Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 30

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 30

லெனினுக்கு பின் ஜனநாயக மத்தியத்துவத்தை ஸ்டாலின் மறுத்தாரா? வர்க்கப் போராட்டத்தை மறுத்தாரா?

1924 இல் லெனின் சக தலைவர்கள் பற்றி எழுதியதை, நாம் பார்ப்பது அவசியமாகும். ஸ்டாலினுக்கும், டிராட்ஸ்கிக்கும் இடையில் இருந்து வரும் முரண்பாட்டை பற்றி லெனின் சரியாக மதிப்பிடுகின்றார். இங்கு முரண்பாட்டில் இருவரின் பங்கையும் காண்பதுடன், இரண்டு தலைவர்களின் சிறப்பு மற்றும் குறைகளையும் காண்கின்றார். கட்சியின் ஒற்றுமையை முதன்மையாக கருதிய லெனின், ஸ்டாலின் பற்றிய குறிப்பில், அவர் கையில் அதிகாரம் குவிந்திருப்பதால் அதை அவர் போதுமான முன் எச்சரிக்கையுடன் கையாள்வதில் தவறு இழைப்பார் என்ற சந்தேகத்தை முன்வைக்கின்றார்.

இதனால் மட்டும் பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை பிரேகரிக்க கோருகின்றார். இதை அவர் குறிப்பிடும்போது, தோழர்களை அணுகும் முறைகளில் இவரை விடச் சிறந்தவர் மட்டும், அதாவது மற்றையவற்றில் அல்ல என்பதை தெளிவாக லெனின் குறிப்பிட்டார். ஆனால் இன்று இதை மறுத்து வர்க்க அரசியல் மார்க்கத்தில் பொதுமைப்படுத்தி, வர்க்கப் போராட்டத்தையே உயிருடன் அவித்து தின்கின்றனர். இதைத் தான் அன்று குருசேவ் என்ற ஜனநாயகவாதியும் செய்தான். இந்த குருசேவ் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக இருந்த முதல் பெர்லின் மதிலை அமெரிக்க ஜனாதிபதிக்கும் ஜனநாயகவாதி குருசேவுக்கும் இடையில் செய்து கொண்ட ஒரு இரகசிய ஒப்பந்தத்துக்கு இணங்க, மேற்கு ஜெர்மனி கட்டிடப் பொருளை இலவசமாக வழங்க, கம்யூனிசத்தின் பெயரில் கைக்கூலி குருசேவால் கட்டப்பட்ட மதிலைக் கொண்டு கம்யூனிசத்தை இரும்புத் திரை ஜனநாயகமாக காட்டினர், காட்டுகின்றனர்.

லெனின் டிராட்ஸ்கி பற்றி, யாவரிலும் வல்லமை வாய்ந்தவர் என்றதுடன், நிர்வாகத் தன்மை வாய்ந்த அணுகுமுறை மற்றும் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையை குறைகளாக லெனின் சுட்டிக் காட்டினார். டிராட்ஸ்கி பற்றிய லெனின் கருத்து நிர்வாகத் தன்மையில் கட்சியை வழி நடத்தும் போது, நிர்வாக வடிவம் அதிகார வர்க்க அணுகு முறையும், தன்னம்பிக்கை வரட்டுத்தனம் சார்ந்து காது கொடுத்து கேட்பதற்கு தயாரின்மையை சுட்டிக் காட்டுகின்றார்

இங்கு ஸ்டாலின் ஒரு கட்சி செயலாளராக இருக்கும் போது, மற்றைய தோழர்களுடன் அணுகிக் கொள்ளும் போக்கில் ஏற்படும் தவறுகள், கட்சியின் உயிரோட்டமுள்ள இயங்கியலை சிதைக்கும் என்பதை லெனின் தெளிவுபடுத்துகின்றார். இங்கு இந்த விமர்சனங்களை லெனின் கட்சி வரலாற்றில் இருந்தே புரிந்து கொள்கின்றாரே ஒழிய, குறிப்பான நிலைமைகள் மற்றும் சம்பவங்களில் அல்ல. குறிப்பான நிலைமை மற்றும் சம்பவத்தில் புரிந்ததாக காட்டுவது, லெனினின் மார்க்சியத்தையும், அவரின் சர்வதேசிய வீச்சையும் சிறுமைப்படுத்தி தமக்கு சாதகமாக்க கொச்சைப்படுத்துவதாகும். இது போலி இடதுசாரி வேசத்தின் பின் வர்க்க போராட்டத்தின் உயிராற்றலை கொன்றுவிடுவதாகும். சர்வதேசியம் மற்றும் சோவியத் புரட்சிக்கான தத்துவார்த்த தலைமையை தொடர்ச்சியாக லெனின் வழங்கி வந்தார். கட்சியின் மற்றைய தோழர்கள் இதில் அதிகம் தேர்ச்சி பெற்ற முன்னணி தலைவர்களாக வளர்ச்சி பெறவில்லை. லெனின் கட்சிக்குள்ளான முரண்பாடுகள் மேல், வெற்றிகரமாக பாட்டாளி வர்க்க தலைமையை கோட்பாடு சார்ந்து நிறுவியதுடன், மார்க்சியத்தை வளர்த்து விரிவாக்கினர். தனது மரணத்தின் பின்பு என்ன வகையில் இவை கையாளப்படும் என்பதே அவரின் அச்சம். ஸ்டாலின் நடைமுறை சார்ந்து (இங்கு கோட்பாட்டு பங்களிப்பை மார்க்சியத்துக்கு தொடர்சியாக செய்துள்ளர்) அதிகமாக கட்சி வரலாற்றை கொண்டிருந்தமை காண்கின்றார். டிராட்ஸ்கி போல்சிவிக் புரட்சிக்கு முன் பின் என்ற இரு காலத்திலும், இடை நடுப் பாதை, எதிர்நிலை, சதி போன்றவற்றை தனது முரண்பாட்டின் மீது அடிப்படையாக கொண்டே தனது அரசியலை நடத்தியதையம், பாட்டாளி வர்க்க கோட்பாடு அடிப்படை சாராது இதைக் கையாண்டமை இனம் காண்கின்றார். இதனால் கட்சியின் முரண்பாட்டையும், எதிர்நோக்கும் அபாயத்தை புரிந்து கொண்டார். நடைமுறையில் எதிரியை உடனடியாக அடையாளம் காண்பதும், இடைநிலை போக்கு சார்ந்து நழுவலை வெளிப்படுத்தும் சந்தர்ப்பவாதத்தின் சூழ்ச்சியை வெறுப்பது, நடைமுறை சார்ந்து போராடுபவர்கள் உடனடிக் குணாம்சமாக இருக்கின்றது. இதில் தனிப்பட்ட நபர்களின் குணம்சம் கூட இதை மேலும் உக்கிரமாக்கும் என்பதை காண்கின்றார். லெனின் மரணத்தின் பின்பு ஸ்டாலின் சோசலிசத்தை கட்ட முடியுமா?, இல்லையா? என்ற அடிப்படையான விவாதம் மீது (இது டிராட்ஸ்கி தனது தலைமையை நிறுவ உருவாக்கிய பிரதான முரண்பாடும், கோட்பாடும் ஆகும்), லெனின் தத்துவார்த்த பங்களிப்பை போன்று ஸ்டாலின் தனது பங்களிப்பை சோசலிசத்தை கட்ட முடியும் என்று தத்துவார்த்தத் துறை சார்ந்து அதை நிறுவினார். சோசலிசத்தை கட்ட முடியாது என்ற டிராட்ஸ்கியும், கட்ட முடியும் ஆனால் வர்க்கப் போராட்டமின்றி என்ற புக்காரினது நிலையாக இருந்தது. இந்த விவாதத் தளத்தில் தத்துவார்த்த துறை சார்ந்து நிறுவ முடியாது இவர்கள் சிறுபான்மையான போது, அவர்கள் கோட்பாட்டு விவாதமல்லாத வழிமுறைகளை கையாளத் தொடங்கினர்.

ஸ்டாலின் பற்றிய லெனினின் கருத்தை எடுத்துக் கொண்ட கட்சி, ஸ்டாலினை தொடர்ந்து கட்சிச் செயலாளராக தேர்ந்து எடுக்கின்றது. ஸ்டாலின் இல்லாத புதிய தலைவரை கட்சி கண்டறியவில்லை. கட்சி தனது போல்ஸ்விக் வரலாற்று போராட்டத்தினூடாக, தனது சொந்த தலைவரை தெரிந்து எடுப்பதில் உறுதியாகவே இருந்தது.

ஸ்டாலின் லெனினுக்கு பின்பாக பாட்டாளி வர்க்க தலைமையை முன்னெடுத்த போது, அவர் அதை பாதுகாப்பதில் என்றும் பின்வாங்கியதில்லை. பாட்டாளி வர்க்க வர்க்கப் போராட்டத்தை நடத்துவதில் அவரின் மரணம் வரை, அனைத்து சர்வதேச உறவுகளில் இருந்து உள்நாட்டு உறவுகள் ஈறாக உறுதியாக விட்டுக் கொடுக்காத பாட்டாளி வர்க்க தலைவராக இருந்தார். கோதா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனத்தில் மார்க்ஸ் கூறியது போல்

இங்கு நாம் கையாள வேண்டியது அதன் சொந்த அடித்தளத்தின் மீது வளர்ச்சியுற்ற என்கிற முறையிலான கம்யூனிச சமுதாயத்தைப் பற்றி அல்ல, மாறாக, முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து இப்பொழுது தான் உதிக்கும் சமுதாயத்தைப்பற்றி, அது பொருளாதார ரீதியில், அறிவுத்துறை ரீதியில் இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் இன்னமும் அது உதிக்கும் கருப்பையான பழைய சமுதாயத்தின் பிறப்புச் சின்னங்களால் முத்திரைக் குத்தப்பட்டிருக்கிறது”

என்று மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதற்காக, ஏன் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று வரையறுத்தாரோ, அதை கையாள்வதில், விளக்குவதில், முன்னெடுப்பதில் உறுதியான வர்க்க நிலையை ஸ்டாலின் கையாண்டார். இதை டிராட்ஸ்கி, புக்காரின் போன்றவர்கள் எதிர்த்தனர். ஏன் இன்று ஸ்டாலினை தூற்றும் அனைவரும் இதை தான் எதிர்க்கின்றனர்.

1.12.1934ம் ஆண்டு ஸ்டாலின் எதிர்ப்பு முன்னணி தலைவர்களின் இரகசிய சதி மூலம், ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரும், முன்னணித் தலைவருமான கிரோவ் படுகொலை செய்யப்ட்டதைத் தொடர்ந்து, ஸ்டாலின் சதி மற்றும் நாச வேலையை கட்டுப்படுத்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது. இந்தப் படுகொலைக்கு முன்பாக நடந்த 17 வது கங்கிரசில் புகாரின், ரைகோவ், டோம்ஸ்கி போன்றோர் சுயவிமர்சனம் செய்தனர். டிராட்ஸ்கிய வாதிகளான ஜினோவிவ், காமனோவ் ஆகியோர் கட்சியை புகழ்ந்ததுடன், தமது தவறுகளை கடுமையாக சுயவிமர்சனம் செய்தனர். இவர்கள் இனியும் கருத்து தளத்தில் போராடி ஸ்டாலினை முறியடிக்க முடியாது என்பதால் சுயவிமர்சனத்தை செய்தபடி, இரகசியமான படுகொலைகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்தனர். இதை டிராட்ஸ்கிய நான்காம் அகிலம் சர்வதேச ரீதியாக முன்வைக்க, அதைப் பெருமைபட ’தொழிலாளர் பாதை’ தமது வீரதீரச் சதிச் செயலை முன்வைக்கின்றது. டிராட்ஸ்கி தனது சுய வரலாற்றில், தனது மகன் 1923 இல் இருந்தே சட்ட விரோதமாக, லெனின் உயிருடன் இருந்த போதே கட்சிக்கு எதிராக இயங்கியதாக பெருமையுடன் குறிப்பிடுகின்றார். இந்த சதிகளில் பங்குபற்றி இன்று உயிருடன் தப்பி வாழும் நபர்கள், இந்த சதியை பெருமைபட முன்வைக்கின்றனர். இந்த படுகொலை இரகசியக் குழுக்களில் இயங்கியோர் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர்.

இச் சதிகளில் ஈடுபட்ட முன்னணி தலைவர்கள் ஜனநாயக மத்தியத்துவத்தை கட்சியில் கடைப்பிடித்தார்களா? 1925 இல் 14வது காங்கிரஸ்சில் டிராட்ஸ்கி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்றும், புகாரின் அமைதியான முதலாளித்துவ வளர்ச்சியூடாக சோசலிசத்தை அடையாளம் என்றும், காமனோவ், ஜினோவிவ் பொருளாதாரத்தில் சோவியத் பிற்போக்காக இருப்தால் சோசலிசத்தை கட்ட முடியாது என்றும் முன்வைத்தனர். டிராட்ஸ்கி சோசலிசம் கட்ட முடியாது என்று கூறி அப்படி கட்டப்படின் “தோல்வியடையும் – அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலியன் சர்வாதிகாரமாக முடியும்” என்ற கூறி எதிர்த்து நின்றார். ஆனால் ஸ்டாலின், லெனின் தொடரக் கோரிய வர்க்கப் போராட்ட அரசியலை முன்வைத்தார். அரசும் புரட்சியும் என்ற நூலில் லெனின்

முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறுதலடைவது நிச்சயம் ஒரு பிரம்மாண்டமான மிதமிஞ்சிய மற்றும் பல்வேறு வகையான அரசியல் வடிவங்களை பெற்றுத் தராமலிருக்க முடியாது. ஆனால் சாராம்சத்தில் தவிர்க்க முடியாமல் ஒன்றாகவே இருக்கும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்”

என்றார். இந்த மாற்றம் தொடர்பாக லெனின் ’மீண்டும் தொழிற் சங்கங்கங்கள் மீது, தற்போதைய நிலைமையும் டிராட்ஸ்கி மற்றும் புகாரினது தவறுகளும்’ என்ற கட்டுரையில்

அரசியல் என்பது பொருளாதாரத்தின் மீது அரசியல் முன்னிலை பெறாமல் இருக்க முடியாது. வேறுவிதமாக வாதிடுவதன் பொருள் மார்க்சியத்தின் அரிச்சுவடியை மறப்பதாகும்…..எடுத்துக் கொண்ட விசயத்திற்கு (குடிமக்கள் மீது) ஒரு சரியான அரசியல் அணுகு முறையின்றி வர்க்க ஆட்சியை நிலைநாட்ட முடியாது, அதன் விளைவாக அதன் சொந்த உற்பத்தி பிரச்சினையே தீர்க்க முடியாது”

என்று தொடர வேண்டிய சோசலிச புரட்சியின் வர்க்கக் கடமை பற்றி தெளிவுபடுத்துகின்றார். இதை புகாரின், டிராட்ஸ்கி மறுத்து தனிநாட்டில் சோசலிசம் கட்ட முடியாது அல்லது மெதுவாக மாறும் என்ற போது, இதை ஸ்டாலின் கோட்பாட்டு ரீதியில் அம்பலம் செய்து முறியடித்தார். அங்கு இவைகளை விவாதிக்கும் உரிமை ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில், கட்சியில் சுதந்திரம் தெளிவாக இருந்தது. கட்சியில் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையிலான கருத்துச் சுதந்திரம் இருந்த போதும், 1926 இல் டிராட்ஸ்கி மற்றும் ஜினோவிவ், கட்சிக்குள் பகிரங்கமாகவே எதிர்க் குழுவைக் கட்டினர். கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாக கொண்ட மார்க்சியத்தை மறுக்கும் வடிவமாக இது உருவானது. இது பொது விவாதம், பெரும்பன்மைக்கு சிறுபான்மை கட்டுப்படும் கட்சி நடைமுறை, கட்சியில் பகிரங்கமாக கருத்தை வைக்கும் சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான நேர்மை, என அனைத்தையும் மறுத்தே, எப்போதும் குழுவடிவம் தோற்றம் பெறுகின்றது. இதன் தொடர்ச்சியாக 1927 இல் கட்சியில் விவாதம் ஒன்றை உருவாக்கி, தொழில் மயமாக்கல் தீவிரமாக்கவில்லை என்றும், விவசாயிகளை தொழிலாளருடன் இனைக்கும் கொள்கையை எதிர்த்தும், தொழிலாளர் விவசாயி முரண்பாடு இயல்பானது என்றும், அதை தீவிரமாக்கும் படி கோரி நடந்த கட்சி விவாதத்தில் அரசியல் ரீதியாக 1920 இல் நடந்தது போல் தோற்கடிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தமது சிறுபான்மை கருத்தை வைத்து கட்சிக்குள் போராடுவதற்கு பதில், மாஸ்கோ மற்றும் லெனின் கிராட்டில் பகிரங்கமான அரசுக்கு எதிரான ஆர்ப்பட்டத்தை செய்தனர். கட்சியின் எதிரிகளை துணைக்கு அழைத்தனர். இதன் தொடர்ச்சியில் தான் டிராட்ஸ்கி மற்றும் ஜினோவியும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இங்கு யார் கட்சி ஜனநாயகத்தை கேடாக பயன்படுத்தினர். யார் கட்சியின் உயிர்ரோட்டமான ஜனநாயகத்தை இழிவாக்கினர்? ஜனநாயக மத்தியத்துவத்தை மறுத்து, அதை அர்த்தமற்றதாக்கிய படி கட்சிக்குள் கட்சி கட்டி, கட்சிக்கு எதிராகவே போரட்டத்தை பகிரங்கமாக வெளியில் நடத்துகின்றவர்கள் பற்றி லெனின் என்ன கூறுகின்றார்.

’இடதுசாரி கம்யூனிசம்…’ என்ற நூலில் லெனின்

ருசியாவில் நாங்கள் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு அல்லது கம்யூனிசத்தின் முதல் கட்டத்திற்கு மாறுவதில் முதல் படிகளின் வழியாகப் போகிறோம். (முதலாளித்துவ வர்க்கம் தூக்கியெறியப்பட்டதிலிருந்து மூன்றாவது ஆண்டில்) வர்க்கங்கள் நீடிக்கின்றன: பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் வெல்லப்பட்ட பிறகு பல ஆண்டுகளாக எங்கெங்கும் அவை நீடிக்கும். ஒரு வேளை இங்கிலாந்தில் அங்குதான் விவசாயிகள் இல்லை. (ஆனால் அங்கும் சிறு உடமையாளர்கள் இருக்கிறார்கள்) இந்த காலகட்டம் குறுகியதாக இருக்கலாம். வர்க்கங்களை ஒழிப்பதன் பொருள் நிலப்பிரபுகள், முதலாளிகளை விரட்டியடிப்பது மட்டுமல்ல – அதை ஒப்பீட்டு வகையில் எளிதில் சாதித்து விட்டோம். அதன் பொருள் சிறு பண்ட உற்பத்தியாளர்களை ஒழித்து கட்டுவதும் கூட ஆகும். அவர்களை விரட்டியடிக்க முடியாது அல்லது நசுக்க முடியாது, அவர்களோடும் இணக்கமாக நாம் வாழவேண்டும். மிகவும் நீண்ட, நெடிய, மெதுவான, எச்சரிக்கையான ஸ்தாபன வேலையால் மட்டுமே மறுவார்ப்பும், மறுபோதனையும் செய்யமுடியும் (செய்ய வேண்டும்) அவர்கள் குட்டி முதலாளித்துவ தன்னியல்போடு ஒவ்வொரு பக்கமும் முற்றுகையிடுகிறார்கள், அதனால் பட்டாளி வர்க்கத்தக்குள் ஊடுருவி மாசுபடுத்துகிறார்கள். அவர்களின் குட்டி முதலாளித்துவ முதுகெலும்பற்ற நிலை, ஒற்றுமையின்மை, தனிமனிதப் போக்கு, எக்களிப்பு அல்லது சோர்வு என்ற மாறும் மனோநிலை ஆகியவற்றுக்கு பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் பின்னிழுத்துத்தள்ள இடையராது காரணமாக இருக்கின்றார்கள். இதற்கு எதிர்விணையாற்றும் பொருட்டும், பாட்டாளி வர்க்கத்தின் ஸ்தாபனப்படுத்தும் பாத்திரத்தை (மேலும் அது பிரதான பாத்திரம்) சரியாகவும், வெற்றிகரமாகவும், வெல்லத்தக்கவாறும் செலுத்தும் பொருட்டும், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சிக்குள் கறாரான மையப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடு தேவையாயிருக்கிறது. பழைய சமுதாயத்தின் சக்திகள் மற்றும் மரபுகளுக்கெதிரான இரத்தம் சிந்தியும், இரத்தம் சிந்தாமலும், வன்முறையாகவும் அமைதியாகவும், இராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், கல்வி துறையிலும், நிர்வாகத் துறையிலும் ஒரு இடையராத போராட்டமே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். பத்து லட்சம் பல பத்து லட்சங்களின் பழக்க வழக்கங்களின் சக்தி ஒரு மிகப்பெரும் பயங்கரமான சக்தி. போராட்டத்தில் எஃகுறுதியாக்கப்பட்ட கட்சியின்றி, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தில் நேர்மையான அனைத்திடமும் நம்பிக்கையைப் பூரணமாகப் பெற்ற ஒரு கட்சியின்றி, பரந்துபட்ட மக்களின் மனோநிலையை கூர்ந்து நோக்கி செல்வாக்கு செலுத்தும் வல்லமையுடைய ஒரு கட்சியின்றி, இம்மாதிரியான ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது சாத்தியமில்லை. லட்சோப இலட்சம் சிறு உற்பத்தியாளர்களை வெல்வதை விட மத்தியத்துவப்படுத்தப்பட்ட பெரு முதலாளிகளை வென்றடக்குவது ஓராயிரம் மடங்கு எளிதானது. இருப்பினும் அவர்கள் தங்களது சாதாரமான, தினசரி புலனறிவுக்கு உட்படாத, நழுவக்கூடிய மனோதைரியத்தை இழக்கச் செய்யும் நடவடிக்கையின் மூலம் முதலாளிகளுக்குத் தேவையான முதலாளித்துவ வர்க்கத்தை திரும்ப நிலை நாட்டுவதற்கு விழையும் அதே விளைவைச் சாதிக்கிறார்கள். பாட்டாளி வர்க்கக் கட்சியின் எஃகுறுதி வாய்ந்த கட்டுப்பாட்டை எவரொருவர் சிறுமைப்படுத்துகிறாரோ (குறிப்பாக அதன் சர்வாதிகார காலங்களின் போது) அவர் உண்மையில் பாட்டாளி வர்க்கத்திற்கெதிராக முதலாளித்துவ வர்க்கத்திற்கு உதவுகின்றார்”

என்று மார்க்சியத்தை தெளிவுபடவே வரையறுக்கின்றார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஆணையில் வைத்து, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் கட்சிக்கு, எதிராக ஜனநாயக மத்தியத்துவத்துக்கு புறம்பாக நடத்தப்படும் எல்லாவிதமான செயற்படும், முதலாளித்துவ மீட்சிக்கான முயற்சியேயாகும். ஒருநாட்டில் சோசலிசத்தை கட்டமுடியுமா என்ற அடிப்படையான விடையம் தொடர்பாகவும், மாற்றுக் கருத்துக்கு 1920, 1930 களில் கருத்துச் சுதந்திரத்தை கட்சி வழங்கிவிடவில்லை என்று யாரும் கூறிவிடமுடியாது. அத்துடன் அங்கு ஜனநாயக மத்தியத்துவம் கட்சியின் பிரதான ஜனநாயக வடிவமாகவும் இருந்தது. இதை யாரும் மறுக்க முடியாது. டிராட்ஸ்கி முதல் பலரும் தமது கருத்தை கட்சியில் வைத்து விவாதிக்கவில்லையா? அங்கு தோற்கடிக்கப்பட வில்லையா?

1927 இல் கட்சிக்கு எதிராக டிராட்ஸ்கி, ஜினோவிய தலைமையில் லெனின்கிராட், மாஸ்கோவில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் எதிரிகள் உஷார் அடைந்தனர். குலாக்குகள் அரசுக்கு தானியத்தை விற்க மறுத்தனர். அதே நேரம் புகாரின் – ரைகோவ் குலாக்குகள் மீது கடுமையான தாக்குதல் அவசியமில்லை என்றனர். புகாரின் விவசாயிகளைப் பார்த்து ”நீங்கள் (விவசாயிகள்) உங்களை வளப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார். மேலும் அவர் சோசலிசத்தை கட்டுவதைப் பற்றி “நாங்கள் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து முன்னேறுவோம். பெருந்தொகையான குடியான்கள் என்ற வண்டியை நாம் எம்மோடு இழுத்துச் செல்ல வேண்டும்” என்றார். கைத்தொழில் மயமாக்கல் மக்களுக்கு பெரும் சுமை என்ற கூறி, அதை கைவிடக் கோரினர். ஆனால் ஸ்டாலின் இதை மறுத்து வர்க்கப் போராட்டத்தை தொடுக்க கட்சிக்கு வழிகாட்டினார். மற்றவர்கள் தமக்கிடையில் உள்ள முரண்பாட்டை விட, ஸ்டாலினை எதிர்ப்பது முக்கியமானது என்ற முடிவுக்கு வந்தனர். வர்க்கங்களை சமரசம் செய்து கொண்டு செல்ல தெரியாத சதிகாரனாகவும், அதில் கொள்கையற்றவனாகவும் ஸ்டாலினை வருணித்து, இரகசியமாக சதி செய்யவும் தயங்கவில்லை. “அவன் கொள்கைகள் அற்ற சதிகாரன்: பழிவாங்கவும் முதுகில் குத்தவும் மட்டுமே அவனுக்குத் தெரியும்” என்றான் புகாரின். கூட்டுப் பண்ணையாக்கலில் சலுகை வழங்கிய போராட்டத்தை கோரிய போது (அதாவது “நமது விசாலமான விவசாய வண்டியை நம் பின்னால் இழுத்துக் கொண்டு சிறுசிறு எட்டுகள் வைத்து நாம் முன்னேறுவோம்” என்று புகாரின் கட்சியிடம் சலுகையாக கேரிய போது), இங்கு வலதுக்கும் இடதுக்கும் இடையில் கட்சி போராடிய போது, சலுகையின் அடிப்படையில் கொடுத்த வலது இடது ஆதரவை, அடுத்தகட்ட வர்க்க ஒழிப்பில் கட்சி மறுத்த போதே, இப்படி புகாரின் வருணித்தார். வலதுக்கும் இடதுக்கும் இடையில் கட்சி தனது வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்த போது, இடதை எதிர்க்கும் போது வலதும், வலதை எதிர்க்கும் போது இடதும் பெற்ற சலுகைகளை எதிர் கொண்டே, ஸ்டாலினின் வலதுக்கும் இடதுக்கும் எதிரான இரண்டு பக்க போராட்டத்தையே கொள்கையற்றதாக வருணித்து, சதியாக வருணிக்க முடிகின்றது. இங்கு இடது வலது அல்ல பிரச்சனை, இதை அடிப்படையாக கொண்ட வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதா? இல்லையா? என்பதே பிரச்சனை. இதற்கு எதிரான போக்கே சதியாகும். வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் போக்குக்கு எதிரான போராட்டத்தையே, சதியாக வருணிப்பது ஸ்டாலின் எதிர்ப்பின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். புகாரின் இதற்காக இரகசிய சதிகளில் ஈடுபட்டதை தொடர்ந்தே, புகாரினை கட்சியின் மத்திய குழுவில் இருந்தும், கட்சியில் இருந்தும் வெளியேற்றியது.

கட்சியின் உயிரோட்டமான கருத்துச் சுதந்திரத்தை, சதிப்பாணியிலான வடிவத்துக்கு நகர்த்திச் சென்றதில், ஸ்டாலின் எதிர்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. உள்ளடக்கத்தில் சதிகளின் மூலம் கட்சியின் பெருபான்மையை எதிர்க்க கிளம்பிய போது, கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை முறைகேடாக கையாண்டனர். ஸ்டாலினை ஏன் எதிர்த்தார்கள். அதாவது ஸ்டாலினிசம் என்று எதை இன்றும், அன்றும் அடையளப்படுத்துகின்றனர். ’ஒரு நாட்டில்’ சோசலிசத்தை கட்ட (வர்க்கப் போராட்டத்தை தொடர) முடியுமா? இல்லையா? என்ற அடிப்டையான கேள்வி மீதே, இது மையப்படுகின்றது. ஸ்டாலினிசமாக இருப்பது ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்ற தொடரும் வர்க்கப் போராட்டப் பாதையே. இதை எதிர்ப்போர் கட்டமுடியாது என்பதன் மூலம், வர்க்க சராணாகதியை கோரினர். ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்பது ஸ்டாலினிசியம் என்றால், அது லெனிசமாக இருக்கின்றது. அதைப் பார்ப்போம்…

முதற்பதிவு: செங்கொடி

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 19

20. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 20

21. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 21

22. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 22

23. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 23

24. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 24

25. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 25

26. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 26

27. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 27

28. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 28

29. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 29