Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்" (Gun & Ring) சினிமா மீதான விமர்சனம்

சமூகம் சாந்த ஒரு சினிமா குறித்த விமர்சனத்தை செய்யும் முன் கலை என்றால் என்ன என்ற தெளிவு அவசியமானது. குறிப்பாக விமர்சனம் செய்யும் அறிவியல் அறிஞன், கலை என்றால் என்ன என்ற தெளிவுடன் நின்று அதை அணுக வேண்டும்.

அறிவியலறிஞன் புறநிலை யதார்த்தத்தின் வெளிப்புற உலக நிகழ்வுகளைக் கொண்டு, பொருட்களின் அளவு ரீதியாக அம்சத்தை முதன்மைப்படுத்தியுமே ஆராய்கின்றான். கலைஞன் அகநிலை யதார்த்தத்தின் உட்புற உலக நிகழ்வுகளைக் கொண்டு, பொருட்களின் பண்பு ரீதியான அம்சத்தை கொண்டு ஆராய்கின்றான். அறிவியலறிஞனுக்கும் கலைஞனுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடும், அவர்கள் செயற்படும் தளம் மற்றும் சமூக பாத்திரமும் இதுதான். இந்த வகையில் அறிவியலறிஞன் தர்க்கரீதியாக, புறநிலை யதார்த்தத்தைக் கொண்டு ஆராய்கின்ற போது, கலைஞன் அகநிலைப்பபட்ட யதார்த்தத்தினை தளத்துக்கும் இசைக்கும் ஏற்ப கலையாக்குகின்றான். கலை உண்மையான வாழ்விலும் பார்க்க, வாழ்க்கையை செறிவுள்ளதாக ஒருமுகப்படுத்தப்படுத்துவதாக இலட்சியத்தை அண்மித்ததாகவும் காணப்படுகின்றது. இதைப் படைக்கும் ஒரு கலைஞன் புறநிலைத் தன்மை பற்றி, சரியாகவும் தெளிவாகவும் அறிந்திருக்க வேண்டும். இதை தெளிவாகக் கொண்டிராத போதே அறிவியலறிஞனின் விமர்சனத்தை எதிர்கொள்கின்றான்.

"ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்" முழு நீள சினிமாவாக வெளிவந்திருக்கின்றது. கதைப்பொருள், எமது வாழ்வுடன் நெருக்கமானவை. இச் சினிமா பல சர்வதேச விருதுகளைப் பெற்று இருக்கின்றது. இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வெளிவந்திருக்கக் கூடிய குறிப்பிடத்தக்க ஒரு படம். கடந்த பத்தாண்டுகளாக வெளிவந்த படங்களைக் கடந்து தன்னை முதன்மைப்படுத்தி நிற்கின்றது. இனி இதைத் தாண்டியே படம் எடுக்க முடியும் என்றளவுக்கு, இந்தச் சமூகத்தில் பேச முடியாத விடையங்களைப் பேசியபடி பல அம்சங்களில் வெற்றி பெற்று இருக்கின்றது.

முரண்பட்ட இந்தச் சமூக அமைப்பின் யதார்த்தத்தின் சில கூறுகளைப் பிரதிபலித்து, கலைப்படமாக வெளியாகி இருக்கின்றது. மோதிரம் மற்றும் துப்பாக்கி மூலம், இரண்டு முக்கிய கதைக்குரிய விடையங்களைப் பற்றி பேசுகின்றது.

1.யுத்தத்தில் பாதிகப்பட்டவர்கள் இனம், மதம், சாதி, நிறம், மொழி கடந்து தங்கள் பிரச்சனை ஊடாக ஒன்றிணைந்து வாழ முடியும் என்ற செய்தியுடன் கதையுடன் காட்சி முடிகின்றது. இந்த வகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்ணும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆபிரிக்க இளைஞனுடன் இனம் நிறம் மதம் கடந்து, மோதிரம் மூலம் ஒன்றிணைந்து வாழமுடியும் என்ற மனிதக் கூறை சம்பவங்கள் ஊடாக தொய்வின்றி எடுத்துக்காட்டியுள்ளது.

சொந்த மொழி, மதம், இனம் சேர்ந்தவர்களால் கூட, அவர்களின் மனிதாபிமான நல்லெண்ணங்கள் மூலம் பாதிப்பை உணர முடியாது என்பதை கலாச்சாரம் பேசும் சமூகத்தில் இருந்து ஒரு தமிழ் பெண் மூலம் கூறியது சிறப்புத் தான்.

இந்தச் சிறப்புக்கு வெளியில் இந்த குறித்த கருவுக்குள் குறைபாடாக இருப்பது, இந்த சமூகத்தால், பாதிக்கப்பட்ட சமூகத்தை புரிந்து கொள்ளவே முடியாதா!? தான் ஏமாற்றப்பட்டு அவமதிக்கப்பட்ட நிலையிலும், உணர்ச்சிற்ற அமைதியானவளாக பெண்ணை காட்சிப்படுத்தியதும், தமிழ் கலாச்சாரத்தின் முன் தலைகுனிந்து பதுமையாக நிற்கும் வண்ணம் காட்சியாக்கியுள்ளது தவிர்த்து இருக்க வேண்டியவை.

2.இரண்டு ஆண்களுக்கு இடையிலான ஓரினப்பால் சார்ந்த காதலைத் தடுத்ததால் ஏற்பட்ட தற்கொலையை அடுத்து, தன் தந்தையைக் கொலை செய்ய துப்பாக்கியை பெற்றுச் செல்லும் இளைஞன் மூலம் காட்சிப்படுத்தப்படுகின்றது. துப்பாக்கி மூலமான செய்தி இது தான். சமூகத்தில் பொதுக்கலாச்சார சமூக நியதிகளைக் கடந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற விடையங்களையும், அதன் விளைவுகளையும் இக்காட்சி எடுத்துக் காட்டுகின்றது.

இந்த வகையில் இந்தக் காட்சியும் கூட முக்கியமானதே. இந்தச் சமூக அமைப்பினுள்ளான துயரங்களுக்கும் தீர்வுகளுக்கும், தடையான கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் கேள்விக்குள்ளாகின்ற காட்சிகள் இவை. இந்த வகையில் துணிச்சலான படம் தான்.

இதில் உள்ள குறைபாடு கலாச்சாரம் பண்பாடுகள் மற்றும் முதல் தலைமுறையின் எண்ணங்கள் சிந்தனைகள் ஏன் முரண்படுகின்றது. இது மாற்ற முடியாததா? தன் தந்தையைக் கொல்வதற்காக துப்பாக்கி பெற்றுச் செல்வதன் மூலமா, இதற்கு தீர்வு காண்பது!?

சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற இரண்டு முக்கியமான விடையங்களை, தலைமுறை இடைவெளியுடன் முரண்பட்டு பேசுகின்ற துணிச்சலும், அதை சினிமாவூடாக சொன்ன விதமும் இந்தப் படத்தின் முக்கியமான செய்தியாகின்றது.

இச் சினிமாவை பொதுவாக எடுத்தால் சினிமாவுக்குரியதும், கலைக்குரிய தன்மையையும் கொண்டுள்ளதா? இதன் காட்சிகள் சினிமாவாக தன்னை வெளிப்படுத்துவதற்கு பதில், ஆவணப்பட (டொக்குமென்றி) சாயலை கொண்டு காணப்படுகின்றது.

இங்கு இரண்டு கதையைச் சுற்றி இயங்கும் காட்சிகள், பல உப கதைகளைக் கொண்டது. அவை ஆவணப்படத்தை அடிப்படையாக கொண்டதாக, தன்னை வெளிப்படுத்தி இயங்குகின்றது. அதேநேரம் கதையின் பிரதான செய்தியை மழுங்கடிக்கும் வண்ணம், உப கதைகள் துருத்திக் கொண்டு நிற்கின்றது. இந்த உப கதைகள் சினிமா மொழிக்குரியதை விட, ஆவணப்படத்துக்குரிய தன்மையில் காணப்படுகின்றது. அவைகளை சமூகம் மீள அப்படியே உணர்ச்சி இன்றி உறைநிலையில் மீளக் காட்சியாகின்றது. இவை ஏன் சமூகத்தில் நிகழ்கின்றது, இதை தடுத்து நிறுத்த கலை என்ற எல்லைக்குள் நின்று சமூகத்தை சிந்திக்கத் தூண்டும் காட்சிகள் இருக்கவில்லை.

குறிப்பாக அண்மைக் காலங்களில் மேற்கு தொலைக்காட்சிகளில், முன்பு நடந்த குற்றங்களை எப்படி நடந்தது என்று மீள்காட்சிகள் எப்படி தயாரிக்கப்படுகின்றதோ, அதையொத்த பிரதிபலிப்பபை இக்காட்சியில் அவதானிக்க முடிகின்றது.

சமூகத்தின் பிரச்சனைகள் மீதான அக்கறையுடன், பொது சமூக அரசியல் நீரோட்டத்துடனான அரசியல் சமரசங்களைக் கொண்ட போது, தமிழ் சமூகத்தின் கலாச்சார பண்பாட்டு மீதான கேள்விகளை, தெளிவாக தலைமுறை இடைவெளி ஊடாக அணுகியுள்ள படம். அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல சினிமா.

பி.இரயாகரன்

05.01.2014