரசாங்க அதிபராக இருந்த ஸ்ரீ காந்தா சில பொது நிகழ்வுகளில் சொல்லியிருக்கின்றார். இப்படியாக கம்யூனிஸ்ட் கட்சி அன்று ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலைக்கு எதிராக மற்றெல்லா கட்சிகளையும் விட அதீத வித்தியாசத்தைக் கொண்டிருந்தபோதிலும்,
அப்பிரச்சினையை அணுகிய முறை பாராளுமன்ற சீர்திருத்வாதத்தை தன்னகத்தே உள்ளடக்கிய நிலையிலேயே இருந்தது.

உயர்சாதி மக்களின் வாக்கு வங்கியைக் கணக்கில் கொண்டதால், ஒடுக்கப்பட்ட மக்களிற்கான போராட்டங்களை, சரியான வெகுஜனப் போராட்ட மார்கத்திற்கு இட்டுச்செல்ல முடியா நிலையிலும் இருந்தது. அதற்கு அன்றைய பாராளுமன்ற சமாதான சகஜீவனப்பாதையிலான அரசியல் கண்ணோட்ட நிலையியலே பிரதான காரணியாகும்.


இந்நிலையியலையே அன்றைய சோவியத் தலைமையும் முன்னெடுத்தது. இந்நிலையின் தொடர்ச்சி தத்துவார்த்த முரண்பாடுகளின் பாற்பட்டு கட்சிக்குள் பிளவையும் ஏற்படுத்தியது.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு

1964-ல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட அரசியல்--சித்தாந்த—கோட்பாட்டுப் பிரச்சினைகளால், அக்கட்சி பிளவுபடும் நிலைக்குச் சென்றது. இதன் பிரதான பிரச்சினை சமுதாய மாற்றத்தை, சமுதாயப் புரட்சியின்றி (ஆயதப்போராட்டம்) பாராளுமன்றத்தின் மூலம், (சமாதான சகஜீவனம்) கொண்டுவர முடியுமெனும் தத்துவக் கோட்பாடேயாகும். இக்கோட்பாடு சோவியத் யூனியனில், ஸ்டாலின் அவர்களின் மறைவிற்குப் பின்பாக தலைமைக்கு வந்த குருச்சேவின் திரிபுவாதத் தலைமையால் வைக்கப்பட்டதாகும். இதை அன்றைய மாவோ தலைமையிலான சீனக்கம்யூனஸட் கட்சி, எதிர்த்தது. பாராளுமன்றத்தின் மூலம் சமுதாய மாற்றத்தையோ, சோஸலிச சமுதாயத்தையோ கட்டியெழுப்ப முடியாது எனும் கோட்பாட்டை முன்வைத்தது. இவ்விவாதத்தின் பிரதிபலிப்புகள் அன்றைய காலகட்டத்தில் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் பிளவை ஏற்படுத்தியது. இந்நிலை இலங்கையிலும் ஏற்பட்டது.

இப்பிளவானது "பீற்றர் கெனமன் - விக்கிரமசிங்க" தலைமை, சோவியத் நிலைப்பாட்டையும், "சண்முகதாசன - பிரேமலால்" தலைமை சீன நிலைப்பாட்டையும் தேர்ந்தெடுத்தன. இதுவே சீன-மொஸ்கோ சார்புக்கட்சிகள் எனும் பதத்தை பின்னால் நிலை நிறுத்திற்று. இப்பிளவானது சிறுபான்மைத் தமிழர் மகாசபைக்குள்ளும் ஏற்பட்டது.

இப்பிளவில் நடுநிலையாக நின்ற பலர் ஒதுங்கினர். எம்.சி. சுப்பிரமணியம், டொமினிக் ஜீவா போன்றோர்கள் சோவியத் சார்பாகவும், அதிலிருந்து விலகியவர்கள் சீனசார்பாகவும் செயற்பட ஆரம்பித்தனர். வெளியேறிவர்களில் கே.டானியல், என். கே.ரகுநாதன், க. பசுபதி, கே. தங்கவடிவேல், வ. சின்னத்தம்பி, மு. முத்தையா போன்றவர்கள் முக்கியமானவர்களாவர்.

(தொடரும் அடுத்த தொடர் சாதியத்திற்கு எதிரான 1966-அக்டோபர்-21--எழுச்சி பற்றிய பதிவிலிருந்து ஆரம்பமாகும்)

தொடரும்)