Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒடுக்கும் வர்க்கம் முன்வைக்கும் "சமஉரிமை" குறித்து!

போலியான தேர்தல் ஜனநாயகம் மூலம் ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றவர்கள், சமூகப் பொருளாதார வர்க்கக் கட்டமைப்பில் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது. இப்படி முகமாற்றம் மூலம் ஆட்சிக்கு வந்தவரே இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்;க. இப்படி  ஆட்சிக்கு வந்த ரணில்,  "சமவுரிமை, சம அந்தஸ்து" மூலம் இன-மத முரண்பாட்டுக்கு தீர்வு காணப் போவதாகக் கூறியிருக்கின்றார்.

மறுபக்கத்தில் தமிழ் மக்களை ஒடுக்கும் தமிழ் தலைமையின் துணையுடன் ஆட்சிக்கு வந்த முகமாற்ற ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு, இன-மத முரண்பாடுக்களுக்கு தீர்வைக் காண முடியும் என்று பொது நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தினர்.

மக்களை ஒடுக்கும் தமிழ்-சிங்கள தரப்புகள், பரஸ்பரம் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்ற அரசியல் பின்னணியானது, அமெரிக்க சார்பு நவதாராளவாத உலகப் பொருளாதாரத்தை முன்னெடுப்பதற்கான தடையற்ற பொதுக் கொள்கையைக் கொண்டதேயாகும்.

இந்த அரசியல் பின்னணியில் ரணில் "சமவுரிமை" மூலம் இன-மத பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்கின்றார். ஐந்து வருடங்களுக்கு முன் சமவுரிமை இயக்கத்தை ஆரம்பித்த போது, இன-மத பிரச்சனைக்கு சமவுரிமையே தீர்வு என்ற கொள்கையை முன்வைக்கவில்லை. மாறாக இன-மத ரீதியாக ஒடுக்கப்படும் தமிழ் மொழி பேசும் மக்களின் சமவுரிமைக்காக எல்லா இனத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம், தங்கள் பிரச்சனைக்கு தாங்களே தீர்வு காணும் அரசியல் நடைமுறையை முன்வைத்தது. இதன் அடிப்படையில் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பொதுப் புரிந்துணர்வுகளை உருவாக்கி வருகின்றது.

 

அதேநேரம் இன-மதரீதியான ஒடுக்குமுறையும் - முரண்பாடும் நீடிக்கும் வரை, அதற்கான தீர்வு:

1.மதரீதியான முரண்பாட்டுக்கான தீர்வு மத சார்பற்ற அரசை உருவாக்குவதும், மதத்தை  தனிப்பட்ட மனிதனின் உரிமையாக அங்கீகரித்து, மதம் கொண்டு இருக்கும் சமூகத் தன்மையை இல்லாதாக்குவதன் மூலமே, மத முரண்பாடுகளுக்கும், மத ரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் தீர்வு காண முடியும்.

2.இன முரண்பாட்டுக்கான தீர்வென்பது தேசங்கள், தேசிய இனங்கள்.. என்ற அடிப்படையான  பொது வரையறையில் இருந்து, ஜனநாயக பூர்வமான தீர்வுகளுக்கு வந்தடைவதன் மூலமே தீர்வு காணமுடியும்.

இன-மத முரண்பாடும் - ஒடுக்குமுறையும், இந்த அரசியல் நடைமுறை வழியிலேயே தீர்வு காணப்படப் முடியும். இதுவல்லாத எந்தத் தீர்வும் போலியானதும், புரட்டுத்தனமாதுமாகும். அதேநேரம் தொடர்ந்து ஒடுக்குமுறையை தக்கவைப்பதேயாகும்.

இப்படி உண்மைகள் இருக்க சம்மந்தன், விக்கினேஸ்வரன், மகிந்தா, ரணில் என்று எல்லா ஒடுக்கும் வர்க்கப் பிரதிநிதிகளும், ஆளும் வர்க்க ஏஜண்டுகளும் காலத்துக்குக் காலம் "சமவுரிமை" மூலம் தீர்வு காண்பது பற்றி கூறி வந்தனர், வருகின்றனர்.

தமிழ் - சிங்கள ஒடுக்கும் வர்க்கம் தங்கள் வர்க்க நலனுக்கு ஏற்ப "சமவுரிமை" மூலம், அதாவது விட்டுக் கொடுப்பு மூலம் (உதாரணமாக புத்த மதத்தை பிரதான மதமாக அங்கீரிப்பதன் மூலம்) மேல் இருந்து தீர்வு காண்பது குறித்து பேசுகின்றனர்.

சமவுரிமை இயக்கம் ஒடுக்கப்பட்ட வர்க்கம் சார்ந்து, மக்களை கீழ் இருந்து சமவுரிமைக்காக அணிதிரட்டிப் போராடுவதன் மூலம், சமூகங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற முரணற்ற ஜனநாயக பூர்வமான தீர்வுகளைக் காண்பது பற்றிப் பேசுகின்றது.

இப்படி இருக்க இன்றைய இன-மத முரண்பாடுகளும், ஒடுக்குமுறையும் தானாகத் தோன்றியதல்ல. இன-மத பிரிவினையை ஆளும் வர்க்கங்கள், தங்கள் சொந்த ஒடுக்கும் இன வர்க்கப் பிரதிநிதிகள் மூலம் தோற்றுவித்தனர். இப்படி இனங்கள், மதங்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்திய ஒடுக்கும் வர்க்கங்கள், இன்று சமவுரிமை மூலம் தீர்வு என்பது ஆளும் வர்க்கங்களின் ஏமாற்றுத் தந்திரம்.

சமவுரிமை மூலம் தீர்வு காண முடியாது. மாறாக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில்  புரிந்துணர்வையே உருவாக்க முடியும். புரிந்துணர்வு இருந்தாலே, ஜனநாயக ரீதியான தீர்வுகளைக் காண முடியும்.

மக்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகள் "சமவுரிமை" மூலம் தீர்வு காணப்படும் என்று கூறுவதே போலியானது. மனிதனை மனிதன் சுரண்டுவதை ஜனநாயக உரிமையாகக் கருதுகின்றவர்கள், மக்களைப் பிரித்தாள்வதன் மூலமே சுரண்டும் வர்க்க ஆட்சி முறைமையைத் தக்கவைக்க முடிகின்றது. மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவது முதல் வன்முறைகளைத் தூண்டுவது வரையான அனைத்தும், ஒடுக்கும் வர்க்கத்தினது அரசியலாகும்.

மக்களைப் பிரித்து மோதவைக்கும் வரலாற்று ரீதியான காரணத்தை கேள்விக்குள்ளாக்காது, தொடர்ந்து சுரண்டும் வர்க்க நலனை பாதுகாக்கும் ஆளும் வர்க்கத்தால், ஒருநாளும்  சமவுரிமையைக் கொண்டு வரமுடியாது. மக்களைப் பிரித்து ஒடுக்கிய ஆளும் வர்க்கத்தின் கடந்தகால தேவைகள், இன்று அப்படியே நீடிக்கின்றது என்பதே உண்மையாகும்.

இப்படிப்பட்ட பின்னணியில் முகமாற்றம் மூலம் அதிகாரத்துக்கு வந்த ரணில், "சமவுரிமை" மூலம் தீர்வு காணப்படும் என்ற கூறும் அதேநேரம், புத்த மதத்துக்கு முன்னுரிமை என்று கூறுகின்ற பித்தலாட்டத்தைச் செய்ய முடிகின்றது. தமிழ் மக்களை தலைமைதாங்குகின்ற  ஒடுக்கும் வர்க்கம், புத்தமதத்துக்கு தனிச் சலுகையை அங்கீகரிப்பது என்பது, வடகிழக்கில் இழந்து வரும் தங்கள் செல்வாக்கை தக்கவைக்கவே. அதாவது போலித் தீர்வு மூலமான ஆட்சி அதிகாரங்களைக் காட்டி, ஒடுக்கும் தங்களின் மேலாண்மையை தமிழ்மக்கள் மத்தியில்  தக்கவைக்கும் இறுதி முயற்சியாகும்.

மக்களை சுரண்டுவதற்காக பிரித்தாளும் அரசானது, சமவுரிமையைக் கூட வழங்க மாட்டார்கள் என்பதே உண்மை. ஒடுக்கும் தமிழ்-சிங்கள வர்க்கங்கள் "சமவுரிமை" அடிப்படையில் தீர்வைக் காண்பார்கள் என்பது போலியான, பொருளற்ற கற்பனையுமாகும்.