Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

நவதாராளமயமாதலை முன்னெடுக்கும் அதிகாரம் மூலம், தங்கள் இன வேஷத்தைக் கலைக்கும் கூட்டமைப்பு

அனைத்து தமிழ் மக்களின் இன நலனையே முன்னிறுத்தி நிற்பதாக, கூட்டமைப்பால் இனி வேஷம் போட முடியாது. இதுவரை காலம் போட்ட இன வேஷத்தை களைந்தாக வேண்டும். தேர்தல் வெற்றி மூலம் இன வேஷத்தைக் கடந்து, ஒடுக்கும் தமிழ் அதிகாரம், நவதாராளமயமாக்கல் என்ற அவர்களின் உண்மை முகத்துடன் களமிறங்கியுள்ளனர்.

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான நவதாராளமயமாதலை முன்னெடுக்கும் தரகுகள் தான் என்பதை, உலகுக்கு கூட்டமைப்பு நிறுவியாக வேண்டும். இந்த வகையில் அதிகாரத்தில் பங்குபோட அரசுடன் கூடிக் கூலாவவும், நவதாராளமயமாக்கலை முன்னெடுக்க ஏகாதிபத்தியங்களுடன் கூடிச் சதி செய்வதும் தான், கூட்டமைப்பின் வெற்றிக்குப் பின்னான வெளிப்படையான அதன் அரசியல். அரசின் இனவொடுக்குமுறையைக் காட்டி அனைத்து தமிழ் மக்களின் நண்பனாகத் தொடர்ந்து வேஷம் போடமுடியாத புதிய அரசியல் சூழலை இது எட்டியிருக்கின்றது. இந்த வகையில், இலங்கை வரலாற்றில் ஒரு புதிய அரசியல் திருப்பம் தோன்றியிருக்கின்றது. தமிழ் மக்களை மட்டுமல்ல, முழு இலங்கை மக்களையும் புதிய அரசியல் பாதையில் அணிதிரள வைக்கின்ற வரலாற்று நிகழ்வுதான், கூட்டமைப்பின் வெற்றியும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் தோல்வியுமாகும்.

தமிழ் என்ற பொது இன அடையாளத்தைக் கடந்து, ஒடுக்கும் தமிழ் வர்க்கம் தன்னை பிரித்த நிகழ்வே தேர்தல் வெற்றியாகும். இதுவே ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் தோல்விக்கான அரசியல் அடிப்படையுமாகும்.

தேர்தல் முடிவுக்கு முன்புவரை அரசே இனவொடுக்குமுறையின் கருவியாக, இலங்கை முழுக்க நவதாராளமயமாதலை முன்னெடுக்கும் சக்தியாக இருந்து வந்தது. அரசின் நவதாராளமயமாதலை கூட, தமிழ் மக்கள் இனவொடுக்குமுறை ஊடாகவே இனம் கண்டனர். வடக்குத் தேர்தல் முடிவுகளுடன், இது முடிவுக்கு வந்துள்ளது. இலங்கையில் நவதாராளமயமாதலை முன்னெடுக்கும் சக்தியாக, அந்தந்த இனங்களே அதற்கு தலைமை தாங்கும் புதிய அரசியல் நிலைக்கு, இலங்கையின் அரசியல் சூழல் வந்தடைந்திருக்கின்றது.

இனவொடுக்குமுறையையும், இனவாதத்தையும் முன்னெடுப்பதற்கான அரசியல் அடிப்படை என்பது, நவதாராளமயமாதலை மக்கள் மேல் திணிப்பதற்காகத் தான்;. இனவொடுக்குமுறையை எதிர்த்து சுயநிர்ணயத்துகான போராட்டம் என்பது பிரிவினைவாதமாகவும், ஏகாதிபத்திய நலன் சார்ந்தாகச் சீரழிந்தது. இதன் தொடற்சியாகவே கூட்டமைப்பின் இன்றை வெற்றியாகும். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விரோதமான அரசியலாக, அதை முன்னெடுக்கும் அதிகாரமாக கூட்டமைப்பின் வெற்றி அமைந்திருகின்றது. இதன் மூலம் ஒடுக்கப்;பட்ட மக்களை ஒடுக்கும் நிலைக்கு, தன்னை அரசியல் ரீதியாக உயர்த்தி நிற்கின்றது.

இந்த வகையில் வடக்கில் குறுந்தேசிய இனவாதிகளான தமிழ்த் தரப்பும், கிழக்கில் குறுந்தேசிய வாதிகளான முஸ்லீம் தரப்பும் அதிகாரத்தில் வந்திருப்பதன் மூலம், நவதாராளமயமாதலை முன்னெடுக்கும் வரலாற்று திரும்பம் வடக்கின் வெற்றி மூலம் நடந்தேறி இருக்கின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களைச் சுரண்டவும், அதற்காக அவர்களை ஒடுக்கவும், அந்தந்த இனத்தைச் சேர்ந்த இனவாதிகள் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துள்ளனர். பேரினவாத அரசே முழு இலங்கை தழுவி முன்னெடுத்த நவதாராளமயப் பொருளாதார கொள்கையை, தமிழ் முஸ்லீம் தலைமைகள் தங்கள் இனத்தின் பெயரில் முன்னெடுப்பதை மறுக்க முடியாத வண்ணம் அதிகாரத்தை பெற்றுள்ளனர். இனவொடுக்குமுறை முன்னெடுத்த அரசின் பொருளாதார கொள்கையும், குறுந்தேசிய இனவாதிகளான தமிழ் தலைமையின் பொருளாதாரக் கொள்கையும் ஒரே புள்ளியில் இணைந்து பயணிக்கும் வரலாற்றுப் போக்கு, மக்களை இனவாதத்தில் இருந்து மீள்வதற்கான புதிய அரசியல் சூழலை தோற்வித்து இருக்கின்றது. அனைத்து இனச் சுரண்டும் வர்க்கமும், நவதாராளமய பொருளாதார கொள்கையை முன்னெடுக்கும் பொது அரசியல் நடைமுறையில், ஒன்றுபட்டு களமிறங்கி உள்ளனர். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை தோற்கடித்த கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிமூலம், இந்த புதிய அரசியல் சூழல் தோன்றி இருக்கின்றது.

இந்த அரசியல் சூழல் என்பது 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றதால் அல்ல, மாறாக நவதாராளமயமாதலை முன்னெடுக்கும் அரசியல் பொருளாதாரக் கொள்கையினால் இந்த புதிய நிலை இன்று தோன்றி இருக்கின்றது. உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் சக்தியாக இனவாத தமிழ்த் தரப்பு தன்னை மாற்றி இருப்பதால், இதுவரை காலமும் இன ரீதியாக முரண்பட்ட ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை உருவாக்கி இருக்கின்றது. இந்த ஆளும் வர்க்கத்தின் இந்த ஐக்கியம், வரலாற்று ரீதியான இனவாதப் போக்குகளை கடந்த புதியதொரு நிலையாகும். இதுவே கீழ் இருந்தான மக்களின் ஐக்கியத்துக்கான, அரசியல் பாதையைத் திறந்து இருக்கின்றது.

கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியால் தோற்றுப்போன ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான அரசியல் விளைவால், அரசியல் ரீதியான இரண்டு புதிய அரசியல் போக்குகள் இன்று உருவாகி வருகின்றது. சுயநிர்ணய அடிப்படையில் வர்க்க ரீதியாக அணிதிரள்வதற்கான இயல்பான புதிய வரலாற்றுப் போக்கு உருவாகி வருக்கின்றது. கடந்த காலத்தில் இந்த வரலாற்றுச் சூழலை, சண் தலைமையிலான கட்சிகூட வடக்கில் பெற்றிருக்கவில்லை. அன்று அரசுக்கு எதிராக தமிழ் இனவாத அரசியல் இருந்து வந்தது. ஆனால் இந்தத் தேர்தல் மூலம், அது இல்லாமல் போய் இருக்கின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் முதல் முதலாக ஒரு அரசியல் வெற்றிடம் தோன்றி இருக்கின்றது. வடக்கின் தேர்தல் மூலமான அரசியல் தாக்கம், கிழக்கு நோக்கி வேகமாக நகருகின்றது. நவதாராளமயமாதலை வடகிழக்கில் முன்னெடுக்கும் போக்கு, தெற்கில் செயலற்ற இனவாதமாக மாற்றும் போது, நவதாராளமயமாதலை எதிர்க்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியமாக பரிணமிக்கும். இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்தப் புதிய அரசியல் சூழலை எதிர்கொண்டு மாற்றி அமைக்கும் அரசியல் பணியே, பாட்டாளி வர்க்கத்தின் பாரிய சவால் மிக்க ஒன்றாக இருக்கின்றது.

பாட்டாளி வர்க்க சக்திகள் இன்னும் இலங்கையில் தன்னை வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொள்ளாத வரலாற்றுப் போக்கும், வடக்கில் இறுக்கமான கண்காணிப்புக் கொண்ட இராணுவக் கட்டமைப்புக்குள் ஊடுருவுவதில் உள்ள பொதுவான அரசியல் நெருடிக்கடியும், புதிய அரசியல் சூழலை வெற்றி கொள்வதில் உள்ள தடையாக இருந்தபோதும், இதைக் கடக்க வேண்டியதே இன்றுள்ள மைய அரசியலாக மாறியுள்ளது.

08.10.2013