Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்தியக் கடற்கொள்ளையும் இலங்கையில் கடல்வள அழிவும்

கடந்த ஐப்பசி மாதத்தில் மட்டும் 78 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். 78 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டதானது யுத்தத்துக்கு பின் வந்த காலத்தில் நடந்த கைதுகளில் மிக அதிகமானதாகும். இலங்கைக்குச் சொந்தமான விசேட பொருளாதார கடல் வலயத்தில், சர்வதேச சட்ட அடிப்படைக்கு முரணாக, நடாத்தப்படும் இந்த கடல்வளக் கொள்ளையானது, தற்போது 2009 இக்கு முன்னிருந்த நிலையை விட அதிகரித்துள்ளது.

இன்று இலங்கை கடல்வலயத்தில் அத்துமீறல் செய்து நம் தேசத்தின் கடல்வளத்தை சூறையாடி, இயற்கை அழிவிற்கு வழிவகுக்கும் இந்தியக் கரையோர பிரதேசங்கள் பற்றி பார்ப்போமாயின், மன்னார் வளைகுடாவுக்கு வடக்கிலும், வங்காள விரிகுடாவுக்கும் இடைப்பட்ட புவியடி தளமேடையில், நாகப்பட்டினம் வடக்கிலிருந்து ராமேஸ்வரம் தெற்கு வரையாக கிட்டத்தட்ட 480 கீலோமீற்றர் கரையோர பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கரையோர பிரதேசத்தில் கிட்டத்தட்ட 43 சதவீதமாகும்.

அத்துடன் 2002 ஆம் ஆண்டு இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி நாகப்பட்டினத்தில் 1465 றோலர்களும், தஞ்சாவூரில் 469 ரோலர்களும், புதுக்கோட்டையில் 866 றோலர்களும், இராமநாதபுரத்தை சேர்ந்த 1865 றோலர்களில் 980 றோலர்களும் (மீதமானவை மன்னார் வளைகுடாவில் தொழில் செய்கின்றனர்), அதாவது மொத்தமாக 3780 இந்திய றோலர்கள் பாக்குநீரிணைப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. இத்தகவல் 2002 ஆம் ஆண்டை சேர்ந்தது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட 8500 இந்திய றோலர்கள் தற்போது இப்பகுதில் மீன்பிடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தகவல் அடிப்படையில் நம்பகத்தன்மை கொண்டதாகவே உள்ளது. காரணம், தென் இந்திய மீன்பிடிசார் வெளிநாட்டு ஏற்றுமதியும், முதலீடும் கடந்த பத்து வருடங்களில் பல நூறு மடங்கு அதிகரித்துள்ளது .

தமிழ்நாட்டின் மீன்பிடி உற்பத்தித்திறன் இன்று கேரளா, குஜராத்திற்கு அடுத்ததாக இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2008 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் மீன் உற்பத்தி 3,93,266.30 தொன்களாகும். இதில் 72644 தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 18.3 பில்லியன் (அல்லது 18131.4 மில்லியன்) இந்திய ரூபாய்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளது. இது சர்வதேச நாடுகளுக்கான ஏற்றுமதியால் பெறப்பட்ட வருமானம் மட்டுமே. உள்நாட்டு சந்தைப்படுத்தலால் பெறப்படும் வருமானம் இதைவிட அதிகமானது.

இவ்வருமானத்தை ஈட்டும் மீன்பிடி உற்பத்தியின் பெரும்பகுதி இலங்கையின் விசேட பொருளாதரா கடல் வலயத்திலேயே பிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டின் மீன்பிடியானது செல்வம் கொழிக்கும் தொழிலாக இருக்கிறது. இதனாலேயே இன்று தென் இந்திய மீன்பிடி இத்தொழில்சார் மூலதனம், சர்வதேச மற்றும் இந்திய கோடீஸ்வர முதலாளிகளுக்கும், பாரிய மீன் ஏற்றுமதி கொம்பனிகளுக்கும் சொந்தமானதாகும். பாரம்பரிய தென் இந்திய மீனவர்கள் இம் மூலதனத்தின் கூலிகளாகவே வேலை செய்கின்றனர். இவர்களே 2010 இக்கு முன்பு இலங்கை அரச படைகளால் சுடப்பட்டனர். இன்று கைது செய்யப்படுகின்றனர். இது ஒருபுறமிருக்க மேற்படி தென் இந்திய மீன்பிடி சார் மூலதன பெருக்கம் நமது தேசத்தில் கடல்வளத்தை அழிவுக்கு உட்படுத்துவதே அரசியல் மற்றும் ஊடகம் சார்ந்து பேசப்படா பொருளாகவுள்ளது.

கடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித்திறனை அதிகரிக்க முதலீடுசெய்வதும், அதைக் கட்டுப்படுத்தி மீன்வளத்திற்கேற்ப முதலீடு செய்ய வகைசெய்யாமல், மீன்பிடித்துறையில் தாராளமய முதலீட்டை ஒரு அரசு தனது கொள்கையாக கொண்டிருக்குமானால் அதனால் முதலில் பாதிப்படைவதும், அழிவுக்குள்ளாவதும் கடல்சார் வளங்களே.

உற்பத்தி உபகரணங்களில் முதலீடு செய்யும்போது, அதை இலாபத்துடன் திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை முதலீட்டாளருக்குண்டு. ஆனால் மீன்பிடித்தொழில், ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்களையும், மனிதரின் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு மூலதனத்தை- அதன் லாபத்தை உயர்த்துவது போலல்ல. மீன்வளம் இயற்கை சார்ந்தது. ஒரு தொழிற்சாலையில் இயந்திரத்தை வைத்து உற்பத்தியை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும். சந்தை நிலவரத்திற்கேற்ப உற்பத்தியைக் கட்டுப்படுத்தமுடியும்.

ஆனால் மீன்வளம் அப்படி அல்ல. மீன்வளத்தின் உருவாக்கம் பல ஆண்டுகளைக் கொண்ட இயற்கைசார் உற்பத்திப் பொருள். மீன்வளத்தின் உருவாக்கம் கடலின் ஆழம், அதன் அடித்தளத் தாவரவியல், கடலின் புவிசார் அமைப்பு, கடலின் நீரோட்டம், மற்றும் கடலின் வெப்ப தட்ப நிலையில் தங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அளவு கடற்பரப்பில் மேற்கூறிய மீன்வளர்ச்சிக்கான சூழலியல் காரணிகள் மீன் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு மீன்கள் தான் உருவாகும். மீன்வளர்ச்சிக்கான சூழலியல் காரணிகள் சில வருடங்களில் மிக மிக சாதகமானதாகவுள்ள போது அடிப்படை உற்பத்தி அளவிலிருந்து 00,200,5 சதவீதத்துக்கு கூடுதலாக உருவாகலாம்.

ஆனால் இந்த காரணிகளில் ஏதாவது ஒன்று பாதகமானதாக அமையும்போது மீன் வளர்ச்சியின் அளவு 10 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை வீழ்ச்சியடையலாம். இதனடிப்படையில், இயற்கையுடன் இணைந்து அதற்கு பங்கமேற்படாது மீன்பிடித்தொழில் செய்வதானது, மீன்வளர்ச்சிக்கான மேற்கூறிய சூழலியல் காரணிகளை பாதிக்காமலும், மீன்வளத்தில் கூடியது மூன்றில் இரண்டு பங்கை மட்டும் பிடிப்பதுவாகும்.

அதேவேளை குறைந்தது மீன்வளத்தில் மூன்றில் ஓன்று பங்காவது இருந்தால் தான் அதன் மறுஉற்பத்திக்கு வசதியாகவிருக்கும். அத்துடன் அந்த மீன்களில் குறைந்தது 75 சதவீதம் மீன்கள் மறுஉற்பத்திக்கு தயாராகவுள்ள பெண் மீன்களாகவும் இருக்கவேண்டும். அதாவது இனப்பெருக்கத்தை செய்யக் கூடியனவாக, முட்டையிடக் கூடியனவாக இருக்க வேண்டுமென கடல்வள ஆய்வுகள்தெரிவிக்கின்றன.

ஆனால் கொள்ளை இலாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டியங்கும் போது, இருக்கின்ற மீன்வளம் அனைத்தையும் தமதாக்கி கொள்ளும் போட்டி எழும். அதற்காக மீன்களை கடலிலிருந்து பெயர்த்தெடுக்கும் பாரிய உற்பத்தி உபகரணங்களை, முதலாளிகள் பெரும்முதலீட்டில் வாங்கிக் குவித்து, மீன்பிடியின் அளவை அதிகரிக்கும் போட்டி அவர்களிடையே வளர்ந்து கொண்டு போகும். ஆனால் அதேவேகத்தில் மீன்வகைளின் மறுஉற்பத்தி நடைபெறாது. அது மேற்கூறியது போல மனிதனால் கட்டுப்படுத்த முடியாத, கடற்சூழல் மற்றும் தட்ப வெட்பக் காரணிகள் பலவற்றில் தங்கியிருக்கின்றது. அதனால் மீன்களின் மறுஉற்பத்திக்கு அதி அத்தியாவசியமான சினைப்படும் திறனுடைய மீன்கள் இவ்வகைக் கட்டுப்பாடற்ற நாசகார மீன்பிடியால் அருகிவிடும். இதனால் மீன் வகைகளின் மறுஉற்பத்தி படுபாதாள வேகத்தில் குறையும். இறுதியில் மீன்கள் கடலில் முற்றாக அருகி, மீன்வளம் இல்லாத கருங்கடல்களாக அவை மாறிவிடும்.

மெதுமெதுவாக தண்ணீர் ஊறும் கிணற்றில் இராட்சத நீரிறைக்கும் இயந்திரம் வைத்து அடியொற்ற தண்ணீரை உறுஞ்சுவதற்கு இதனை ஒப்பிட்டு நோக்கினால், மீன்களின் மறுஉற்பத்தி வேகத்திலும் கூடுதலாக, அதி வேகத்தில் அவற்றை கடலிலிருந்து பிடித்து கொள்ளை இலாபம் ஒன்றே குறி என்றியங்கும் இந்தப் பெரும் பணமுதலைகள் மற்றும் சர்வதேச மூலதன நிறுவனங்கள் எவ்வாறு மீன்வளத்தை அழித்தொழிக்கின்றனர் என விளங்கிக்கொள்ளலாம்.

இந்நிலையில் இந்தியாவில் இந்தக் கடற்கொள்ளையை கட்டுப்படுத்த, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்படும் என மீன்பிடி வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அத்துடன் கைது செய்யப்படும் மீனவர்களை துரிதமாக விடுதலை செய்ய சட்டத்தில் மாற்றம் கொண்டுவர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை அரசின் கருத்துப்படி, மீனவர்கள் கூலிக்கு மட்டுமே தொழில் செய்வதாகவும், படகுகளின் உரிமையாளர்களான நிறுவனங்களே, அவர்களை நிர்பந்தித்து, இலங்கை கடல் வலயத்தில் மீன்பிடியை மேற்கொள்ள அளிதம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது

கைது செய்யப்படும் மீனவர்களை துரிதமாக விடுதலை செய்ய வகை செய்வது வரவேற்கைத் தக்க விடயம் என்றாலும், நீண்டகாலப் போக்கில் கடல்சார் மூலதனத்தின் முதலீடுகளை கட்டுபடுத்துவதன் மூலம் மட்டுமே கடல் வளங்களை பாதுகாப்பதுடன், இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் வாழ்க்கை அபிவிருத்திக்கு வழி செய்ய முடியும்.