Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சிரியாவைக் குதறும் ஏகாதிபத்திய வல்லூறுகள்

உலகை உலகமயமாக்கி கொழுக்கும் முதலாளித்துவமானது, சந்தையைக் கைப்பற்றும் ஏகாதிபத்திய முரண்பாட்டைக் கடந்த சுதந்திர சந்தையல்ல. மூலதனத்தை விரிவாக்க முனையும் மேற்கு முதலாளித்துவத்தின் வன்முறை தான், சிரியா யுத்தம். அதாவது ருசிய ஏகாதிபத்திய மூலதனச் செல்வாக்கில் இருந்து சிரியாவைக் கைப்பற்றும் மேற்கு ஏகாதிபத்தியத்தின் வலிந்த தாக்குதலுக்கு, இன்று சிரிய மக்கள் பலியாகிக் கொண்டு இருக்கின்றனர்.

சிரிய அரசை தேர்தல் "ஜனநாயகமற்ற" சர்வாதிகார நாடாக சித்தரிக்கும் மேற்கு ஏகாதிபத்தியமும் - ஏகாதிபத்திய ஊடகங்களும், சவூதி அரேபியாவின் மன்னர் ஆட்சியை அப்படி அழைப்பதில்லை. சர்வாதிகார சவூதி மன்னரை அமெரிக்கா - பிரான்ஸ் - பிரிட்டன் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதை சமகாலத்தில் காண முடியும்;. மேற்கு நாடுகள் தமது  மூலதன நலனுக்கு முரணான நாடுகளையே, மனித குலத்தின் எதிரியாக காட்டி அழிப்பதே இதன் வரலாறாக இருப்பதுடன், அதுவே சிரியாவில் நடந்து வருகின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் சிரியாவில் தேர்தல் "ஜனநாயகத்தை" கொண்டு தேர்ந்தெடுக்கும் முறைமையைக் கொண்டுள்ள அதேநேரம், சவூதியில் அது கூட கிடையாது. இங்கு ஜனநாயகம் குறித்தும், தேர்தல் ஜனநாயகம் குறித்துமான மேற்கின் அளவீடுகள் எல்லாம், தங்கள் நாட்டு மூலதனத்தின் நலன்களை முன்வைத்தே அளக்கப்படுகின்றதே ஒழிய முரணற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் அல்ல என்பதே உண்மை.

 

இந்தப் பின்னணியில் தான் சந்தேகத்துக்குரிய நஞ்சுக் குண்டுகள் வீசப்பட்டதன் மூலம்  மக்கள் கொல்லப்படுகின்றனர். இதைவிட பல மடங்காக மக்களைக் கொன்று குவிக்கும் யுத்தத்தை மேற்கு நடத்தும் போதும், மனிதவுரிமை குறித்தோ - இரசாயன ஆயுதங்கள் குறித்து இவர்கள் கடுகளவு கூட பேசுவதில்லை. தொடர்ந்தும் இரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்து குவிக்கும் ஏகாதிபத்தியங்களே, இரசாயன ஆயுதப் பயன்பாடு குறித்து  பேசுகின்றன.

ஆக இங்கு மேற்கு ஏகாதிபத்தியத்துக்கு முரணான ஏகாதிபத்தியங்களின் செல்வாக்கு உட்பட்ட யுத்தங்களின் போது மட்டும் "மனிதவுரிமை" குறித்து கூச்சல்கள் எழுப்பப்படுகின்றது. இந்த மேற்கு மூலதன நலன் சார்ந்த செய்திகளும் - ஆய்வுகளும் தான், உலகெங்கும் மீள கக்கி விடப்படுகின்றது.

மேற்கு சார்பு தலையீட்டுக்கு ஏற்ற பிரச்சாரத்தையும், மேற்கு ஆக்கிரமிப்புக்கு ஏற்ற சூழலை உருவாக்கவும், மனித அழிவுகளை அவர்களே திட்டமிட்டு உருவாக்குகின்ற பொதுப் பின்னணியில், சந்தேகத்துக்குரிய நச்சுக் குண்டு வீச்சு குறித்து செய்திகள் பிரச்சார நோக்கில் வெளிவருகின்றது.

இதுபோல் 2009 இல் புலிகள் செய்தனர். புலிகள் திட்டமிட்டு மக்கள் அழிவை ஏற்படுத்தும் யுத்த தந்திரத்தை கையாண்டதும், இந்த அரசியல் பின்னணியில் தான். மக்களின் அழிவை உலகெங்கும் காட்டுவதன் மூலம், மேற்கு ஏகாதிபத்தியங்கள் தமக்கு சாதகமாக தலையீட்டை நடத்தும் என்று கருதிய புலிகள், அதற்காகவே மக்களை திட்டமிட்டு பலியிட்டது. இறுதியில் மனித அழிவை ஏற்படுத்தும் இந்த யுத்த தந்திரமான, இலகுவான சுற்றிவளைப்புக்குள்ளாகி புலிகள் அழிந்தது. இது தான் புலிகள் அழிந்து போன வரலாற்றின் இறுதிப் பகுதி.

இந்தவகையில் மேற்கு சார்பான பிரச்சாரத்துக்கு ஏற்ப சந்தேகத்துக்குரிய இரசாயன ஆயுதப் பயன்பாடு பற்றிய செய்திகள், இன்று முதன்மையான சர்வதேச அரசியலாகி இருக்கின்றது. மேற்கு சிரியாவுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதலை நடத்தப்போவதாக அறிவிக்க, அதை முறியடிக்க தயாராக இருப்பதாக ருசியா அறிவித்திருக்கின்றது. ஏகாதிபத்திய பலப்பரீட்சையும் - முரண்பாடுகளும் முற்றிவரும் பின்னணியில்,  மூன்றாம் உலக யுத்தத்தின் விளிம்புக்கு உலகை நகர்த்தி வருகின்றனர்.

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலின் போது ருசியாவுடன் சேர்ந்து நடத்திய தில்லுமுல்லுகள் மீதான அமெரிக்க விசாரணை மற்றும் ஜனாதிபதியின் பாலியல் விவகாரங்களைத் திசைதிருப்பவும், ருசியாவுக்கு எதிரானவன் என்பதை நிறுவ சிரியா விவகாரத்தை இராணுவ ரீதியான தாக்குதல் மூலமும், சிரிய மக்களை தன் பங்குக்கு கொன்று குவிக்க அமெரிக்கா விரும்புகின்றது.

மறுபக்கம் பிரான்ஸ்சின் பெரும் மூலதனங்கள் செல்வத்தை குவிக்க பிரான்சின் சட்டதிட்டங்களைத் திருத்தவும், அரசு துறைகளை தனியார்மயமாக்கும் கொள்கைக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை திசைதிருப்ப, சிரியா விவகாரத்தில் தன் பங்குக்கு தலையிட்டு சிரிய மக்களை கொல்லத் துடிக்கின்றது.

சிரிய மக்கள் மேலான மேற்கின் ஆக்கிரமிப்புக் கொள்கையே, சிரியாவில் நடந்தேறுகின்ற உள்நாட்டு யுத்தத்துக்கான, கொத்து கொத்தாக கொன்று குவிக்கும் மக்களின் இறப்புகளுக்குமான அடிப்படையாகும்.

சிரிய மக்கள் தலையிடாத, அந்த மக்களின் தலைமையில் போராட எந்த வகையான செயற்பாடுகளும், அந்த மக்களுக்கே எதிரானதே. சிரிய மக்களைக் கொன்று குவித்து ஏகாதிபத்திய மூலதனங்கள் கொழுக்க வைப்பதும், தங்கள் சர்வதேச இராணுவ ஆதிக்கத்துக்கு ஏற்ற பிராந்தியங்களை கட்டுப்படுத்துவதுமே, இதன் பின்னுள்ள அரசியல் உண்மைகளாகும்.  இதை எதிர்த்து நிற்பதே சர்வதேசியவாதிகளின் சர்வதேசக் கடமையாகும்.