Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வெள்ளாளியச் சிந்தனையிலான தீண்டாமையே, மாட்டைப் "புனிதமாக்கக்" கோருகின்றது

இனத்தின் பெயரில் மனிதர்களையே பலியிட்ட வெள்ளாளியச் சிந்தனை தான், மாடுகளின்  பெயரில் மனிதர்களையே ஒடுக்க முனைகின்றது. வெள்ளாளிய சாதிவெறி பிடித்த இந்துத்துவவாதிகள், மாட்டை முன்னிறுத்தி ஊரைக் கூட்ட முனைகின்றனர். மாட்டை உண்பவனை "இழிவானவனாகவும் - புனிதம் கெட்டவனாகவும் - பிற மதத்தினராகவும் - இழி சாதியாகவும்" காட்டவும், கட்டமைக்கவும் முற்படுகின்றனர். முஸ்லிம்களை குறிவைத்து குலைக்கும் இனவாத தமிழ் தேசியத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு, தீண்டாமையை சமூகத்தில் திணிக்க முனைகின்றனர். பல்வேறு வித்தியாசமான மரபுகளையும் - பண்பாடுகளையும் கொண்ட தமிழ் மொழி பேசும் மக்கள் மேல், ஒடுக்கும் வெள்ளாளிய இந்துத்துவ சாதிய வாழ்வியலை வாழ்வாக்க கோருகின்றனர். மாட்டை உணவுக்காக உண்பவர்கள் எமது எதிரியான முஸ்லிம்களே ஒழிய, இந்து - தமிழ் மக்களல்ல என்று ஒரு பிம்பத்தை நடைமுறைக்கு கொண்டு வரமுனைகின்றனர். இதன் மூலம் மாட்டை உண்ணும் "இந்துவை" தீண்டத்தகாதவனாக மாற்ற முனைகின்றனர். 2009 க்குப் பின் சாதிய ஒடுக்குமுறை கூர்மையடைகின்ற இன்றைய பின்னணியில், வெள்ளாளிய இந்துத்துவமானது மாடு மூலம் தீண்டாமையை சமூகத்தினுள் கொண்டு வரமுனைகின்றனர்.

இங்கு மரபு சார்ந்த உழைப்பின் வளங்களையோ - இயற்கையையோ – அதில் வாழும் மாட்டையோ காப்பாற்றுவது இவர்களின் நோக்கமல்ல. மாட்டின் பெயரில் மக்களை மோதவிட்டு சுரண்டவும், ஒடுக்கும் வெள்ளாளிய சாதிய சமூக கட்டமைப்பை பாதுகாக்கவுமே முனைகின்றனர்.  இதன் மூலம் நாட்டைச் சூறையாடும் நவதாராளவாதத்தை, வழிபாட்டுக்குரியதாக்க முனைகின்றனர்.

பன்முகமான மரபு சார்ந்த மனித வாழ்வியலையும் - மனித அறங்களையும், ஜனநாயகத்தையும் மறுப்பதையே, கொள்கையாகவும் - நடைமுறையாகவும் கொண்ட இந்து மதமானது, சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சாதிய இந்து மதம் தான், மாட்டை முன்னிறுத்தி சாதிய தீண்டாமை என்னும் கொடூரத்தை மனிதர்கள் மீது திணித்தது. அதாவது மாடு உண்பதைக் கொண்டு, தீண்டாமையை சமூகத்தில் நிலைநிறுத்தியதாக தீண்டாமை குறித்த வரலாறு கூறுகின்றது. கடந்தகாலத்தில் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்ட வெள்ளாளிய வாழ்க்கை முறையை, மாட்டைக் கொண்டு மீண்டும் நிறுவ முனைகின்றனர். இதை நிறுவ முஸ்லிம் மக்கள் பகடைக்காயாக பயன்படுத்தப்படுகின்றனர்.

மாடு குறித்த வெள்ளாளிய இந்துத்துவ பித்தலாட்டங்கள்

 

2009 ம் ஆண்டுக்குப்பின் சாதிய பண்பாட்டு - கலாச்சாரக் கூறுகள் மேலெழுந்து, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்த பின்னணியில் சாதியத்தை உக்கிரமான வன்முறைக் கூறாக்க,  மாட்டின் புனிதம் குறித்த பித்தலாட்டங்களை அரங்கேற்ற முனைகின்றனர்.

1.1980 - 1990 காலப் பகுதியில் மாட்டு இறைச்சியையே எமது சமூகம் உண்ணவில்லை என்கின்றனர் இந்துத்துவவாதிகள். 1980 களில் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எவரும், மாட்டு இறைச்சியை உண்ணாதவர்களாக இருந்ததில்லை. புலம்பெயர்ந்த தமிழர்களில்  பெரும்பான்மையானவர்கள் மாட்டை உண்பவர்கள். இப்படியாக வளர்ந்த சமூகத்தில் சாதி - இந்துத்துவத்தின் மீள் வருகையானது, மாட்டு இறைச்சி மூலம் வன்முறை கொண்ட சாதிய சமூகமாக மாற்றி அமைக்க முனைகிறது.

2.தமிழர் மரபு என்பது மாட்டு இறைச்சி உண்பதில்லை என்பது, அப்பட்டமான பொய். மனிதன் பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாத மாட்டுக்கு என்ன நடந்தது? அவை நிச்சயமாக மனிதர்களின் உணவாக்கப்பட்டது. அதை உண்டவர்களின் மரபு, தமிழர் - இந்து மரபு இல்லையோ!? 

3.மாட்டை உண்பதை மறுக்காத கிறிஸ்துவத்தை பின்பற்றும், தமிழர்கள் மரபு யாருடையது!?

4.இந்து - புத்த மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் மாடு உண்பதில்லை என்பதே உலகறிந்த பொய். இலங்கையில் முஸ்லிம் மக்கள் மட்டும் தான் மாடு உண்பவர்கள் என்று கூறுவது, கடைந்தெடுத்த பித்தலாட்டம். இப்படி உண்மைகள் இருக்க, மதத்தின் பெயரில் கட்டமைக்கும் "புனிதமான" தங்கள் சாதியை முன்னிறுத்த, முன்வைக்கும் விளம்பரம் அதுவாகும்.

5.மாடு உண்ணாத 2000, 5000 வருட இந்துப் பாரம்பரியம் என்பதே, பொய்கள் மேலான சாதியப் பாரம்பரியம் தான். 2500 ஆண்டுக்கு முன்பு, அதாவது புத்தருக்கு முன்பான, வேத வழிபாட்டு முறையென்பது, மாடுகளை வெட்டிக் கொன்று தின்பது தான்;. வேத நூல்களில் மாடு வெட்டும் வேள்வி வழிபாட்டையும், அதை உண்ட வரலாற்றையும் காண முடியும். இதன் அடி வந்தது தான் பார்ப்பனிய சாதியும் கூட. இந்து மதமும் கூட. இந்திய சாதி சமூக அமைப்பிற்கு முந்தைய மூதாதையர்கள், மாட்டை கடவுளின் பெயரில் உண்டார்கள். 2000 வருடத்துக்கு முந்தைய வேத – ஆகம வரலாறு இது தான். அந்த நூல்கள் இதைத்தான் கூறுகின்றது. சாதியத்தை தூக்கி நிறுத்தும் வெள்ளாளிய இந்துத்துவ சிவசேனை, வரலாற்றை திரித்துக் காட்ட முற்படுகின்றது.

வேத - ஆகம வேள்வி வழிபாடானது, மாடுகளை வகை தொகையின்றி வெட்டிப் பலியிட்டது.  வருணமாகவும் தம்மை முன்னிறுத்தி உழையாத வர்க்கமாக இருந்த பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) மாடுகளை கடவுளின் பெயரில் அழித்த போது, விவசாயத்துக்கு – மனித உணவுக்கு ஆதாரமாக இருந்த மாடுகள் அழிந்து வந்தன. இந்த அழிவில் இருந்து மாடுகளை காப்பாற்றும், அதாவது மாடு சார்ந்த விவசாய உற்பத்தி முறையைப் பாதுகாக்கும் கோட்பாடாகவும், உழையாத வர்க்கம் உழைப்பை உறிஞ்சியதற்கு எதிராகவுமே..  புத்த மதக் கோட்பாடுகள் உருவானது. அதாவது சாதிக்கு முந்தைய வருண முறைமையானது, உழைப்பையும், உழைப்பின் கருவிகளான மாடுகளையும் தனதாக்கி அதை நுகர்ந்த வழிபாட்டு முறையை எதிர்த்து, புத்த மதம் தோன்றியது.

மக்களுக்கு உணவை வழங்கிய விவசாயத்தை காக்கவும், மாட்டைப் பாதுகாக்கவும் உருவானதே, புத்த மதக் கோட்பாட்டு அடித்தளமாகும். மாட்டை தின்ற வேத – ஆகமத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனிய மதத்திற்கு எதிராக, புத்தம் உருவானது.

வேத - ஆகம வழிபாட்டு முறை மூலம் சுரண்டி வாழும் வர்ணமும் - வர்க்கமுமே, பார்ப்பனிய வாழ்க்கை முறையாக இருந்தது. இதற்கு எதிரான புத்த மதத்தில் இருந்து தனது வர்க்க – வருண இருப்பை தக்கவைக்க, பார்ப்பனியம் தானும் மாட்டைப் புனிதமாக்கி வழிபடும் தெய்வமாக்கியது. மாடு உண்பதை தீட்டாக்கியது. வருணம் சாதியாகியது. இதன் மூலம் பார்ப்பனியம் தன் அழிவில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டது. பார்ப்பனிய புதிய வழிபாட்டு முறைமையை ஏற்றுக்கொள்ள மறுத்த பார்ப்பனர்கள் கூட, தீட்டுக்குரிய தரப்பாக மாறியது.

புத்தம் விவசாயத்தை காப்பாற்ற மாட்டை முன்னிறுத்தியதே ஒழிய, உழைப்பில் இருந்து ஓய்ந்த மாட்டை உண்பதை மறுதளிக்கவில்லை. மாடு மனிதனுக்கு பயனற்ற போகும் போது, அதை உண்பதை ஏற்றுக் கொண்டு, விவசாயிகளின் உணவாக மாடு இருந்தது. உழைப்பை சுரண்டி வாழும் புல்லுருவி மதமாக இருந்த பார்ப்பனியம், மாடு உண்பதை தீட்டாக்கி தனது உழையாது வாழும் தனது வர்க்க இருப்பை தக்கவைத்துக் கொண்டது. உழையாது தொடர்ந்து வாழும் வர்க்கமாக, சாதிய படிநிலைகள் மூலம் தன்னை தக்கவைக்க, இந்துமதமாக தன்னை தகவமைத்துக் கொண்டது.

வர்ணமாகவும் - வர்க்கமாகவும் இருந்து சாதியாக மாறிய பார்ப்பனியருக்கு மட்டும் தான் இங்கு மாடு புனிதமானது. இதை இன்று இலங்கை வெள்ளாளிய சிவசேனை, மக்களின் மரபாக முன்வைக்கின்றது. தனது வெள்ளாளிய இந்துத்துவ வாழ்க்கை முறைதான், மக்களின் மரபு என்கின்றது.

இதைத் திணிக்க இஸ்லாமியர்கள் பன்றியை உண்பதில்லை என்று கூறி, முஸ்லிம் அல்லாத இந்துக்கள் மாடுகளை உண்ணக் கூடாது என்கின்றது. இஸ்லாமியர்கள் பன்றி உணவை தடை செய்தது என்பது கூட, புத்தர் மாட்டை வெட்டுவதை தடுத்ததற்கு நிகரானது. அரபுலகில் பன்றி ஏற்படுத்திய நோய்களைத் தடுக்கவே, பன்றி உண்பதை முகமது நபி தடைசெய்தார். பன்றி வாழ்ந்த சூழல் மூலம் தோன்றிய நோய்களைத் தடுக்க, கொண்டுவந்த செயற்திட்டத்தை, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்கள் மதக் கோட்பாடாக்கி, மக்களை தமது மதத்திற்கு வெளியில் சிந்திக்க விடாது வைத்திருக்கவே பன்றிகள் உதவுகின்றது. பார்ப்பனியம் - வெள்ளாளியம் போன்று, இஸ்லாமும் தங்கள் வர்க்க இருப்பை தக்கவைக்க, அறிவுக்குப் புறம்பானவற்றை புனிதமாக – மதக் கோட்பாடாக மக்கள் மேல் திணிக்கின்றனர்.

அன்று மனித உடலாரோக்கியம் சார்ந்து பன்றி தடைசெய்யப்பட்ட காரணங்களை மூடிமறைத்த, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பன்றி உண்பதை மதக் குற்றமாக்குவது போல், மாட்டை இந்து மத - சாதிய அடிப்படைவாதிகள் பயன்படுத்துகின்றனர். ஒரு நாணயத்தின் இரு பக்கம்.

6.சாவகச்சேரியில் மாடு வெட்டுவது குறித்து பேச இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு அருகதை கிடையாது. உணவுக்காக ஆடு வெட்ட இலங்கையில் என்ன விதி இருக்கிறதோ, அந்த விதி மாட்டுக்கும் பொருந்தும்;. அதை மீறும் பட்சத்தில் அது சட்டரீதியானது. அதை மீறி இதை இந்து மத புனிதமாக்குவது, மாட்டுக்குச் சிறப்பு விதிகளைப் போட முனைவது, இந்து - வெள்ளாளிய சாதிய அடிப்படைவாதத்தை மக்களுக்கு எதிரான மனித வக்கிரத்துடன், மனிதனுக்கு எதிராகத் திணிப்பதாகும்.

7.நாட்டை விட்டு வெளியேறக் கூறி, வேறுநாட்டு தலைவர்களை இழுத்து வந்த தர்க்கம்  பன்னாடைத்தனமானதும், திரிக்கப்பட்டதுமாகும். உங்களைப் போன்ற ஜனநாயக விரோதிகளுக்கே அது பொருந்தும். அதாவது நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைகளை, ஜனநாயக நாடுகளில் திணிக்கின்றவர்களுக்கு எதிராக மட்டும் தான், ஜனநாயக நாடுகளில் இதை கூற முடியும்.

8.வெள்ளாளிய சிவசேனையானது மரபு என்று கூறுவது, முன்பு ஒடுக்கிய தொடர்ந்து ஒடுக்கும் தங்கள் சாதிய மரபைத் தான். இங்கு இவர்களது மரபு என்பது சாதி கடந்த வாழ்க்;கை முறையைக் குறிக்கவில்லை. சாதிய ரீதியாக ஒடுக்கிய தங்கள் மரபைப் பாதுகாக்கவே ஒழிய, இங்கு வேறு ஒன்றுமில்லை.

9.பல்வேறு மதப் பிரிவுகளையும் - இனக் குழுமங்களையும் கொண்ட முஸ்லிம் மக்கள், முதலில் இந்த நாட்டுப் பிரஜைகள். இதை மறுப்பது ஜனநாயக விரோதமான மதப் பாசிசக் கோட்பாடாகும்;. மலையக மக்களை "வந்தேறு" மக்களாக கூறி, பேரினவாதத்துடன் தமிழ் தலைவர்களும் கூட்டுச் சேர்ந்து வெளியேற்றிய அதே பேரினவாதத்துக்கு நிகராகவே, வெள்ளாளிய இந்துத்துவம் "வந்தேறிகள்" குறித்து பேசுகின்றது. தமிழ் இனவாதம் மூலம் முஸ்லிம்களை வெளியேற்றிய, புலிப் பாசிசத்துக்கு நிகரானது இது. முஸ்லிம்களின் பெரும் பகுதியினர் இலங்கை வாழ் தமிழர்களின் மூதாதையர்களில் இருந்து தோன்றியவர்கள்.

10.இரத்தக்கறை படியாத மண் என்று கூறுவதன் மூலம், மனிதர்களைக் கொன்று குவித்த தமிழ் பாசிட்டுக்களின் வாரிசுகளாகவே தம்மை முன்னிறுத்த முடிகின்றது. மனிதனைக் கொல்லலாம், மாட்டைக் கொல்லக் கூடாது என்பது, பாசிட்டுகளின் கோட்பாடாகும்.

வெள்ளாளிய சிந்தனையை மறுக்கும் எதிர்வினைகள்

மறுபக்கத்தில் இவர்களுக்கு எதிரான கருத்துக்கள் கூட, வெள்ளாளியச் சிந்தனைமுறையை பாதுகாக்கும் வண்ணமே முன்வைக்கப்படுகின்றது. "சிவசேன" என்ற பெயரைக் கொண்டு வெள்ளாளிய இந்துத்துவத்தை முன்னிறுத்துவதை மறுப்பதைக் காண முடிகின்றது. அதேநேரம் இந்தியா பார்ப்பனியமாக காட்டுவதும், இலங்கையில் இந்திய நிகழ்ச்சிநிரலாக காட்டுவது நடக்கின்றது. இது உள்ளடக்கமற்ற தவறான விமர்சன முறையாகும்;. வெள்ளாளிய சிந்தனையின் இந்துத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் நிகழ்வாக இதை அணுகத் தவறுவது, தொடரும் வெள்ளாளிய இந்துத்துவ நிகழ்ச்சிநிரலுக்கு சாதகமானது. மறைமுகமாக துணை போவதுதான்.