Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

கூட்டமைப்பு கோரும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் எதற்காக?

பேரினவாதம் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை தர மறுப்பதாக குறுந்தேசியவாதம் கூறுகின்ற போது, காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தைக் எதற்காக கோருகின்றனர் என்ற உண்மையை மூடிமறைக்கின்றனர்.

இனத்தின் பெயரில் மோசடியை அரங்கேற்றுகின்றனர். இனத்திற்காகவே, இன நன்மைக்காகவே காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தைக் கோருவதாக கூறுவது ஒரு பொய். ஆக எது உண்மை, எது பொய் என்பதை பகுத்தாய்வு பூர்வமாக தெரிந்து கொள்ளவேண்டும்.

இதைத் தெரிந்து கொள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் கொண்டுள்ள பேரினவாத அரசு, அதை தன் இனத்துக்கு பயன்படுத்துகின்றார்களா என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் இந்த உண்மையை புரிந்து கொள்ளமுடியும். இதைக் கோருகின்ற குறுந்தேசியவாதிகள், அவர்களில் இருந்து எப்படி வேறுபடுகின்றனர் என்ற கேள்வி மூலம் அறிந்து கொள்ள முடியும்.

தன் இனத்தின் பெயரில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தைக் கொண்டுள்ள பேரினவாதம், இதை தன் இனத்தின் நலனுக்கு பயன்படுத்துகின்றதா எனின், இல்லை. மாறாக தன் இன மக்களின் நிலத்தைப் பறிக்கவும், அவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவும், மக்களை ஒடுக்கவுமே பயன்படுத்துகின்றது. பேரினவாதத்தை கொண்டு அரசு தன் சொந்த இன மக்களை ஒடுக்கத்தான், இனவாதத்தைப் பயன்படுத்துகின்றது. பிற இனம் மீதான ஓடுக்குமுறையை தன் இன மக்களுக்காகவே செய்வதாக கூறிக் கொண்டு, சொந்த இன மக்களை ஒடுக்குவதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளதுடன் அதையே முன்னெடுக்கின்றது. அப்படியாயின் இதை யாருடைய நலனுக்காகச் செய்கின்றது?

இலங்கையில் நவதாராளமயமாக்கலை முன்னெடுக்கவே இதைச் செய்கின்றது. அதாவது இதன் மூலம் சுரண்டும் பன்னாட்டு மூலதனத்துக்கும், அதைச் சார்ந்து நிற்கும் தரகுமுதலாளிகளின் நலனுக்காகவும் தான் அதிகாரத்தை கையாளுகின்றது. ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு எதிரானது தான் இந்த அதிகாரம். ஆக நவதாராளமய பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்கவே அதிகாரம். இனத்தையும், அதன் சுய பொருளாதாரத்தையும் பாதுகாக்க அல்ல இனத்தின் பெயரிலான அதிகாரம்.

இதற்கு விதிவிலக்கல்ல குறுந்தேசியவாதம் கோரும் அதிகாரம். நவதாராளமய பொருளாதாரத்தை முன்னெடுக்கவே காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை, குறுந்தேசியவாதம் கோருகின்றது. பேரினவாதம் முன்னெடுக்கும் அதே நவதாராளமயமாதலை முன்னெடுக்கத்தான், பேரினவாதம் கொண்டுள்ள அதே அதிகாரத்தைத் தனக்குத் தருமாறு கோருகின்றனர். குறுந்தேசியம் மூலம் தன் சொந்த இன மக்களின் நிலத்தைப் பறிக்கவும், அவர்களை ஒடுக்கவும், அதற்கான அதிகாரத்தை தம்மிடம் தரும்படி கோருகின்றனர். தமிழ் தரகு முதலாளிகளின் நலனை பாதுகாக்கவும், நவதாராளமய சக்திகளுடன் இணைந்து சொந்த இன மக்களைச் சுரண்டவும் தமக்கு அதிகாரத்தைக் கோருகின்றனர். சிங்கள தரகுமுதலாளிக்கு பதில் தமிழ் தரகுமுதலாளிகளின் நலனையே, இனத்தின் பெயரில் முன்னிறுத்துகின்றனர். இங்கு நவதாராளமய சக்திகள் ஒன்றாகவும், தரகு முதலாளிகள் இனத்தின் பெயரில் பிரிந்து தம்மை முன்னிறுத்துகின்ற அதிகாரத்தையே குறித்து நிற்கின்றது.

பேரினவாதம் முன்னெடுக்கும் அதே பொருளாதார கொள்கையை குறுந்தேசியவாதம் மூலம் முன்னெடுத்து, தமிழ் தரகுமுதலாளிகளின் நலனைப் பாதுகாக்கவே காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் தமக்கு தேவை என்கின்றனர். காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் மூலம், சொந்த இன நலன் சார்ந்த சுய பொருளாதார நலனை முன்னெடுக்கவல்ல, நவதாராளமயமாக்கலை முன்னெடுக்கவே. பேரினவாதம், குறுந்தேசியவாதம் ஒரு நேர் கோட்டில் எதிர் முனையில் நின்று முனைகின்றனர். இங்கு ஒரே பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்கும் அதேநேரம், எதில் முரண்படுகின்றனர் என்றால் நவதாராளமயமாக்கல் மூலம் லாபம் அடையும் தரகு முதலாளிகள் எந்த இனம் என்ற இன அடையாளத்தில் மட்டும் தான். அதாவது இனத்தை முன்னிறுத்தி குறுகிய வடிவில் லாபம் அடைய முனையும், தரகு முதலாளிகளின் வர்த்தக சூதாட்டம் தான் இனம் என்ற அடையாளமும், அதிகாரம் பற்றிய பித்தலாட்டங்களும்.

வடமாகாண சபையை வென்ற குறுந்தேசியவாதிகள், தமிழ் தரகுமுதலாளிகளின் நலனை முன்னிறுத்தியே காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தைக் கோருகின்றனர். இது தான் உண்மை. பேரினவாதம் எப்படி இனவாதம் மூலம் தரகுமுதலாளிகளை முன்னிறுத்தி நிற்கின்றதோ, அதையே தான் குறுந்தேசியவாதம் தமிழ் தரகுமுதலாளிகளை முன்னிறுத்தி நிற்கின்றது.

பேரினவாதம், குறுந்தேசியவாதம் சார்ந்த தரகுமுதலாளிகள் தான், இன முரண்பாடு மூலம் லாபம் அடையும் வர்க்கங்கள். இன்று காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை இதன் அடிப்படையில் தான் கோருவதும் மறுப்பதும் தொடருகின்றது

வடமாகாண சபை கோரும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் என்பது, நவதாராளமயமாக்கல் சார்ந்த தன் இன தமிழ் தரகுமுதலாளிகளின் நலனுக்கு வெளியில், மக்கள் சார்ந்த சுய பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்க அல்ல.

மாறாக இனத்தைப் பாதுகாக்கவே காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் என்று நம்புவது, சமூக பொருளாதாரம் சார்ந்த எதார்த்த உண்மையை மறுத்துவிடுவதாகும். இது மனிதனி;ன் அகநிலை சார்ந்த பொய்மையான பிரமையையும், இது சார்ந்த அகநிலை விருப்பத்தையும் ஆளும் தரகு முதலாளிய வர்க்கம் பயன்படுத்துகின்றது.

இனரீதியான ஒடுக்குமுறையையும், இனரீதியான நிலப்பறிப்புகளையும் தடுக்கும் என்ற உண்மையின் மறுபக்கத்தில் இருக்கின்ற உண்மை இதுதான். தன் இன தரகுமுதலாளிகள் அனுபவிக்கும் குறுகிய இனக் கண்ணோட்டத்துடன் தான் அதிகாரம் கோரப்படுகின்றது என்ற உண்மையை, அவர்களின் பொருளாதாரக் கொள்கையில் இருந்து தான் காண முடியும்;. குறுந்தேசியவாதம் மூலம் பாதுகாக்கப்பட்டு, முன்னெடுக்கப்;படவுள்ள நவதாராளமயமாதலினை அடிப்படையாகக் கொண்ட அன்னிய மூலதனத்தின் நலனுக்காக, இனத்தின் பெயரில் நிலத்தைப் பறிப்பதும், கடல் வளத்தை அன்னியர் சுரண்டவும் அனுமதிக்கும் கொள்கை தான் வடமாகாண சபையின் பொருளாதாரக் கொள்கை. இதற்காக மக்களின் சுய பொருளாதாரத்தை அழித்து மக்களை கூலிகளாக மாற்றுவதற்கான, மக்களை ஒடுக்கும் அரசியல் அதிகாரத்தை இனத்தின் பெயரில் கோருகின்றனர். மக்களை இனரீதியான கனவில் மிதக்க விட்டு, இனத்தின் பெயரில் அவர்கள் கோவணத்தை உருவும் பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்கவே, இனத்தின் பெயரில் காணி, பொலிஸ் அதிகாரத்தைக் கோருகின்றனர்.

ஆக மாகாண சபைக்கான அதிகாரம் என்பது சுய பொருளாதாரத்தை பாதுகாக்க அல்ல, அன்னிய பொருளாதாரத்தைக் கொண்டு சுய பொருளாதாரத்தை அழிப்பது தான். இதுதான் வட மாகாண சபையினதும், அரசினதும் கொள்கை. இதை இனத்தின் பெயரில் செய்வதற்கு தனக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வேண்டும் என்று கூறுகின்றது. இது தான் உண்மை. இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது.

21.10.2013{jcomments on}