Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"தலித்" என்ற பெயரில் போராடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானதா!?

அரசியல் புரிதலை ஏற்படுத்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணியானது "கருத்தும் - கலந்துரையாடலும்" நிகழ்வு ஒன்றை, 30.04.2017 அன்று பாரிசில் நடத்தியது. அரசியல்ரீதியாக செயலூக்கமுள்ள - புதிய அரசியல் நடைமுறையை விரும்புகின்ற அனைவரையும், அன்றைய நிகழ்வுகள் அரசியல்ரீதியாக வழிகாட்டியது என்றால் மிகையாகாது.

இந்த நிகழ்வில் ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் அகமுரண்பாடான சாதியம் குறித்து பேசப்பட்டது. சாதியத்தை எதிர்த்துப் போராடும் தலித் முன்னணியும், சாதியம் குறித்து பேசியது. இதன் பின் "தலித்தியம்" குறித்து, எதிர்மறையான விவாதம் நடந்தேறியது. 

 

எதிர்மறையான தர்க்கமானது, சாதிய ஒழிப்பு குறித்த அரசியல் வேறுபாடுகளைக் கொண்டதாக இருக்கவில்லை. மாறாக தனிப்பட்ட அரசியல் காழ்ப்புகள், "தலித்தியம்" குறித்த குறுகிய அகக் கண்ணோட்டங்கள், கடந்தகால அரசியல் செயற்பாட்டை முன்னிறுத்தி அரசியல் நடத்தும் குறுகிய வரட்டுவாதக் போக்குகள், "தலித்தியம்" என்பது தமிழ் தேசியத்தை உடைக்கும் என்ற அரசியல் கண்ணோட்டம், சொற்கள் குறித்த வாதம் இவை போன்று வேறும் பலவாக குறுகிக் கொண்டு, எதிர்மறையான தர்க்கங்களாகவே கட்டமைக்கப்பட்டது. 

இவற்றில் சில புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலூக்கமுள்ள ஒன்றுபட்ட அரசியல் நடைமுறைச் செயற்பாட்டுக்கு, அரசியல்ரீதியாகவே முட்டுக்கட்டை போட முனைகின்றது. இன்று நடைமுறையில் போராடுகின்ற, நடைமுறையில் போராட விரும்புகின்ற, போராட்டங்களை ஆதரிக்கின்ற புத்திஜீவிகளை, செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து முன்நகர்த்தும் இன்றைய அரசியல் போராட்டத்தை, இழுத்து வீழ்த்த முனைகின்றனர்.   

தலித் முன்னணி முன்வைக்கும் 'தலித்தியமானது",  எமது போராட்டத்துக்கு தடையாக இருப்பதாக நாங்கள் கருதுவது கிடையாது. நாங்கள் அவர்கள் போராடும் ஜனநாயக உரிமையை மதிப்பவர்கள்.  

இந்த வகையில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியானது

1.முரணற்ற ஜனநாயகத்தை முன்னிறுத்தும் அவர்களின் அரசியல் அடிப்படைகளுடன், புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இணைந்து பயணிக்க முடியும்.       

2.இடதுசாரிய சாதிய எதிர்ப்பு உள்ளடக்கத்துடன் தலித் முன்னணி ஒன்றுபட்ட போராடக் கோரும் அடிப்படையிலும், இணைந்து பயணிக்க முடியும். 

இந்த வகையில் ஒன்றிணைந்து பயணிக்கின்ற எமது செயற்பாடு என்பது, மக்களை நடைமுறை மூலம் அணிதிரட்டும் பரந்த அரசியல் அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டது. அனைத்தையும் நடைமுறை மூலம் தீர்க்கும், அரசியல் வழிமுறைகளைக் கொண்டது. 

மார்க்சிய லெனினியத்தை அரசியல் வழிமுறையாக ஏற்றுக்கொண்ட நாங்கள், சாதி ஒழிப்பு என்பது சோசலிச சமூக அமைப்பில் தான் சாத்தியம் என்பது, எமது சமூகப் பொருளாதார விஞ்ஞான ஆய்வு முடிவுகளாகும். அதற்காக சாதியை ஒழிக்கும் சோசலிசம் வரும் வரை, யாரும் போராடக் கூடாது என்பது எந்த வகையிலும் மார்க்சியமுமல்ல - ஜனநாயகமாகவும் இருக்க முடியாது. அதேநேரம் சோசலிச சமூக அமைப்பில் தீர்க்கப்படும் முரண்பாடுகளை, மார்க்சியம் ஓய்வில் வைப்பதில்லை. மாறாக முரண்பாடுகள் மீது, முரணற்ற ஜனநாயகத்துக்காக போராடுவதையே எமது அரசியல் நடைமுறையாக கொள்கின்றது.  

இதே ஜனநாயக அடிப்படையில் போராடுவதற்காக மார்க்சியம் அல்லாத ஜனநாயக இயக்கங்கள் தோன்றுவதையும், அதற்காக அவர்கள் போராடுவதையும் மறுப்பது மார்க்சியமல்ல. மாறாக முரணற்ற ஜனநாயக இயக்கங்களுடன் ஒன்றுபட்டு போராடுவதை, இடதுசாரியம் முன்வைக்கின்றது. இதுவல்லாத இடதுசாரிய தர்க்கங்கள் வரட்டுவாதமாகவோ, குறுங்குழுவாதமாகவோ, செயலற்ற கோட்பாட்டுவாத பிரமுகர்தன இருப்புவாதமாகவோ தான் இருக்க முடியும்.        

கடந்தகாலம் குறித்து முரண்பாடுகளை முன்னிறுத்தி முன்வைக்கும் தர்க்கங்கள், வாதங்கள்  தூய்மைவாதம் சார்ந்த கண்ணோட்டமாகவே வெளிப்பட முடியும். சுயவிமர்சனத்தை நடைமுறையாக உணராததன், அரசியல் விளைவாகும். கடந்தகால அரசியல் பொது நடத்தைகளாக எங்கும் எல்லாரிடம் இருக்க கூடியவற்றை, விமர்சனங்களுக்கும்,  சுயவிமர்சனங்களுக்கும் உள்ளாக்குவது என்பது, மக்களின் விடுதலைக்கான புதிய அரசியல் நடைமுறை மூலம் தான் தீர்வு காணப்படவேண்டும்;.

மார்க்சிய இயங்கியலின்படி எல்லாம் மாறிக் கொண்டு, மாற்றத்துக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றது. இதை நிராகரிப்பது என்பது, சமூக இயக்கத்தை இழுத்து வீழ்த்துவதற்கான அரசியல் முன்முயற்சியாகும்;.       

"தலித்தியம்" அல்லது சாதியம் குறித்த மார்க்சிய நிலைப்பாடு, தமி;ழ் தேசியத்தை பிளக்கும்  அரசியலாகக் காட்டுவது, யாழ் வெள்ளாளிய சாதிய மேலாதிக்கத்தை தக்கவைக்கின்ற சாதிய வாதமாகும். ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் அக முரண்பாட்டுக்கு எதிராகப் போராட வேண்டிய சர்வதேசிய உள்ளடக்கத்தை மறுதலிக்கின்ற கோட்பாடாகும். 

குறுகிய அளவீடுகளைக் கடந்து,  மக்கள் மத்தியில் இன்றைய எதார்த்தம் மீதான நடைமுறையை முன்வைத்து பேசுவதும் - செயற்படுவதன் மூலமுமே, அவரவர் முரண்பாடுகளான அரசியல் வழிமுறையூடாக அணிதிரள வேண்டும். இது இடதுசாரிய போக்கு குறித்து மட்டுமல்ல, தேசியம், சாதியம், பெண்ணியம்... என சமூக இயக்கத்தின் அனைத்துக்கும் பொருந்தும்.