Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இனப்பிரச்சனைக்கு எமது இடது முன்னணி வைக்கும் தீர்வு என்ன?

எமது இடதுசாரிய முன்னணியையும், அதில் அங்கம் வகிக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியையும் தமிழ் மக்களுக்கு எதிரானதாக காட்டுகின்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இடதுசாரிய முன்னணியில் இருக்கக் கூடிய முன்னிலை சோசலிசக் கட்சி "இனப்பிரச்சனைக்கு" எந்தத் தீர்வையும் கொண்டு இருக்கவில்லை என்பதே, உண்மைக்கு புறம்பாக அவர்கள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டு.

இப்படிக் குற்றம் சாட்டியபடி அவர்களை பேரினவாதிகளாகவும், சிங்களக்கட்சியாகவும் கூட காட்டுகின்றனர். இடது - வலது குறுந்தேசியவாத இந்தகைய பிரச்சாரங்களின் உண்மைத்தன்மை என்ன என்பதை, கேள்விக்கு உள்ளாக்குவது அவசியமாகின்றது.

முன்னிலை சோசலிசக் கட்சி மார்க்சியத்தை தனது கொள்கையாகக் கொண்ட, பாட்டாளி வர்க்கக் கட்சி. அந்த வகையில் அனைத்தையும் தன் வர்க்கத்தை சார்ந்து நின்று தான் அனுகுகின்றது. தன் வர்க்கத்தின் ஜனநாயகத்தை முன்னிறுத்தி, அனைவருக்குமான முரணற்ற ஜனநாயகக் கோரிக்கை முன்னெடுக்கும் கட்சி.

இந்த வகையில் தேசிய இன முரண்பாட்டை, முரணற்ற ஜனநாயகக் கோரிக்கை ஊடாகவே அணுகுகின்றது. இதற்காக லெனினிய அணுகுமுறையையே தனது கட்சிக் கொள்கையாக கொண்டு இயங்குகின்றது. தேசிய இன முரண்பாட்டை, ஜனநாயகக் கோரிக்கையாக பார்க்கின்றது. அந்த வகையில் தேசிய இன முரண்பாட்டிலான முரணற்ற அனைத்து ஜனநாயக கோரிக்கையும் அங்கீகரித்து, அதற்காக அது போராடுகின்றது. இந்த வகையில் தனது வர்க்க போராட்டத்தின் இரு வரலாற்று கட்டங்களான, 1.புரட்சிக்கு முன் 2.புரட்சிக்கு பின்னான, இரு வேறு அரசியல் நடைமுறையையும் தீர்வையும் அக்கட்சி கொண்டு இருப்பதுடன் அதற்காக போராடுகின்றது.

முன்னிலை சோசலிசக் கட்சி முன்வைக்கும் தீர்வு என்ன?

தேசங்கள் மற்றும் தேசிய இனங்களுக்கான தீர்வானது, லெனின் நடைமுறைப்படுத்தியது போல் தேசங்களுக்கு தன்னாட்சியையும், தேசிய இனங்களுக்கு சுயாட்சியையும் அடிப்படையாகக் கொண்ட தீர்வையே, முன்னிலை சோசலிசக் கட்சியின தனது கட்சி திட்டத்தில் முன்னிறுத்தி இருக்கின்றது.

முன்னிலை சோசலிசக் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் அல்லது எமது இடதுசாரிய முன்னணி அதிகாரத்துக்கு வந்தால், தேசிய இன முரண்பாட்டுக்குரிய தீர்வாக தேசங்களுக்கு தன்னாட்சியையும், தேசிய இனங்களுக்கு சுயாட்சியையும் கொண்ட ஜனநாயகத்தையே தீர்வாகக் கொண்டு அதை நடைமுறைப்படுத்தப் போராடும். இதைவிட ஜனநாயகபூர்வமான தீர்வை எவரும் முன்வைக்க முடியாது.

தேசங்கள் மற்றும் தேசிய இனங்களின் வளர்ச்சி என்பது, இலங்கை சுயதீனமான தன்னாட்சி கொண்ட நாடாக தன்னை விடுவிக்கும் வர்க்க நடைமுறைப் போராட்டத்துடன் பின்னிப்பிணைந்தது. இதை வந்தடைய வர்க்க நடைமுறை இன்றி, எந்த குறுக்கு வழித் தீர்வும் சாத்தியமில்லை.

லெனின் இதை வந்தடைய என்ன அரசியல் நடைமுறையைக் கொண்டு இருந்தாரோ, அதை தான், முன்னிலை சோசலிசக் கட்சி இன்று முன்னிறுத்துகின்றது. தனது வர்க்க அதிகாரத்தில் தன்னாட்சியையும், சுயாட்சியையும் கொண்ட தீர்வை முன்னெடுக்க, அதற்கு முந்தைய நடைமுறையாக லெனின் முன்னிறுத்தியது சமவுரிமைக்கான போராட்டமே.

இனரீதியாக ஏற்றத்தாழ்வுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடுவதை, லெனின் தான் கட்சி நடைமுறையாக முன்னிறுத்தி போராடியதன் மூலம் பாட்டாளி வர்க்க அதிகாரத்தை நிறுவினார். இதன் மூலமே தேசிய இன முரண்பாட்டுக்குரிய தீர்வையும் நடைமுறைப்படுத்தினார்.

லெனின் முன்னெடுத்த அதே நடைமுறையைத் தான், முன்னிலை சோசலிசக் கட்சி இன்று இலங்கையில் முன்னிறுத்தி நிற்கின்றது. இது லெனினிய வழிமுறையல்ல என்ற யாரவது சொன்னால், இதற்கு வேறான ஒன்றை லெனின் முன்வைத்தார் என்று காட்ட முடிந்தால், அதை நேர்மையாக முன்வையுங்கள்.

இந்த நடைமுறையின் மொத்த தொகுப்பையே, லெனின் சுயநிர்ணயம் என்ற கோட்பாடுப் பெயரால் முன்வைத்தார்.

வர்க்க நடைமுறை உள்ளடக்கத்தை குறிக்கும் சுயநிர்ணயம் என்ற சொல், இலங்கையில் எப்படி புரிந்து கொள்ளப்பட்டு இருக்கின்றது?

1.இலங்கையில் சுயநிர்ணயம் என்ற சொல், லெனினிய வழியில் புரிந்து கொள்ளப்பட்டு இருக்கின்றதா என்பதே எம்முன்னுள்ள அடிப்படைக் கேள்வி. சுயநிர்ணயம் பற்றி பேசுகிறவர்கள், இன்று அதை வெளிப்படையாக நேர்மையாக முன்வைக்க வேண்டும். முன்வைக்காத வரை அது சந்தர்ப்பவாதமாகும்.

2.லெனினிய சுயநிர்ணயத்தின் நடைமுறையை, இன்று யார் தங்கள் அரசியல் நடைமுறையாகக் கொண்டு இயங்குகின்றனர்? அது எப்படி என்பதை, சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றவர்கள் சொல்லியாக வேண்டும்.

சுயநிர்ணயம் என்ற சொல்லை முன்னிறுத்தி இயங்கும் சந்தர்ப்பவாதிகள், தங்களைப் போல் முன்னிலை சோசலிசக் கட்சி அதனை முன்வைக்கவில்லை என்று குற்றம்சாட்டி விமர்ச்சிக்கின்றனர். சொல்லும், நடைமுறையும் இணைந்தது தான் சுயநிர்ணயக் கோட்பாடு. இதனை நடைமுறையை முன்னெடுக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியை சுயநிர்ணயத்துக்கு எதிராக காட்டுகின்றவர்கள், வெறும் சொல்லை முன்னிறுத்தி அதையே சுயநிர்ணயமாக காட்ட முற்படுகின்றனர்.

இந்த சொல் மூலமான சுயநிர்ணயம் என்பது, இலங்கையில் பிரிவினையாக புரிந்து கொள்ளப்பட்ட பிரிவினைவாதத்தைத் தான் குறிக்கின்றது..

அதாவது தமிழ் - சிங்கள மக்கள் பிரிவினையாக மட்டும் புரிந்து கொண்டு இருக்கின்ற சுயநிர்ணயத்தையே இவர்கள் கோருகின்றனர். இது லெனினிய சுயநிர்ணயமல்ல என்பதால், இலங்கையில் வர்க்கப் போராட்டதுக்கு எதிரானதாகவும் இயங்குகின்றது. இந்த அடிப்படையில் நின்று சுயநிர்ணயத்தைக் கோருவதும், சுயநிர்ணயத்தின் பாட்டாளி வர்க்க நடைமுறையை மறுப்பதும் இன்று நடந்து வருகின்றது. இதனால் தான் முன்னிலை சோசலிசக் கட்சி இந்த சொல்லை முன்வைக்கவில்லை.

இந்த பிரிவினைவாத சொல்லை முன்னிறுத்திய சுயநிர்ணய பின்னணியில்

1.லெனினிய சுயநிர்ணய நடைமுறைக்கு வெளியில், விவாதம் தர்க்கம் செய்யும் சந்தர்ப்பவாதிகளே இதை முன்வைக்கின்றனர். அதே நேரம் லெனினிய சுயநிர்ணய நடைமுறை மறுதளிக்கின்றனர்.

2."தேசிய" - "இன" என்ற தங்கள் குறுகிய நிலையில் தங்களை முன்னிறுத்திக் கொண்டு குறுகிய அடையாள மூலம், ஐக்கியப்பட்ட வர்க்கப் போராட்டத்தை தடுக்க, பிரிவினையாக புரிந்து கொண்ட "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்துகின்றனர்.

லெனினிய சுயநிர்ணயமானது வர்க்க ஐக்கிய மூலமான வர்க்க நடைமுறையாகும். இதற்கு மாறாக முன்னிறுத்தும் "சுயநிர்ணயம்" இலங்கை மக்கள் பிரிவினையாக புரிந்து கொண்ட மக்களை பிளக்கின்ற முதலாளித்துவ பிரிவினைவாத சுயநிர்ணயமாகும்.

இந்த வகையில் சுயநிர்ணயக் கோட்பாடு என்பது மார்க்சிய அடிப்படையில் அல்லாது, வெறும் பிரிவினையாக மட்டும் இலங்கையில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அது பாட்டாளி வர்க்க சாரத்தை கொண்டு இருப்பதில்லை. இதனால் இலங்கையில் சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டுப் பெயரை பயன்படுத்தி புரட்சி செய்ய முடியாது.

இதை விளங்கிக் கொள்ள ஒரு வரலாற்று உதாரணத்தை எடுப்போம். லெனினின் சமூக ஜனநாயகக் கட்சி ரூசியாவில் புரட்சி செய்த போதும், உலகெங்கும் "சமூக ஜனநாயக கட்சிகள்" பாட்டாளி வர்க்கமல்லாத முதரலாளித்துவ கட்சியாக சீரழிந்து மக்களில் இருந்து அன்னியமானது. இந்த நிலையில் அந்த கோட்பாட்டுப் பெயரில் புரட்சிக்கு மக்களை அணிதிரட்ட முடியாது என்பதால், வர்க்க கட்சிகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை லெனின் முன்மொழிந்து மாற்றினர். வர்க்க உள்ளடக்கம் மற்றும் வர்க்க நடைமுறையை இதன் மூலம் லெனின் மீள உலகில் நிலைநாட்டினர்.

இந்த வகையில் சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டுப் பெயர் இலங்கையில் சீரழிந்த, பிற்போக்கான முதலாளித்துவ பிரிவினையாக மாற்றம் பெற்று காணப்படுகின்றது. மக்களை ஐக்கியப்படுத்தி வர்க்க நடைமுறையை முன்னெடுப்பதற்கு அது தடையாக, பிரிவினையாக மட்டும் சுயநிர்ணயம் தமிழ் - சிங்கள மக்களால் புரிந்து கொளள்பட்டு இருக்கின்றது. இந்த ஒரே காரணத்தால் கோட்பாட்டு பெயரை முன்னிறுத்துவதற்கு பதில், அதன் நடைமுறையையும் அதன் தீர்வையும் முன்னிலை சோசலிசக் கட்சி உயர்த்தி நிற்கின்றது. அதன் நடைமுறைத் தீர்வான தேசங்களுக்கு தன்னாட்சியையும், தேசிய இனங்களுக்கு சுயாட்சியையும் அடிப்படையாகக் கொண்ட, வர்க்கப் போராட்ட நடைமுறையை முன்னெடுக்கக் கோருகின்றது.

இடைக்காலத் தீர்வை பாட்டாளி வர்க்கம் அங்கீகரிக்குமா?

சிலர் இடைகாலத் தீர்வை ஒன்றை முன்வைக்குமாறு கோருகின்றனர். சாரம்சத்தில் இது முதலாளித்துவ கோரிக்கையாகும்.

1.பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வராமல் எந்தத் தீர்வையும் அதனால் வழங்க முடியாது.

2.பாட்டாளி வர்க்கம் தன்னுடைய சொந்தத் தீர்வை முன்வைத்துத்தான் போராடும். முதலாளித்துவ தீர்வை ஒரு நாளும் முன்னிறுத்தாது.

இன்னுமொரு வர்க்கம் முன்வைக்கும் தீர்வை ஆதாரிக்கக் கோருவதும், இடைக்கால தீர்வை முன்வைத்து போராட்டக் கோருவதும் அடிப்படையில் மார்க்சியமல்ல.

சிலர் மாணவர் - தொழிலாளர் போராட்டத்தில் இடைகால தீர்வை எற்பது போல் அல்லது முன்வைத்து போராடுவது போல், தேசிய இனமுரண்பாட்டுக்கும் முன்வைக்கலாமே என்கின்றனர்.

அடிப்படையில் இரண்டும் வித்தியசமானவை. உதாரணமாக பெண்கள அமைப்பை பாட்டாளி வர்க்கம் உருவாக்கும், ஆனால் சாதி அமைப்பை பாட்டாளி வர்க்கம் உருவாக்க முடியாது. பெண்கள் அமைப்பு ஐக்கியம் மற்றும் இணைந்து போராடுவதை உருவாக்கும். சாதி அமைப்பு பிரிவினையையும் ஒடுக்குமுறையையும் உருவாக்கும்.

மாணவர் - தொழிலாளர் அமைப்புக்கள் வர்க்கத்தின் வெகுசன அமைப்புகள். அதன் போராட்டமும் - தீர்வுகளும் முன்னதும் பின்னதுமாக தொடர்ந்து இடைவிடாது வர்க்க ரீதியாக இயங்குகின்றது.

தேசிய இன முரண்பாட்டுத் தீர்வு என்பது முதலாளித்துவ வர்க்கத்தினர் சொந்த ஆட்சி அதிகாரத்தை தமக்குள் பகிர்ந்து கொள்வதையே அடிப்படையைக் கொண்டது. அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத் தீர்வுகளையே அது கொண்டது. குறிப்பாக நவதாரளவாத அமைப்பில் இந்தத் தீர்வுகள், அதை முன்னனெடுக்கின்ற போது தேசிய தன்மையை அழிக்கின்ற அடிப்படையிலானதாகவே இந்த தீர்வுகள் பயணிக்கும்.

முதலாளித்துவம் வைக்கும் எந்தத் தீர்வையும், அதன் நடைமுறையையும், பாட்டாளி வர்க்க ஐக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு அதை சீர்தூக்கி அணுகும். ஆனால் அதை ஆதரிக்காது. அதன் நடைமுறை (உதாரணமாக மாகணசபை) ஒரு இனத்துக்கு மறுத்தால், அதன் ஜனநாயக உரிமைக்காகப் போராடும்.

தொகுப்பாக

முன்னிலை சோசலிசக் கட்சி லெனினிய தீர்வை முன்வைத்து நடைமுறையில் போராடும் பாட்டாளி வர்க்கக் கட்சி. இது இனப்பிரசச்னைக்கான தீர்வைக் கொண்ட கட்சியும் கூட.