Sun01232022

Last updateSun, 19 Apr 2020 8am

இனியொரு விதி செய்வோம்! - பகுதி 12

செப்ரெம்பர் 11 பின் மே 18

 

நீண்ட ஒரு இடைவெளியின் பின்னரான உரையாடலுக்கு முயல்கிகிறேன். தாமதமும்–இடைவெளியின் பின்னான  பேசுபொருளாய் “செப்ரெம்பர் 11 பின் மே 18” எனத் தலைப்பிடுவது விவகாரமாய்த் தோன்றலாம். எப்போதுமே மே மாதத்தின் பின்னர்தான் செப்ரெம்பர் வரவேண்டுமா என்ன? ஓராண்டுச் சட்டகத்துக்குள் எல்லாம் முடிவதில்லையே? வாழ்க்கை என்னவோ, எந்தப் பிரிப்பும், இல்லாமல் தொடர்ந்து ஓடியபடிதான்.

 

இந்த செப்ரெம்பர் 11, ஒரு தசாப்த நினைவு கூரலை எட்டும் அமெரிக்கா வளர்த்த பயங்கரவாதத்தால் தானே தாக்குண்ட நாளைக் குறிப்பது. மற்றைய மே 18, நமக்கு எல்லாம் மறக்க முடியாத நாளாக அமைந்த, புலிகள் ஈழ யுத்த அரங்கிலிருந்து ஒரங்கட்டப்பட்ட 2009 இற்குரியது. இரண்டுக்குமான தொடர்பு  வெளிப்படையானது.

மூன்று தசாப்தங்களின் முன்னர் சோவியத் யூனியனை வீழ்த்துவதற்கு ஆப்பானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் பயங்கரவாத்தையும் ஊட்டிவளர்த்த அமெரிக்கா, அந்தத் தேவைபூர்த்தியான பின்னர் தனது ஆக்கிரமிப்பு அபிலாசையை வெளிப்படுத்திய போது, தானே பயங்கரவாதத்தின் இலக்காக வேண்டி ஏற்பட்டது. படவும், இனி உலகப்போக்கின் பிரதான தேவை பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது எனப் பிரகடனப்படுத்தி அதற்கான செல்நெறிகளை முடுக்கி விட்டது. ஆப்பானிஸ்தான், ஈராக், லிபியா எனக் கபளீகரம் செய்ய வேண்டிய நாடுகள் வென்றடுக்கப்பட்ட பின் உலகம் மகிழ்வான அமைதிக்குள் வந்துவிட்டதான – வந்ததாக வேண்டியதான தேவை அமெரிக்காவுக்கு, பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்து ஆயுத வியாபாரத்தை நடத்துவதும், விநோத அரசியல் நிகழ்த்துவதும் இனித் தேவையில்லை. தவிர, வேறு வடிவ யுத்தங்களும் ஆயுத வியாபாரங்களும் இல்லாமலா போய்விடும்? பயங்கரவாதம் வேண்டாம்!

இந்த இடைவெளிக்குள், அரசியல் சூனியமாய் இருந்த புலிகள் அழிய நேர்ந்தது. அந்தவகையில் செப்ரெம்பர் 11 இன் ஒரு எதிர்வினை மே 18 துன்பியல் முடிவு.

அந்தத் துன்பியல் தமிழருக்கு மட்டுமானது அல்ல இன்னும் அதிகமாய்ச் சிங்கள மக்களுக்கு. கோவணமும் களவாடப்படுவது பற்றிக் கவலைகொள்ளாமல் வெற்றிக் கொண்டாட்டத்தில் அவர்கள் திளைத்திருக்கும் போது, வயிற்றிலடிக்கப்படும் அவர்களும் இலங்கை மக்கள் அனைவரும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் ஆழ்த்தப்படுகின்றனர். இலங்கை முற்றாகவே தனது இறைமையையும் சுயாதிபத்தியத்தையும் இழந்து விட்டுள்ளது.

இந்த இலட்சணத்தில் தமிழர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கும் ஏனைய மேலைத்தேய நாடுகளுக்கும் பயணித்து இறைமையை விலை பேசுவதான கூக்குரல் வேறு! எந்தப்பெரிய அண்ணர்களிடம் போய் முறையிட்டாலும் இறுதியில் நாங்கள் தருவதைப் பெறுவதன்றி வேறுகதி தமிழருக்கு இல்லை என்ற எக்காளம் சிங்கள அமைச்சரிகளிடம்.

இங்குள்ள பிரச்சனைகளை வைத்து இடம்பிடிக்க முயலும் பெரியண்ணர்களில் இந்திய அண்ணன் ஆதாயங்களைப் பெற்றுக்கொண்டு தமிழர்களைக் கண்டு கொள்ளவில்லை. பென்னாம் பெரிய அமெரிக்க அண்ணர் கரிசனைகாட்ட இடமுண்டு எனக் கண்டு தமிழ்ப் பிரதிநிதிகள் இப்போது அங்கே காவடிதூக்கிப்போய் உள்ளனர். இவர்களும் இந்திய அண்ணரை மீற முடியாதவர்கள் என்பது வேறொரு கதை.

இந்தக் குழப்பங்களுக்கள் இலங்கையின் உள்ளே பெரியண்ணராய்ச் சிங்களச் சமூகம் சிறு தேசிய இனங்களுக்கு மாட்டின் முன் பக்கத்தையும் மரத்தின் அடிப்பகுதியையும் கொடுத்துவிட்டு, ஆதாயந்தரும் பகுதிகளைத் தமக்குரியதாக்கும் கபடங்களோடு! கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுப் போய்ச் சிறைக்குள் இடந்தேடியவர் தமிழ் – முஸ்லிம் தலைவர்களோடு ஏதோ ஒப்பந்தம் பண்ணி தமிழர்களுக்கும் முஸ்லிங்களுக்கும் எதையெல்லாமோ கொடுத்துவிடப் போகிறார் எனக் கூறிக்கொண்டு தான் இன்றைய ஜனாதிபதி இரண்டாந்தடவையும் அரியாசனம் ஏறினார் என்பதை அறிவோம். சிறு தேசிய இனங்களைச் சமமாக மதிக்கவோ தகுந்த உரிமைகளை அங்கீகரிக்கவோ மறுக்கும் இனவாத உணர்வே இன்றைய ஆட்சியாளர்களை அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிமேல் வெற்றிபெற வழிகோலியுள்ளது என்பதில் இரகசியம் ஏதுமில்லை. இந்த இலட்சணத்தில் அவர்கள் தருவதைக்கொண்டு சிறு தேசிய இனங்கள் நாட்டுக்கு விசுவாசம் காட்டி அடிமைத்தனத்தைக் கௌரவமாய் ஏற்றுவிட வேண்டுமாம்.

அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் நாட்டின் இனரீதியான பிளவைப் பட்டவர்த்தனமாகக் காட்டியுள்ளது. வடக்கு – கிழக்கில் ஆளும் கட்சி படுதோல்வி கண்டு, தமிழர் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும், தமிழர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாயுள்ள சபைகளைக் கைப்பற்றியுள்ளன. சிறுதேசிய இனங்களின் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கி சம உரிமையைத் திடமாக எதிர்க்கும் நடவடிக்கைகளுக்குப் பரிசாக ஆளும் கட்சி எனைய பகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிக்களான யு.என்.பி. , ஜே.வி.பி ஆகியன இத்தனை மோசமான பலவீனத்தை அடைவதற்கு புலியைத் தோற்கடித்த வெற்றி வீரர் என்ற மகுடம் தவிர வேறெதுவும் ஆளும் தரப்பிடம் இல்லை என்பது உண்மையிலும் உண்மை. பிரபாகரன் இருந்து மட்டுமல்ல, இறந்ததும் தாளாத கெடுதி பண்ணிய பிரகிருதி!

செப்ரெம்பர் 11 இஸ்லாமியப் பயங்கரவாத எதிரியை அமெரிக்க மேலாதிக்க பெரியண்ணருக்கு அடையாளப்படுத்திய குறியீடு எனின், அதை வளர்க்கக் காரணியாய் இருந்த முந்திய எதிரியயான சோவியத் யூனியனுடனான பனிப்போர் முந்திய யுகத்துக்கான அடையாளமாக இருந்தது. அப்போது சோவியத் யூனியன் பாட்டாளிவர்க்க அரசை உடையதாகக் கூறியவாறு உலகெங்கும் வர்க்கப்பிளவுடன் சமூக மாற்றத்துக்கான மார்கங்கள் தேடும் விவாதக்களங்களை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அந்த வர்க்கப்பகுப்பு என்ன ஆனது? இஸ்லாமியப் பயங்கரவாதத்துக்கு எதிரான பண்பாட்டு மோதுகையே இன்றைய நிதர்சனம் எனப்படும் உலக மயமாதல் சூழலில் இனக்குழுப் பிளவுகள்தான் தொடரப்போகிறதா?

நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் களம் இவ்விடயத்தில் குறிப்பான கவனிப்புக்குரியது. ஆளும் பௌத்த சிங்களப் பேரினவாத அரசு தரப்பில் சிங்களவரான மிலிந்த மொரகொடவும், பேரினவெறிக் கொலைத்தாண்டவத்தில் சளைக்காத யு.என்.பி கொழும்பு நிலவரத்தைக் கருத்தில் கொண்டு முன்னிறுத்திய முஸாம்மிலும் களத்தில் நின்ற போது முடிவு முன்னரே எதிர்பார்க்கத் தக்கதாயிருந்தது. அiனைத்து இடங்களிலும் ஆளும் பேரினவாதம் வென்றபோதிலும் முஸ்லிம் – தமிழரை (69%) பெரும்பான்மையாக உடைய கொழும்பில் மிலிந்த வெற்றி பெற இயலவில்லை. தமிழர் தரப்பில் ஒரு பகுதி யு.என்.பிக்கு வாக்களிக்க வர்க்க நலனும் பேரினவாத எதிர்ப்புணர்வம் காரணிகளாயிருந்தன. பெரும்பகுதியான தமிழர்கள் மனோகணேசன் தலைமையிலான தமிழர் கூட்டமைப்பு ஆதரவைப்பெற்ற இனவுணர்வுக் கட்சிக்கே வாக்களித்தனர் ( இன்னும் ஒரு கணிசமான தமிழர் பிரிவினர் வாக்களிப்பில் அக்கறை காட்டவில்லை – என்ன இருந்தாலும் யாழ்ப்பாண வெள்ளாளத் தேசியம் தலைமை இல்லையல்லவா?)

ஆக, இனக் குழுமப்பிரிவு மிகத்தெளிவாக வெளிப்பட்டு நிற்கிறது. இறுதியாகச் சொன்னதைப் போல யாழ்ப்பாண வெள்ளாளத் தேசியத் திமிரின் வாலாக இன்னமும் கிழக்கு தமிழினத்தேசியம் தொங்கிக்கொண்டு இருந்தாலும், அதற்கு எதிரான கிழக்கின் தனித்துவம் பற்றிப் பேசும் ஒரு தரப்பும் வலுவாக உண்டு. ஆயினும், அவர்கள் சிங்களப் பேரினவாத நிழலில் இருப்பிடம் தேட முனைவதால் நியாய உணர்வடைய பலரும் தவிர்க்கவியலாமல் யாழ் வெள்ளாளத் தேசியத்தின் வாலாகத் தொங்க நேர்ந்துள்ளது.

யாழ்ப்பாணத்தினுள் வெள்ளாளத் தேசியத்தை நிராகரிக்கும் சக்திகள் டக்ளசை ஆதரிக்கும் போது அந்த மக்களுக்கும் நெருடல் இல்லாமல் இல்லை. ஆளும்தரப்புடன் இல்லாமல் டக்ளஸ் தனித்து நின்றால் இன்னும் கணிசமான வெற்றியைப் பெற இயலும் எனச் சொல்கிறவர்கள் பலர் உள்ளனர். அந்தவகையில் யாழ் வெள்ளாளத் தேசியத்துக்கும் – பௌத்த சிங்களப் பேரினவாத அரசுக்கம் எதிராக இனங்கள் மற்றும் சாதிச் சமூகங்களிடையே சமத்துவம் பேணப்பட வேண்டும் எனக்கருதும் சக்தி கணிசமான அளவில் யாழ்ப்பாணத்தில் உண்டு.

இது போன்ற சமத்துவ அங்கலாய்ப்புடன் கிழக்குத் தமிழர், முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் மத்தியிலுள்ள சக்திகளும் இனவாதம் கடந்த உணர்வோடும், விடிவுக்கான ஆவலோடும் உள்ளது. அத்தகைய ஜனநாயக சக்தி சிங்கள மக்கள் மத்தியில் இல்லாமல் போய்விடுமா?

வர்க்கக் கனவுகளில்  மிதக்கும் மேதாவிகளுக்குத் தெரியும் உதிரிகளான சில விதிவிலக்குகள் அது போன்ற சக்தி எனும் மயக்கம் ஏற்படுத்த போதுமாயிருக்கலாம். யதார்த்தம் அதற்கு விரோதமானது. தனிநபரக்ளாயுள்ள சிங்கள ஜனநாயக சக்திகள் எந்தவொரு வர்க்கத் தளத்தையும் இனங்களிடையே சமத்துவம் எனும் குரலை முன்னிறுத்தி அணிதிரட்ட இயலாத நிலையிலேயே உள்ளனர்.

சரி, வளர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பில் பொருளாதார நலன்களுக்காகப் போராட வேண்டி இருப்பவர்கள் தேசிய இனங்களின் உரிமையை அங்கீகரித்து அரவணைத்து முன்னெடுக்கும் போராட்டங்கள் வாயிலாக வெற்றியீட்ட இயலும் எனக் காணமாட்டார்களா? இன்றுவரை சிங்கள மக்கள் மத்தியில் அதற்கான எந்தவொரு அமைப்பும் இல்லை. தொழிலாளர்களை அணிதிரட்டிவைத்துள்ள சமசமாஜ – கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசாங்கத்துடனுள்ளனர் என்றால் விவசாயிகள் பிரதான இனவாதக் கட்சியான சிறீலங்ஙகா சுதந்திரக் கட்சியில் அணிதிரண்டுள்ளனர் (எவருக்காவது விக்கிரபாகு கருணாரத்ன என்ற இடதுசாரி ஐக்கிய முன்னணித் தகர்ப்பாளர் ‘தொழிலாளர் அரசியல் பிரதிநிதி’ எனத் தெரிந்தால், அது இருபத்தோராம் நூற்றாண்டின் நகைச்சுவை என்று விட்டு ஒதுக்கிவிடுவதன்றி வேறு எதற்கும் பெறுமானமற்றது. அவரது துரோக நாடகங்களுக்கு இடத்தை வீணாக்க அவசிசயமில்லை).

சிங்கள மக்கள் ஆளும் தரப்பினர் ஆதாயங்களை இன்னும் இன்னும் பெருக்க வாய்ப்பைப் பெற்றவர்கள். அதைப் பங்கு போட அவர்கள் வருவார்கள் என்ற கற்பனையை வர்க்க மேதாவிகளிடம் விட்டுவிடுவோம். அவர்களில் ஒரு கணிசமான பிரிவினர் தமது பொருளாதார நலன்களுக்காகப் போராட வேண்டிய நிர்ப்பந்தம் உடையவர்கள்.

இன உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய நாம் அந்தச் சக்தியின் நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் அவர்களோடு ஐக்கியப்பட்டுப் போராட முன்வருவோமா? மேலாதிக்க சக்திகளுக்குக் காட்டிக் கொடுக்கும் எம் மத்தியிலான இனவெறியர்களையும் ஆளும் சாதித் தேசியங்களையும் நிராகரித்து இலங்கையினுள் தேசிய இனப்பிரச்சனைத் தீர்வுக்கான திட்டங்களைக் கண்டடைவோமா? சிங்கள மக்களை எம்மிலிருந்து தூரப்படுத்தும் பிரிவினை அச்சத்தை நீக்கும் வகையில் சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்திலான ‘சுயநிர்ணய உரிமை’ எனும் விவாதப் பொருளைப் பரவலாக்குவேபாமா! இங்கு ‘ஒக்டோபர் 21’ எனும் மற்றொரு குறியீடு அவசியப்படுகிறது. அதுபற்றி அடுத்த சந்திப்பில் -

(தொடரும்)