Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்களைக் கண்டு அஞ்சி நடுங்கும் கோமாளிகளின் கேலிக் கூத்து

சண்டே லீடர்பத்திரிகையின் உதவி ஆசிரியரும், இலங்கை ஜனரஞ்சக ஊடகவியாளர்களின் தொழிற்சங்கத்தின் தலைவருமான மந்தனா ஸ்மாயிலின் வீட்டுக்குள் புகுந்தவர்கள் நாங்களல்ல கள்ளர்கள் தான் என்கின்றது அரசு. அவர்கள் களவொடுக்கத்தான் வந்தனர் என்கின்றது.

இதற்கு இரண்டு நாளுக்கு முன் பூனையொன்றைக் கொன்று வீட்டுக் கதவோரத்தில் போட்டிருந்தவர்கள் யார்? இதற்கு முதல் நாள் இரவு அவரின் கணவரின் கார் ரயரை கத்தியால் வெட்டியவர்கள் யார்? அரசு கூறுவது போல் இதுவும் திருடர்கள் வேலையா!? இதற்கும் அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.

சட்டவிரோதச் செயல்களையும், குற்றத்தையும் செய்தவர்களாக அரசு இருப்பதால், அதைத் தன் அதிகார சட்ட முறைகளுக்கு ஊடாக வழமை போல் மூடிமறைக்கவே முனைகின்றனர். கள்ளர் என்கின்றது, குற்றக் கும்பல் என்கின்றது. அரச அதிகாரத்தைக் கொண்டு முறைகேடாகவும் சட்டவிரோதமாகவும் பணத்தை சம்பதிப்பது தொடங்கி மக்கள் சொத்ததை கைப்பற்றுவது வரை தொடர்ந்து அங்குமிங்குமாக் நடந்தேறுகின்றது. இதை மூடிமறைக்கும் குற்றக் கும்பலாக அரசு செயற்படுகின்றது. இதன் தொடர்ச்சியாகத் தான் மந்தனா ஸ்மாயிலின் வீட்டிலும் புகுந்தனர்.

இந்த சம்பவத்ததை மூடிமறைக்கும் வண்ணம் "இவர்கள் நிச்சயமாக கொள்ளையடிக்கும் நோக்குடன்தான் வந்திருக்கிறார்கள். அவரது ஊடகத் தொழிலுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது" என்கின்றார், பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகலுமான புத்திக சிறிவர்தன. என்ன சமூக அக்கறை!? இதை கூறியவர்கள் அதை உறுதி செய்ய, அவர்கள் களவெடுத்தாக கூறி ஒரு தொகை நகையை மந்தனா ஸ்மாயிலின் காட்டியுள்ளார். ஆனால் அவரோ அந்த நகைகள் தங்களுடைய அல்ல என அறிவித்துள்ளார்.

மூடிச்சு மாற்றிகளாக மாறிய பொலிஸ்சாரே கிரிமினலாக இங்கு வெளிவருகின்றனர். குறித்த நகை யார் வீட்டில் யார் திருடியது என்று கேள்வி மீண்டும் எழுகின்றது. இதை மந்தனா ஸ்மாயிலின் உடையது என்ற கூறிய பொலிசாருக்கும், இதில் சம்மந்தம் இருப்பது அம்பலமாகிவிடுகின்றது.

இந்தக் கேலிக் கூத்தை அரசே நடத்திய் அதேநேரம், வீட்டில் ஆயுததாரிகள் நடத்திய சம்பவத்துடன் தமக்கு தொடர்பு இல்லை என்றும், அவர்கள் குற்றக் கும்பலைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்று ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவிக்கின்றார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும், பராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சா இந்த சம்பவத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று வேறு அறிவிக்கின்றார்.

இந்த அரசு எதைத்தான் ஓத்துக்கொண்டு இருக்கின்றது. மூடிமறைக்க வெளிக்கிட்டு மூக்குடைந்த கதையாக, ஒன்றையொன்று மறைக்க குற்றங்களையே தொடர்ந்து எவி வருகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் இராணுவத்துடன் தொடர்புபட்டவர்களாக இருக்க, அவர்களை முன்னால் இராணுவ வீரர்கள் என்றும், அதில் இருந்து ஒடிப்போனவர்கள் என்றும், குற்றக் கும்பல் என்றும், அவர்கள் தற்போது இராணுவத்தில் இல்லை என்றும் அரசு கூற முற்பட்டு இருக்கின்றது.

அதே நேரம் அவர்கள் இராணுவத்தை சேர்ந்த இராணுவ இலக்கம் 502712 என்ற உதசிறி அசங்க என்றவர் இராணுவ கோப்ரலாக, 5வது சிங்க படைப்பிரின் அதியுயர் பாதுகாப்பு வலய பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர். இராணுவ இலக்கம் 418908 என்ற கதிரப்புலிகே ரெஜின் சந்திமல் குமார சிங்க படைப்பிரிவின் விசேட படைப்பிரிவு அதியுயர் பாதுகாப்பு கொழும்பு வலத்ததைச் சேர்தவர். கதிரப்புலிகே ரோஹித்த லக்ஷ்மன், வித்தான ஆராச்சிகே சந்தகுமார ஆகியோரும் சிங்கப்படைப் பிரிவின் வீரர்கள் என்று தவகல் வேறு இன்று வெளியாகி இருக்கின்றது.

அரச கெடுபிடிகள் மத்தியில் தோண்டத் தேண்ட புதையலாக வெளிவருவது, குற்றங்களும், மூடிமறைப்புகளும் தான். பரிதாபத்துக்குரிய அரசின் நிலை இது.

அன்று குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தன்னிடம் கூறயதாக மந்தனா ஸ்மாயிலினடம் பிபிசிக்கு வழங்கிய பேட்டியில் "இது எங்களுக்கு கிடைத்துள்ள ஒரு கான்ட்ராக்ட்- ஒப்பந்தம் என்று அவர்கள் கூறினார்கள். உங்களோடு பிரச்சனையில் உள்ள ஒருவர் தான் இந்த வேலையை எங்களிடம் தந்துள்ளார் என்றும் கூறினார்கள்" அரசுடன் சம்மந்தப்பட்டவாகளின் சட்டவிரோத செயல் அரங்கேற்றப்பட்டது அம்பலமாகின்றது. அரசுடன் தொடர்புள்ளதானதால் அதை முறைக்க, அவர்களைத் திருடர்கள் என்று அறிவிக்கின்றது அரசு. அரச விசாரனையில் கேலிக் கூத்தையே எடுத்துக் காட்டுகின்றது.

அரசு இப்படி கூறு அதே நேரம், அங்கிருந்த அலுமாரிகளை உடைத்து ஆவண கோப்புகளையும் சோதனையிட்டுள்ளதாக, சுதந்திர ஊடக இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறுகின்றது. எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா 'கிறிஸ்' நிறுவணம் கொழும்பில் விற்ற காணி ஊழல் தொடர்பான கொடுக்கல் வாங்கல் ஆவணத்தையே அங்கு அரசு தேடியதாக கூறியுள்ளார்.

இலங்கையின் அரசு கட்டமைப்பு நியாயத்தை அநியாமாகவும், தர்மத்தை அதர்மமாகவும் இன்று மாற்றிவருகின்றது. இதற்கு எதிரான சமுதாயத்த உணர்வு இன்று அதிகமாகி வருகின்றது. இந்த சமூக அமைப்பு இனி இசைவற்றதாகி வருகின்றது. இனியும் இந்த அரசும், அரச அமைப்பு முறையை பாதுகாக்க முடியாத வண்ணம் தானாக உளுத்து வருகின்றது. இதை தூக்கி எறிய மக்கள் தயாராகவில்லை. இதை உருவாக்குவது தான், இன்று எம்முன்னுள்ள அரசியல் பணியாக உள்ளது.