Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சிலி - பாசிச அரசியலுக்கு எதிரான போராட்டத்தின் 40வது வருடம்

எம்மிற் பலருக்கு 11 செப்டெம்பர் என்றால் நினைவில் வருவது 11 செப்டெம்பர் 2001 அன்று அல்கையிடா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், உலக முதலாளித்துவத்தினதும், அமெரிக்கப் பொருளாதார ஏகாதிபத்தியத்தினதும் குறியீடாகவிருந்த வோர்ல்ட் ரேட் சென்டர் (World trade center) மற்றும் அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனமான பெந்ரகோன் (Pentagon) மீதும் விமானத்தைச் செலுத்தி அவற்றை தகர்த்தது தான். இத்தாக்குதலில் பெந்ரகோன் (Pentagon) மிகக் குறைந்த பாதிப்புடன் தப்பியது. ஆனால் வேர்ல்ட் இரெட் சென்ட்ர் (World trade center) முற்றாக அழிந்தது. இந்நடவடிக்கையில் மொத்தமாக 2986 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதைவிட பலமடங்கு அழிவு 40 வருடங்களுக்கு முன், 11 செப்டெம்பர் 1973இல் அமெரிக்க அரசின் ஜனாதிபதியாக இருந்த நிக்ஸனின் தலைமையில் அவரது அரசின் பாதுகாப்பு செயலாளராகவிருந்த ஹென்றிக் கிஸ்ஸிங்கரால் சிலி நாட்டில் ஏற்படுத்தப்பட்டது.

சிலியின் துன்பியல் நாடகம் காலை ஏழு மணி 11 செப்டம்பர் 1973. ஜனாதிபதி சால்வடோர் அயண்ட (Allende) முப்படைகள் ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொள்ள, தலைநகர் சாண்டியாகோ டி சிலி நோக்கி செல்கிறது என்ற தொலைபேசித் தகவலைக் கேட்டு விழித்துக் கொள்கிறார். அவர் தனக்கு விசுவாசமான தனது சுய பாதுகாப்பு படைகளின் உதவியுடன், ஜனாதிபதி மாளிகை லாஆழநெனயவுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு சிலியின் அரசியல் - பாதுகாப்பு நிலைமை பற்றி ஊழியர்களால் விளக்கமளிக்கப்படுகிறது.

அத்துடன், இராணுவ தலைமையால் அனுப்பப்பட்ட தகவலும் அவருக்கு தெரிவிக்கப்படுகிறது. அத்தகவலின் உள்ளடக்கமானது, முப்படைகளும், அவரது அரசுக்கு எதிராக ஒரு இராணுவ ஆட்சிக்
கவிழ்ப்பு மேற்கொள்ளும் முயற்சியின் முதல் அங்கமாக தலைநகரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், ஜனாதிபதி சால்வடோர் அயண்ட (Allende) உடனடியாக எந்தவித கோரிக்கையும் வைக்காமல் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், இதற்கு மறுத்தால் ஜனாதிபதி மாளிகைக்கு குண்டு வீசித் தகர்க்கப்படும் என்ற கட்டளையாகும்.

தனது சுய பாதுகாப்பிற்கான சில பத்து படையினரைத் தவிர எதுவும் தனது பக்கம் இல்லை என்பதை உணர்ந்த ஜனாதிபதி சால்வடோர் அயண்ட, மக்களிடம் உதவி கோரும் நோக்கில், வானொலியில் உரை ஒன்றை நேரடியாக ஆற்றுகிறார். அதில் தனது நிலைமையை விளக்கி, இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக மக்களையும், தொழிலாளர்களையும் வீதியில் இறங்கிப் போராடுமாறு அழைப்பு விடுத்ததுடன், தான் எவ்வித காரணம் கொண்டும் பாசிசத்துக்குப் பயந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட தனது அரசைக் கலைக்கப் போவதுமில்லை, தான் பதவியை விட்டு விலகவும் மாட்டேன் என அறைகூவல் விடுத்தார். அவரது வானொலி உரை பாரிய வெடிப்பு சத்தத்துடன் நிறைவடையாமல்  முடிவிற்கு வருகிறது.

ஜனாதிபதி அயண்டே தனது பாதுகாப்புப் படைக்கு விட்டுக் கொடுக்காது போராடுமாறு பணித்ததுடன், தனக்கு கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ அன்பளிப்பாக வழங்கிய ஏ.கே 47 இனை எடுத்து அதைத் தயார் நிலைப்படுதியபடி, பாதுகாப்புக்காக ஒரு இரும்பு ஹெல்மெட் தலைக்கவசத்தை அணிந்து கொள்கிறார். முப்படையைச் சேர்ந்த சில ஆயிரம் வீரர்கள் ஆட்சிக் கவிழ்ப்பை தலைமை தாங்கிய ஜெனரல் ஆகுஸ்டோ பினோச்சேயின் பணிப்புக்கிணங்க ஜனாதிபதி மாளிகையை சுற்றி வளைக்கின்றனர். வெடிச்சத்தமும், புகை மண்டலமும் வானை முட்டுகின்றது. வெடி அதிர்வில் உடைக்கப்பட்ட ஜன்னல்கள் ஊடாக கண்ணீர் புகைக்குண்டுகளும், எறிகணைகளும் ஜனாதிபதி மாளிகைக்குள் ஏவப்படுகிறது.

ஜனாதிபதி சால்வடோர் அயண்ட காயமடைகிறார். மாளிகையின் பாதுகாப்பான பகுதிக்கு அவரை கொண்டு செல்கின்றனர் அவரது பணியாளர். அது நடந்து சில நிமிடங்களில் சரமாரியான தானியங்கித் துப்பாக்கிகளின் ஒலி கேட்கின்றது. அதன் பின் வந்த சில நிமிடதுளிகளில், தலையில் சுடப்பட்ட நிலையில் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ அன்பளிப்பாக வழங்கிய ஏ.கே 47 அருகில் இருக்க ஜனாதிபதி சால்வடோர் அயண்ட இன் உயிரற்ற உடல் இரத்த வெள்ளத்தில் கிடக்கிறது.அவரின் உதவியாளர்கள், பாதுகாப்பு படையினர் என அனைவரும் கொல்லப்படுகின்றனர். பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜெனரல் ஆகுஸ்டோ பினோச்சே இராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்துகிறார். பின்வந்த நாட்களில் பல பத்தாயிரம் பேர் கைது செய்யப்படுகின்றனர்.

இடதுசாரிகள், மக்கள் அமைப்பு தலைவர்கள், மாணவ - பெண்கள் - உழைப்பாளர் சங்கங்களின் தலைமைகள் கொலை செய்யப்படுகின்றனர். மிக முக்கிய தலைவர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு, கை - கால் விலங்கிட்டு விமானங்கள் மூலம் உயிருடன் ஆழ்கடலில் வீசப்பட்டனர். பெண் தோழர்கள் கைது செய்யபட்டு இராணுவ பாலியல் வதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ஜனாதிபதி சால்வடோர் அயண்ட இறந்த செய்தி கேள்விப்பட்ட உலகத்தின் மகா காதல் கவியும், கம்யூனிசப் போராளியுமான பாப்லோ நெருடா அதிர்ச்சியால் இருதயம் நின்று இயற்கை எய்தினார். சிலியின் ஒடுக்கப்பட்ட மக்கள் கவிஞன் - பாடகன் விக்டர் யாரா (VICTOR JARA) 16 செப்டம்பர் 1973 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவ்வாறு, அமெரிக்காவால் திரைக்கதை எழுதப்பட்ட- அதன் பாதுகாப்பு செயலாளரால் இயக்கப்பட்ட, சிலியின் துன்பியல் நாடகம், ஜெனரல் ஆகுஸ்டோ பினோச்சேயின் இராணுவ பாசிச சர்வாதிகார ஆட்சி 11. செப்டெம்பர் 1973 அன்று அரங்கேறியது.

அமெரிக்கச் சதியும் தாராள மயமாக்கலும்

1933 இல் ஆரம்பிக்கப்பட்ட சிலி சோசலிசக் கட்சியின் பிரதிநிதியாக சால்வடோர் அயண்ட ஜனாதிபதி தேர்தலில் 24. ஒக்டோபர் 1970 அன்று வென்றதிலிருந்து, அமெரிக்கா சிலியின் உள்நாட்டு அரசியலை உன்னிப்பாக கவனித்து வந்தது. கியூபாப் புரட்சியின் பின் தனது பிற்கோடியில் மீண்டுமொரு சோசலிச அரசு அமைவதை அது பாதுகாப்பு காரணங்களால் விரும்பாமையும், அப்படி ஒரு சோசலிச அரசு தென் அமெரிக்காவில் பதவிக்கு வந்தால் தனது ஏகாதிபத்திய பொருளாதார நலன் ஈடாட்டம் காணும் என்ற பயமுமே அமெரிக்காவின் கவனிப்புக்கு காரணமாக இருந்தது. இதன் அடிப்படையில் சிலியில் ஆட்சிக்கு வந்த சோசலிச ஜனாதிபதி அயண்ட உள்நாட்டு பொருளாதார கொள்கைகளை மாற்றுவதன் மூலம் தனது பொருளாதார சுரண்டலுக்கு சாவு மணியடிக்கப்படலாம் எனப் பயந்தது.

1970களில் சிலியின் பொருளாதராம் அமெரிக்க நிறுவனங்கள், மற்றும் அதன் கடன் வழங்கு திட்டங்கள் மற்றும் ஏற்றுமதியிலேயே தங்கியிருந்தது. சிலியின் பிரதான ஏற்றுமதிப் பொருளான செம்புத்தாதுகளை அகழும் சுரங்கங்களை அமெரிக்க நிறுவனங்களே உரிமை கொண்டாடின.

இந்நிலையில் அமெரிக்கா பயந்தது போல, அயண்ட தலைமையிலான சோசலிசக் கட்சியின் அரசு பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே அனைத்துச் சுரங்கங்கள் உட்பட்ட அனைத்து பொருளாதார வளங்களையும் தேசிய மயப்படுத்தியது. அமெரிக்க நிறுவனங்களின் ஏற்றுமதி அனுமதிகள் இரத்து செய்யப்பட்டது. சர்வதேச சந்தை சார்ந்த விலையில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி நிகழ வேண்டுமென அரசு முடிவெடுத்தது.

இம்முடிவுகளின் பின்னணியிலேயே சோஷலிச கட்சியின் அயண்ட தலைமையிலான அரசை இல்லாதொழிப்பதற்கான, திட்டத்தை றிச்சர்ட் நிக்சன் தலைமையிலான அமெரிக்க அரசு உருவாக்கி, அதை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை பாதுகாப்பு செயலாளர் ஹென்றிக் கிஸ்சிங்கர் இடம் ஒப்படைத்தது. ஹென்றிக் கிஸ்சிங்கர் CIA யின் உதவியுடன் நடைமுறைப்படுத்தினார்.

முதலில் சிலியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டதுடன், சிலியில் உள்ள தமது நேச சக்திகள் மற்றும் ஊடகங்கள் மூலம் அயண்ட அரசுக்கு எதிராக பாரிய பிரச்சாரங்களை முன்னெடுத்தது CIA. இதை முன்பே எதிர்பார்த்த அயண்ட அரசு சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது.

1973 வரை பல வழிகளிலும் முயற்சித்தும் அயண்ட அரசைக் கவிழ்க்க முடியாத அமெரிக்க ஏகாதிபத்தியம், சிலியின் வலதுசாரிகள் மற்றும் இராணுவ தலைமைகளை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த திட்டமிட்டது. அத்திட்டத்தின் கையாளாக செயற்பட்டவரே, ஜெனரல் ஆகுஸ்டோ பினோச்சேயும் சிலியின் இராணுவ தலைமையும். அமெரிக்க சதியின் உதவியுடன் பதவிக்கு வந்த ஜெனரல் ஆகுஸ்டோ பினோச்சே, அமெரிக்க ஆலோசனைக்கு ஏற்ப சிலியின் பொருளாதாரத்தை, திறந்த சந்தைப் பொருளாதாரமாக மாற்றினார்.

இன்று நவதாராளமய பொருளாதாரக் கொள்கை எனக் கூறப்படும் பொருளாதார முறையை உலகில் முதலில் நிறுவனமயப்படுத்தியது ஜெனரல் ஆகுஸ்டோ பினோச்சேயின் சர்வாதிகார பாசிச அரசு. பழையபடி அமெரிக்க நிறுவனங்கள் சிலியின் வளங்களை உரிமை கொண்டாடுவதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டது. அத்துடன் சமூகத்தின் அனைத்து நிறுவனங்களும் தனியார் மயப்படுத்தப்பட்டு சர்வதேச நிறுவனங்கள், கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளிலும் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க சட்டம் இயற்றப்பட்டது.

ஜெனரல் ஆகுஸ்டோ பினோச்சேயின் அமெரிக்க அடிவருடிக் கொலைகாரபயங்கரவாதப் பாசிசஅரசு 11 பங்குனி 1990 வரை சிலியை ஆட்சி செய்தது. இக்காலத்தில் 30000 பேர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர், அல்லது காணாமற் போயினர் என நடுநிலையாளர் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அமெரிக்க சார்பு ஆய்வுகளின் படி 3000 பேர் மட்டுமே கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இலங்கை மக்களான எமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்

அயண்டவுக்கும் அவரின் சோஷலிச அரசைக் கட்டமைக்கும் முயற்சிக்கும், அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளின் சதியால் நடந்த முடிவு, பாரிய விவாதத்தை சர்வதேச இடதுசாரிகளிடத்தில் தோற்றுவித்தது. அவ்விவாதத்தின் கருப்பொருளாக

1.முதலாளித்துவ ஜனநாயக பாராளுமன்ற முறையினூடாக சோசலிச புரட்சியை முன்னெடுக்க முடியுமா?

2. லெனினிய கட்சி முறையை எவ்வாறு முதலாளித்துவ பாராளுமன்ற அரசியற் சூழலில் புரட்சிக்கு தக்கதாக உருவாக்குவது

3. சோசலிச புரட்சிக்கான வேலைமுறையில் ஆயுதப் போராட்டமும் பாராளுமன்றப் பாதையும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படுவது? போன்ற கேள்விகள் இருந்தன.

தோழர் அயண்ட மற்றும் சிலி மக்களின் பாசிச தாராளமய பொருளாதார அரசியலுக்கு எதிரான போராட்ட வரலாற்றில் இலங்கை மக்களான எமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள் பல உள்ளன. காரணம் இன்று இலங்கை அரசு ஜெனரல் ஆகுஸ்டோ பினோச்சேயின் வழியொட்டியே ஆட்சி செய்கின்றது.