Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் குறித்து!

மனிதகுலத்தின் இன்றைய சிந்தனைமுறை, முதலாளித்துவச் சிந்தனைமுறையாகும். இல்லை, இது தனிப்பட்ட முதலாளியின் சிந்தனைமுறையென்று கூறினால், எங்குமுள்ள முதலாளித்துவச் சிந்தனைமுறையை மூடிமறைப்பது தான். உலகளாவிய முதலாளித்துவச் சிந்தனைமுறையுடன் தான், பிற சிந்தனைமுறைகள் முதன்மை பெற்று இயங்குகின்றது.

இந்த வகையில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைமுறை, இஸ்லாமிய சிந்தனைமுறை தான். இந்த சிந்தனைமுறையின் தோற்றத்தின் பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாதமானது, இஸ்லாமிய பாசிசமாக வளர்ச்சி பெற்று இருந்தது. இதன் ஒரு கூறுதான் இஸ்லாமிய பயங்கரவாதம். ஆகவே எங்கும் இஸ்லாமிய சிந்தனைமுறை இருப்பதுடன், அது பாசிசமாக மாறி வன்முறை வடிவத்தை பெற்று இருக்கின்றது. இங்கிருந்து இஸ்லாமிய பயங்கரவாதம் வெளிப்பட்டதே ஒழிய, இதற்கு வெளியில் அல்ல.

இப்படி உண்மை இருக்க யாழ் மையவாத சிந்தனையென்பது வெள்ளாளியச் சிந்தனைமுறை என்று கூறுவதை யார் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனரோ, அவர்கள் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று கூறுவதை மறுக்கின்றனர். இங்கு பரஸ்பர ஒத்த சிந்தனைக் கூறு இருக்கின்றது. இந்தியாவில் பார்ப்பனியச் சிந்தனைமுறையை யார் மறுக்கின்றனரோ, அவர்களும் இதே ரகத்தினரே. முஸ்லிம் சமூகத்தில் இருப்பது, இஸ்லாமிய சிந்தனைமுறை தான்.

வெள்ளாளியச் சிந்தனை என்பதை, வெள்ளாளர் என்ற சாதியைக் குறிப்பதாக கருதுகின்ற அனைவரும், தங்கள் சுய சாதிய சிந்தனைமுறையில் இருந்துதான் அதை முன்வைக்கின்றனர். வெள்ளாளிய சிந்தனை என்பது குறித்த வெள்ளாளர் சாதியைக் கடந்தது. அது சாதி அமைப்பு மற்றும் அதன் வாழ்வியல் முறையைக் குறிக்கின்றது. இன்று தமிழ் இலக்கியம் தொடங்கி இடதுசாரியக் கட்சிகள் வரை, வெள்ளாளிய சிந்தனைமுறையிலேயே சமூகத்தை அணுகுகின்றனரே ஒழிய, எதிர்மறையில் அல்ல.

இந்திய சமூக அமைப்பில் பார்ப்பனிய சிந்தனைமுறைக்கு எதிரான இலக்கியமும் அரசியலும் இருப்பது போல், இலங்கையில் வெள்ளாளிய சிந்தனைமுறைக்கு எதிரான இலக்கியமோ அரசியலோ கிடையாது. கட்சித் திட்டங்களில் வெள்ளாளிய சிந்தனைமுறை குறித்து, எந்தக் குறிப்பையும் காண முடியாது. இது போல் தான் இஸ்லாமிய சிந்தனைமுறையிலான இலக்கியமும் இருக்கின்றது.

இவர்கள் தான் இன்று இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் குறித்து புலம்புகின்றனர். முஸ்லிம் மக்கள் வேறு, இஸ்லாமிய மக்கள் வேறு என்ற அடிப்படை வேறுபாட்டைக் கூட புரிந்துகொள்ள முடியாதளவுக்கு, முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய சிந்தனைமுறைக்கு பலியாகி இருக்கின்றது. அதை வேறுபடுத்திக் காட்டக் கூட இடதுசாரியத்தால் முடியாத வண்ணம், இஸ்லாமிய சிந்தனைக்கு பின்னால் வால் பிடிக்கின்றனர். அதாவது தமிழர் மத்தியில் வெள்ளாளிய சிந்தனைமுறை இருப்பது போல், முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய சிந்தனைமுறை இருக்கின்றது என்பதைக் கூட, ஏற்க மறுக்கின்றனர்.

முஸ்லிம் இலக்கியம் முதல் அரசியல் அனைத்தும் இஸ்லாமிய சிந்தனைமுறையாகவே இருக்கின்றது. அரசியல் போல், இலக்கியமும் தமிழ் இலக்கியமல்ல, இஸ்லாமிய இலக்கியமாக இருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தில் நாத்திகம், பகுத்தறிவுவாதம், பெண்ணியம், இடதுசாரியத்தை .. முன்வைக்கக் கூடிய எவருக்கும் இடமில்லை. முன்பு வெள்ளாளிய சிந்தனையிலான புலிப் பாசிசம் நிலவிய காலத்தில் எப்படி தமிழ் சமூகம் இருந்ததோ, அப்படி இஸ்லாமிய அடிப்படைவாத பாசிசம் முஸ்லிம் மக்கள் மத்தியில் இயங்குகின்றது. முஸ்லிம் தேசிய இனக்; கூறைக் கூட, இஸ்லாமிய அடிப்படைவாத பாசிசம் அழித்தது. இஸ்லாமிய நாடு என்ற மத்திய கிழக்கில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை நிறுவியது போல், இலங்கையில் முஸ்லிம் தேசிய இனம் என்பதை அழித்து இஸ்லாமிய பாசிசம், அனைத்தையம் குறுகிய அடிப்படைவாதமாகக் குறுக்கியது.

இஸ்லாமிய சிந்தனைமுறையும் அதன் பாசிச வடிவமும், இஸ்லாம் அல்லாத பிற அனைத்தையும் இஸ்லாமிய வடிமாக்குவது தான். உடை முதல் சேர்ந்து வாழும் மனிதப் பண்பு வரை, எதற்கு விதிவிலக்கல்ல. உதாரணமாக

1.ஒரு பெண் இஸ்லாமிய உடையல்லாத உடையுடன் அந்த சமூகத்தில் வாழும் சுதந்திரம் கிடையாது.

2.சுரண்டலை செய்யும் பொழுது கூட, மத அடிப்படைவாத அடையாளங்களை முன்னிறுத்துமளவுக்கு இஸ்லாமிய சிந்தனைமுறைக்கு பலியாகி இருக்கின்றது. சுரண்டல் என்பது குறுகிய அடையாளங்களை முன்னிறுத்தும் போது, பிற சமூகங்களை சுரண்டுவதை தடுக்கும் என்ற சுரண்டல் அமைப்பு விதியைக் கூட, இது விட்டு வைக்கவில்லை.

இன்று சமூகத்தில் இஸ்லாமிய சமூகத்தை அடையாளம் காணக்கூடிய வண்ணம், அவர்களின் வாழ்க்கை முறையும், நடத்தையும் குறுகி இருக்கின்றது.

இஸ்லாமிய சிந்தனைமுறை என்பது, இஸ்லாமியத்தின் மத நூல்களை உள்ளடக்கியது. அது மிதவாதம் முதல் பயங்கரவாதம் வரை, எதையும் நியாயப்படுத்தக் கூடியது தான். அன்பு முதல் காறி உமிழ்கின்ற வரை, அனைத்தும் மத நூல்களின சாரமாக இருக்கின்றது. எது இஸ்லாமிய சிநதனையாக பரிணாமம் பெறுகின்றதோ, அதற்கு சமூகம் பலியாகி விடுகின்றது. உதாரணமாக ஜெர்மனிய நாசிசம் ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனையாக குரலாக மாறிய போது, இரண்டாம் உலக யுத்தத்தை நடத்தியதுடன், யூத மக்களையும் கொன்று குவித்தது. நாசிய சிந்தனைமுறை பாசிச வடிவமெடுத்ததுடன், முழு மக்களின் சிந்தனைமுறையாக இருந்ததுடன், மனிதகுலத்திற்கே கேடு விளைவித்தது.

அதுபோல் தான் இலங்கையில் இஸ்லாமிய சிந்தனைமுறையும், இஸ்லாமிய அடிப்படைவாதமாக பாசிச வடிவமெடுத்து இருக்கின்றது. அதன் ஒரு கூறுதான் இஸ்லாமிய பயங்கரவாதமாக வளர்ச்சியுற்றது. சமூகத்தின் உயிரோட்டமுமள்ள பல்வேறு போக்குகளை ஒடுக்கி, சமூகத்தில் இஸ்லாமிய மயமாக்கமென்பது பலமுனைகளில் பல வடிவங்களில் நடந்தேறியது. இதன் போது பிற முஸ்லிம் பிரிவுகளின் எதிர்ப்புகள் என்பது, மதப் பிரிவுகள் சார்ந்த முரண்பாடே ஒழிய, இஸ்லாமிய மயமாக்கலுக்கு இஸ்லாமிய சிந்தனைக்கு எதிராக அல்ல. தனிப்பட்ட நபர்களின் (குறிப்பாக பெண்கள்) முரண்பாடுகள், பெண் மீதான இஸ்லாமிய ஆணாதிக்க சில வரம்புகளை மீறிய அளவில், வந்த முரண்பாடுகள் தான். உதாரணமாக புலிக்கு எதிரான தமிழ் இலக்கிய – அரசியல்வாதிகள் போல். அதாவது சமூக அரசியல் போக்குக்கு எதிராக அல்ல. வெள்ளாளியச் சிந்தனைக்கு எதிராகவோ, இஸ்லாமிய சிந்தனைமுறைக்கு எதிராகவோ அல்ல.

வெள்ளாளியச் சிந்தனையிலான புலியெதிர்ப்பு இலக்கிய - அரசியல் போல், இஸ்லாமிய சிந்தனையிலான சில இஸ்லாமிய அடிப்படை பிரிவுகளை எதிர்த்தே, இலக்கிய - அரசியலே வெளிப்பட்டன.

சிந்தனைமுறைகளுக்கு எதிரான இலக்கியத்தாலும், அரசியலாலும்; சமூகம் வழிநடத்தப்படாத வரை, சிந்தனைமுறைகளின் விளைவாகவே அனைத்து சம்பவங்களும் நடந்தேறுகின்றது. நடந்த பயங்கரவாதத்தையும், இந்த வகையில் தான் அணுக முடியும்.