Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மீனவர்களால் இந்துக்களின் "புனிதம்" கெட்டுவிடுமாம்!

மீனவர்களுக்கான மீன்பிடித் துறைமுகம் ஒன்றை கீரிமலையில் அமைக்க அரசு முனைந்து வருகின்றது. முதலைமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான சாதி இந்துக்கள் இதனை எதிர்த்து நிற்கின்றனர். கீரிமலை இந்துக்களின் "புனித" பிரதேசமாம்! மீனவர்கள் இந்து மதத்தைப் பின்பற்றினாலும், அவர்கள் (சாதி) இந்துகள் அல்ல என்பது தான், யாழ்ப்பாணிய சாதியக் கண்ணோட்டம். இந்த சாதி இந்துத்துவ கருத்தை பிரதிபலித்து அதன் பிரதிநிதியான முதலமைச்சர் கீரிமலையை இந்துக்களின் "புனித" பிரதேசம் என பிரகடனம் செய்திருக்கின்றார்.

பௌத்த அடிப்படைவாதிகளும், சிங்கள இனவாதிகளும் இலங்கையை பௌத்த சிங்களவர்களின் நாடாக எப்படிப் பிரகடனம் செய்கின்றனரோ, அவ்வாறே விக்கினேஸ்வரன் இந்துத்துவ அடிப்படைவாதியாக நின்று கீரிமலையை இந்துக்களின் "புனித" பிரதேசமாக அறிவித்து கொக்கரித்து இருக்கின்றார். விக்கினேஸ்வரனின் இந்த யாழ்ப்பாணிய சாதிய இந்துத்துவத்தை ஏற்றுக் கொண்டால், இலங்கையை சிங்கள இனவாதிகள், பௌத்த-சிங்கள நாடாக பிரகடனம் செய்வதில் எந்தப் பிழையையும் காண முடியாது.

மேலும் யார் இந்து என்ற கேள்வியை, இந்த விவகாரம் எழுப்புகின்றது. மீன்பிடியைச் செய்கின்ற, ஒடுக்கப்பட்ட சாதிய சமூகமாக இருக்கின்றவர்கள் இந்துக்கள் இல்லையா!? அவர்களின் மீன்பிடித் தொழிலானது "இந்துத்துவ புனிதத்துக்கு" முரணானதா?

இங்கு இந்துத்துவப் "புனிதம்" என்பது சாதியாகவும், அதன் பழக்க வழக்கமாகவும் முன்னிறுத்தப்படுகிறது. ஆடு, மாடு கோழி, மீனை உணவாக கொள்பவன் இந்துக்கள் அல்ல என்பதையே, "புனிதம்" மூலம் கூறுகின்றனர். இவர்களின் உணவும், தொழிலும் 'இந்துத்துவ புனிதத்துக்கு" விரோதமானதாக காட்டப்படுகின்றது. யாழ்ப்பாண சாதிய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் "புனித" ஒழுக்கத்துக்கு முரணானவர்கள் மீனவர்கள் என்பதைத்தான், விக்கினேஸ்வரனின் சாதிய இந்துத்துவக் கொழுப்பு வெளிப்படுத்தி நிற்கின்றது.

சாதி, மதம், இனம், பால்.... கடந்து மக்களுடன் மக்களாக வாழ முடியாதவர் முதலமைச்சர், சாதிய இந்துத்துவ யாழ் மேட்டுக் குடிகளை முன்னிறுத்திக் கொண்டு "புனிதம்" மூலம் சாதியைப் பிரகடனம் செய்கின்றார்.

மீன்பிடியை இந்துக்களின் "புனிதத்துக்கு" கேடாக கருதும் ஒரு முதலமைச்சருக்கு வாக்கு போட்டு தெரிவு செய்தவர்களில் மீனவர்களும் அடங்குவர். ஆனால் முதலமைச்சர் "புனிதத்தைக்" கோரும் சாதி இந்துக்களுக்காக வாந்தி எடுக்கின்றார்.

பௌத்த அடிப்படைவாதம் தனது புனித பிரதேசத்தில் பிற மத வழிபாட்டு தலங்களையும், புனிதமல்லாததாகக் கருதும் அனைத்தையும் அகற்றக் கோருகின்ற அதே அடிப்படைவாதத்தினைத் தான், இந்துத்துவ சாதிய அடிப்படைவாதமும் முன்வைக்கின்றது. சாதிய சமூகத்தை மீள யாழ்ப்பாணத்தில் நிறுவுகின்ற இன்றைய பொதுப் பின்னணியில், இதை நோக்க வேண்டும்.

இந்த இந்துத்துவ சாதியத்தை மூடிமறைக்க, அரசின் கொள்கையை தமக்கு ஏற்ப காட்ட முற்படுகின்றனர். அதாவது மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு மாற்றாக கீரிமலை துறைமுகத்தை அரசு முன்வைக்கிறது என்ற வாதமாகும். அரசின் கொள்கைக்கு எதிராக போராடுவதற்கு பதில், இந்துத்துவ சாதிக் கொள்கையை ஆதரிக்க முடியாது. கீரிமலையில் மற்றொரு துறைமுகத்தைக் கோருவதன் மூலம் தான், உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க முடியும். உழைத்து வாழும் மக்கள் நலன் சார்ந்து நிற்பவர்கள் செய்யவேண்டிய கடமை இது தான்.

உழைத்து வாழும் மக்களைப் பிரதிநித்துவப்படுத்தாத முதலாளித்துவ நவதாராளவாதிகள், அடிப்படைவாத சாதிய இந்துத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்வதையே தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். இப்படி உழைத்து வாழும் சமூகத்தின் தேவைகளை கண்டுகொள்ளாத ஒருவரை தெரிவு செய்யும் போது, சமூகம் தன் கால்களை வெட்டிவிட்டு தவழ்வதைத் தவிர வேறு வழியில்லை.

இறந்தவரை "புனிதப்படுத்துவதாகக்" கூறிக்கொண்டு, பகுத்தறிவற்ற மூடநம்பிக்கைகளை கீரிமலையில் சடங்காக்குகின்ற செயலுக்கு, பகுத்தறிவற்ற முதலமைச்சர் தலைமை தாங்குவது சமூகத்தின் சாபக்கேடு. வாழும் போது மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பதில் சாதிய சமூகத்தை கட்டிப் பாதுகாத்த மனிதனை, செத்த பின் புனிதப்படுத்தும் சாதிய சமூக அறம் வக்கிரமானது. அதன் நடத்தை ஓழுக்கக்கேடானது.

அரசியலில் தலைமை தாங்குகின்றவர்களின் தரங்கெட்ட செயல்கள் இதை ஆதரிக்கவும், இதை முன்னெடுக்கவும் வைக்கின்றது.

யுத்தத்தின் பின் மக்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும் தொழில்துறை முதலீடுகள், சமூக கல்வி சார்ந்த உதவிகள், ஊர் சார்ந்த குளங்கள், பொது மைதானங்கள், பொது வாசிகசாலை போன்ற அபிவிருத்திக்கு உதவுதல், கிராமங்கள் நகரங்களில் வீதிகளின் மரங்களை நட ஊக்குவிக்கும் திட்டங்கள் என்ற சமூகம் சார்ந்த பொது செயலுக்குப் பதில், கோயில்களைக் கட்டுகின்றதன் மூலம், சாதியை பலமாக நிறுவுகின்ற பாசிச கோமாளித்தனத்துக்கு "தமிழ்" அரசியல்வாதிகள் அடிக்கல் நாட்டுகின்றனர். திறப்புவிழாக்களை செய்கின்றனர். இப்படி இழிவான மனித விரோதங்களை முன்னின்று செய்வதன் மூலம் - மனித விரோதத்தையே சமூகத்துக்கு வழி காட்டுகின்றனர். தமிழ் அரசியல் வாதிகள் இதைத்தான் செய்கின்றனரே ஒழிய, மானிட விடுதலையையல்ல.

இந்த பிற்போக்குவாத இந்து சாதிய அடிப்படைவாத அமைப்பு முறையையே, விக்கினேஸ்வரன் "புனிதமாக" காட்டி, உழைத்து வாழும் மீன்பிடியை புனிதம் கெட்ட வாழ்க்கை முறையாக காட்டி நிற்கின்றார். மீன்பிடியை "புனிதம்" அல்லாத ஒன்றாக முன்னிறுத்துகின்ற இந்துத்துவ சாதிய தமிழ் இனவாத அரசியலை மக்கள் தூக்கியெறிய வேண்டும். உழைத்து வாழும் மீனவர்களுக்கு மட்டுமல்ல, மொத்த சமூகத்துக்கும் இது தான் விடிவைத் தரும். புனிதமோ, சாதியமோ, இந்துத்துமோ, இனவாதமோ மானிட விடுதலையைத் தரப்போவதில்லை. இது மக்களைப் பிளந்து, மனிதனை மனிதன் மிதிக்கவே வழிகாட்டும்.