Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

சிரிப்பு- கண்ணீர் மற்றும் செயற்படுதல்

மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் முடிந்துவிட்டன. தேர்தலின் சூடு தணிந்து தேர்தல் முடிவுகள் குறித்து வாத விவாதங்களும் ஓய்ந்து விட்டுள்ளன. என்றாலும் நாங்கள் தொடர்ந்தும் தேர்தலைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் 60 வீதமான வாக்குகளைப் பெற்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் 80 வீதமான வாக்குகளைப் பெற்று மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களையும் பெற்று வடமாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இதில் இந்தத் தேர்தல் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கப்போவதில்லை.மேட்டுக்குடி கனவான்கள் தங்களது அதிகாரத்தைக் காட்டுகின்ற ஒரு நிறுவனமாகவே இருக்கும். அடுத்ததாக, இந்தத் தேர்தல் பிரச்சாரப் பக்கம் திரும்பிப் பார்த்தால் இனத்துவேசத்தைக் கக்கிய பிரச்சாரமாகவே இவை இருந்தது.

ஆகவே ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் பிரிக்கப்படமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

இனவாதமும் நவ தாராளமயவாதமும் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது 'நாங்கள் சிங்களவர்கள்" - 'நாங்கள் தமிழர்கள்" - 'நாங்கள் முஸ்லிம்கள்" என்ற வகையில் சிந்தித்தே பெரும்பாலான மக்கள் வாக்களித்திருப்பது தெரிகின்றது. இனத் துவேசத்தைக் கொண்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்த ஐ.ம.சு.முன்னணி, தமிழர் தேசியக் கூட்டமைப்பு வடக்கிற்கு சுயாட்சியொன்றைக் கேட்பதாகவும், அங்கு எல்.டீ.டீ.ஈ. மீண்டும் தலை தூக்குவதாகவும் தென்பகுதி மக்களுக்கு துவேசத்தை ஊட்டி நாட்டைப் பிரிப்பதற்கு எதிராக தமக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டது.

சிங்கள மக்கள் பெரும்பாலாக வசிக்கும் இடங்களில் இந்தப் பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதனால் மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களை அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டது.

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் தமிழ்க் கனவான்களின் இனத் துவேசப் பேச்சுக்கள் பிரச்சார மேடைகளில் முழங்கப்பட்டன. வடமாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கொண்டது. இதைத் தவிர மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களும், முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். சிங்கள இனவாதத்தையும், யுத்த மனோபாவத்தையும் கொண்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி இந்தத் தேர்தலின் மூலம் 3வது சக்தியாக வளர்ந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 2009இல் 22 ஆசனங்களை பெற்றிருந்தது. இம்முறை அதற்கு 16 ஆசனங்களேகிடைத்தன. வடமேல் மாகாணத்தில் ஐ.தே.க. பெற்றிருந்த 14 ஆசனங்களுக்குப் பதிலாக இம்முறை 12 ஆசனங்களையே பெற்றுள்ளது. ஆனால், வட மாகாணத்தில் ஒரு ஆசனத்தைக் கூட அதனால் பெறமுடியவில்லை. மக்கள் விடுதலை முன்னணி மூன்றாவது இடத்திலிருந்த பட்டியலில் கடைசிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இனவாதம் வென்றதாகத்தான் தேர்தல் முடிவுகள் கூறுகின்றன. இது எதிர்கால ஆபத்துக் குறித்த ஒரு முன்னறிவித்தலாகும். வெற்றி பெற்றிருப்பது வெறுமனே இனவாதம் மட்டுமல்ல. மேட்டுக்குடி கனவான்களின் அடாவடி அரசியலும் வெற்றி பெற்றிருக்கின்றது. அரசாங்கத்தின் உபாய மார்க்கமான இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் கிடைத்த வெற்றியாகவே இது உள்ளது. எவ்வாறாயினும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற உபாய மார்க்கமாகவே அரசாங்கம் இனவாதத்ததைப் பயன்படுத்துகிறது. சமயோகிதமாக அதனை முன்னெடுப்பதோடு, தேவையானபோது அதனைப் பின்தள்ளவும் செய்கிறது.

கடந்த காலத்தில் தலை தூக்கியிருந்த முஸ்லிம் மக்கள் மீதான எதிர்ப்பின்போது, அரசாங்கம் நடந்துகொண்ட விதம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இம்முறை தேர்தலின்போது பொதுவாக சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் வெற்றி பெற்றிருந்தாலுங்கூட, அடிப்படைவாதக்குழுக்கள் தோல்வியடைந்துள்ளன. கண்டி, நுவரேலியா, மாத்தளை, குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட 5 வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

தேசிய ஹெல உருமய கட்சியின் சார்பில் மாத்தளை மற்றும் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர். சிங்கள இனவாதத்திற்கு வாக்குகள் கிடைக்கவில்லை. வாக்குகள் கிடைக்கா விட்டாலும் சித்தாந்தக் கண்ணோட்டம் அதன் மீதுதான் இருக்கின்றது. சாராயம், பிரைட்றைஸ் அன்னதானம், சேலைகள், மண்வெட்டிகள், மொபைல் தொலைபேசிகள் போன்ற பலவற்றை இலஞ்சமாகக் கொடுத்த வஞ்சகர்களே இம்முறை தேர்தலில் வென்றுள்ளனர். கையை நீட்டி தாராளமாக செலவளித்த பிரதமரின் மகன் அனுராத ஜயரத்ன சரத் ஏகநாயகாவை விட பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளார். மாத்தளையில் பிரமித பண்டார தென்னக்கோன் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். குருநாகல் மாவட்டத்தில் கட்சி தாவிய தயாசிறியும் அதிகமதிகமாக செலவளித்த ஜொஹான் பர்னாந்துவும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

சுருக்கமாகச் சொல்வதாயிருந்தால் உண்டு களித்து உல்லாசம் அனுபவிக்கும் கனவான் அரசியலே வென்றுள்ளது. அதுவும் இனவாதத்திற்கு அடிபணிந்தே. இனவாதத்தை ஏற்றுக் கொள்ளும் வஞ்சகர்களே தேர்தலில் வென்றுள்ளனர்.

நவதாராளமயத்தை ஏற்றுக் கொள்ளாத, இனவாதத்தையும், இனவாதிகளையும் ஏற்றுக் கொள்ளாத நவதாராளமய முதலாளியவாதிகளுக்கு இடமில்லை. நவதாராளமய முதலாளித்துவத்தினதும், இனவாதத்தினதும் காடைத்தன - கனவான்தன - வஞ்சக முகங்களுக்கே ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இலங்கையின் ஆட்சிக்கோட்பாடு இதுதான். இம்முறை தேர்தலிலும் இதுதான் வெற்றி பெற்றுள்ளது.

வடக்கும் இனவாதமும்

மேலோட்டமாகப் பார்க்கும்போது அரசாங்கம் வடக்கில் தோல்வி அடைந்திருப்பதாகவே தெரிகிறது. அரசாங்கத்தின் எதிர்கால வெற்றிகளுக்கான அடித்தளம் வடக்கில் இடப்பட்டுள்ளதாக அரசாங்க அமைச்சர்கள் கூறுகிறார்கள். தான் எந்த விதமான தோல்வியைச் சந்தித்தாலும் வெற்றி பெற்றதாகக் கூறும் மக்கள் விடுதலை முன்னணியின் கூற்றோடு அவர்களது கூற்றை ஒப்பிட முடியாது.

வடக்கின் தேர்தல் முடிவுகளும், அது அரசாங்கத்தை பாதிக்கும் விதத்தையும் குறித்து இதனைவிட ஆழமாக சிந்திக்க வேண்டும். வடக்கிலுள்ள கற்பனை எதிரியைக் காட்டியே அரசாங்கம் இம்முறை தென்பகுதி தேர்தல்களுக்கு முகம் கொடுத்தது. அந்த எதிரிதான் தமிழர் தேசிய கூட்டமைப்பு. இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்த 30 வருடங்களாக வடக்கின் பிரபாகரனைக் காட்டி தெற்கின் ஒடுக்கப்பட்ட மக்களை வென்றனர்.

பிரபாகரன் கொல்லப்பட்டு 4 வருடங்கள் கடந்த பின்னரும் பிரபாகரனின் மறுபிறவி பற்றிய பீதியே இலங்கையின் முதலாளித்துவ அரசியலாக இருக்கின்றது. என்றாலும் அது நீண்ட காலத்திற்கு செல்லுபடியாகாது. இருந்தபோதும் அரசாங்கத்தை சில காலத்திற்கு இழுத்துச் செல்லக்கூடிய ஒரு என்ஜின் இப்போது கிடைத்துள்ளது.

தெற்கின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வடக்கின் விக்னேஸ்வரனைக் காட்டி சிறிது காலம் அரசாங்கத்தை ஓட்ட முடியும். இதன் மூலம் அனைத்துவித ஒடுக்குமுறைகளையும் மறக்கடிக்க முடியும். எல்.டீ.டீ.ஈ.க்கு எதிரான யுத்தத்திற்குப் பதிலாக வடக்கு மாகாணசபைக்கு எதிரான யுத்தத்திற்கு தென்பகுதி மக்களை வழிநடத்த முடியும். ஆகவே, நீண்டகால வெற்றிக்கான பயணத்திற்கு அடிப்படையொன்று இருப்பதாக அரசாங்கம் கூறுவதில் அர்த்தமொன்று இருக்கிறது.

எதிர்வரும் வருடங்களில் நடக்கவிருக்கும் அரசியல் எப்படி இருக்கப்போகின்றது என்பதை 23ம் திகதிய (முழுத் திகதி, மாதம் ஆண்டு உட்பட வேண்டும்) திவய்ன| சிங்களப் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கத்தைப் பார்த்தால் அனுமானித்துக் கொள்ள முடியும்.

அடுத்ததாக அரசாங்கத்திற்கு வரவிருக்கும் ஆபத்தைப் பற்றி யோசிக்கும் போது, தமிழ் டயஸ்போராவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் சிறந்த தெரிவாக இருக்கிறது. உருத்திரகுமாரனை விட விக்னேஸ்வரனிடத்தில் இருந்து வரும் ஆபத்து குறைவானதாகவே இருக்கும்.

யுத்தக் குற்றச்சாட்டுகளை நிரூபித்தல், மேற்கத்தைய நாடுகளை இலங்கைக்கு எதிராக தூண்டிவிடுதல், முடியுமானால் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க அந்த நாடுகளை தூண்டிவிடுதல் போன்ற நடவடிக்கைகளில் தமிழ் டயஸ்போரா முனையக்கூடும். அந்த அரசியல் ஆபத்தைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு தனிப்பட்ட ஆபத்துக்களும் இருக்கின்றன. அது பலிவாங்குதற்கு உள்ள மனோபாவமாகும். இவ்வாறான மனோபாவம் இந்த டயஸ்போராவுக்கு இருக்கின்றது. தேர்தல் முடிவுகளோடு தமிழ் மக்களின் தலைமை டயஸ்போராவிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளுக்குச் சென்றுள்ளது. அதாவது விக்னேஸ்வரன்களிடம் சென்றுள்ளது.

முன்னர் கூறியதைப்போன்று அவர்களால் அரசாங்கத்திற்கு ஆபத்துக்களோ, தனிப்பட்ட ரீதியிலான ஆபத்துக்களோ கிடையாது. சம்பந்தன் - விக்னேஸ்வரன் போன்றவர்கள் மாத்திரமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கடும்போக்காளராகக் கருதப்படும் சுமந்திரன் கூட அமிர்தலிங்கம் போன்றவர்களின் அரசியலோடு நெருங்க முடியாது. அமிர்தலிங்கம் இனவாதியாக இருந்தது மட்டுமல்லாது எல்.டீ.டீ.ஈ. போன்ற ஆயுதக் குழுக்களின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும் இருந்தார். கடந்த ஞாயிறு அன்று இவர்கள் நடத்திய ஊடக சந்திப்பின் போது வெளியிட்ட கருத்துக்கள் த.தே.கூட்டமைப்பின் அரசியலுக்குச் சிறந்த உதாரணமாகும். சட்டத்திற்குப் புறம்பாக எதுகுமே நடக்காது, அரசாங்கத்தோடு கலந்துபேசி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள ஆவன செய்யப்படும் என்பதாகவே விக்னேஸ்வரனுடைய கருத்தாக இருந்தது.

அவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் தமிழ் டயஸ்போராவைப் போன்று பழிவாங்கும் நோக்கத்துடனானதல்ல. சட்ட விடயங்கள் மற்றும் உத்தியோகபூர்வ கொடுக்கல் வாங்கல் பிரச்சினையாகும்.

நவ தாராளமய முதலாளித்துவத்திற்கு உடன்பட்டு, வடக்கிற்கு மூலதனம் செல்லும் போது அதன் பெரும் பகுதி தமக்குச் சேர வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிறகு தர்க்கிக்கும். இதற்காக இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றைப் பயன்படுத்தும். அரசியலாகும. இதன் வடிவத்தை எடுத்துக் கொண்டால் இதுகூட நவ தாராளமய முதலாளித்துவத்தோடு கைகோர்த்துக் கொண்ட அரசியலாகும். இவ்வாறான அரசியல் வடக்கில் இருப்பது அரசாங்கத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாகவே இருக்கும்.

வடக்குத் தேர்தலின் ஊடாக ஜனநாயகம் தொடர்பில் வெளிநாட்டு அழுத்தங்களிலிருந்து தப்பிக்க அரசாங்கத்திற்கு வழி கிடைக்கக்கூடும். வடக்கில் அடக்குமுறை கிடையாதெனவும், அங்கு சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலொன்று நடந்ததாகவும் உறுதி செய்து வெளிநாட்டு அழுத்தத்திலிருந்து மீள்வதற்கான தீர்வைத் தேடமுடியும். வடமாகாண சபைத் தேர்தலில் வடக்கு மக்கள்மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டதே அன்றி, வடக்கு மாகாண சபையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டியிடவில்லை. அரசாங்கத்தின் நோக்கம் வென்றுள்ளது. அதனால் தான் நீண்டகால வெற்றியொன்று இருப்பதாக அரசாங்க அமைச்சர்கள் கூறுகின்றனர். தமிழ் இனவாத அரசியல் வலுப்பெறுவது அரசாங்கத்திற்கு பிரச்சினையாக இருக்காது. அதற்காக மாற்று இனவாதமொன்றை பராமரித்து முன்னெடுத்துச் செல்ல முடியும். எந்தவித இனவாதமாக இருந்தாலும், நவ தாராளமயத்தோடு கைகோர்த்துக் கொண்டாலும் கூட அதற்குத் தடையாக இருக்கக் கூடாது. வடக்கென்றும் கிழக்கென்றும் பாராமல் அப்படியான இனவாதமொன்றுதான் நிலை நாட்டப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது இலங்கைச் சமூகத்தில் உறுதி செய்யப்படும் அரசியலின் தன்மை குறித்து அறிந்துகொள்ள முடியும். இது நவ தாராளமயத்தினதும் பிற்போக்குத்தனத்தினதும் அடையாளமாகும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் இனவாதமும், வடக்கின் இனவாதமும் வெற்றி பெற்றுள்ளமை குறித்து அழுதுவடிவதால் எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை. ஹெல உருமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் படுதோல்வியடைந்தமை குறித்து குதூகலிக்க வேண்டியதில்லை.

அதற்குப் பதிலாக இவற்றைப் புரிந்துகொண்டு இவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும். நடக்கும் சம்பவங்களெல்லாம் அழுவதற்காகவோ சிரிப்பதற்காகவோ அல்ல. செயற்படுவதற்கு. கஸ்டமானதும், விரிவானதுமான நீண்டகால நடவடிக்கையின் மூலமே இந்த அழிவிலிருந்து மீள முடியும். இடதுசாரியத்தால் மட்டுமே இதனைச் செய்யமுடியும். ஆகவே இடதுசாரியத்தை வலுப்பெறச் செய்வதன் மூலமே இந்தச் சவால்களை வெற்றிகொள்ள முடியும். இடசாரியத்திற்கான பாதை திறந்திருப்பதாகத்தான் தேர்தல் முடிவுகளும் கூறுகின்றன. இது இடதுசாரியத்திற்காக பாரிய இடைவெளியொன்று இருக்கிறதென்ற அற்தத்தோடல்ல. ஒட்டுமொத்த நாகரிகத்தினதும் தோல்வி வரை இழுத்துக் செல்லக்கூடிய இந்தக் கொடுமையைத் தோற்கடிப்பதற்கான தேவை இருக்கின்றது என்ற அற்தத்திலேயேயாகும். ஆகவே சிரிப்பதற்கும் அழுவதற்கும் பதிலாக செயற்படுவதற்காக உறுதி பூணுவோம்.