Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்கள் விரோத சட்டங்கள் கொண்டு ஒடுக்கும் "நல்லாட்சி" மூகமுடி அரசு

வர்க்கமும் - சட்டமும்

அரசின் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கு, சட்டம், நீதி.., இதை அடிப்படையாகக் கொண்ட அமைதியையே அரசு அமைதியாக முன்வைக்கின்றது. ஆளும் கூட்டம் மக்களால் "தேர்தலில்" தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற வகையில், அவர்களின் கொள்கைகளும் முடிவுகளும் கேள்விக்கு இடமற்றவையாக "ஜனநாயகம்" வரையறுக்கின்றது. இதை கேள்விக்குள்ளாக்கி மக்கள் போராடும் போது அரச பயங்கரவாதத்தை ஏவிவிடுகின்றனர். பிரான்ஸ் முதல் இலங்கை வரை, இதற்கு உலகில் எந்த விதிவிலக்கும் கிடையாது.

மக்கள் ஆளும் வர்க்க பொருளாதார சட்டத்தை ஏற்று, அதற்கு அடங்கி ஒடுங்கி அமைதியாக வாழ்வதில்லை. சட்டம் ஆளும் வர்க்கம் சார்ந்த சுரண்டும் சட்டங்களாக இருப்பதால், இவை இனம், மதம், சாதி, நிறம், பால் சார்ந்ததாக செயற்படுகின்றது. சுரண்டும் வர்க்க சட்டங்கள், மக்களுக்கு எதிரானவையாகவே எங்கும் எப்போதும் இருக்கின்றது.

மக்கள் ஆளும் வர்க்க சட்டங்களையும், அதன் நடைமுறை விளைவுகளையும் எதிர்த்துத்தான் வாழ்கின்றனர். வாழ்வுக்காக போராடுகின்றனர். சுரண்டுவதற்கு எதிரான உழைக்கும் வர்க்கப் போராட்டங்களானது, மக்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்தும், மக்களுக்கான சட்டங்களையும் கோருகின்றது. உழைப்பு சுரண்டப்படுவதால் வர்க்கங்களாக சமூகம் பிரிந்து இருப்பதால், வர்க்க முரண்பாடு என்பதும் சட்டங்களால் தடுக்க முடியாதவை. வர்க்க முரண்பாட்டை ஒடுக்கவே சட்டம் என்பதே சட்டத்தின் வரலாறு. ஒடுக்கும் வர்க்க சட்டத்தை எதிர்த்த வர்க்கப் போராட்டமே மனித வரலாறாக நீள்கின்றது.

வர்க்க போராட்டத்தை தடுக்க சட்டரீதியான போராட்டத்தை ஆளும் வர்க்கம் முன்வைக்கின்றது. இந்த வகையில் சட்டரீதியாக வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடுவதை ஆளும் வர்க்கச் சட்டம் அனுமதிக்கின்றது. இதன் மூலம் வர்க்கப் போராட்டத்தை குணாம்சரீதியாக சட்ட வரம்புக்குள் முடக்கிவிட முனைகின்றது.

ஆளும் வர்க்கம் அனுமதிக்கும் சட்டரீதியான போராட்டங்கள் வளர்ச்சி பெற்ற வர்க்க போர்க்குணாம்சத்தை பெறுவதற்கல்ல. மாறாக சட்டம் அனுமதிக்கும் வரம்புக்குள் முடங்கிப் போவதையே சட்டம் "போராட்டம், உரி;மை" என்கின்றது. போராட விரும்புவனுக்கு போராடுவது போன்று தலைமை தாங்கி நடி என்கின்றது. இதைத்தான் சட்டம் அனுமதிக்கின்றது. சட்டத்துக்கு உட்பட்ட போராட்டங்கள் இதைத்தான் செய்கின்றன. சட்டரீதியான போராட்டங்களை நடத்தும் இடதுசாரிக் கட்சிகளை அரசு சட்டங்கள் மூலம் தன்னியல்பாக உருவாக்குகின்றது. சட்டத்துக்குக் கட்டுப்பட்ட இடதுசாரிய கட்சி வரலாறுகள் வர்க்கப் போராட்டத்தை நடத்துவதில்லை.

இலங்கை வரலாற்றில் மக்கள் திரள் போராட்டங்களானது போர்க் குணாம்சம் கொண்ட போராட்டங்களாக மாறுவதை தடுக்கும் வண்ணம் ஆளும் வர்க்கங்கள் போராட்டங்களை அனுமதித்து வருகின்றது. இதன் மூலம் சட்டத்துக்கு உட்பட்டு போராடும் போராட்டத் தலைவர்களை உருவாக்கி வருவதுடன் சட்டவரம்புக்குட்பட்ட போராட்டத்தை நடத்துவதே வரலாறாகவும் இருக்கின்றது. வர்க்க உணர்வு பெற்ற வர்க்கத்தையோ போர்க்குணாம்சம் கொண்ட போராட்டங்களையோ, கடந்த பத்தாண்டுகளிலான இலங்கை இடதுசாரிய வரலாற்றில் காண முடியாது.

மறுபக்கத்தில் போர்க்குணாம்சம் கொண்ட மக்கள் திரள் போராட்டத்தை நிராகரித்த ஆயுதம் ஏந்திய இளைஞர் குழுக்கள் மக்களுக்காக வன்முறையில் ஈடுபட்டதே இடதுசாரிய போராட்டமாக இருந்ததே மற்றொரு வரலாறு.

சட்டத்துக்கு அடங்கியதும் மக்களுக்காக ஆயுதம் ஏந்திய இளைஞர்கள், கடந்த இரு இடதுசாரிய வரலாற்றுப் போக்கையும் தாண்டியதே வர்க்கப் போராட்டம். இந்த வகையில் புரட்சிகரமான வர்க்கப் போராட்டத்தை முன்னிலை சோசலிசக் கட்சி முன்னிறுத்தி நிற்கின்றது. அதேநேரம் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும், தமிழ் - சிங்களம் என்ற இனரீதியான இடதுசாரிய கட்சி வரலாற்றையும் கடந்து, இனம் கடந்த போர்க்குணாம்சம் கொண்ட வர்க்கப் போராட்டத்தை கோரி நிற்கின்றது.

போர்க் குணாம்சம் மிக்க நீண்ட இடைவிடாத தொடர் போராட்டங்கள் மூலம், மக்களை வர்க்க உணர்வு பெற வைக்கின்றது. வீதியில் இறங்கிக் கோசம் போடுவதுடன் அரசியலை நிறுத்திக் கொள்வது வர்க்கப் போராட்டமல்ல என்ற உண்மையை, நடைமுறை மூலமான படிப்பினையை உருவாக்குகின்றது.

ஆளும் வர்க்கத்தைப் பாதுகாக்கும் அரச இயந்திரத்துடன் முட்டி மோதுவதன் மூலம், உழைக்கும் வர்க்க அதிகாரத்தை கோருவதை, ஆளும் வர்க்கம் விரும்புவதில்லை, அனுமதிப்பதுமில்லை.

இந்தப் பின்னணியில் இதை ஒடுக்கவே இன்று சட்டத்தைக் அரசு கையில் எடுக்கின்றது. ஆளும் வர்க்கங்கள் போராட்டத்தை வன்முறைக்குக்குள் இட்டுச் சென்று சட்டரீதியாக தலைவர்களை கைது செய்ய முனைகின்றது. பொது நெருக்கடியை உருவாக்கி, தலைவர்களை தலைமறைவாக்க முனைகின்றது. இதன் மூலம் மக்களுடன் தொடர்பை இல்லாதாக்கி போராட்டத்தை முடக்க முனைகின்றது.

நல்லாட்சி அரசு இன்று செய்ய முனைவது இதைத்தான். சட்டம் மூலம் ஆளும் வர்க்கத்துக்கு சலுகையும் உழைக்கும் மக்களுக்கு தண்டனைகள் மூலமும், வர்க்க முரண்பாட்டை தணிக்க முனைகின்றது.

நல்லாட்சி என்பது உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரானது

சட்டத்தின் போர்வையில் முன்னிலை சோசலிசக் கட்சித் தவைர்கள் கைது செய்யப்படுகின்ற அதேநேரம் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்தக் கைதுகளுக்கு காரணமாக இருப்பது அவர்கள் கொண்டுள்ள வர்க்க அரசியலே. ஆளும் வர்க்கத்துக்கு எதிராக போர்க்குணமிக்க வர்க்கப் போராட்டங்களை நடத்தும் கட்சியாக முன்னிலை சோசலிசக் கட்சி இருப்பதால் அதை முடக்க ஆளும் வர்க்கம் சட்டத்தைக் கையில் எடுத்திருக்கின்றது.

சட்டத்தின் ஆட்சியை நடத்துவதாகக் காட்டிக்கொண்டு உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வருவதும் அதை மீறிப் போராடும் போது கைதுகளைச் செய்வதும் நடந்தேறுகின்றது.

சட்டத்தை மீறிய கைதுகள், கடத்தல்கள், கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ... என்று, பாரிய குற்றங்களுக்கு காரணமாக இருந்ததே இந்த அரசு இயந்திரம் தான். கப்பம், லஞ்சம், ஊழல் .. என்று புளுத்துப் போன அரசு இயந்திரத்தின், சட்டம், நீதி உண்மையானதுமல்ல, மக்களுக்கானதுமல்ல.

நாட்டையும் மக்களையும் பெரு மூலதனத்துக்கு விற்று வரும் கொள்ளைக் கூட்டம் ஆளும் நாட்டில் கல்வி, மருத்துவம், குடிநீர் என அனைத்தும் விற்பனைப் பொருளாக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் விரோத பொருளாதாரத்தை தங்கள் அரசியல் கொள்கையாக முன்னெடுக்கும் அரசு, உழைக்கும் மக்களினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் உரி;மைகளை மறுப்பதும் ஒடுக்குவதுமே அரசின் கடமையாக மாறி வருகின்றது. இதை மீறிப் போராடும் போது, அரச வன்முறை ஏவப்படுவது நடந்தேறுகின்றது. சட்டம் என்பது ஒடுக்குபவனின் ஆயுதமாக இருக்கின்றது. இதற்காகவே ஒடுக்கப்பட்டவனுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்படுகின்றது. இத்தகைய சட்டங்கள் மக்களுக்கானதல்ல.

ஒடுக்குபவனுக்கும் சொத்தை வைத்திருப்பவனை பாதுகாக்கவே சட்டங்கள். "ஜனநாயகம்" என்று பீற்றிக் கொள்ளும் ஆளும் வர்க்கம், எப்போதும் தனக்கான ஒடுக்குமுறைச் சட்டங்களை தேர்தல் "ஜனநாயகம்" மூலம் உருவாக்குகின்றது.

இப்படிப்பட்ட மக்கள் விரோத சட்ட ஆட்சியின் கோரத்தனமானது கடந்த சில பத்தாண்டுகளாக நாட்டில் இரத்த ஆறையே ஒட வைத்தது. இலட்சக்கணக்கானவர்கள் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டனர். கொன்று குவித்தவர்கள் தலைமையிலான ஆளும் வர்க்கம் சட்டத்தின் போர்வையில் போராடும் மக்களை வன்முறை மூலம் ஒடுக்குகின்றது. போராட்டத்துக்கு தலைமை தாங்கும் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றது.

இன்றைய கைதுகளின் பின்னனி என்பது சுரண்டப்படும் வர்க்கத்துக்கு எதிரான போர்க்குணம் கொண்ட வர்க்கப் போராட்டமே காரணமாக இருக்கின்றது. "நல்லாட்சி" என்பது சுரண்டும் வர்க்க ஆட்சி தான் என்பதை மூடிமறைக்க முடியாது நடைமுறை மூலம் நிறுவி வருகின்றது. இனி "நல்லாட்சி" மூகமுடியை போடமுடியாது அம்மணமாகி நிற்கின்றது.