Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

‘மாவோயிஸ்டுப் போரின் தளபதி’ ப.சிதம்பரம் ஒட்டுண்ணி அடுத்த பிரதமர்

உலகின் பிரபலமான முதலாளித்துவ பத்திரிகைகளில் முதலாவதாகக் கருதப்படும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (Wall street Journal) இந்தியாவின் அடுத்த பிரதமர் ப.சிதம்பரமாக இருக்கக் கூடும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. கூடவே, இந்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அவருடைய ஒரு பேட்டியையும்  வெளியிட்டு உள்ளது. ஓய்வுபெற்ற உலக வங்கிக் குமாஸ்தாவான தற்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று தான் தோன்றுகிறது.

மன்மோகன் சிங் உலக வங்கி நிர்பந்தத்தால் திடீர் தலைவராகி, பின்னர்  பிரதமராகவும் அமர்த்தப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு தூயவர், அறிவாளி, பொருளாதார மேதை, சீர்திருத்தவாதி என்று புகழப்பட்டு தேர்தலையே சந்திக்காமல் ஒரு எம்.பி ஆன அவருடைய காலத்தில்தான் நாடு என்றுமே கண்டிராத அளவு ஊழலைக் கண்டது. ஊழல் செய்யப்பட்ட பணத்தின் அளவு சில நூறு கோடிகளில் இருந்து, பல ஆயிரம் கோடிகளாக வளர்ச்சி பெற்று அவர் பிரதமர் பணியில் இருந்து ஒய்வு பெரும் முன்பு இரண்டு லட்சம் கோடிகளாக பரிணாம வளர்ச்சியைக் கண்டது.

ஆக, இந்தியாவைச் சீர்திருத்த உலக வங்கி என்னும் கடவுள் அனுப்பிய இந்தத் வந்த தேவதூதரின் சாதனை முடிவுக்கு வருகிறது. இந்தத் திருப் பணியில் தம்மை முற்றும் இணைத்துக்கொண்டு மன்மோகன் சிங்குக்கு வலது கரமாக இருந்தவர் செட்டி நாட்டைச் சேர்ந்த சிதம்பரம். மன்மோகன் சிங்குக்கு இல்லாத ஒரு திறமை இந்தச் சிதம்பரத்திடம் உண்டு- அது கூச்சமின்றிப் பொய் பேசுவது. அவருடைய அபூர்வமான திறமைக்கு இப்போது உரிய பரிசு வழங்கும் நேரம் வந்திருக்கிறது. அதுதான் அடுத்த பிரதமர் பதவி. வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (Wall street Journal) செய்தி வெளியிடுகிறதேன்றால் அது உண்மையாக(?) இருக்கவும் வாய்ப்புண்டு.

போராடும் பழங்குடி மக்களை முன்னொருபோதும் இல்லாத வகையில் லட்சக்கணக்கான ராணுவப் படைகளை அனுப்பி ஒடுக்கி வருவதில் ப.சிதம்பரம் காட்டி வரும் முனைப்பான நடவடிக்கைக்காக அவருக்கு வழங்கப்படும் பரிசு இந்தப் பிரதமர் பதவி என்று கொள்ளலாம். சிதம்பரம் தலைமையில் இந்திய அரசு தற்போது நடத்திவரும் பழங்குடி மக்கள் மீதான போர் உலகின் மிகவும் பின்தங்கிய பகுதியில் மிகவும் நவீனமான ராணுவத்தைக் கொண்டு நடத்தப்படும் ஒரு போர். மத்திய இந்திய மாநிலங்களில் சிதம்பரம் இறக்கிவிட்டுள்ள ராணுவம்  போலீஸ் படைகளின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானம், ஈராக், மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் அமெரிக்கா நிறுத்தியிருக்கும் படைகளின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகம். இந்தியாவில் காஷ்மீர் தவிர்த்து வேறு எங்கும் இவ்வளவு படைகளை நிறுத்தி இந்திய அரசு தனது உள்நாட்டுப்போரை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது சிதம்பரத்தின் ஒரு முக்கியமான சாதனை.

வடகிழக்கு இந்திய மாநிலங்களான அஸ்சாம், நாகலாந்து, மணிப்பூர், திரிபுரா, மேகாலயா மற்றும்  காஷ்மீர் எல்லையில் தேசிய விடுதலைப் போராளிகளை எதிர்த்து போரிட நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய ராணுவப் படைகளை மீண்டும் ஒரு போலியான சமாதான நடவடிக்கை மூலம் பின்வாங்க வைத்து மத்திய இந்திய மாநிலங்களான சத்திஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீகார், ஆந்திராவில் நிறுத்தத் திட்டமிட்டவர்களில் ப.சிதம்பரம் முக்கியமானவர். இந்திய அரசின் உள்துறைச் செயலாளர் கோபால் பிள்ளை பல வருடங்களாக வட கிழக்கு மாநிலங்களில் நடத்திவரும் இந்தியாவின் போரைத் தலைமை தாங்கி நடத்தியவர். கடந்த அறுபது வருடங்களாக இந்திய அரசு நடத்திவரும் தேசிய இனப் ஒடுக்குமுறைப் போர் இப்போது ஒரு சமநிலையை அடைந்து விட்டபடியால் இந்திய அரசு பின்வாங்குவது தமக்கு சாதகம் என்ற வகையில் மீண்டும் ஒரு பேச்சு வார்த்தை என்ற நாடகத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால், வாபஸ் பெறப்பட்ட இந்திய ராணுவப் படைகள் மத்திய இந்திய மாநிலங்களில் வாழும் பழங்குடிமக்களின் நிலத்தைப் பிடுங்கும் போருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் உள்ள தொழில் முதலாளிகளுக்கு இப்போது குறைந்த செலவில் கிடைக்கப் போகும் இரும்பு, செம்பு, நிலக்கரி, பிற கனிமப் பொருட்கள் பழங்குடியினர் வாழும் மத்திய இந்தியாவில்தான் கிடைக்க இருக்கிறது. இந்த இருவர் கூட்டணி இந்த மாநிலங்களில் இருக்கும் அரசாங்க எந்திரத்தை ரானுவமயமக்கி சிவில் அரசாங்கம் என்பதை பேச்சுக்குக் கூட இல்லாமல் ஒழிக்க செயல்பட்டு வருகின்றனர். காலனிய கால வெள்ளை அரசாங்கம் கூட பெயருக்கு ஒரு சிவில் அரசாங்கம் இருப்பதாக சொல்லிக்கொண்டு தன்னுடைய காலனியப் போரை நடத்தியது. சிதம்பரத்தின் புதிய காலனியப் போர் பெயரளவுக்குக்கூட சிவில் அரசாங்கம் என்ற ஒன்று தேவையில்லை என்று கூறிவருகிறது. இது புதிய காலனி ஆட்சி முறையின் ஒரு வளர்ச்சி என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் போர் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் ஆதரவு வழங்கி நடத்தும் மிக நீண்ட ஒரு போராக இருக்கும். இஸ்ரேலின் உளவுப் பிரிவுகள், போலீஸ் படைகள் ஏற்கனவே, மத்திய இந்தியாவில் பயிற்சி அளிப்பதாகவும் ஆந்திரப் போலீஸ் பிரிவு ஏறக்குறைய இஸ்ரேலிய அதிகாரிகளின் வழிநடத்தலின் படி அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி வருவதாக வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகிறது. அதற்குத் துணை செய்யும் வகையில், இருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயக உரிமைகளையும் பறித்து பினாயக் சென் போன்ற மனித உரிமை ஆர்வலர்களையும், பழங்குடி மக்களின் ஆதரவாளர்கள்,  காந்திய இயக்கங்களைத் தடை செய்து அனைவரையும் சிறையில் அடைத்த வகையில் சிதம்பரமும், கோபால் பிள்ளையும் அநேகமாக வெற்றி பெற்று விட்டார்கள் என்றே தெரிகிறது. பினாயக் சென் வழக்கின் உயர்நீதிமன்றத் தீர்ப்பும் நீதிமன்றங்கள் அவர்களின் வழிக்கு வந்து போருக்கு உறுதுணையாக இருப்பதையே காட்டுகிறது.

சிதம்பரம் ஏறக்குறைய மன்மோகன் சிங் போலவே மக்கள் ஆதரவு எதுவும் இல்லாத, ஏன் குறைந்த பட்சம் ஜாதிக்காரர்கள் ஆதரவு கூட இல்லாத ஒரு ஒட்டுண்ணி என்பது அவருக்கு இருக்கும் கூடுதல் சிறப்பு. இப்படிப்பட்ட ஒட்டுண்ணிகள் தான் உலக ஆதிக்க சக்திகளான உலக வங்கி சொல்லும் வழியில் நாட்டை நடத்தச் சிறந்தவர்கள் என்பது அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு மிக நன்கு தெரியும். எனவே, இந்த ஏற்பாடு அவர்களிடைருந்து வருவதில் ஆச்சர்யப்படவேண்டியதில்லை. இந்திய மக்கள் சிதம்பரத்தை தமது பிரதமராக வரவேற்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள்.

வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (Wall street Journal) பத்திரிகைக்கு பிப்ரவரி 11 ம் தேதியன்று அவர் அளித்த இந்தப் பேட்டியில், மத்திய இந்தியாவில் தான் நடத்திவரும் ‘மாவோயிஸ்டுகளுடனான போர்’ பற்றி அவர் குறிப்பிட்ட பகுதியை இங்கே தருகிறோம்:

WSJ: மாவோயிஸ்ட் கிளர்ச்சியை ஒடுக்குவது உங்கள் பணிகளில் மிகவும் முதன்மையான பணியாக இருக்கும் என்று அறிகிறோம். கடந்த ஆண்டு நீங்கள் செய்ததை ஒப்பிடும்போது இந்த 2011 ல் அப்படியென்ன வித்தியாசமாக செய்யப்போகிறீர்கள்? அல்லது புதுமையாக என்னவிதமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்?

சிதம்பரம்: இன்னும் இதைப் பற்றி முழுதுமாகச் சொல்லும் நேரம் இன்னும் வரவில்லை. என்னுடைய கணிப்பில் ஒரிஸ்சா, ஜார்கண்ட் மாநிலங்களில் பல இடங்களில் அரசாங்கத்தின் கை ஓங்கியே இருக்கிறது, மேற்கு வங்க மாநிலத்தைக் கூட இதில் சேர்த்துக் கொள்ளலாம். இங்கே, சில நாட்கள் முன்பு வரை நிலைமை வேறாக இருந்தது. இந்த வினாடியில், சத்திஸ்கார் மாநிலத்தில் ஒரு தேக்க நிலை அல்லது ஒரு சம நிலை இருந்து வருகிறது என்று சொல்லலாம். ஆந்திராவில் விசாகபட்டினம் மாவட்டத்தில் மட்டும் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன, அதைத் தவிர்த்து மாநிலம் முழுதும் எங்கள் கை ஓங்கியே இருந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் அரசாங்கத்துக்கு (படைகளுக்கு) சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. மொத்தத்தில் கொஞ்சம் பின்னடைவுகள், என்றாலும் சில வெற்றிகளையும் பெற்றிருக்கிறோம், அதன் மூலம் நக்சல்பாரிப் படைகளை எதிர்கொண்டு வருகிறோம்.

இதன் கூடவே, அரசாங்கத்தின் வழக்கமான குழப்பம் தரும் அதிகார வர்க்க நடைமுறைகளை மாற்றியிருக்கிறோம், ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று அதிகாரிகளின் கையில் பணத்தைக் கொடுத்து ‘நீங்கள் போய் எதெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் மூன்று மாதத்திற்குள் இந்தக் கிராமங்களில் செய்து முடியுங்கள்’ என்று உத்தரவிட்டு இருக்கிறோம். இப்படி இன்றைக்கு 60 மாவட்டங்களில்,25 கோடி பணத்தை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொடுத்திருக்கிறோம். அடுத்த வருடம், இந்தத் தொகை 30 கோடிக்கும் மேலாக அதிகரிக்கப்படும். இந்த மூன்று அதிகாரிகளுக்கும் அவர்கள் நினைப்பதைச் செய்ய முழுச் சுதந்திரத்தை கொடுத்திருக்கிறோம்.

 

WSJ: முறையாக நடத்தப்படும் நலத்திட்டங்கள் மூலம் இல்லாமல் இப்படி பணத்தை நேரடியாக அதிகாரிகளிடம் பிரித்துக் கொடுப்பது ஒரு புது முயற்சி – அப்படித்தானே?

சிதம்பரம்: கடந்த காலத்தில் பல கமிட்டிகள் தீட்டிக் கொடுத்த வண்ணமயமான திட்டங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். எனவே, இந்த ஆண்டிலிருந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 கோடி ரூபாய் பணத்தை நேரடியாக மூன்றே மூன்று அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறோம். இந்த அதிகாரிகள், மாவட்டத்தின் மூத்த IAS அதிகாரியான–மாவட்டக் கலெக்டர், மூத்த போலீஸ் அதிகாரியான மாவட்டக் காவல் அதிகாரி (S.P),  மூத்த வன அதிகாரியான மாவட்ட வன அலுவலர் (DFO). அவர்களிடம் நாங்கள் சொல்லியிருக்கிறோம்: ‘நீங்கள் மூன்று பெரும் என்ன நினைக்கிறீர்களோ அதைச் செய்யலாம்’.

WSJ: தொழில் நிறுவனங்கள் பழங்குடி மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிவருவதாகப் பலர் பயப்படுத்தி வருவது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

சிதம்பரம்: இதெல்லாம் மிகவும் கடினமான விஷயங்கள். பல ஊர்களில் நிலம் கிராமம் முழுமைக்கும் பொதுவானது. இன்னும் பல இடங்களில், அரசாங்கத்திற்குச் சொந்தமானது ஆனால், பழங்குடிகள் அதை ஆக்கிரமிப்புச் செய்திருக்கிறார்கள். கனிமப் பொருட்கள் அந்த நிலங்களில் தான் இருக்கின்றன. அந்த கனிமங்களைத் தோண்டவேண்டுமானால்,  காடுகளை வெட்டித்தான் ஆக வேண்டும், காடுகளை வெட்ட வேண்டுமானால், பழங்குடி மக்களை வெளியேற்றத்தான் வேண்டும். அவர்களுக்கு வேறு பிழைப்புத் தரலாம். மீண்டும் காடுகளை மறுபடி உருவாக்கலாம். இது மிகவும் சிக்கலான விசயம். என்னுடைய கருத்துப்படி, எதெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்து இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கனிமங்கள் மூலமாக நல்ல மதிப்புக் (பணம்) கிடைக்க வேண்டுமென்றால் அதைத் தோண்டித்தான் ஆகவேண்டும். கனிமங்களெல்லாம் இன்னொரு ஆயிரம் ஆண்டுகள் பூமிக்குள்ளேயே புதைந்து கிடக்கும் என்றால் அதனால் யாருக்கும் பலன் இல்லை.

 

ஊழலைத் தாராளமயம் ஆக்கியவர் சிதம்பரம் !!

தாராளமயம் என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகள் நாட்டைக் கொள்ளையிடுவதை சிறப்பாக செயல்படுத்தியவர்களில் முக்கியமானவர் சிதம்பரம். சிதம்பரம் சட்டத்திலும், நிதி நிர்வாகத்திலும் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ பல்கலைக் கழகத்திலும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் பட்டம் பெற்றவர். அவர் பணியாற்றிய என்ரான் (Enran), வேதாந்தா (Vedantha) , போன்ற கம்பெனிகள் உலகின் மிகப் பெரும் ஊழல் கம்பெனிகள். அந்தக் கம்பெனிகள் செய்த ஊழல்கள் ஏறக்குறைய மாயாஜால கண்கட்டி வித்தைகளுக்கு ஒப்பானவை, ஊழலில் அவை எட்டிய வரம்பு இதுவரை எட்டப்படாத அளவில் மிகப் பெரியவை. இந்தியா உட்பட பல நாடுகளில் இந்தக் கம்பெனிகள் மக்கள் பணத்தை சுருட்டி அதன் தலைமை அதிகாரி உட்பட பல முக்கிய அதிகாரிகள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். என்ரான் கம்பெனி ஊழலில் சிக்கும் வரை உலகின் மிகவும் முன் மாதிரியான, நல்ல மனிதப் பண்புகள், விழுமியங்கள் உடைய ஒரு கம்பெனியாகச் சொல்லப்பட்டது. ஆனால், ஒரே நாளில் இந்தக் கம்பெனி திவால் ஆகி பல ஆயிரம் கோடிப் பணம் காணாமல் போய் முதலீடு செய்திருந்த பலர் அதிலும் முக்கியமாக அமெரிக்கர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். விசாரனையின் பொழுது தெரிந்தது என்னவென்றால் – என்ரான் தொடக்கம் முதல் இறுதி வரை மோசடி செய்வதற்காகவே ஒரு திறம் படைத்த நல்ல பல்கலைக் கழகங்களில் படித்த சிதம்பரம் போன்ற ஆசாமிகளை வேலைக்கு வைத்து இருந்திருக்கிறது.  ஆனாலும், இதற்காக வேலை செய்த சிதம்பரம் சிக்கவில்லை. அதுமட்டும் அல்ல சிதம்பரம் இது வரை ஒரு ஊழலில் கூட நேரடியாக சிக்கி எந்த வழக்கிலும் மாட்டிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு திறமையானவர் !!

இப்போது ஊழலைக் கீழ்மட்டம் வரை கொண்டு செல்ல சிதம்பரம் வகுத்த திட்டங்களில் ஒன்று தான் இந்த சிறப்புத் திட்டம். ‘மாவோயிஸ்ட் போர்’ நடக்கும் மாநிலங்களிலெல்லாம் ஏற்கனவே, பழங்குடியின மேம்பாட்டுக்கு பெருந்தொகையான பணம் செலவிடப்பட்டு வருகிறது, ஏற்கனவே, பணத்தில் மிதந்து வரும் இந்த மாவட்டங்களில்-  தலைமை அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் இந்தப் பணம் அதிலும் குறிப்பாக மாவட்ட ஆட்சியர் (District Magistrate), மாவட்ட போலீஸ் சூப்பரிண்டன்ட் (S.P),மாவட்ட வன அதிகாரி (District Forest Officer) ஆகிய இந்த மூன்று பேருக்கும் லாட்டரியில் ஜாக்பாட் விழுந்த மாதிரிதான். 25 கோடி ரூபாய் பணத்தை இந்த மூன்று அதிகாரிகள் மூன்று மாதத்திற்குள் செலவிடவேண்டும். என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாதது அல்ல. வழக்கமான மாவட்ட நடைமுறைகளை அதாவது– பெயரளவுக்குகூட யாருக்கும் இவர்கள் பதில் சொல்லவோ, பணத்திற்குக் கணக்கு வைக்கவோ தேவையில்லை. எவரிடமும் சொல்லாமல் சுருட்டிக் கொள்ள ஒரு அரியவாய்ப்பு. இந்த மாவட்டங்களில் பணத்தை மாற்றுவதற்குக் கூட வங்கிகள் இல்லை, ஜீப் கார்கள் ஓடுவதற்கு ரோடுகள் இல்லை, மருத்துவ மனைகள் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்பதை புரிந்து கொண்டால் சிதம்பரம் வகுத்துக் கொடுத்திருக்கும் இந்தக் கொள்ளையிடும் பணியைத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

பழங்குடியினரின் நிலத்தை பிடுங்கும் இந்தப் போரில் பலன் அடையப் போவது வேதாந்தா போன்ற கம்பெனிகள் தான். வேதாந்தா கம்பெனியின் டைரக்டர் பதவி மூலம் பல கோடி பங்குகள் சிதம்பரத்திற்கு கிடைக்கும்போது நேரடியாகப் போரை நடத்தும் கூலிப்படைகளின் தலைவர்களான மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்.பி போன்றவர்களுக்கு வருடம் 25 கோடி தருவது ஒரு அவசியம் தான். அவர்கள் எளிதாக ஊழல் செய்ய அவர்களுக்கு ஒரு கூடுதல் வாய்ப்பு.

பழங்குடியினருடன் போர் என்பது கனிமங்களுக்காகத்தான்

‘பழங்குடியினருடன் நடக்கும் போர் என்பது கனிமங்களுக்காகத்தான் நடக்கிறது’ என்ற விஷயம் இந்தப் பேட்டியைப் படிப்போருக்கு வெளிப்படையாகவே தெரியும். ‘மாவோயிஸ்டுகளுடன் போர் ! நக்சல்பாரிகளுடன் போர் ! பயங்கரவாதிகளுடன் போர் !’  என்று பல பூதங்களைக்காட்டி அனைவரையும் வழிக்குக் கொண்டு வந்து விட்டபின் அவரது முயற்சி ஏறக்குறைய வெற்றியும் பெற்று விட்டது. இப்போது பத்திரிகைகள், நீதிமன்றங்கள், அறிவாளிகள் அனைவரும் சிதம்பரத்தின் போரை ‘பழங்குடி மக்களின் நிலத்திற்கான போர்’ என்று சொல்வது இல்லை – மாறாக ‘மாவோயிஸ்டுகளுடன் போர்’ என்று தான் சொல்கிறார்கள்.

இதே போல சிதம்பரத்தின் திட்டங்களில் ஒன்று போரில் சாகும் ராணுவம், போலிஸ்காரர்களுக்கு சன்மானத்தை பல மடங்கு உயர்த்தியிருப்பது. இந்திய ராணுவ வீரர் எல்லையில் போரிட்டுச் செத்தால் கிடைப்பது ரூபாய் பத்து லட்சம். ஆனால், மாவோயிஸ்டுகளுடன் போரிட்டுச் செத்தால் கிடைப்பது 70 லட்சம். மாவட்டக் கலெக்டர்கள் தொடங்கி அப்பாவி போலீஸ் ராணுவ வீரர்கள் வரை சிதம்பரம் வகுத்துள்ள சிறப்பு பரிசுத் திட்டம் அவரது மூளையில் உதித்ததுதான்.

 

வருக சிதம்பரம் வருக !!