Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1

{jcomments on}தமிழீழப் போராட்ட இயக்கங்கள் என பல்வேறு பெயர்களில் தோன்றியிருந்த பெரிதும் சிறிதுமான இயக்கங்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE - வே.பிரபாகரன்), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (PLOTE - க.உமாமகேஸ்வரன்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF - கே.பத்மநாபா,) ஈழப்புரட்சிகர மாணவர் இயக்கம் ( EROS - வே.பாலகுமாரன்) தமிழீழ விடுதலை இயக்கம் ( TELO- க.சிறீசபாரத்தினம்) என்பவை ஜந்து பாரிய இயக்கங்களாக கருதப்படுபவை.

அவ்வியக்கங்களில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தில் (TELO- ரெலோ) முன்னாள் போராளியாக இருந்த எல்லாளன் தனது வரலாற்றை சரிநிகர் பத்திரிகையில் தொடராக முன்னர் வெளிக்கொணர்ந்திருந்தார்.

தற்போது அவ்வரலாறானது எல்லாளன் என்ற போராளியாலேயே மீண்டும் மீள்பார்வைக்கும் திருத்தத்துக்கும் உட்படுத்தப்பட்டு தமிழரங்கத்தில் இன்று தொடக்கம் வாராந்த வரலாற்றுக் கட்டுரையாக பிரசுரம் செய்யப்படுகின்றது.

- தமிழரங்கம்.

போராளியின் ரிஷிமூலம்

பாடசாலையில் பயிலும்போதே நான் அரசியலில் ஈடுபாடு உடையவனாக இருந்தேன். அதற்கு எனது குடும்பத்தின் அரசியல், தொழிற்சங்க ஈடுபாடு முக்கிய காரணங்களாக இருந்தன என்று நினைக்கிறேன். எனது அப்பா அரசாங்கத்தில் முக்கிய பதவி வகித்த போதிலும் தமிழரசுக் கட்சி வேலைகளிலும் ஈடுபாடு காட்டினார். அதேவேளை எனது கிராமத்திலுள்ள சுருட்டுத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார். அதனால் அவருடைய மகன் என்ற ரீதியில் சிறுவயதிலிருந்தே நான் அரசியல் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதை எனது குடும்பத்தினர் பெரிய குற்றமாகக் கருதவில்லை.

நான் சிறு வயதினனாக இருந்தபோது என் அப்பா இறந்து விட்டார். அதன் பின் எனது சகோதரி எங்கள் தொகுதி எம்.பியின் கீழ் வழக்கறிஞராக வேலை செய்தார். அதனால் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குச் சார்பாக எமது வீடு எமது தொகுதியின் காரியாலயம் போல் செயற்பட்டது. அந்த வேளையில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குச் சார்பாக வேலை செய்த இளைஞர்களின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. பாடசாலை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து அந்த இளைஞர்களுடன் உதயசூரியன் போஸ்டர்கள் ஒட்டுவதிலிருந்து கூட்டங்களுக்கு மரம் நட்டு லயிற் போடுவது வரை எனது வேலைகள் ஆரம்பமாயின.

அந்த வேலைகளில் ஈடுபடும்போது தான் எனக்குப் பரமேஸ்வரன் என்ற இளைஞருடன் உறவுகள் ஆரம்பமாயின. நான் வயதில் சிறுவனாக இருந்தபோதும் பொது வேலைகளில் பங்கேற்பதைத் அவர் தடுக்கவில்லை. ஆனால், அவர் செய்யும் இரகசிய வேலைகளில் என்னைத் தவிர்த்தார். அதற்கு அவர் கூறிய காரணம், எனக்குச் சிறுவயது என்பதும், மற்றும் பள்ளிக் கல்வியை முடித்த பின்பே நான் அவர்களுடன் வேலை செய்ய முடியும் என்பதுமாகும்.

1977 தேர்தல் முடிந்த பின் நடந்த இனப்படுகொலையின் விளைவாக மீண்டும் உணர்வு ஊட்டப்பட்டவர்களாக அகதிகளாகிக் கொண்டிருக்கும் எமது மக்களுக்காக உடுப்பு, உணவு, பணம் போன்றவற்றை சேகரிக்கத் தொடங்கினோம். அப்போதும் எமது வீடு ஒரு நடைமுறைக் காரியாலயமாக இரவு பகலாகச் செயற்பட்டது. அந்தவேளையில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்தது. அப்படி இருந்தும் நாங்கள் பொது வீதிகளைத் தவிர்த்து ஒழுங்கைகள் வேலிகள் மூலமாக அகதிகளுக்கு உணவு, உடை சேகரித்தோம். எமது தொகுதியில் உள்ள கோப்பாய் ஆசிரிய பயிற்சி பாடசாலை ஓர் அகதிமுகாமாக மாறியவுடன் எமது வேலைகள் மேலும் மும்மரமாக செயற்பட்டன.

அக்காலத்தில் எமது பகுதிகளில் பொலிஸ் நிலையம் முழுநேரமாக இயங்கியது. சிறிலங்கா அரச பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரமேஸ்வரன் போன்றோரின் நடவடிக்கைகள் கண்காணித்தார்கள். அதனால் பரமேஸ்வரன் தனது வீட்டில் படுப்பதில்லை. அதே போன்ற வேலைமுறை அவரைப் பின்பற்றி வருகின்ற எனக்கும் நடைமுறையானது. நானும் நிலைமை சரியாகும் வரையில் வீட்டில் படுப்பதில்லை.

மானிப்பாய் வங்கிக் கொள்ளையும் பொலிஸ் தேடுதலும்

1978 ஆம் ஆண்டில் மானிப்பாய் வங்கிக் கொள்ளை நடந்தது. அது சம்பந்தமாக நான் தெரிந்து கொண்ட விடயங்கள் மற்றும் கேள்விபட்ட விடயங்களை மற்றவர்களுடன் அதீத கற்பனைகளுடன் கலந்து பகிர்ந்து கொண்டேன். எங்கடை ஆக்கள், நம்முடைய கோஸ்டி தான் செய்தவர்கள் என்றும், மணியான அட்டாக் என்றும் அதேபோல், ஏதோ எனக்குச் சொல்லிப் போட்டுத் தான் ‘பொடியள், ‘அட்டாக்’ செய்தவர்கள் போலவும் நானும் அதில் பங்கேற்றவன் போலவும் கதைப்பேன்.

அது நடந்து இரண்டு வாரங்களின் பின் ஒருநாள் பாடசாலையில் நான் படித்துக் கொண்டிருந்தபோது காலை 9.30 மணியளவில் பாடசாலை அலுவலகத்தலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. என்னைக் கூட்டிக்கொண்டு போவதற்கு எனது சகோதரி வந்திருப்பதாகவும், எனது தாத்தாவுக்கு உடல்நிலை மோசமாகி விட்டது எனவும் எனக்குக் கூறப்பட்டது. உடனடியாக எனது சகோதரியுடன் புறப்பட்டுப் போனபோது தான் அவர் எனக்கு உண்மையான காரணத்தைச் சொன்னார்.

என்னைக் கைது செய்வதற்கு என்னைத் தேடி பொலிஸ் வீட்டிற்கு வந்ததாகச் சொன்னார். வந்த பொலிஸ்காரர் எனது ஊரவர். நான் வீட்டில் இல்லாததால் அம்மாவிடம் வந்ததற்கான காரணத்தைக் கூறியுள்ளார். அவருக்கு நான் பாடசாலையில் இருப்பேன் என்று தெரிந்தும் அங்கு வராமல், வீட்டில் ஒருவரும் இல்லை என்று தான் மேல் அதிகாரிகளுக்குச் சொல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

அதே நேரம் எனது சகோதரி எமது தொகுதி எம்.பியின் கீழ் வேலை செய்ததால் அந்தச் செய்தி அவருக்குத் தெரிய வந்ததால் என்னைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டார். அந்தச் செய்தி பரமேஸ்வரன் மற்றும் அவரின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஏன் என்னைத் தேடுகின்றார்கள் என்பது தெரியாததால் எல்லோருமே பதட்டப்பட்டார்கள். எம்.பி அப்போது கொழும்பில் நின்றார்.

அதுவரை என்னைப் பாதுகாப்பாக மறைத்து வைப்பது என்றும், ஒரு வழக்கறிஞர் மூலம் என்னை உயர் அதிகாரிகளிடம் சரண் அடையச் செய்வது என்றும் எனது சகோதரி முடிவு எடுத்திருந்தார். அந்த முடிவின்படி நான் இரு நாட்கள் தலைமறைவாக வைக்கப்பட்டேன். அந்த வேளையில் பரமேஸ்வரனும் அவருடன் சேர்ந்தவர்களும் எனக்குப் பல போதனைகளை அளித்தார்கள். பொலிஸ் எவ்வாறு சித்திரவதை செயவார்கள் என்றும், சித்திரவதை செய்தாலும் குறைந்தபட்சம் எப்படி பரமேஸ்வரன் போன்றவர்கள் சம்பந்தமான இரகசியங்களைப் பாதுகாப்பது என்றும் சொன்னார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்க்கை எனது கைகளில்தான் தங்கி இருப்பது போன்றும் அதில் நான் எவ்வாறு விடயங்களைக் கையாள்வேன் என்பதைப் பொறுத்துத் தான் அவர்கள் என்னைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வதா இல்லையா என்றை முடிவை எடுப்பார்கள் எனவும் கூறினார்கள்.

யாழ் மாவட்ட ஏ.எஸ்.பி யைச் சந்தித்து என்னை அங்குக் கூட்டிச் செல்வதற்கான ஏற்பாடுகள் “பிரான்ஸிஸ் சேவியர்” என்னும் வழக்கறிஞர் மூலம் செய்யப்பட்டது. அந்த வழக்கறிஞர் வீட்டிலும் ஒருநாள் தங்க வைக்கப்பட்டேன். அதன் பின் ஏ.எஸ்.பி யை சந்திப்பதற்காக நானும் வழக்கறிஞரும் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகம் சென்றோம். முதலில் வழக்கறிஞர் முன்னிலும் பின்னர் தனியாகவும் 30 நிமிடமளவில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முக்கியமாக மானிப்பாய் வங்கிக் கொள்ளை சம்பந்தமானது. அது பற்றி எனக்கு தெரிந்தவற்றைக் கேட்டார்கள். நானும் தெரிந்தவற்றைச் சொன்னேன். அதற்கு அதிகாரி எனக்கு எவ்வாறு அந்த விடயங்கள் தெரியும் என்று கேட்டார். நான் ஈழநாடு, வீரகேசரி பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன் என்று கூறியபோது அவர் சிரித்தார். அதன் பின் இனிமேல் வீதிகளில் நின்று ஆட்களுடன் கதைக்க வேண்டாம் என்றும் என்னைக் கல்வியில் கவனம் செலுத்துமாறும் கூறினார். பிறகு எனது வழக்கறிஞரைக் கூப்பிட்டு தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலில் ஏதோ தவறு நடந்துள்ளது என்றும் என்னைக் கூட்டிக் கொண்டு போகுமாறும் சொன்னார்.

(தொடரும்)