Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கானல் நீர் (சிறுகதை)

”We Want… தமிழீழம்…We Want… தமிழீழம்…Our Leader… பிரபாகரன்…Our Leader… பிரபாகரன்… டம்… டம்… டம்… டம்” என்ற மேளத்தின் இசை ஒலியோடு மக்கள் கூட்டத்தின் கோசம் வானைப் பிளக்கிறது. ஒவ்வொருவரது கோசங்களில் இணைந்த உச்சரிப்புக்களிலும் இருந்த உணர்ச்சியின் வேகமும் அதனோடு ஊறிய உச்சாட்ட வெறியின் கொதிப்பும் ஆவேசமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. டம்… டம்… டம்… டம்… We want தமிழீழம், We want தமிழீழம், Our Leader பிரபாகரன், Our Leader பிரபாகரன். நூறல்ல.., ஆயிரமல்ல கிட்டத்தட்ட லட்சங்களைத் தாண்டிவிட்ட மக்கள் கூட்டம். குழந்தைகள் குட்டிகள், கிழடுகட்டைகள், இளைஞர்கள், குமருகள் எனச் சத்தம் போட்டபடி ஊர்வலம் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

சவப்பெட்டிகளைத் தூக்கியபடி ஒரு கூட்டமாகவும், தலையிலே துண்டுகளைக் கட்டியபடி தாளத்திற்கு ஏற்றது போல் பைலா ஆடிக்கொண்டு போகும் இன்னொரு இளைஞர் கூட்டமுமாக, இறுதி நேரத்தில் நிகழ்ந்த கோரச் சம்பவங்களைப் பிரதிபலிக்கும் பதாகைகளோடும், பொக்கற்றினுள் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு புன்னகைத்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் தலைவனின் படத்தையும் தூக்கிக் கொண்டு போகும் கூட்டமுமாக ஊர்வலம் கம்பீரமாய் வீறுநடை போட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. We Want தமிழீழம்; We Want தமிழீழம், Our Leader பிரபாகரன், Our Leader பிரபாகரன் எந்தத் தடைகளுமின்றி ஊர்வலம் நகர்ந்து செல்கின்றது. நகரமுடியாது மறிக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்த வெள்ளைச் சனங்களும், வெளிநாட்டுச் சனங்களும் எட்டிப் பார்த்தபடியே திகைத்துப் போயிருந்தார்கள்.

 

 

இப்படி ஒரு சனக்கூட்டமா…? காற்றிலே கம்பீரமாய் எழுந்து நிற்கும் சிவப்பு மஞ்சள் கலந்த வண்ணக் கொடிகள், வீதியெங்கும் நிமிர்ந்து நிற்க நீண்ட வரிசையாக, கண்ணுக்கு எட்டாத வகையில் எங்கும் ஒரே கறுப்புத் தலைகள். இந்த ஐரோப்பிய வரலாற்றில் இப்படி ஒரு ஊர்வலத்தையும் சனக் கூட்டத்தையும் இந்தச் சனங்கள் கண்டு எவ்வளவோ காலம். ஒருசில தினங்களுக்கு முன்னர் தான் இந்த தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் சேர்ந்து, நடுவீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து, போக்குவரத்தை இடையூறு செய்திருந்தபடியால்…, இன்றும் அப்படி நடந்து விடுமோ…? என நினைத்து, சில வெள்ளைத் தலைகள் ஏக்கம் கொண்டன. பதாகைகளையும் அதிலிருந்த படங்களையும் பார்த்த சில கிழவிகள் அருவெருத்து தங்கள் மூஞ்சைகளை உள்ளே இழுத்துக் கொண்டனர். பார்த்தும் பாராதது போல் இருந்தவர்களும் தலையைக் கீழே தொங்கப் போட்டார்கள். பாவம் இந்த அப்பாவித் தமிழ்க்கூட்டம்…, இந்த உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இப்படி தமிழினத்தயே அழிக்க உடந்தையாக இருப்பதோடு மௌனமாயும் இருக்கிறார்களே எனச் சில வெள்ளைகள் வேதனையும் ஆவேசமும் கூடக் கொண்டார்கள். We Want தமிழீழம், We Want தமிழீழம், Our Leadr பிரபாகரன், Our Leader பிரபாகரன், We Want தமிழீழம், We Want தமிழீழம் ஒவ்வொரு வார்த்தைகளிலிருந்தும் வருகின்ற அந்த உயிர்ப்பும் அதிலிருந்த உறுதியும் அந்தச் சன இரைச்சலிலும் மிகத் தெளிவாய்க் கேட்கின்றது.

 

அடிக்கப்படும் மேளத்தின் நாத ஒலியும் காற்றோடு காற்றாய் கரைந்து போகின்றது. தனது தோள்ப் பையிலிருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்து தொண்டையை ஒருகணம் நனைத்துக் கொண்டான் துவாரகன். கத்து கத்தென்று கத்தி வரண்டு போன தொண்டைக்கு மிகவும் இதமாகவே இருந்தது. ஆனால் மண்டை மட்டும் கனத்து வலித்துக் கொண்டே இருந்தது. துண்டு துண்டுகளாய் சிதறிப் போன உடல்களும், கையிழந்து காலிழந்து இறைச்சித் துண்டுகளாய் தொங்கிப் போன, இனம் தெரியாத முகம் தெரியாத எம் இரத்த உறவுகள், தலையில் கட்டுத் துணிகளுடன் இரத்தம் வழிந்தபடி மரத்தின் கீழ் குற்றுருயிராய் படுத்துக்கிடக்கும் வயோதிபர்கள், குழந்தை குட்டிகள் இன்னும் சொல்ல முடியா, அந்தக் காட்சிகள் அனைத்தும் துவாரகனின் மனதில் சுற்றிச்சுற்றி வலம் வந்தது. We Want தமிழீழம், We Want தமிழீழம், Our Leadr பிரபாகரன், Our Leader பிரபாகரன், துவாரகன் ஆவேசமாகக் கத்தினான். தொண்டை நரம்புகள் புடைத்தெழுந்தன. அவனது ஒவ்வொரு அங்கத்திலும் ஓடும் இரத்தமும் உத்வேகத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது. எங்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும்… எங்களை நாங்களே ஆள வேண்டும், எங்கள் தலைவன் தலைமையில் தான் தமிழீழம் மலர வேண்டும்..! இவ்வளவு நடந்தும் இந்த ஐரோப்பிய நாடுகளும் உலக நாடுகளும் ஏன்தான் மௌனமாய் இருக்கின்றார்கள். எமது அடுத்த கட்டப் போராட்டம் புலம்பெயர் வாழ் இளைஞர்கள் கையில்த் தான் தங்கியிருக்கின்றது என்ற தலைவனின் வார்த்தைகள் துவாரகனையும், அவனைப் போன்ற பல இளைஞர்களையும் மேலும் மேலும் உற்சாகப்படுத்தியிருந்தது.|

 

“இஞ்சை துவாரகா, உந்தப் போராட்டம் ஒருநாளும் சரிவராது.. உந்த இந்தியா பக்கத்திலே இருக்கும் வரை உந்தப் பிரிவினை, தமிழீழம் என்றெல்லாம் கற்பனையே பண்ண முடியாது. அது மட்டுமல்ல நீங்கள் உங்களுக்குள்ளேயே உள்ள பிரிவுகளையும் பிரச்சினைகளையும் தீர்க்காமல் தமீழீழம் என்பது வெறும் கண்துடைப்புத் தான். முந்திய தமிழ்த் தலைவர்கள் தாங்கள் தங்களுடைய சுகபோகங்களுக்காகவும் தங்களுடைய பாதுகாப்புக்காகவும் சுயநலன்களுக்காகவும் சும்மா கிடந்த பொடியளை தமீழீழம் என்று கிளப்பிப்போட்டுப் போக, பிறகு பொடியள் தூக்கிக் கொண்டு திரிஞ்சினம். அந்தப் பொடியளும் இயக்கங்களும் ஏன் தான் துவக்கைத் தூக்கினோம் யாருக்கெதிராகத் தூக்கினோம் என்று தெரியாமலே தங்களுக்குள் தாங்களே சுடுபட்டது மட்டுமல்லாமல் ஒன்றாச் சேர்ந்து சாப்பிட்டுக் குடிச்சவர்களையும் ஒன்றாத் திரிந்து படுத்துறங்கிய சகாக்களையும் நண்பர்களையும் கொலை செய்து மறைச்சுப் போட்டு, பத்தாக்குறைக்கு சும்மா இருந்த சனங்களையும் சுட்டுத் தள்ளினவங்கள். ஒரு படிச்சவன்..! எழுதினவன்..!! கருத்துச் சொன்னவங்களையாவது விட்டு வைச்சாங்களா? ஆடு பிடிச்சவன் கோழி பிடிச்சவன் என்றும் பாராமல், ஏன் களவெடுத்தான் என்று அறியாமல் சமூகத் துரோகிகள் என்று கட்டிவைச்சு கம்பத்திலே தூக்க வெளிக்கிட்ட போதே இந்தப் போராட்டம் பிழைச்சுப் போச்சு. எப்போதாவது எங்கேயாவது ஒருசனத்தின் கருத்தைக் கேட்டிருப்பார்களா..? அல்லது சொல்லத்தான் விட்டாங்களா..? அப்போதே இந்த இயக்கங்கள் எல்லாம் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு விட்டார்கள்” என்ற தகப்பனின் கருத்துக்களில் துவாரகன் ஒரு நாளும் உடன் பட்டதுமில்லை, ஏற்றுக் கொண்டதுமில்லை.

 

 

போராட்டம் என்றால் இப்படி அப்படியெல்லாம் இருக்கத்தான் செய்யும். நீங்கள் தான் ஒன்றுமே தெளிவில்லாமலும் விளங்காமலும் இப்பவும் அப்படியே இருக்கின்றீர்கள் என்று தகப்பனுடன் வாதிட்டும் சண்டைப்பட்டும் இருக்கின்றான். ஊர்வலத்தை ஒருகணம் திரும்பிப் பார்க்கின்றான். அவனை அவனாலேயே நம்ப முடியாமல் இருந்தது. அந்த மக்கள் பெருவெள்ளம்.., அந்தக் கொந்தளிப்பு.., அந்த இளைஞர்களின் ஆவேசம்.., அளவுக்கு மிஞ்சிய பெண்கள் கூட்டம்.., எல்லாமே நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் என்று அவனை இறுமாப்படையச் செய்தது. வழமையை விட பத்திரிகையாளர்களும், தொலைக் காட்சிக்காரர்களும் ஊர்வலங்களைப் படம்பிடித்துக் கொண்டிருப்பதும் வெள்ளைக்காரச் சனங்கள் நிறையப்பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதுவும் துவாரகனை மேலும் உற்சாகப்படுத்தியிருந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட தமிழ்ப் பெண்ணொருவர் தயவு செய்து ஒரு தமிழ் மக்களும் வீட்டினுள் இருக்காமல் வெளியே வாருங்கள்… எங்கள் தலைவனின் கனவை நனவாக்குவோம்… வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டாம். வெளியில் வந்து எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்… தமிழர்கள் என்றால் எப்படியானவர்கள் என்பதை உலகிற்கு உணர்த்த இதுவே நல்ல தருணம்… வெளியே வாருங்கள். ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதவர்கள் உண்மையான தமிழர்களே அல்ல இப்படியான அனைவரும் துரோகிகளே..! என்று மிகுந்த ஆவேசமாகத் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றுக்காய் வர்ணனை செய்து கொண்டிருந்தார்.

 

இதுவே எமது இறுதிப் போர், தலைவர் இம் முறை தமிழீழம் கண்டே தீருவார். We Want தமிழீழம், Our Leadr பிரபாகரன், Our Leader பிரபாகரன். மேளத்தின் ஒவ்வொரு அடியும் அதில் வரும் நாதமும் ஒவ்வொரு தமிழனையும் உருவேற்றிக் கொண்டிருந்தது. போடப்படும் கோசங்களின் சத்தம் காதைப் புளிக்க வைத்தது. மேளத்தின் ஒவ்வொரு அடியின் வேகம் கூடக் கூட ஆட்டத்தின் வேகமும் கூடிக் கொண்டே போனது. ஒருநாளா இரண்டுநாளா? ஊர்வலம் என ஆரம்பிச்சு இன்றைக்கு நாலாவது நாள். படிப்பின் இறுதியாண்டு. மற்றைய யாழ்ப்பாணத் தமிழர்களைப் போலத்தான் துவாரகனும் படிக்கின்றான். அல்லது படிப்பிக்கப்படுகின்றான். டொக்ராகவோ இஞ்சினியராகவோ வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்றும், உந்தக் கண்ட நிண்டதெல்லாம் இஞ்சினியர் டொக்ரர் என்று படிக்கும் போது, நாம் என்ன குறைவோ என்ற தாயின் கனவுகளையும் நினைத்துக் கொண்டான். படிப்பு முக்கியந்தான், இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால் இன்று மிகவும் முக்கியமானது எமது மக்கள், எமது மண், எமது தலைவன், இன்றைய புலம்பெயர் இளைஞர் போராட்டம், இங்கே படிப்பை நாம் எப்போதும் படிக்கலாம். அதுவும் இந்த வசதியான நாடுகளில். ஆனால் போராட்டமும் ஊர்வலங்களுமே இன்றைய இளைஞர்களின் முதற் கடமை. நாங்கள் இங்கே நடாத்தும் போராட்டங்களின் மூலம் தான் அங்கே தமிழீழம் மலரும் என்றும், நாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இந்த ஐரோப்பிய மண்ணை கண் விழிக்க வைக்க வேண்டும் என்ற இந்த நாட்டு இயக்கப் பொறுப்பாளரின் வார்த்தைகள் துவாரகனுக்கு தாரகமந்திரமாக இருந்தது.

 

இப்போது நேரம் மதியத்தை தாண்டி விட்டது. We Want தமிழீழம், Our Leadr பிரபாகரன், Our Leader பிரபாகரன். முன்புபோல் வார்த்தைகளிலும் குரல்களிலுமிருந்த வேகமும் ஆவேசமும் குறைந்து போயிருந்தது. ஏற்கனவே குடித்து விட்டு கும்மாளம் குத்தி தாளம் போட்டவர்களின் கொதிப்பும் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கிப் போயிருந்தது. ஏறிய கொடிகள் சில இறங்கி இழுபட்ட நிலையிலும் ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. ஊர்வலத்துக்கென வந்துவிட்டு எங்கேயோ தமது சொந்தச் சொந்த அலுவல்களை முடித்து விட்டு வந்த சிலபேர் இறுதி நேர ஊர்வலத்தில் வந்து தம்மையும் இணைத்துக் கொண்டார்கள். எங்கேயோ மலிவாக வாங்கிய பசுமதி அரிசிப் பைகளுடனும் மரக்கறிகளோடு பலசரக்குச் சாமான்களுமாக பல பேர் வந்து ஊர்வலத்தில் சேர்ந்து கொண்டார்கள். வானம் மெல்ல இருளைக் கௌவத் தொடங்கியது. வெய்யிலின் நிறமும் மாறி மெல்லத் தணியத் தொடங்கியது. சனங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கழரத் தொடங்கினர்.

 

பஸ்சில் வந்து ஏறிக்கொண்டான் துவாரகன். ஏறும்போது சில மாமாக்களிலிருந்தும் சக இளைஞர்களிலிருந்தும் வீசிய விஸ்க்கியின் வாசனையோடு புகைத்தல் மணமும் மூக்கைத் துளைத்தது. எல்லோரையும் ஒருகணம் மேலும் கீழுமாகப் பார்த்தான். கோபத்தினால் அவனது நரம்புகள் சூடேறி தலையில் வந்து விறைத்து நின்றது. பற்களைக் கடித்து தன் கையை மடித்து தனது கோபத்தைத் தணித்தபடி, ஒரு கையினால் பஸ்சின் கம்பியைப் பிடித்தபடி ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். சனவெக்கையும் வியர்வை நாற்றமும் ஏற்கனவே பாவிக்கப்படிருந்த குடிபானங்களின் மணமும் துவாரகனை ஒருகணம் ஆட வைத்தது. சில பெண்களையும் ஒருகணம் கிறுகச் செய்தது. பின்னால் இருப்பவர்களின் பாட்டுக் கச்சேரியும் சிரிப்பொலிகளும், கைதட்டல் ஆரவாரங்கள் எல்லாமே துவாரகனைத் திக்குமுக்காடச் செய்தது. வழமைபோல் அவனுக்கு கோபம் வரவில்லை. கவலையே அவனை ஆட்கொண்டது. பலபேர் பலதும் பத்தையும் கதைத்துக் கொண்டார்கள். சிலபேர் பகிடிகளைச் சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள். பலமுறை வடிவேலும் விவேக்கும் வந்து வந்து போனார்கள். சின்னத்திரை நாடகங்களும் ரிவித் தொடர்களும் பலமுறை அலசி ஆராயப்பட்டு சில நடிகை நடிகர்களில் குற்றப் பத்திரிக்கையும் வாசிக்கப்பட்டது. ஏதோ ரூறிஸ்ற் பஸ்சில் வந்து மாட்டுப்பட்டு விட்டேனோ என்றும் சுற்றுலா ஒன்றுக்கு வந்து திரும்பிப் போகின்றோமோ எனத் துவாரகன் மனம் நொந்து வருந்தினான். சில தாய்மார் பிள்ளைகளுக்கு உடைகளை மாற்றி உணவை ஊட்டிக் கொண்டிருந்தார்கள். இங்கே இவர்கள், ஆனால் அங்கே… எத்தனை குழந்தைகள்… பச்சைப் பாலகர்கள், இன்று யாருமற்ற அனாதைகளாக, ஏதிலிகளாக, அங்கவீனர்களாக, மன நோயாளிகளாக நினைக்க நினைக்க துவாரகனால் முடியாமல் இருக்கின்றது. எப்போதோ ரிவியில் பார்த்த இரத்தம் தோய்ந்த குழந்தை ஒன்றின் முகம் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருந்தது. இதயத்தின் எங்கேயோ ஒரு மூலையில் இருந்து அந்தக் குழந்தை அழும் சத்தம் துவாரகனுக்கு மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. பாட்டுக் கச்சேரியோடு பஸ்இரைந்து கொண்டு சென்றது.

 

எல்லாம் முடிந்துவிட்டது. முள்ளிவாய்க்காலோடு எல்லாம் முடங்கிப் போய்விட்டது. கண்ணை மூடி முடிப்பதற்குள் எல்லாம்… இவ்வளவு காலம் கட்டிக்காத்த… நம்ப முடியவில்லை. என்றுமே சந்திக்க முடியாத அந்த வரலாற்றுத் துரோகம் எந்தவித அறிவித்தல்களுமின்றி உலகமே இருண்டு போனது. நம்பவும் முடியாமல் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தீபட்ட ரணங்களாய் மனம் வேதனையால் வெந்து வெடித்துக் கொண்டிருந்தது. முன்பு போல ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் துவாரகனால் எதையுமே செய்ய முடியாதிருந்தது. அவனது இறுதியாண்டுப் பரீட்சையும் கூட அவனை ஏமாற்றி விட்டது. தொடர்ந்தும் அவனால் பாடசாலைக்கு ஒழுங்காகச் செல்ல முடியாமல் இருந்தது. வருவோர் போவோரிலிருந்து கண்ணில்படும் அத்தனை பேரும் பையித்தியக்காரர்கள் போலவும் ஏமாற்றுக்காரர்கள் போலவுமே அவனுக்குத் தென்பட்டார்கள். நல்ல நித்திரையும் இல்லாமல் நிம்மதியும் இல்லாமல் துவாரகன் குழம்பிக் கொண்டே அலைந்து திரிந்தான். எதிலும் ஒரு பிடிப்பும் இல்லாமல், விருப்பும் இல்லாமல் பையித்தியக்காரன் போலவே மாறிவிட்டான். தகப்பன் கூறிய அந்த வார்த்தைகள் ஒவ்வொரு சொற்களாய் இதயத்தில் குத்தித் தைத்துக் கொண்டிருந்தது. ஒரு முறையல்ல பலமுறை அவ்வார்த்தைகளை இரைமீட்டிப் பார்த்தான்.

 

தமிழ்ப் படங்களிலே வரும் எதிரொலி போல் முன்னும் பின்னுமாக மாறிமாறி அவ்வார்த்தைகள் எங்கோ எதிரொலித்துக் கொண்டிருந்தது. தகப்பனின் குரலோடு அங்கே மரணித்த எல்லா உயிர்களும் எழுந்து வந்து துவாரகனைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டன. துவாரகா..! தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இவை ஒரு கனத்த நாட்கள். இறந்தவர்களைப் பற்றிக் கவலைப்படுவதா? அல்லது அங்கே உயிரோடு இருப்பவர்கள் பற்றிக் கவலைப்படுவதா அல்லது முள்ளுக்கம்பி வேலிக்குள் அகப்பட்டவர்கள் பற்றிச் சிந்திப்பதா…? இந்தப் போராட்டம் பற்றி இப்பவும் சொல்லுகிறேன், நடந்து முடிந்த போராட்டம் பற்றியோ போராளிகள் பற்றியோ இங்கு கொச்சைப்படுத்தவோ வரவில்லை, அல்லது அதற்குரிய நேரமும் கூட இதுவல்ல, நாம் ஏன் தோற்றுப் போனோம் என்று விடை தெரியாமல் உன்னைப் போன்ற எத்தனையோ பேர் குழம்பிப் போயிருக்கின்றீர்கள். உண்மையாக உழைத்த எத்தனையோ பேர் இன்னும் அந்த நிலையிலிருந்து விடுபடவும் முடியாமல் விலகிக் கொள்ளவும் முடியாமல் தவித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நடந்தது என்ன..? நான் அப்போது சொல்லச் சொல்ல உனக்கு விளங்கவும் இல்லை. நீ அதை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. ஆனால் நீயோ தமிழ் மக்களோ கண்டது தான் என்ன..? இருந்த நிலையை விட மக்களின் விடுதலையை இன்னும் முப்பது வருசத்துக்குப் பின்னாலே கொண்டு போய் தள்ளியிருக்கின்றார்கள். விடுதலை என்று சொல்லிச் சொல்லி கனபேர் இப்பவும் குளிர்காஞ்சு கொண்டிருக்கினம். உந்த ஊர்வலத்துக்கு வந்தவர்களும் கொடிபிடித்துக் கொண்டு குளறிக் கொண்டு திரிந்தவர்களும் உங்கடை ஆதரவாளர்கள் எண்டு மட்டும் நினைச்சு ஏமாந்து போடாதே. இதுதான் மக்கள் போராட்டம் என்றும் நீ நினைச்சுவிடாதே..

 

 

க்கள் போராட்டம் இங்கை நடக்கிற கலியாண வீட்டிற்கும் சாமத்திய கொண்டாட்டங்களுக்கும் நோட்டிஸ் குடுத்தினமெண்டு சம்பிரதாயத்துக்கு போய் சமூகமளிச்சிட்டு வாற விசயமில்லை. மக்கள் போராடமென்றால் மக்கள் தங்களுக்குள் இருக்கும் சகலவிதமான அடக்கு முறைகளுக்கும் எதிராக அது சாதியோ, மதமோ, பெண்ணடிமையோ, வர்க்கமோ எதுவாக இருந்தாலும் அதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்து அந்த மக்களாலேயே முன்னெடுக்கப்படும் போராட்டம் தான் மக்கள போராட்டம். இதை நல்லா விளங்கிக் கொள்.

 

ஆனால் ஒரு பெரிய உண்மை. இந்த ஊர்வலங்களால் எங்கடை மக்கள் அங்கே நன்மை அடைந்தார்களோ இல்லையோ இங்கே இளையோர் கனபேர் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி இப்ப கலியாணமும் கட்டியிருக்கினம். இப்போது நீயெல்லம் இதை நன்றாய் விளங்கியிருப்பாய். அங்கே நடந்ததும் சரி, இங்கே நடந்ததும் வெறும்
போலிகள். இவ்வளவு காலமும் இந்த தமிழ்மக்கள் வெறும் மாயைக்குள் தான் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்பதை விட மாயைக்குள் தான் வைக்கப்பட்டிருக்கின்றார்கள்… மறந்து விடாதே. இன்றைக்கு மொத்தமாக தமிழ் மக்களை உங்களால் முடிஞ்சவரை அரசியல் அனாதைகளாக்கி விட்டீர்கள். ஆயுதப் போராட்டம் ஒன்றின் மூலம் தான் எமது விடுதலையை வென்றெடுக்கலாம் என்ற கொள்கையில் திடமான நம்பிக்கை கொண்டவன் நான். ஆனால் அங்கே ஆயுதங்கள் மௌனித்து விட்ட பிறகும், எல்லாம் முடிந்து விட்டது என்று மட்டும் எண்ணிக் கலங்கி விடாதே… இந்தத் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்று மட்டும் நீ நினைத்து விடாதே. இன்றைய சமகாலத்தின் நிகழ்வுகளைக் கணக்கிற் கொண்டு, மக்கள் எல்லோரும் அரசியல் வேலை முறைகளுக்கு நகர்த்தப்பட்டு, அரசியல் மயப்படுத்தப்படும் போது தான் ஒவ்வோர் மக்களாக ஓர் சரியான மக்கள் போராட்டத்துக்குத் தயாராகுவார்கள். ஈழத்தில் நடைபெற்றதும் ஆயுதப் போராட்டம் தான். ஆனால் அது மக்கள் தாங்கிய ஆயுதப் போராட்டம் அல்ல. ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பதற்கும் ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டம் என்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கிறது. இறுகியிருந்த துவாரகனின் மண்டை கொஞ்சம் கொஞ்சமாய் இளகத் தொடங்கியது.

 

நிலாதரன்

முன்னணி (இதழ் -1)