Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதி அடிப்படையிலான குடியிருப்புக்களும் - மயானங்களும்

குடியிருப்புக்குள் மயானங்கள் இருக்கும் பிரச்சனை என்பது சுற்றுச்சூழல் பிரச்சனையல்ல, மாறாக ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட சாதிகளுக்கு இடையிலான பிரச்சனையாகும். மயானங்களுக்கு அருகில் ஒடுக்கும் சாதிகளின் குடியிருப்புகள் இருந்தால், சாதி அடிப்படையிலான தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொள்ளுமா எனின் இல்லை. இதிலிருந்து ஒரு உண்மை மிகத்தெளிவாகின்றது. அதாவது ஒடுக்கப்பட்ட சாதிகள் மயானங்கள் அருகில் வாழ்வதை, ஒடுக்கும் சாதிகளின் வாழ்வியல் கண்ணோட்டம் அங்கீகரிக்கின்றது. இங்கு ஒடுக்கப்பட்ட சாதிகளை ஒடுக்கும் சாதிய மனநிலை தான், குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானங்கள் தொடர்ந்து தக்க வைக்கப்படுகின்றது. ஒடுக்கும் சாதி மனநிலையில் இருந்து கருத்துகள் முன்வைக்கப்படுவதுடன், அரசியலும் கட்டமைக்கப்படுகின்றது. இந்தப் பின்னணியில் அடக்குமுறைகளைக் கையாள்வதும், அரசு அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவதும் நடந்தேறுகின்றது.


குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் மயானங்களை அகற்றக் கோரி, யுத்தம் முடிந்த கையோடு சட்டரீதியான வழக்குகள் நீதிமன்றங்களுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த வழக்குகள் இன்னமும் நீதிமன்றங்களில் தொடருகின்றது. அதேநேரம் இது போன்ற வழக்கு ஒன்றில் நீதிமன்றம் சாதிய வடிவத்தை பூசி மெழுகி வழங்கிய தீர்ப்பை அடுத்து, மோதல்களும் கைதுகளும் நடைபெற்றது. இதையடுத்து, மக்கள் குடியிருப்புகள் மத்தியில் உள்ள அனைத்து மயானங்களையும் அகற்றக் கோரி, தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வருகின்றது.

 

 

 

 

இலங்கைச் சட்டங்கள், மக்கள் குடியிருப்புக்களிலிருந்து மயானத்துக்கு இருக்க வேண்டிய இடைவெளிகளை வரையறுத்து இருக்கின்றது. நீதிமன்றங்கள் சட்ட அடிப்படையில் நீதி வழங்காது, சாதிய சமூக அமைப்புக்கு ஏற்ப சட்டம் வளைந்து கொடுக்கின்ற பொதுப் பின்னணியில், மக்கள் போராட்டமாக இவை மாறி வருகின்றது. நாட்டில் பொதுச் சட்டத்தை மீறி யாழ்ப்பாணத்தில் மயானங்கள் இருப்பதென்பது, மயானத்துக்கு அருகில் வாழ்பவர்கள் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் என்பதால் தான்.

இதனாலேயே மயானங்களை அகற்றக் கோரும் போராட்டம் இயல்பாகவே ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களின் போராட்டமாக இருப்பது எதார்த்தமாகி விடுகின்றது. ஒடுக்கும் சாதி மனநிலைக்கு எதிரான போராட்டமாக, அதாவது யாழ் மையவாத வெள்ளாளிய சாதிய சிந்தனை முறைக்கு எதிரான போராட்டமாகவும் இது இருக்கின்றது. மயானப் பிரச்சனை என்பதைக் கடந்து, சாதிய சமூக மனப்பான்மைக்கு எதிரான போராட்;டமாகவும் இருக்கின்றது. இருந்தபோதும் இன்னமும் வெறும் மயானப் பிரச்சனையாக மட்டும் குறுக்கி காண்பதும், அதையே வெளிப்படுத்துவதுமாக இருக்கின்றது. இதைக் கடந்து ஒடுக்கும் சாதிய வாழ்க்கை முறைமைக்கு எதிரானதாக, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களை அணிதிரட்டும் வண்ணம், கோசங்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது.

குறிப்பாக குடியிருப்புகள் மத்தியில் மயானங்கள் என்பது, யாழ் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக காட்டப்படுகின்றது. இந்த வகையில் சாதிப் பண்பாடு, சாதிய உழைப்பு, சாதிக் கடமைகளைச்… செய்யக் கோரும் மரணச் சடங்காகவே தொடருகின்ற சூழலில், சாதியின் பண்பாட்டு அடையாளமாக மயானங்களும் எஞ்சிக் கிடக்கின்றது. மயானங்கள் என்பது சாதியக் குடியிருப்பு அடிப்படையிலான கிராமத்தின் உயிர்மூச்சாக இருப்பதன் மூலமே, கிராமிய சாதிய வழக்குகளைத் தொடர ஏதுவாகின்றது.

இது ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மேலான, ஒடுக்கும் சாதிய மேலாதிக்கத்துக்கு மயானங்கள் உதவுகின்றது. ஒடுக்கும் சாதிகளின் வாழ்விடங்களையும் சாதி அந்தஸ்த்தையும் நிர்ணயிக்க கோயில்கள் இருப்பது போல், ஒடுக்கப்பட்ட சாதிகளின் வாழ்விடத்தை தாழ்ந்ததாக அவர்களை கீழானவராகவும் நிர்ணயம் செய்ய, மயானங்கள் உதவுகின்றது. ஒரு ஊரில் உள்ள கோயிலும், மயானமும், சாதியப் பண்பாட்டு வாழ்க்கைக் கூறுகளை நிர்ணயம் செய்கின்றது.

மயானங்களை அகற்ற மறுக்கின்ற ஒடுக்கும் சாதிய மனப்பாங்கின் பின்னணியில் இருப்பது, சாதிய வாழ்வு முறையேயாகும். ஊரில் யார் வாழ்வது, ஊருக்கு வெளியில் யார் வாழ்வது என்ற வரையறைகளே, மயானங்களை அகற்ற மறுக்கின்றது. மயானங்களை அகற்றிவிட்டால், சாதி அடிப்படையிலான ஊரை வெளிப்படையாக காணவும், காட்டவும் முடியாது போய்விடும். இந்த அடிப்படையிலேயே வடமாகாணசபை தொடக்கம் அதிகாரத்தில் உள்ள தமிழ் அதிகாரிகள் வரை, சாதிய ஊர்களை தக்க வைக்கின்ற வண்ணம் மயானங்களை அகற்ற முன்வருவதில்லை.

குடியிருப்புக்கு மத்தியில் மயானங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற சாதிய சிந்தனை, நவீன மாற்றங்களை மறுக்கின்றது. சட்ட ரீதியாகவே மயானங்களை அகற்ற மறுக்கும் நீதிமன்றங்கள் முதல் இதற்கு தீர்வு காண மறுக்கும் வடக்கு மாகாணசபை வரை, சாதிய சமூகக் கண்ணோட்டத்தில் தான் அணுகுகின்றது. அரசு அதிகார நிறுவனங்களில் இருக்கின்ற தமிழர்கள், சாதிய சமூக கண்ணோட்டத்தில் இருந்து அணுகுவது தொடருகின்றது. ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் பெயர்களை சாதிப் பெயராக மாற்றி எழுதுவது முதல் ஒடுக்கப்பட்ட மக்களை தனியாக ஒதுக்கி தனிமைப்படுத்தும் ஆயிரம் வகையான சாதி வகை செயற்பாடுகளை, அரசு அதிகாரத்தைக் கொண்டு செய்கின்றவராக இருக்கின்றனர்.

ஒடுக்கும் சாதியின் மேலாதிக்கத்தை பாதுகாக்கும் பின்னணியிலேயே, மயானங்கள் குடியிருப்புகள் மத்தியில் இருக்க வேண்டும் என்பதில், தமிழ் அதிகார வர்க்கமும், தமிழ் அரசியலும் உறுதியாக இருக்கின்றது. இது தான் இதற்கு பின்னணியில் இருக்கின்ற அடிப்படையாகும்.         

காலாகாலமாக இருந்து மயானங்கள் என்ற வாதம்.

மயானங்களின் இருப்பிடம் என்பதும், தமிழரின் பாரம்பரியமான வாழ்வியல் அடையாளம் என்கின்றனர். அதேநேரம் மயான அமைவிடம் தமது தனிப்பட்ட சொத்து அல்லது பாரம்பரியமான ஊர்களின் உரிமை என்கின்றனர். இந்த மயானங்களை அகற்றக் கோருவது எந்த வகையில் நியாயமானது என்று கேட்கின்றனர்.

பாரம்பரியமான மயானங்களும் அதன் இருப்பிடமும் என்பது, முதலில் அது ஒட்டுமொத்த தமிழரின் பாரம்பரியமல்ல. ஒடுக்கும் சாதியத்தின் சாதியப் பாரம்பரியமாகும்... ஊருக்குள் உள்ள  கோயிலைச் சுற்றி யார் யார் எந்த இடத்தில் வாழ முடியும் என்று தீர்மானிப்பது சாதியமே. ஒடுக்கும் சாதிகளின் ஒடுக்கும் அதிகார தர நிர்ணயப்படி, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு மயானத்தை அண்டி வாழ்விடத்தை நிர்ணயித்தவர்கள் ஒடுக்கும் சாதிகள் தான். வாழ்விடங்கள் தன்னியல்பாக தோன்றியதல்ல, மாறாக சாதிய வாழ்வியலான சமூகக் கட்டமைப்பினால் திணிக்கப்பட்டவை.

ஒடுக்கப்பட்ட சாதிகளை நிலமற்றவராகவும், ஒடுக்கும் சாதிகளுக்கு சாதியக் கடமைகளை நிறைவு செய்யும் வண்ணம், ஒடுக்கப்பட்ட சாதிகளின் உழைப்பையும் அதற்கு ஏற்ற  வாழ்விடத்தையும், ஒடுக்கும் சாதிகளே நிர்ணயம் செய்தது. நிலத்தை உழ முடியாத கலட்டிகளையும், நீர் பிடிப்பற்ற பகுதிகளையும், மனிதர்கள் வாழ அஞ்சும் மயானங்கள் அருகிலும் ஒடுக்கப்பட்ட சாதிகளை வாழுமாறு, ஒடுக்கும் சாதிகளின் ஒடுக்குமுறை மூலம்  உருவானதே ஒடுக்கப்பட்ட சாதிகளின் குடிருப்புகள். இது தான் தமிழனின் சாதிய வரலாறு. இந்த வாழ்விடங்கள் என்பது, சாதி கடந்த இயல்பான தேர்வுவல்ல.

1960 களில் பொது இடங்களை பயன்படுத்தும் உரிமைக்காகவும், ஒடுக்கும் சாதிய பண்பாட்டு முறைமைக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, ஒடுக்கப்பட்ட சாதிகள் தமக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராக விழிப்புற்றன. ஒடுக்கப்பட்ட சாதிகள் கல்வி அறிவு பெற்றதுடன், நவீன விஞ்ஞானத்தின் துணையுடன் தமது கலட்டு நிலங்களை விவசாயத்துக்கு பண்படுத்த முடிந்தமையும், தங்கள் குடும்ப விருத்திக்கு ஏற்ப தமது வாழ்விடத்துக்கு அருகில் இருந்த பொதுநிலத்தில் குடியேறிய சூழல்கள்.. அனைத்தும் இணைந்து, மனிதனாக வாழ்தற்கேற்ற சுற்றுச்சூழலை கோருவது அவர்களின் அடிப்படை உரிமையாக மாறியது. இதை ஒடுக்கும் சாதிகள், தங்கள் ஒடுக்கும் சாதிய சமூக மனப்பாங்கில் நின்று எதிர்க்கின்றனர். அதற்கு ஏற்ப தங்கள் பாரம்பரிய மயானம் அல்லது தங்கள் சொத்து என்று ஒடுக்கும் சாதிய மனநிலையில் இருந்து முன்வைக்கின்றனர். இங்கு மனிதனுக்கு எதிராக வெளிப்படுவது, மனித விரோதமான சாதியக் கண்ணோட்டமே.

மனித அறிவும், வாழ்வும், வளர்ச்சி பெற்று வருகின்ற பொதுச் சூழலில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மயானங்கள் அமைக்கப்பட வேண்டும். மனித உரிமை அடிப்படையிலும், மயானங்கள்  அகற்றப்பட வேண்டும். சாதிய சிந்தனை மற்றும் சாதிய வாழ்க்கை முறைக்கு முடிவு கட்டியாக வேண்டும்.

ஒடுக்கும் சாதிய சமூக அமைப்பும், வாழ்க்கை முறை இதை மறுதளிக்கின்றது. உதாரணமாக யாழ் நகரசபை நகரத்தைச் சுத்தப்படுத்தும் நவீன கால்வாய் முறைக்குப் பதில், இன்னும் சாதிய நடைமுறையை தொடர்ந்து தக்க வைத்திருக்கின்ற பின்னணியில் இருப்பது, சாதி மற்றும் மலிவான கூலி முறைமையுமே காரணமாக இருப்பதைக் காண முடியும். இதே போன்று  இன்னமும் வாளி மூலம் மலத்தை அகற்றும் சாதிய முறைமையை, தொடர்ந்து யாழ் நகரசபை தக்க வைத்திருக்கின்றது.

யாழ் நகர சுத்திகரிப்பு முறைமையில் இருக்கின்ற சாதி முறைமைக்கு பதில், நவீன சுத்திகரிப்புகளை புகுத்துவதற்கு, யாழ் மையவாத சாதிய சிந்தனையே தடையாக இருக்கின்றது. சாதிய சமூக முறைமையை தொடர்ந்து தக்க வைத்திருக்க வேண்டும் என்றால், சாதி அடிப்படையிலான எஞ்சிய சாதிய உழைப்பிலான பிரிவினையை அழிக்கக் கூடாது. சாதி ரீதியாக இழிவாக்கப்பட்ட சாதியத் தொழில்களை தொடர வேண்டும். இதுதான் மாகாணசபை முதல் தமிழ் அதிகார வர்க்கம் வரையிலான சாதியக் கண்ணோட்டமாகும்.

இது போன்றே குப்பைகளுக்கும் நடக்கின்றது. குப்பையை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு கொண்டு வரும் நவீன முறைமைக்கு பதில், வெட்ட வெளிகளிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற பகுதியிலும் கொட்டுகின்ற மனநிலை என்பது எங்கிருந்து வருகின்றது.

ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய இழிவான அதிகார வர்க்க கண்ணோட்டமும், சாதிய மனப்பாங்கும், மலிவான முறை பற்றிய முதலாளித்துவ கண்ணோட்டமும், மலிவான கூலி என்ற இலாப வெறிக் கண்ணோட்டமும் .. இதன் பின் காணப்படுகின்றது. மக்களை ஒடுக்கி வாழ்கின்றவனின் நடத்தை, நவீன முறைமைகள் மூலம் ஒடுக்கப்பட்டவர்கள் விடுபடுவதை மறுதளிக்கின்றது. அண்மையில் கொழும்புக் குப்பைகளை மலையாக குவித்து, அருகில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகள் மேல் சரிந்து வீழ்ந்ததும், இதில் பலர் உயிர் இழந்ததும் அவலமான சம்பவங்கள். இதை அடுத்து தமக்கு அருகில் குப்பை கொட்டுவதற்கு எதிராக, மக்கள் போராடத் தொடங்கி இருக்கின்றனர்.

இது போன்றதுதான், மயானங்களை அகற்றக் கோரும் போராட்டங்களும். யாழ் குடாநாட்டிற்கு மையப்படுத்தப்பட்ட ஒரு மின்சார மயானமே போதுமானது. சாதிக்கொரு மயானமும், சாதி ஊருக்கொரு மயானமும் அவசியமற்றது. மின்சார மயானம் அதிக செலவு கொண்டதுமல்ல. யாழ் மையவாத சாதி மனப்பாங்கு கொண்ட வடமாகாண சபையும், அதிகார வர்க்கமும் இதற்கு தடையாக இருக்கின்றது. மின்சார மயானத்தை நிறுவ மறுப்பது இலங்கை அரசாங்கம் அல்ல. மாறாக தமிழனின் சாதிய அதிகார வர்க்கச் சிந்தனையே, இதற்கு தடையாக இருக்கின்றது.

இந்த நிலையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களும் எதையும் செய்யாது, ஊழலும் - அதிகாரம் -  ஒடுக்கும் சாதி ஆதிக்க வெறி கொண்ட வடமாகாண சபையே பிணங்களை எரிப்பதற்கு உகந்த இடம் என்றால் மிகையானதல்ல. அங்கு சாதிப் பிணத்தை மட்டுமல்ல, அங்கு அரசியல் மூலம் கொலுவேற்று இருக்கும் அதிகார வர்க்க சாதியத்தையும் சேர்த்து எரித்துவிட முடியும். இது தான் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னுள்ள அரசியல் பாதையாகும்.