Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ் – குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 7

மீன்பிடித்தொழிலும் தமிழ், சிங்கள தொழிலாளர்களுக்கிடையிலான உறவும்

சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி செய்த 72 -77 வரையான காலத்தில் தென்னிலங்கையில் அரசியல்ரீதியாக அசாதாரண நிலை நிலவியது. பெரும்பான்மையான மீன்பிடி சார்ந்த கிராமத்தவர் பலர் ஜேவிபி யில் இணைந்திருந்தனர். இக்காரணங்களால் நீர்கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாரிய மீன்பிடி அபிவிருத்தியொன்றும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் 1977 இல் ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்தன அரசால் உலக நாணயநிதியத்தின் உதவியுடனும், மேற்குநாடுகளின் உதவியுடனும் இப்பகுதிதியைச் சேர்ந்த 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிக் கிராமங்கள் உல்லாசப் பயணிகள் வந்து தங்கிச் செல்லும் விடுதிகளையும், கேளிக்கை அரங்குகளையும் கொண்ட தலங்களாக மாற்றப்பட்டது. இன்றும் கூட 70 சதவீதத்திற்கும் அதிகமான உல்லாசவிடுதிகள் இப்பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இந்த மாற்றமானது பாரிய கலாச்சார சீரழிவுகளையும், சமூக-பொருளாதார மாற்றங்களையும் ஏற்படுத்தியது. யுத்தத்தால் உல்லாசப் பயண வியாபாரம் படுத்த வேளையில் இப்பகுதி மக்கள் பாரிய பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டார்கள். வளங்கள் நிறைந்த கடலிருந்தும் அவர்களால் தொழில் செய்யமுடியவில்லை. காரணம் இருபது வருடங்களாக கடல்சார் தொழில் செய்யாததனால் தொழில் அனுபவம் மறக்கப்பட்டதும், மீன்பிடித் தொழிலுக்கான உள்கட்டுமானம் அழிக்கப்பட்டிருந்ததுமாகும். வறுமையைப் போக்க பல குடும்பங்கள் கொழும்பு போன்ற பெருநகரங்களுக்கு புலம்பெயர்ந்தனர். ஆண்கள் தங்களை கடற்படையிலும், இராணுவத்திலும் இணைத்துக் கொண்டனர். பாணந்துற, பேருவள, ஹிக்கடுவ, காலி, மிசற, தங்கல போன்ற பிரதேசங்களை உல்லாசப் பயண அபிவிருத்தியால் பாதிக்கப்பட்ட முன்னாள் பெருமை மிகு மீன்பிடித்துறைகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.

 

இவ்வாறு தென்னிலங்கை மீனவர் சமூதாயத்தில் பொருளாதார வறுமை நிலவிய காலமான 1977 இக்கும் 1983 இற்கும் இடைப்பட்ட காலத்தில் சில ஆயிரம் சிங்கள கடல்தொழிலாளர்கள், வடக்கில் மன்னார், பொலிகண்டி, பருத்தித்துறை, மயிலிட்டி, மண்டைதீவு, குருநகர், ஊர்காவற்துறை, தொண்டைமானாறு போன்ற தமிழ்ப்பிரதேசத்தில் தமிழர்களுடன் இணைந்து ஒன்றாக தொழில் செய்தார்கள் என்பதும், பலர் இப்பகுதிகளில் திருமண உறவை ஏற்படுத்திக்கொண்டார்கள் என்பதும் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் நினைவிற்கொள்வது நன்று.

தமிழ் சிங்கள மீனவர்களுக்கிடையிலான உறவானது பல நூறாண்டு வரலாற்றை கொண்டது. சிங்கள மீனவர்களுக்கு படகுகட்டும் உதவியை பல நூறாண்டுகளாக தமிழர்களே செய்தார்கள். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பருத்தியடைப்பு, நயினாதீவு, தோப்புக்காடு, அராலி, வட்டுக்கோட்டை போன்ற பிரதேசத்தை சேர்ந்தவர்கள், பல பரம்பரையாக கப்பல் கட்டி வணிகம் செய்த வரலாறைக் கொண்டவர்கள். ஆங்கிலேய நீராவிக் கப்பல்கள் இவர்களின் பாய்க்கப்பல் வணிகத்தை இலாபமற்றதாக்கியதால், சிறு வள்ளங்கள் செய்தும், மீன்பிடியில் ஈடுபட்டும் சீவியத்தை நடாத்தினர். இந்தக் காலகட்டத்தில் இச்சமுகத்தை சேர்ந்தவர்கள் திருக்கோணமலை, புத்தளம், போன்ற தமிழ் பிரதேசங்களிலும் கொழும்பு, ஜாஎல, சீதுவ போன்ற சிங்கள பிரதேசங்களில் குடியேறி மீன்பிடி மரக்கலங்கள் உருவாக்கினார்கள். இதே சமூகத்தினர் தான் பிற்காலத்தில் சீ-நோர் நிறுவனத்தின் ஊடாக கண்ணாடி இழைப்படகு செய்யும் முறையை சிங்களப் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தினர்.

இதே போன்று வடமராட்சி, மண்டைதீவு, குருநகர் பகுதியை சேர்ந்த கிறித்தவ மீன்பிடிச்சமூகம் நீர்கொழும்பு மீன்பிடி சமூகத்துடன் 83 ம் ஆண்டுவரை நெருங்கிய நல்லுறவை கொண்டிருந்தனர். திருமணங்கள் கூட இந்தச் சமூகங்கள் இடையில் நடந்துள்ளது. சிங்கள மீனவச்சமூகம் ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசின் சுற்றுலா அபிவிருத்தியால் பாதிகப்பட்டவேளை மேற் கூறிய சமூகத்தவர்கள் சிங்கள மீனவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கினர். இந்திய இராணுவ நடவடிக்கையின் பின், மேற்கண்ட சமூகத்தவர் பலர் நீர்கொழும்புப் பகுதியில் தற்காலிகமாக குடியேறினர். சிலர் அங்கு மீன்பிடியையும் தொழிலாக செய்தனர். இதற்கு அடிப்படைக் காரணம் வரலாற்றுரீதியாக இந்த இருவேறு இனம் சார்ந்த மீன்பிடி சமூகங்களுக்கிடையிலான நெருங்கிய உறவேயாகும்.

இன்று குறுந் தமிழ்தேசியம் பேசும் புலம்பெயர் இடதுசாரி வேடம் போட்டோர் நடாத்தும் ஒர் இணையத்தில் இந்தியர் ஒருவர் தனது கட்டுரையில்; கச்சதீவு அந்தோனியார் கோவில் திருநாள் தமிழ்நாடு மீன்பிடிச்சமூகமும், இலங்கை தமிழ் மீன்பிடிச் சமூகமும் தமது தொப்புள்கொடி உறவை வளர்க்கும் நிகழ்வாக உருகி மருகி எழுதியிருந்தார். ஆனால் உண்மை அதுவல்ல. கடத்தல்காரர்கள் சந்திக்கும் நிகழ்வாகவும், பண்டமாற்று செய்யும் ஒரு இடமாகவும், கிறித்தவர்கள் தமது மதவழிபாட்டை செய்யும் நிகழ்வாகவுமே கச்சதீவு அந்தோனியார்கோவில் திருநாள் இருந்தது. இலங்கையில் இருந்து கராம்பு, ஏலம், கறுவாப்பட்டை, தேங்காய்எண்ணையும், கோம்பாசோப்பு, சந்தனசோப், ரேக்ஸ்சோனாசோப் போன்ற சவற்கார வகைகளையும் இலங்கையர்கள் கச்சதீவுக்கு கொண்டு போய், பண்டமாற்றாக பிளாஸ்டிக் பொருட்களையும், காஞ்சிபுரம் பட்டுசேலைகள், கைத்தறிப் புடவைகளையும், வேட்டி, கிப்ஸ் சாரம் போன்றவற்றையும் பெற்றுக்கொண்டனர். மேலும் கச்சதீவு அந்தோனியார்கோவில் திருநாள் ஆனது குடும்பங்கள் பங்குகொள்ளும் விழாவல்ல. பெரும்பாலும் சிலநூறு இலங்கை – இந்திய ஆண்கள் பங்குகொள்ளும் நிகழ்ச்சி.

ஆனால் தமிழ் மற்றும் சிங்கள கிறிஸ்தவ மீன்பிடிச்சமூகங்கள் மன்னார் மாந்தை மடுமாதா ஆலயத்தில் மீன்பிடி குறைந்த சோழகக்காற்று வீசும் காலமான ஆவணியில் சந்திப்பது பல பரம்பரைகளாக நடைபெற்ற விடயம். இது யுத்தம் தொடங்கிய பின்னும் நடைபெற்றது. அதேபோன்று தமிழ் மீன்பிடிகார கிறிஸ்தவர்கள் நீர்கொழும்பு தேவாலய திருவிழாவிலும், குறிப்பாக புத்தளம் தனைவில்லு சந்தானாள் ஆலய திருவிழாவிலும் பங்குகொண்டதுடன், அப்பிரதேசங்களில் வாழ்ந்த சிங்கள நட்புகளின் குடும்பங்களை தரிசித்தும் வந்தனர்.

மீன்பிடியில் ஈடுபடும் தமிழ்சைவர்கள் பலர் தென்மன்னாரில் அமையப்பெற்ற அரிப்பு முதல் முந்தல் வரையான பகுதிகளில் பறிக்கூடு மூலமும், களக்கடல் வலைகள் மூலமும் தொழிலில் ஈடுபடுவது வழக்கம். இதேபகுதியில் சிங்கள தொழிலாளர்கள் கரைவலை தொழிலில் ஈடுபடுவதும், தமிழர்களும், சிங்கள மீன்பிடிகாரரும் அருகருகான வாடிகளில் தங்கியிருப்பதும் வழமை. இவர்கள் கூட வருடத்தில் சிலநாட்கள் உடப்பு பத்தினியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வது வரலாறு. இவ் வரலாறு புளொட் இயக்கம் நிக்கரவெட்டிய வங்கிக்கொள்ளை நடத்தும் வரை தொடர்ந்தது.

இவ்வாறு பரம்பரை பரம்பரையாக தொழில் அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும் இந்த இரு மீன்பிடிச் சமூகத்திற்குள்ளும் இருந்த உறவு மறுபுறத்தில் சமூகச் சீரழிவுச் செயற்பாடான “கள்ளக் கடத்தல்” எனச் சொல்லப்படும் வடபகுதி மீனவர்களில் ஒரு பகுதியால் இந்தியாவில் இருந்து சட்டத்திற்கு முரணாக கடத்தப்பட்ட பொருட்களை சிங்கள பிரதேசத்தில் சந்தைப்படுத்துவதற்கும், அப்பகுதிகளில் தமிழர்கள் வர்த்தக நிறுவனங்களை அமைப்பதற்கும் வழிவகுத்தது.

இவ்வுறவு பலகாலம் நின்று நிலைப்பதற்கு பல காரணங்கள் கூறலாம். முதல் முக்கிய காரணம் இரு பகுதியினரின் மீன்பிடிப் பொறிமுறை பெரும்பாலும் வித்தியாசமானதாகும். உதாரணமாக மேற்கூறியபடி அரிப்பு பிரதேசத்திற்கும் புத்தளம் முந்தல் பிரதேசத்திற்கும் இடையில் தொழில் செய்த சிங்கள தொழிலாளர்கள் கரைவலை தொழிலில் ஈடுபட்டனர். பருவகாலத்தில் வடபகுதியை சேர்ந்தோர் இப்பகுதியில் பறிக்கூடு, வலைபடுப்பு, கடலட்டை குளித்தல் போன்ற தொழிலில் ஈடுபட்டனர். இந்த இரு பகுதியினராலும் குறிவைக்கப்படும் மீன்வகை கூட ஒரே வகையானதல்ல. இதனால் முரண்பாடுகள் சொல்லக்கூடிய அளவுக்கு இருக்கவில்லை. இன்றும் இதேநிலை தான் உள்ளது. அடிப்படையில் இருபகுதியினரின் தொழில் பார்க்கும் முறையும், தொழில் செய்யும் பிரதேசங்களும் பெரும்பாலும் வௌ;வேறானதாகவே உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டே பருத்தித்துறை தொழிலாளி ஒருவர் வீரகேசரி பத்திரிகைக்கு சிங்களவர்களால் அல்ல, இந்திய மீனவர்களால் தான் தமக்கு பாதிப்பென்று கூறினார். ஆனால் இந்திய குறுந்தமிழ்தேசியவாதிகளும் புலம்பெயர் இடதுசாரி வேடம்போட்ட தமிழினவாதிகளும் இணைந்து அத் தொழிலாளியை சிங்கள பேரினவாதிகளின் பேச்சாளர் என முத்திரை குத்தினர்.

இன்று நீண்டகால யுத்தம், தமிழ் மீனவர் சமூகத்தின் புலம்பெயர்வு, சிங்கள சமூகத்தின் கல்வி வளர்ச்சி மற்றும் தொழில்ரீதியான சமூகமாற்றம் போன்ற காரணிகளால் இந்த இரு சமூகத்திற்குமான உறவு இன்று மங்கிய நிலையிலுள்ளதென்பது நிதர்சனம். ஆனால் இந்திய மற்றும் புலம்பெயர் தமிழ் குறும்தேசிய, பாசிச சக்திகள் கூறுவது போல இவ்விரு மீன்பிடி சமுகத்தினருக்கிடையில் மீன்பிடி தொழில்ரீதியாக முரண்பாடு நிலவுகின்றதென யாராவது கூறமுயன்றால்; அது குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயல்வது போலாகும். அதேபோன்று இனப்பிளவை விரிவாக்க அயராது செயற்படும் குறுந்தேசியத்துடனும் தமிழினவாதிகளுடனும் ம.க.இ.க போன்ற அமைப்புக்கள் கைகோர்ப்பது குளத்தைக்கலக்கி பருந்திற்கு இரைகொடுத்தது போலாகும்.

முற்றும்

பிற்குறிப்பு :

இலங்கையில் பல காலம் யுத்தம் நடந்ததால் வடபகுதியின் மீன்பிடி சம்பந்தமான தரவுகளைப் பெற்றுக் கொள்வது இலகுவான விடயமல்ல. வடபகுதி அரச அலுவலகங்களில் கிடைக்கும் தகவல்கள் பல வருட கால பழமையானவை அல்லது அரைகுறையானவை. இதற்குக் காரணம் இன்று மீன்பிடி தொடர்பான அரசுசார் நிறுவனங்களில் அதிகாரிகளாக இருப்போர் பெரும்பான்மையானோர் கடல்சார் கல்வி கற்றவர்களோ அல்லது கடல்தொழில் அனுபவம் கொண்டவர்களோ அல்ல. அவர்களுக்கு அடிப்படை மீன்பிடி சம்பந்தமான விடயங்களே தெரியாதுள்ளது. ஆனால் இந்நிலைக்கு மாறானது தென்னிலங்கை நிலைமை. இக் காரணத்தினால் தகவல்களைச் சரிபார்க்க வடபகுதியின் மீனவர் சங்கங்களும் பல தனிநபர்களும் உதவி புரிந்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

மேலும் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கடல்சார் தொழில் நுட்பம் சம்பந்தமான தகவல்கள் கூடுமான அளவுக்கு, கடல்சார் வல்லுனர்களால் சரி பார்க்கப்பட்டே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

1. Anders Jensen J:  The story of Norwegian cod fisheries

2. Marine Resource Economics Vol. 18. 2003 . Harvest Functions: The  Bottom Trawl Fisheries

3.Massachusetts Division of Marine Fisheries : Technical Report TR-38

4. பாட்டாவழிச்சமூகம் வட்டுக்கோட்டை  : வணிகர்வரலாறு

5.Commissioner of Fisheries Chennai-6 : Tamilnadu fisheries development 2007-2008

6.Director of Marine Products Export Development Authority, Chennai: Marine Products Export 2007- 2008

7.Ministry of fisheries and aquatic resources, Sri Lanka : Framework of the fisheries and aquatic resources secter 2007-2016

படங்கள்:

Fisheries Research Division, University of Tromsø Norway