Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜே.வி.பியினதும் - புலிகளினதும் சாதியம் குறித்து அணுகுமுறை ஒன்றா!?

சாதி குறித்த விவாதங்கள், போராட்டங்கள் மேலெழுந்துள்ள நிலையில், கடந்தகால போராட்டங்கள் குறித்து தவறாக வியாக்கியானப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக விடுதலைப் புலிகள், மற்றும் ஜே.வி.பியின் சாதிய அணுகுமுறைகள் குறித்து தவறான கருத்துக்கள், இடதுசாரியத்தின் பெயரில் முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. அதேநேரம் ஆயுதப் போராட்டம் குறித்தும், இடதுசாரியம் குறித்தும், சாதியம் குறித்தும், போராட்டங்களை அழித்த அரசின் நோக்கம் குறித்தும் தவறான அரசியல் தர்க்கம், சமூக விஞ்ஞான கண்ணோட்டத்துக்கு முரணாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.     

நடந்த ஆயுதப் போராட்டமானது, தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததாலா நடந்தது?

விடுதலைப் புலிகளும், ஜே.வி.பியும் "நடைமுறையில் உள்ள தேர்தல் அரசியலில் தமக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது என்று தெரிந்து ஆயுதப் போராட்ட வழியை பின்பற்றினார்கள்." என்று முன்வைக்கப்படும் கருத்து, நடந்த ஆயுதப் போராட்டம் குறித்து தவறான அரசியல் கண்ணோட்டமாகும். தேர்தல் அரசியலில் வாய்ப்பு கிடைக்காததாலேயே, ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்று கூறுவதன் மூலம் இனவொடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறையை மறுதலிக்கின்ற அரசியல் உள்ளடக்கத்தை இது கொண்டு இருக்கின்றது. அதேநேரம் இந்த முரண்பாடுகளை தேர்தல் அரசியல் மூலம் தீர்வு காணமுடியும் என்ற கருத்தையும், ஆயுதப் போராட்டம் என்பது தவறானது என்ற பார்வையையும் முன்வைக்கின்றது. 

மக்களை இனரீதியாக பிரித்தாளும் ஆளும் வர்க்க அரசியல் இனவொடுக்குமுறை செய்த பொதுப் பின்னணியிலும், தெற்கில் இனரீதியான வன்முறைகளை அரசு முன்னின்று நடத்திய வரலாற்று வளர்ச்சியிலேயே, இனரீதியான ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் ஒடுக்கப்பட்ட சூழலிலும், பாராளுமன்றம் மூலமான தீர்வுகள் தோற்கடிக்கப்பட்ட பின்னணியிலும், "தமிமீழத்துக்கான" ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. புலிகள் மட்டுமல்ல 32 இயக்கங்கள் தோன்றியதுடன், "இடதுசாரிய" இயக்கங்களும் உருவானது. இங்கு "தேர்தல் மூலம் வாய்ப்பு கிடைக்காததால்" இவை தோன்றியது என்று கூறுவது, எவ்வளவு முட்டாள்தனமான அரசியல் அபத்தமாகும்.

இங்கு விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில், கூட்டணியின் ஆயுதப்படையாகவே தோற்றம் பெற்றது. 1970 க்கு பிந்தைய 1980 வரையான காலகட்ட ஆயுத வன்முறைகளின் பின்னணியில், தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணியின் வழிகாட்டல் இருந்ததுடன், அவர்கள் யாரைக் கொல்ல விரும்பினார்களோ அவர்களை திட்டமிட்டே புலிகள் கொன்றனர். இது தான் வரலாறு. அமிர்தலிங்கம் -  பிரபாகரன் அடிக்கடி சந்தித்து வந்ததும், உலகறிந்த உண்மை. ஆயுதப் போராட்டம் என்பது, தமிழனை அடக்கியாளும் சொந்த ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் கூட்டணியின் அரசியலின் ஒரு அங்கமாகத் தோன்றியது. இங்கு அரசியல் ரீதியாக அமிர்தலிங்கம் -  பிரபாகரன் இடையில், எந்த வித்தியாசமும் கிடையாது.

    

ஜே.வி.பியின் ஆயுதப் போராட்டம் என்பது, வரலாற்று ரீதியான இடதுசாரிய அரசியல் வழிமுறையில் இருந்து தோன்றியது. ஆயுதப் போராட்டம் குறித்து சீனப் புரட்சி மற்றும் காலனிய நாடுகளின் ஆயுதப் போராட்ட அனுபவங்களில் இருந்து தோற்றம் பெற்றது. இக் காலத்தில் உலகில் பல நாடுகளில் ஆயுதப் போராட்டங்கள் நடந்து வந்தது. ஜே.வி.பி பாராளுமன்றம் மூலம் வெற்றி பெற முடியாது என்பதால், ஆயுதப் போராட்டத்தை நடத்தியது என்பது வர்க்கப் போராட்டம் குறித்த தவறான புரிதலும், கண்ணோட்டமுமாகும்.

 

ஜே.வி.பி போல் புலிகளும் தம்மை இடதுசாரிகளாக காட்டிக் கொண்டனரா!?

"ஜே.வி.பி மட்டுமல்ல, புலிகளும் ஆரம்பத்தில் தம்மை இடதுசாரிகளாக காட்டிக் கொண்டனர்" என்று கூறுவதன் மூலம், இரண்டும் ஒன்று என்று கூற முற்படுவது அரசியலில் இழிவான பிரச்சாரமாகும். இலங்கையில் போராடிய மக்களின் வாழ்வையே இது கொச்சைப்படுத்தி விடுகின்றது. 

புலிகளின் ஆயுதப் போராட்டம் இருக்கின்ற வர்க்க சமூக அமைப்பை மாற்றாமல் அப்படியே தமிழர்களின் தலைமையில் ஆளுகின்ற அடிப்படைகளைக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. ஜே.வி.பியின்  ஆயுதப் போராட்டம் வர்க்க அமைப்பைத் தகர்க்கின்ற, உழைக்கும் மக்களின் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது. இது அடிப்படையான நேர் எதிரான வேறுபாடாகும். இரண்டையும் ஒன்றாக காட்டுவதற்கு, எந்த அரசியல் அடிப்படையும்  கிடையாது.  

புலிகள் தமிழீழத்தை அடைவதற்காக இனப் போராட்டத்தை முன்னெடுத்த போது, கூட்டணியின் அரசியலை அப்படியே ஏற்றுக்கொண்டு அதை இறுதிவரை முன்னெடுத்தனர். 1979 களில் புலிகளின் பிளவுக்கான அரசியல் அடிப்படையாக இருந்தது, தமிழ் மக்களின் அகமுரண்பாடுகளை ஒழிக்கும் (தனிநபர் முரண்பாடுகளைக் கடந்து) இடதுசாரிய அணுகுமுறை என்ன என்பதே. புலிகள் இதை அரசியல் ரீதியாக மறுத்த பின்னணியில் பிளவு ஏற்பட்டது. அரசியல் ரீதியான பிளவை அடுத்து, புலிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இயக்கமாக தங்களை அடையாளப்படுத்தினர். இதனை மறைக்கவே, அன்ரன் பாலசிங்கம் சோசலிசமே புலிகளின் கொள்கை என்ற விளக்கும், போலி அரசியல் திட்டத்தை முன்வைத்தார்.  அரசியல் பிரிவு என்ற ஒன்றே இல்லாத புலிகள், அரசியல் பிரிவு என்ற பெயரில் முன்வைத்த இந்த போலித் திட்டத்தை, புலிகள் என்றும் தங்கள் கொள்கையாக கொணடிருக்கவில்லை. மாறாக மக்களை ஏமாற்றுவதற்கு மட்டும் முன்வைக்கப்பட்டது. இதுதான் புலிகள் உச்சரித்த "சோசலிசம்" குறித்த வரலாறாகும்;.  

ஜே.வி.பி இடதுசாரிய வர்க்க அரசியலாகவே சோசலிசத்தை முன்வைத்தது. இப்படி இருக்க,  புலிகளுடன் ஒப்பிடுவது எந்த வகையில்? ஜே.வி.பி வலதுசாரிய அரசியல் போக்குகளை நிராகரித்த வர்க்கக் கட்சி. ஜே.வி.பி தோற்றுப்போனதற்கான அரசியல் காரணங்களை விடுத்து, 2000 பின்னால் இனவாத கட்சியாக சீரழிந்து முதலாளித்துவ கட்சியாக மாறிய அதன் பிந்தைய வரலாற்றை விடுத்துப் பார்த்தால், சோசலிசத்தை தனது கொள்கையாகக் கொண்ட வர்க்க கட்சியாகவே ஆரம்பித்து செயற்பட்டது. இதை புலிகளுடன் ஒப்பிடுவது, ஒன்றாகக் காட்டுவது அரசியல் அபத்தமாகும்.                         

சாதியைக் கையாள்வதில் புலிகளும், ஜே.வி.பியும் ஒரே மாதிரி நடந்து கொண்டனவா? 

"இலங்கை சாதிய சமூகத்தின் சமூக அசைவாக்கத்தை பொறுத்த வரையில், புலிகள், ஜே.வி.பி இரண்டுமே ஒரே மாதிரி நடந்து கொண்டன" என்ற வாதம், அரசியல் அடிப்படையற்ற வெற்றுத்தனமானது. 

இலங்கையில் சாதியம் வடக்கில் இருப்பது போல் தெற்கில் கிடையாது. வடக்கில் இந்து மதம் சாதியக் கட்டமைப்பில் கொண்டிருக்கும் ஆதிக்கம் போல், தெற்கில் புத்த மதம் கொண்டிருப்பதில்லை. வடக்கு அரசியலில் சாதி இருப்பது போல் தெற்கு அரசியலில் சாதிய அதிகாரம் செலுத்தும் கூறல்ல. இந்த வகையில் தெற்கில் சாதியம், சமுதாயத்தில் ஆளுமை செலுத்துவதில்லை. வடக்கில் சாதியம் சமுதாயத்தை ஆளுமை செலுத்தும் முதன்மைக் சமூகக் கூறாக இயங்குகின்றது. 

இந்த நிலையில் ஆயுதப் போராட்டங்களை நடத்திய புலிகள் வடக்கில் ஆளுமை செலுத்திய அதேநேரம் தெற்கில் ஜே.வி.பி தங்கள் செல்வாக்கை செலுத்தியது. இந்த வரலாற்றுச்  சூழல், சாதியத்தின் பண்புரீதியான வேறுபாடுகள், சாதி குறித்த அணுகுமுறை .. சாதியம் குறித்து, இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகளுக்கு வித்திட்டது.

ஜே.வி.பி இடதுசாரிய கண்ணோட்டமானது வர்க்கப் போராட்டம் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமே இனமுரண்பாடு, சாதிய முரண்பாடு, பால் முரண்பாடுகளை .. ஒழிக்க முடியும் என்ற, வரட்டுவாதக் கொள்கைகளைக் கொண்டு இயங்கியது. சமூக முரண்பாடுகள் மீதான சமகால ஜனநாயகப் போராட்டத்தை, முன்னின்று முன்னெடுக்கத் தவறியது ஜே.வி.பியின் தவறான அரசியலின் முக்கியமான கூறாகும். அதேநேரம் சமூக முரண்பாடுகளை எதிர்த்தே,  தனது கட்சிக் கொள்கையைக் கொண்டு இருந்தது. 

இதற்கு மாறாக புலிகள் இயக்கம் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ-வெள்ளாளிய இனவாத தேசியத்தை முன்வைத்து, தனது வர்க்க அதிகாரத்தை கோரிய இயக்கம். தமிழன் ஆள்வதை முன்வைத்த போது, ஒடுக்கும் தமிழனின் வெள்ளாளிய ஆதிக்கத்தைக் கோரிய இயக்கம். தமிழ் மக்களின் அகமுரண்பாட்டை களைகின்ற கொள்கையை மறுத்து, அதை பாதுகாக்கும் கொள்கையைக்  கொண்டிருந்தது. 

தமிழ் மக்களை காலாகாலமாக ஒடுக்குகின்றவர்களின் தலைமையில் இயங்கிய இயக்கம். புலிகள் தங்கள் பகுதியில் அதிகாரத்தைக் கொண்டிருந்த போது, தங்கள் நோக்கை அடைய சமூக ரீதியான அக முரண்பாடுகளை உறைநிலைக்கு கொண்டு வந்தது. அதாவது இருக்கின்ற ஒடுக்கும் சமூக ஆதிக்க நிலையை மீறுவதை குற்றமாக வரையறுத்தது. சாதி ரீதியான புதிய ஒடுக்குமுறையையோ, சாதியத்துக்கு எதிரான எதிர் தாக்குதலையே குற்றமாக்கி, சாதி படிநிலையிலான ஒடுக்குமுறையை தக்கவைத்தது. சாதிய ஒடுக்குமுறையிலான சமூக அமைப்பில் எந்த மாற்றத்தையும் செய்வதை மறுத்து, அதை உறைநிலையில் தக்கவைத்தது. சாதிய ஒடுக்குமுறை இயல்பை கடந்து, அதை யாரும் மீற முடியாத வண்ணம், அதன் மேல் பாசிசத்தை பேணியது. இப்படிப்பட்ட புலிகளையும் ஜே.வி.பியை ஒப்பிடுவது, அரசியலை கைவிடுவதாகும்.                              

தலைமை தாங்கியவர்களின் சாதியா!?, ஆயுதப் போராட்டத்தின் அரசியலை தீர்மானித்தது!?  

"விடுதலைப் புலிகளும், ஜே.வி.பியும் சாதிய கட்டமைப்பில் அடுத்த நிலையில் இருந்தவர்களால் தலைமை தாங்கப்பட்டது. அது வழமையான ஆதிக்க சாதி அரசியலுக்கு தடையாக இருந்தது." இப்படி பிறப்பை அடிப்படையாகக் கொண்டு அணுகுகின்ற கண்ணோட்டம், சாதிக் கண்ணோட்டமாகும். சாதிய சமூக கட்டமைப்பில் அடுத்த நிலையில் இருக்கின்றவர்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கியதைக் கொண்டு, அதை ஆதிக்க சாதிக்கு எதிரான கண்ணோட்டமாக வரையறுப்பது என்பது, சாதியத்தை சாதி கண்ணோட்டத்தில் இருந்து புரிந்து கொண்டு அணுகுவதாகும்.

இந்த சாதிக் கண்ணோட்டம் சமூக விஞ்ஞானமேயல்ல. யார் தலைமை தாங்கினார்கள் என்பது, அரசியலைத் தீர்மானிப்பதில்லை. அரசியல் என்பது வர்க்கக்; கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கு யார் தலைமை தாங்கினாலும், வர்க்க ரீதியாக இயங்குவது தான் சமூக அமைப்புமுறைமையாகும். பாட்டாளி வர்க்க அரசியலுக்கு தலைமை தாங்குகின்றவர்கள் எந்த சாதியாக இருந்தாலும், சாதி அடிப்படையில் அணுக முடியாது. அப்படி அணுகினால் அது சாதிக் கண்ணோட்டமாகும். அத்துடன் முதலாளித்துவ சிந்தனை முறையுமாகும்.

ஆதிக்க சாதிய அரசியலுக்கு தடையாக, ஆதிக்க சாதி அல்லாத ஒருவர் தலைமை தாங்குவதைக் காரணமாகக் காட்டுவது, சாதி, பால் .. போன்ற சமூக ஒடுக்குமுறைகளைக் களைய அந்தந்த ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் தலைமை தாங்குவதன் மூலம் களைய முடியும் என்று கூறுகின்ற போலி இடதுசாரிய அரசியலாகும். இது முதலாளித்துவ சாதிய பெண்ணிய சிந்தனை முறையாகும்;. இது வெள்ளாளிய சிந்தனை முறையும் கூட.

"ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிறிலங்கா ஆட்சியாளர்கள், இரண்டு இயக்கங்களையும் ஒரே மாதிரி அழித்தார்கள். தெற்கிலும், வடக்கிலும் ஈவிரக்கமின்றி இனப்படுகொலை செய்தார்கள். இது  அரசாங்கத்தில் இருந்தவர்களின் மறைமுகமான சாதிவெறியையும் எடுத்துக் காட்டுகின்றது." என்று கூறுவது, அரசு குறித்த அடிப்படைத் திரிபாகும்;. தலைவர்களின் சாதி தான், விடுதலைப் புலிகளையும், ஜே.வி.பியையும் அழிக்க காரணம் என்று விளக்குவது, சாதி அரசியல் கண்ணோட்டமாகும்.

பிறப்புரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவில் இருந்து உருவான தலைமை "ஆதிக்க சாதி அரசியலுக்கு தடையாக" ஒரு நாளும் இருப்பதில்லை. வர்க்க ரீதியான தலைமை மட்டும் தான், "ஆதிக்க சாதி அரசியலுக்கு தடையாக" மட்டுமின்றி, அதற்கு முடிவும் கட்டுகின்றது. இது தான் சமூக விஞ்ஞானம்.

முடிவாக

பிறப்பைக் கொண்டு அரசியலை வரையறுப்பது முதலாளித்துவ சிந்;தனைமுறையாகும். இதுவே சாதி அரசியலாக, நிற அரசியலாக, பாலின அரசியலாக.. இருக்கின்றது. ஆயுதப் போராட்டத்தை தேர்தல் வெற்றி பெறும் முறை தீர்மானிப்பதில்லை. அந்தந்த சமூக முரண்பாடுகளின் வளர்ச்சியே தீர்மானிக்கின்றது. இடதுசாரியத்தை போலி இடதுசாரிய கோசங்கள் தீர்மானிப்பதில்லை. மாறாக வர்க்க அரசியலும் அதன் நடைமுறையும் தீர்மானிக்கின்றது.