Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனநாயகத்தை மறுத்து - சதியை அரசியலாக்கும் கூட்டமைப்பு

கூட்டமைப்பு தன் கட்சிக்குள் தொடங்கி நாட்டின் பிரச்சனைகள் வரை, சதிக் கும்பலின் கூடாரமாக - அதையே அரசியல் நடத்தைகளாக அரங்கேற்றுவதைக் காணமுடியும். புலிகளின் 2009 முள்ளிவாய்க்கால் வரை அரங்கேற்றிய அதே அரசியல் சதிகள், இன்று பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு அரங்கேற்றுகின்றது. கூட்டமைப்பிடம் ஜனநாயகம் கிடையாது. மக்களுக்கு பதில் சொல்லும் தார்மீக பொறுப்பும் - நேர்மையும் கிடையாது. மேற்குநாடுகளின் கைக்கூலிகளாக மாரடிக்கின்ற அரசியலைத் தவிர, அதனிடம் வேறு எதுவும் கிடையாது.

மேற்கு - இந்தியா மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுத் தருவதாக கூறி அரசியல் செய்த கூட்டமைப்பு, அவர்களின் திட்டத்துக்கு அமைவாக எதிர்க்கட்சி பதவியையும் - நாடாளுமன்ற குழு தலைவர் பதவியையும் பெற்று இருக்கின்றனர். பாராளுமன்ற வசதி வாய்ப்புகளைத் தாண்டி, மந்திரிக்குரிய சலுகைகளை இதன் மூலம் பெற்று இருக்கின்றது. அதேநேரம் கூட்டமைப்பில் உள்ள பிற கட்சிகளை ஒரங்கட்டுகின்ற - அழிக்கின்ற ஜனநாயக விரோத சதிகளை இந்த பதவிகள் மூலம் ஒருங்கே முன்னெடுத்து இருக்கின்றது.

மறுபக்கத்தில் சர்வதேச விசாரணைக்கு வாக்களியுங்கள் என்று தேர்தல் காலத்தில் நீட்டி முழங்கியவர்கள் - இன்று அந்த விசாரணை என்பது ஐ.நா மூலம் முடிவுக்கு வந்து விட்டது, அந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம், தங்கள் கோரிக்கை நிறைவுக்கு வந்துவிட்டதாக கூறி மக்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளனர். அதேநேரம் உள்நாட்டு தண்டனை வழங்குவதற்கான பொறிமுறை, அரசு -கூட்டமைப்பின் கூட்டுச்சதியுடன் முன்வைக்கப்படுகின்றது.

காலகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றியவர்கள் மீண்டும் எமாற்றுவதுடன் - தேசிய பிரச்சனைக்கு தீர்வு என்பது பொலிஸ் - காணி அதிகாரத்துடன் கூடிய மாகாணசபைதான் - என்று இன்று கூட்டமைப்பு முன்நகர்த்தத் தொடங்கி இருக்கின்றது.

ஏகாதிபத்தியங்களின் துணையுடன் - தேர்தல் அரசியல் மூலம் தீர்வு என்பது, மக்களை ஏமாற்றுவதைத் தாண்டி எதுவும் இருக்காது. இதுதான் உண்மை என்பது இன்ற எதார்த்தமாகி வருகின்றது.

பாராளுமன்றம் என்பது மக்களுக்கு சேவை செய்வதோ - நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்கும் இடமல்ல. மாறாக சொகுசான வாழ்க்கை அனுபவிப்பதற்கான உல்லாச விடுதியாகும். மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கும் ஆடம்பரமான இலவசமான சலுகைகளையும் - பாராளுமன்ற பிரதிநிதிகள் ஆயுள் வரை சொகுசாக வாழ்வதற்கான கொடுப்பனவுகளும் வழங்கும் இடமே பாhரளுமன்றம். பாhரளுமன்றம் என்பது மக்களின் மேலான தொங்கு சதையாகிவிட்டது.

இந்த சொகுசு வாழ்க்கையையும் - சலுகைகளையும் பெற்றுக்கொள்ள, மக்களை பிளந்து இனங்களைப் பிரதிநித்துவம் செய்யும் இனவாதிகளாக தங்களை முன்னிறுத்துகின்றனர். பாராளுமன்றத்தை தங்கள் அரசியல் வழியாகக்; கொண்ட எந்தக் கட்சிக்கும், மக்கள் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள் - கோட்பாடுகள் கிடையாது.

மாறாக நவதாராள - உலகமயமாதல் பொருளாதாரக் கொள்கையைக் கொண்ட கட்சிகளாக - அதன் பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதும் - அதற்காக நாட்டின் சட்டங்களையும், பொருளாதாரக் கொள்கைகளையும் உருவாக்கும் பொம்மையாக பாராளுமன்றம் இருக்கின்றது.

இந்த நவதாராள பொருளாதார கொள்கைகள் மூலம் உலகளவில் யார் கொள்ளை அடிக்கின்றனரோ, அவர்கள் தான் நாட்டை எப்படி ஆளவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றனர்.

இந்த வகையில் இன்று இலங்கையில் அரசு – எதிர்க்கட்சிகள் இணைந்த பொது ஆளும் கூட்டத்தை மேற்குநாடுகள் தெரிவு செய்து இருக்கின்றது. சொந்த இன மக்களை நம்பாத - தன் கட்சி ஜனநாயகத்தை மதிக்காத, கிறுக்கு பிடித்த எதிர்க் கட்சி தலைவரை மேற்கு தெரிவு செய்து இருக்கின்றது. இதன் மூலம் மக்களை ஏமாற்றுவதற்கும் - காட்டிக் கொடுப்பதற்கும் வழிகாட்டி இருக்கின்றது.

தமிழன் எதிர்கட்சித் தலைவர் என்று தமிழனாக கூறி பெருமைப்படுவதோ - வெளிநாட்டவனுக்கு தமிழன் பிரச்சனையை சொல்லும் சந்தர்ப்பம் என்று கூறி திருத்திப்படுவதோ, சொந்த அறிவீனத்தில் இருந்து உருவாகும் முட்டாள்தனமான இனவாதமாகும்.