Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழர் அரசியலை இயக்கும் சாதிச் சக்கரம்.

இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் கால நிலை 1940களில் எப்படி அமைந்திருந்ததோ அப்படியேதான் இன்றைக்கும் அமைந்துள்ளது. கடந்த 68 வருடங்களாக எந்தவிதமான பரிணாம வளர்ச்சியும் இன்றி எமது அரசியல் தொடர்ந்து ஒரே பல்லவியைப் பாடிக்கொண்டு மக்களை வண்டி இழுக்கும் மாடுகளைப் போல பாவித்துக் கொண்டு வருகிறதற்கான ஒரேயொரு அடிப்படைக் காரணம் எமது தமிழ் அரசியல் பாவிக்கும் "நுகத்தடி"தான். அதன் பெயர்தான் "சாதி".

1949ல் மலையக மக்கள் நாடற்றவராக ஆக்கப்பட்டபோது, அதனைக் காரணமாக வைத்து சமஷ்டி கட்சி ஆரம்பித்த நாம் அவர்களை அப்படியே கை கழுவி விடச் செய்தது எமது "சாதி" மனப்பான்மையே.

கடந்த கால ஆயுதப் போராட்டம் தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் சிந்தாந்த நெறிப்படுத்தலுடன் முன்னெடுக்கப்படுவதை தடுத்து அதனை திசை திருப்பி முள்ளிவாய்க்கால் வரை இட்டுச் சென்றதும் எமது "சாதி" ஆதிக்கமே.

இந்த "முள்ளிவாய்க்கால்" முற்றுகைக்குப் பல வருடங்கள் முன்பே 1964ல் ஒரு முன் ஒத்திகையை "நிச்சாமத்தில்" நடாத்திப் பார்த்ததும் அதே "சாதி" அரசியல்தான். சிங்கள அரச படைகளுடன் இணைந்து "நிச்சாமம்" கிராமத்தைச் சுற்றி வளைத்து அதற்குள் வாழ்ந்த குழந்தைகளுக்குப் பால் மா கூட கிடைக்கவிடாமல் தமிழர்களைப் பட்டினிச் சாவு நோக்கி நகர்த்தியதும் எமது "சாதி" ஆணவமே.

போரில் பாதிக்கப்பட்டு இன்று பரிதவிக்கும் மக்கள்-போராளிகள், அனாதைகளாக-அகதிகளாக அலைவதற்கும் மூல காரணம் எமது "சாதி" சிந்தனையே.

1990ல் முஸ்லீம் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டபோது அதற்கு ஆதரவு வழங்கியதும் எமது "சாதி"யின் நியாயத்தனமே.

இன்று அரசியல் கைதிகள் விடயத்தில் இரட்டை வேடம் பூண்டு நாடகம் ஆடுவதும் "சாதி" (மனித) அபிமானமே.

எமது ஆளும் ஆட்சி அதிகார ஆசைக்காக, அரசியல் விழிப்புணர்வு இன்றி பழிவாங்கும் உணர்வுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஆயுத வழிமுறைக்கு விடுதலைப் போராட்டம் என அங்கீகாரம் கொடுத்து வளர்த்தெடுத்து இறுதியில் அதிகாரம் கிடைக்காது என்றுணர்ந்து அதனை அழிக்க உதவியதும் எமது "சாதி" மேலாதிக்க மனோபாவமே.

தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் என்பது எப்போதுமே ஆதிக்க சாதிகளின் சுயநலப் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டே முன் வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த கால யுத்தம் இன்று பாதிக்கப்பட்ட சாதிகளையும் அதே சுயநலப் பொருளாதார நலன்கள் அடிப்படையில் சிந்தித்துச் செயற்படும் தளத்துக்கு அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

யுத்த காலத்தில் "ஆயுதம்" பாதிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழ் "சாதிகளை"ப் பதவிகளில் அமர்த்தி பெரும்பான்மைத் தமிழ் ஆதிக்க "சாதிகளை" கட்டி ஆண்டது. "ஆயுதம்" மௌனித்ததனைத் தொடர்ந்து இன்று ஆதிக்க சாதியினர் "பழைய கணக்கு" தீர்க்கும் பழிவாங்கலில் ஈடுபட்டுள்ளனர்.

1930களில் சம உரிமை - சமத்துவ சமூகம் அமைக்கப் போராடிய "யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" ஆதிக்க சாதிகளால் அழிக்கப்பட்டது. 1980களிலும் அதே கொள்கைகளுக்காக ஆயுதம் தூக்கியவர்கள் ஆதிக்க சாதிகளின் ஆசீர்வாதத்துடன் ஓரம் கட்டப்பட்டு கொல்லப்பட்டனர்.

எமது தமிழ் சமூகம் எதனையுமே மனிதர்களாக இருந்து கொண்டு சிந்திப்பதில்லை. யாராவது ஒருவர் ஒரு கருத்தை முன் மொழிந்தால் அக்கருத்து என்ன என்பதனை பரிசீலிப்பதற்கு முன்னர் அக்கருத்தை முன்வைத்தவர் எந்த "சாதி" என்று பார்த்த பின்னரே அதனைப் பற்றிய விவாதத்தில் இறங்குவார்கள். அக்கருத்தால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை விட தாம் சார்ந்த சாதிகளுக்கு அதனால் கிடைக்கும் சாதக பாதகங்கள் பற்றியே கணிப்பீடு செய்வார்கள். இந்த இடத்தில் நீதி - நியாயம் என்பது சாதி வாய்ப்பாட்டின் பிரகாரமே தீர்மானிக்கப்படும்.

ஜனநாயக அரசியலிலும் சரி, ஆயுத அரசியலிலும் சரி "சாதி" சார்ந்த பார்வை - சிந்தனை ஊடாகவே அவற்றிற்கான ஆதரவுத் தளங்கள் கட்டமைக்கப்பட்டன. ஜனநாயக அரசியல் அரங்கில் கடுமையாக உழைத்த பலர் "சாதி" அடையாளத்தால் அரசியல் முன்னணிக்கு வரமுடியாத வண்ணம் ஓரங்கட்டப்பட்டே வந்துள்ளனர். ஆயுத அரசியலில் ஆயுதத்தைக் கையாண்டவர்களுக்கும் அந்த ஆயுத அரசியலை ஆரம்பத்தில் இருந்தே ஆதரித்து வளர்த்தெடுத்து அதனூடாக சுயலாபம் தேடியவர்களுக்கும் இடையே இந்த "சாதி"க் கணிப்பீடுகளும் கண்காணிப்புக்களும் இருந்ததன் விளைவுதான் இன்று நாம் அனுபவிக்கும் அரசியல் சூழல் ஆகும்.

இன்று வட கிழக்கு இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபைகள் முதல் பாராளுமன்றம் வரை அரச நிர்வாகங்கள் உட்பட "சாதி" வாய்ப்பாட்டின் வகுத்தல் வழி ஊடாகவே "காரியங்கள்" யாவும் அரங்கேறுகின்றன.

கட்சி - கூட்டணி - முன்னணி - பேரவை யாவுமே ஆதிக்க சாதிகளின் அணி திரட்டல்களாகவே அமைந்துள்ளதே ஒழிய, பாதிக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் வெளிப்பாடுகளாக அல்ல. பாதிக்கப்பட்ட "சாதிகள்" ஆதிக்க "சாதிகளின்" சிந்தனையில் ஊட்டப்பட்டு வளர்ந்ததன் காரணமாக போட்டிக்குப் போட்டியாக - பழிவாங்கல்களாக அரசியல் நடவடிக்ககைளை முன்னெடுக்கிறார்கள். அது ஆதிக்க "சாதி" அரசியல்வாதிகளின் வெற்றிகளுக்கு வாய்ப்பாகவே அமைகின்றன.

வட மாகாண சபைத் தேர்தலுக்கு தமிழ்ப் பேசும் மக்களின் வாக்குகளை வென்றெடுப்பதற்காக "சாதி-சமய" வாய்ப்பாட்டுக் கணக்கு போட்டுப் பார்த்தே கொழும்பிலிருந்து (வடக்கில் தகுதியானவர்கள் இல்லாமல் போய் விட்டனர்) சேர் பொன்னம்பலம் இராமநாதனின் இரத்த வழி உறவை இழுத்து வந்து வேட்பாளராக்கி முதலமைச்சராக்கினார்கள். இந்தத் தேர்தலில் ஆதிக்க சாதிகளின் சிநதனைப் போக்கின் ஆளுமையின் கீழ் சிந்திக்கப் பயிற்றப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளின் வாக்குகளும் சேர்ந்தே ஆறுமுகனாரின் மறு அவதாரத்தை தலைமையாகக் கொண்ட ஒரு மாகாணசபையை உருவாக்கியது.

ஆனால் இந்த மாகாண சபையினால் வடக்கில் உடலுழைப்பை மட்டும் நம்பி வாழும் எந்தவொரு தொழிலாளர் சமூகத்திற்கும் எதுவித பிரயோசனமும் கிடைக்கவில்லை. ஏனெனில் "சாதி"யே அங்கு செங்கோலாக அமர்ந்துள்ளது.

வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவாகள் - அகதி முகாம்களில் அவலப்படுபவர்கள் பற்றி சர்வதேச அமைப்புக்கள் - ஊடகங்கள் காட்டும் அவதானத்தை சொந்த மண்ணில் செயற்படும் மாகாண சபையும் தமிழ் ஊடகங்களும் அசட்டை செய்வது "சாதி" அபிமானத் தார்மீக நெறியே.

"சாதி"களை மூலஸ்தானத்தில் முன்னிறுத்தும் சமயங்களைக் கட்டிப் பிடித்து கொண்டு "சம உரிமையை" கோயில் கோபுரங்களிலும், கோவில் திருவிழாக்களிலும் நிலை நிறுத்த முற்படும் ஒடுக்கப்பட்ட தமிழ் சாதிகள் அதன் மூலம் ஆதிக்க சாதிகளின் தேவைகளுக்கு முட்டுக் கொடுக்கும் பணியினையே செய்கிறார்கள்.

பாதிக்கப்படும் "சாதி"த் தமிழர்கள் இந்த "சாதி" வாய்ப்பாட்டிலிருந்து விடுபட்டு, தங்களை அடக்கி ஒடுக்கப்படும் மக்களாக இனங்கண்டு இலங்கைக் குடி மக்களாக இணைந்து தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதன் ஊடாகவே இந்த "சாதி" எனும் கொடிய நஞ்சை எமது தமிழ் சமூகத்திலிருந்து ஆணிவேரோடு அழிக்க முடியும்.

இதனை விடுத்து ஊருக்கு ஊர் "சாதிக்கொரு" கோவில் கோபுரம் கட்டி எழுப்புவதும் - முன்னேற்றக் கிராமங்கள் அமைப்பதும் - மூலதன நிறுவனங்களை தோற்றுவிப்பதும் "சாதி" என்னும் தமிழர் பண்பாட்டை தொடர்நதும் தக்க வைப்பதாகவே அமையும்.