Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 14

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 14

 

பல சதிக் குழுகளாக இயங்கியதை பெருமையாக ஓப்புக்கொள்ளும் டிராட்ஸ்கியம்

ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சியை கவிழ்க்க, பல்வேறு சதிகளில் ஈடுபட்டனர். அதை எப்படி செய்தோம் என்பதை, 65 ஆண்டுகளுக்குப் பிறகு கூறுவதைப்பாருங்கள். “..இதே வேளை பல இடது எதிர்ப்பாளர்கள் இவர்களில் எற்கனவே பல பணிந்து போன பலருடன் தாமும் இனைந்து போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டனர். இவர்களில் முக்கியமானவர்கள் இவோன் நசிக்விச், சிமிர்நொவ் வின் குழுவைச் சேர்ந்தவர்களாகும். நாங்கள் இவர்களில் இருந்து 5 தடவை கைது செய்யப்பட்ட பெண் ஒருவரின் மகளிடம் இருந்து இவை தொடர்பான தகவல்களை ரஷ்ய‌ வெளியீடான இரு தொகுதிகளைப் பெற்றோம். மியக்கோப் ன் மகள் எவ்வாறு இவ் இடது எதிர்ப்பாளர்களின் அங்கத்தவர்கள் தனது தாயின் வீட்டில் ஒன்று கூடினர் என்பது தொடர்பாகக் கூறினார். இக்கூட்டத்தில் சினோவியேவ், கமனேவ் தாங்கள் ஸ்டாலினை அகற்ற வேண்டியதுடன் உடன் படுவதாகவும், டிராட்ஸ்கியுடன் தொடர்பேற்படுத்த வேண்டியதையும் ஏற்றுக் கொண்டனர். அவ்வேளை அவர்கள் தாம் 1917ல் விட்ட தவறை விட பெரிய தவறு 1927இல் இடது எதிர்ப்பாளருடன் பிரிந்து போனது தான் என குறிப்பிட்டனர். 1932 முழுவதும் இவ் எதிர்ப்பாளர் மத்தியில் எவ்வாறு பொதுவான ஸ்டாலின் எதிர்ப்புக் குழு ஒன்றைக் கட்டுவதென்பது தொடர்பான கலந்துரையாடல்கள் நடந்தன. இதற்கு முன் 1931ம் ஆண்டு சிமிர்நொவ் பெர்லினுக்கு உத்தியோகபூர்வமாக வந்த போது டிராட்ஸ்கியின் மகனான லியோன் சடோவை சந்திக்கக் கூடியதாக இருந்தது. அவர்கள் டிராட்ஸ்கிக்கு சோவியத் யூனியனில் உள்ள எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் சேர்ந்து வேலை செய்வது தொடர்பாகவும், சிமிர்நொவ் விற்கும் டிராட்ஸ்கிக்கும் இடையில் விடயங்களைப் பரிமாறிக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடினர். இந்நிலையில் இருந்து டிராட்ஸ்கிக்கும் லியோன் சடோவை (டிராட்ஸ்கியின் மகன்) சோவியத் யூனியனில் இருந்த பல எதிர்ப்புக் குழுக்களுக்கும் இடையில் இறுக்கமான தொடர்பு ஏற்பட்டது.” இப்படி நான்காம் அகிலம் இன்று பெருமையாக இந்த சதியை பீற்றி எழுதுகின்றது. ஸ்டாலின் இந்த சதிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை ஜனநாயக விரோதம் என்கிறது. மார்க்சியம் அல்லாத போக்கு என்கிறது. தனிநாட்டு சோசலிசம் என்கிறது. சதிகளை, ஆட்சிகவிழ்ப்புகளை வர்க்கப் போராட்டம் என்கிறது.

 

மறுதளத்தில் அன்றைய கைதுகள் என்பது ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தைக் காட்டுகின்றது. ஐந்து தரம் கைது செய்யபட்ட சதிகாரர்கள் தத்தம் சதியை ஒப்புக் கொள்ளாத போது, விடுவிக்கப்பட்டதை எடுத்துக் காட்டுகின்றது. சதியில் இருந்து விலகியோர் விடுவிக்கபட்டதையும், இந்த சதியில் ஈடுபட்டு விடுவிக்கபட்ட ஸ்டாலின் எதிரிகளின் சொந்த வாக்கு மூலங்கள் காட்டுகின்றன. அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தது முதல், வெளிநாடுகள் வரை விரிந்த சதி வலைகள் கட்டப்பட்டதையும் கூட பெருமையாக டிராட்ஸ்கியம் இன்று முன்வைக்கின்றது. தொடர்ந்தும் தங்கள் இந்த சதியைப் பற்றி என்ன பெருமையாக எழுதுகின்றனர் எனப் பார்ப்போம்.

 

“…. அமெரிக்க வரலாற்று ஆசிரியரான அஸ்கிரவ் , பிரான்ஸ் வரலாற்று ஆசிரியரான பியர்புறு ஆகியோரே 1932 நிகழ்வுகள் தொடர்பாக முதலாவதாக எழுதியவர்களாவர். …பியர்புறு கூறியது போல், அவ்வழக்கு கூறப்பட்ட எதிரானவர்களிடையே கூட்டங்கள் கலந்துரையாடல்கள் உண்மையில் நடந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று நான்காம் அகிலம் தங்கள் சதிகளை பற்றிய இந்தக் கூற்றை அங்கீகரிக்கிறது. இதை இன்று பெருமையாக வேறு ஒப்புக் கொள்கின்றனர். இந்த சதிகள் தான் டிராட்ஸ்கியத்தினதும், மற்றையவர்களினதும் அரசியலாகவும், அடிப்படையாகவும் இருந்ததாகவும், இருப்பதாகவும், ஒப்புக் கொள்ளும்படி இதை முன்வைக்கின்றனர்.

 

இந்தச் சதியை ஒப்புக் கொண்டு டிராட்ஸ்கியின் மகன் எழுதியதை பெருமையாக நான்காம் அகிலம் எடுத்து வைக்கின்றது. அதை அவர்கள் இதைவிட டிராட்ஸ்கியின் மகனான லியோன் சடோல் ஆல் எழுதப்பட்ட பிரசித்தி பெற்ற புத்தகம் “உண்மையில் என்ன நிகழ்ந்தது” என்பதில் எழுதியுள்ள இக் கூட்டங்கள் தொடர்பான கருத்துக்கள் இதனை உறுதியாக்கிறது. அவராலும் சகல நிகழ்வுகளை எழுத முடியாது இருந்ததுடன் அப்புத்தகம் எழுதப்பட்ட வேளையில் அப்படி சகலவற்றையும் எழுதாமல் இருக்க வேண்டியும் இருந்தது. உதாரணமாக லியோல் டிராட்ஸ்கிக்கும், லியோன் சடோலுக்கும் இடது எதிர்ப்பாளர்களுக்கும் இடையே முக்கிய தொடர்பாளராக இருந்தவரான யூரி கவன் ஒரு பழைய போல்ஸ்விக் ஆவார். இவரின் பெயர் மாஸ்கோ வழக்கில் பல தடவை குறிப்பிடப்பட்ட போதும் அவ்வழக்குகளில் சட்சியாகவோ அல்லது குற்றவாளியாகவோ தோன்றாததுடன் தண்டனைக்கு உள்ளானவர்களிலும் அவர் இருக்கவில்லை. டிராட்ஸ்கியும், சடோவும் சோவியத் உளவு துறையால் அவரை அடையாளம் காண முடியவில்லை என்ற முடிவிற்கு வந்தனர், என்று நான்காம் அகிலம் இன்று முன்வைக்கின்றது. சதியாளர்களின் இரகசிய கட்டமைப்பு இருந்ததும், அது முழுமையாக கண்டு பிடிக்க முடியமால் இருந்ததையும் பெருமையாக டிராட்ஸ்கியும், அவரின் மகனும் குறிப்பிடுகின்றனர். முக்கியமான சதியின் தொடர்பாளர் தொடர்ந்தும் கட்சியில் இருந்தைக் காணமுடிகின்றது. ஸ்டாலின் மரணத்தின் பின்பு கட்சியில் தம்மை மறைத்துக் கொண்டிருந்தவர்கள் தான், முதலாளித்துவ மீட்சியை நடத்தியவர்கள். குருச்சேவ் முன்வைத்த பொருளாதாரம் டிராட்ஸ்கியால் முன்வைக்கப்பட்டவை தான். சோவியத் யூனியனில் கட்சிக்குள் ஒரு இரகசியமான சதிக் குழு ஒன்று இயங்கியதை டிராட்ஸ்கியே ஒத்துக் கொண்டார். இந்த குழு ஒன்றுக்கு மேற்பட்ட தலைமைகளால், சதிகாரபாணியில் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டது. தமக்குள் ஐக்கிய முன்னணியை அமைத்தது. இந்த சதியை ஸ்டாலின் முறியடித்ததையே அவர்கள்  ஜனநாயக விரோதமாக சித்தரித்தனர். தங்கள் சதியை அனுமதிக்காத கொடுங்கோலன்” என்றனர். கட்சி ஜனநாயகத்தை மறுத்தாக அவதூறு புரிந்தனர். இது இரண்டு வர்க்கத்துக்கு இடையிலான ஒரு வர்க்கப் போராட்டம் என்பதையே மறுத்தனர். மாறாக இந்த சதிக்கு இணங்கி சரணடைய மறுத்ததை கொடுங்கோலனுக்குரிய” பண்பு என்றனர். சதியை அனுமதிக்க மறுப்பது காட்டுமிராண்டித்தனமான குணாம்சம்” என்றனர். முதலாளித்துவ ஜனநாயக பண்பில் சதிகளை அனுமதிக்கும் பண்பு உண்டு என்பதை, அவர்களின் கடைந்தெடுத்த மார்க்சியமாக முன்வைக்கின்றனர்.

 

இந்த சதியை பற்றி நான்காம் அகிலம் நியாப்படுத்தும் போது நான் உதாரணம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன் டிராட்ஸ்கி நோர்வேயில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த போது, அப்போது தான் முதலாவது மாஸ்கோ வழக்கு நடந்து கொண்டிருந்தது. (டிராட்ஸ்கியின் மகன்) லியோன் சடோல் அவருக்கு ஒரு கடிதம் அனுப்ப முயன்றார். ….அவர் அக்கடிதத்தில் சதியாளர்களான சிமிர்நொவ், யூரி கவன் போன்றவர்கள் தொடர்பாகக் குறிப்பிடுகின்றார். நாங்கள் இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். …மிகவும் கவனிக்க வேண்டியது என்னவெனில். 1932ல் பல எதிர்ப்புக் குழுக்கள் இயங்கிக் கொண்டிருந்த போது இக்குழுக்களில் இருந்து பலர் 1932-33 இல் கைது செய்யப்பட்டிருந்த போது 1932ல் இப்படியான குழுக்கள் இருந்தன என்பதற்கான எந்தவொரு சாட்சியையும் விசாரணையாளர்களால் கண்டுபிடிக்க முடியாதிருந்தது. இதற்கான காரணமாக 1935-36 வரை இக்குழுக்களைச் சேர்ந்த ஒரு தொகையினர் சுதந்திரமாக உலாவ முடிந்தது.” சதியாளர்களின் இந்த வாக்கு மூலங்கள் எதைக் காட்டுகின்றன. ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கம், சாட்சியமின்றி யாரையும் கைது செய்யவோ, விசாரனையை நடத்தவோ இல்லை. சதியாளர்கள் கட்சி உறுப்பினர்களாகவும் மற்றும் அரசு பதவிகளில் இருந்தனர். சாட்சியமின்றி கைதோ, பலாத்காரம் மூலமான விசாரனையோ நடக்கவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. ஆதாரம், சாட்சியம், அரசியல் என்ற வகையில் மென்மையாக அனுகியதைக் காட்டுகின்றது. சதியாளர்கள் தம்மை மூடிமறைத்துக் கொண்டதையும், தொடர்ந்து சதிகளில் ஈடுபடும் வசதியையும் பெற்றுக் கொண்டனர். கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தின் பண்பை முறை கேடாக சதியாளர்கள் பயன்படுத்திய போதும், ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கம் முடிமறைக்கப்பட்ட சதியாக, அதுவும் சதிக் குழுக்கள் நீடிப்பதை கட்சிக்குள் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த சதிக் குழுக்களில் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்ட போதும், சாட்சியமற்ற நிலையில் 1935-1936 வரையில் பல சதி குழுக்கள் சுதந்திரமாக சதிகளைப் பின்னின. கைதானவர்கள் அனைவரும் சதிக் குழுக்களில் நேரடியாக பங்கு பற்றியவர்கள் தான் என்பதை நான்காம் அகிலம் எற்றுக் கொள்கின்றது. தொடர்ந்தும் அவர்களின் சதி அம்பலமான போதே, கைதுகள் தொடர்ந்தன. சதியின் முழுமை வெளிப்பட்ட போதே கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. அதற்கு முன் கைதானவர்கள் தண்டனைக்கு பதில் திருத்தல், மென்மையான தண்டனைகள் வழங்கப்பட்டு விடுவிக்கபட்டவர்கள் மீளவும் சதியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்ட போது சதியின் முழுமை வெளி வரத் தொடங்கிய நிலையில், தண்டனை மிக கடுமையானதாக மாறியது. சதியாளர்கள் தான் தண்டனையின் தன்மையை தீர்மானித்தனர். இரகசியமான சதிக் குழுக்களின் நடவடிக்கைகள், புற்றில் இருந்து புற்றிசல் போல் வெளிவந்த போது களையெடுப்பு  பலாத்காரமாக மாறியது. இதுவும் மூடிமறைக்கபட்ட சதிக் குழுக்களின் வன்முறை சார்ந்த வடிவில் இருந்தது வெளிப்பட்ட போது நேர்ந்ததே.

 

இந்த மூடிமறைக்கப்பட்ட சதி பற்றி டிராட்ஸ்கியம் போற்றும் போது “…1932ம் ஆண்டு விசாரணையாளர்களுக்கு எதிரானவர்களின் குழுக்களில் ஒரு பிரிவு மட்டுமே இருப்பதாக அறியக் கூடியதாக இருந்தது. அக்குழுவில் ஒரு பிரிவுதான் ரீற்றின் குழுவாகும். …1927ம் ஆண்டு ரீற்றின் ஒரு உறுதியான ஸ்டாலினிஸ்ட் ஆவர். மாஸ்கோவில் நடந்த இடது எதிர்ப்பாளர் கூட்டங்களை கலைப்பதற்கு அவரே தலைமை தாங்கியுள்ளார். 1928ம் ஆண்டு ஸ்டாலினின் அங்கும் இங்கும் செல்லும் அரசியலுக்கு எதிரான வலது எதிர்ப்பாளர்களின் மாஸ்கோ கட்சிக் குழுவின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். 1930ல் ரீற்றின் பழைய போல்சுவிக்குகளுடன் இணைந்து ஸ்டாலினுக்கு எதிராக இயங்கவேண்டும் என்ற நிலையில் இருந்தார். 1932ம் ஆண்டு மார்க்சிய லெனினிச கூட்டமைப்பின் நிறுவனராகவும் இருந்தார். இவர் இக்குழுவால் எற்றுக் கொள்ளப்பட்ட 100 பக்கங்கள் அடங்கிய முன்நோக்கின் பெரும்பகுதியை எழுதியதுடன் இதன் தலைவராகவும் இருந்தார். …அதாவது இன்று கட்சியைப் பிரிவு படுத்தும் புதிய பிரச்சனையின் முன்னே பழைய எதிர்ப்புவாதிகளிடையே இருந்த முரன்பாடுகள் களையப்பட்டு விட்டன. …ரீற்றனின் முன்நோக்கு ஸ்டாலினுக்கு எச்சரிக்கையாக இருந்ததுடன் மிகுந்த பயத்தினை அளித்தது. இதன் விளைவாக இதனை மத்திய குழு அங்கத்தவர்களுக்கு இதனை வினையோகிக்காமலும், ஒரு மத்திய குழுக் கூட்டத் தொடரில் ரீற்றனைக் கண்டித்தார். ஆனால் இவ் எதிர்ப்பு இயக்கத்தின் முழு அளவிலான நடவடிக்கைகள் தொடர்பாக நான்கு வருடங்களின் பின்னர், 1936ம் ஆண்டே தெளிவாகத் தெரியவந்தது.” இந்த டிராட்ஸ்கிய  வாக்குமூலம் எதைக் காட்டுகிறது, 1932 இல் சதியில் ஈடுபட்ட குழுக்கள், முழுமையாக ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கத்துக்கு தெரிய வந்திருக்கவில்லை. 1936 வரை மற்றயை குழுக்கள் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அனைத்தும் தம்மை முடிமறைத்த படி, கட்சிக்குள் இருந்தபடி அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி சதிகளைச் செய்தனர். 1932 இல் ஸ்டாலினிடம் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு திட்டத்தின் அடிப்படையில் குறிப்பாக ரீற்றன் குழு கண்டறியப்பட்டது. உண்மையில் ஸ்டாலினிடமே மாற்றுத் திட்டத்தை கொடுக்குமளவுக்கு ஸ்டாலின் ஜனநாயகத்தை கடைப்பிடித்தார். அந்த திட்டத்தைப் பற்றி ஒரு மத்திய குழு கூட்டத்தில் ஸ்டாலின் விவாதித்ததுடன், அதை விமர்சித்தாரே ஒழிய, அதற்கு தண்டனை வழங்கவில்லை. ஒரு வலதுசாரியான ரீற்றன் திட்டம், உள்ளடகத்தில் மார்க்சியமாக இருப்பதில்லை. இருந்த போதும் அதை ஸ்டாலின் அவரிடம் நேரடியாக விவாதித்து விமர்சித்தார். ஆனால் ரீற்றன் சதிக் குழுவை உருவாக்கி, ஸ்டாலினையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் ஒழித்துக் கட்ட முனைந்தார். இது 1936 வரை கட்சியின் உயர் பதவிகளை பயன்படுத்தி நடத்தியதை ஸ்டாலின் அறியவில்லை என்பதை, அவர்களுடன் கூட்டாக இயங்கிய டிராட்ஸ்கியம் இன்று பெருமையாக தமது அன்றைய இரகசிய திட்டங்களைப் பற்றி முன்வைக்கின்றனர்.

 

ஒரு வர்க்கப் போராட்டம் கூர்மையாகும் போது, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான முதலாளித்துவ மீட்சி இடது அல்லது வலது எதிர்ப்பாகவே உருவாகின்றது. ஒன்றை எதிர்க்கும் போது மற்றையது பலம் பெற்று அதுவே புதிய முதலாளித்துவ மீட்சியாக வருகின்றது. இது வர்க்கப் போராட்டம் நீடிக்கும் வரை ஒரு தொடர் நிகழ்ச்சி நிரலாக இயங்கியலாக நீடிக்கின்றது. இது ஸ்டாலினுக்கு மட்டுமல்ல சீனாவிலும் இது தான் நடந்தது. உலகளவில் எல்லா நிகழ்ச்சிகளிலும் இது பிரதிபலிக்கின்றது. வலதை ஒடுக்கும் போது இடதும், இடதை எதிர்க்கும் போது வலது பலம் பெறுவதும், வர்க்கப் போராட்டத்தின் உள்ளார்ந்த ஒரு இயங்கியல் பண்பாக வர்க்கப் போராட்டமாக உள்ளது. வர்க்கப் போராட்டம் இந்த இரண்டுக்கும் எதிராக அடுத்தடுத்தும், தொடர்ச்சியாக நடத்தப்படுவதுமே இயங்கியல். இதைத்தான் ஸ்டாலின் செய்தார். இது அங்கு இங்கும் அலைவது அல்ல. இது வர்க்கப் போராட்டத்தின் உள்ளார்ந்த விதியாகும்.

 

இரகசிய சதி ஒரு இராணுவச் சதியாக சோவியத்தில் மாறியது. இதையும் டிராட்ஸ்கிய அரசியலால் கட்டமைக்கப்பட்டதை, பெருமையாக அவர்கள் பீற்றத் தவறவில்லை. அதை அவர்கள் தமது சொந்த வாக்கு மூலத்தில் கூறும் போது “…1937இல் ஸ்டாலினுக்கு எதிராக ஒரு இராணுவ சதி நடந்ததா இல்லையா என்பது தொடர்பாக விவாதிக்க விரும்புகிறேன். 500 பக்கம் கொண்ட நூலில் மூன்றில் ஒரு பாகம் இந்த இராணுவச் சதியைப் பற்றி பேசுகின்றது என்றார். (இதை வாடிம் ராகோ தனது புத்தகத்தில் பார்க்க கோருகிறார்)” நான்காம் அகில இப்படி சதியின் உள்ளடகத்தை நியாப்படுத்தும் போக்கில் இராணுவச் சதியையும் எடுத்துக் காட்டுகின்றது. சரி யார் இந்த வாடிம் ராகோ? சோசலிச வரலாற்று ஆசிரியர் என டிராட்ஸ்கியம் கூறும் வாடிம் ராகோவின் என்பவர், இன்று (2000ம் ஆண்டுகளில்) ரஷ்ய‌ பல்கலைக்கழகம் ஒன்றின் தலைவராவர். இவர் 1930 களின் ஸ்டாலின் பற்றி அவதூறுகளை உள்ளடங்கிய 6 பாகங்களை கொண்ட நூல் தொகுதியை வெளியிட்டவர். ஸ்டாலினையும் கம்யூனிசத்தையும் தூற்றும் அறிவாளி என்பதால், பல்கலைக்கழக தலைவர் அந்தஸ்து கிடைக்கப் பெற்றவர். ஹிட்லரால் கொல்லப்பட்வர்களை விட ஸ்டாலின் அதிகம் பேரை கொன்றவர் என்று தனது நூலில் எழுதிய ஒரு முதலாளித்துவ கைக்கூலி. டிராட்ஸ்கியம் பெருமையுடன் இந்த நூலை போற்றி, தனது சதியை நியாயப்படுத்துகின்றது.

 

நான்காம் அகிலமும், சதியில் பங்கு கொண்டவர்கள் வழங்கிய வாக்கு மூலம் மிகத் தெளிவாக சோவியத்தில் சதிக் குழுக்கள் பல இருந்ததை ஒத்துக் கொள்கின்றது. அவர்கள் தமக்கிடையில் இருந்த முரன்பாடுகளை ஒதுக்கி வைத்து, ஒரு பொது வேலைத்திட்டத்திற்குள் வந்ததையும், சதிப் பாணியில் பலாத்காரமாக ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சியை கவிழ்த்து விட முயன்றதை ஒத்துக் கொண்டுள்ளனர், ஒத்துக் கொள்ள கோருகின்றனர். இக்கட்டுரையில் உள்ளபடி சதியில் முதல் பங்கு கொள்ள சம்மதித்து பின் விலகிக் கொண்டவர்கள் தண்டிக்கப்படாதையும், மாற்றுக் கருத்து முன்வைக்கக் கூடிய நிலை அங்கு இருந்ததையும், ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்கும் நிலை இருந்ததையும் இந்த ஸ்டாலின் எதிர்ப்பு வாக்குமூலங்கள் ஒத்துக் கொள்கின்றன. 1936 வரை சதித் திட்டங்கள் பெரிதாகக் கண்டு பிடிக்கப்படாததையும் ஸ்டாலின் எதிர்ப்பில் பங்கற்றியவர்களின் வாக்கு மூலங்கள் ஒத்துக் கொள்கின்றன. அரசின் உயர் பதவிகளிலும், கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும் மத்திய குழுவிலும் இருந்த இவர்கள், சதியில் மிக நேர்த்தியாக இயங்கியதை டிராட்ஸ்கியம் தனது அரசியலாக அதைப் பெருமையாக இன்று பீற்றுகின்றது.

 

வலது, இடது கோட்பாடுகள் எப்போதும் பூர்சுவா வர்க்கம் சார்ந்த மார்க்சிய விலகலுடன் கூடிய திரிபாகும். சமுதாயத்தில் உள்ள வர்க்கங்களை பிரதிபலித்து இந்த வலது இடது எதிர்ப்பாளர்கள் கட்சியின் வரலாற்றுடன், அதன் போக்குடன் வளர்ச்சி பெறுவதும் இயங்கியலாகும். வலதை எதிர்க்கும் போது இடது தன்னைப் பாதுகாத்து கொள்ளும். இடது எதிர்ப்புக்குள்ளானால் வலது தன்னை பாதுகாத்து கொள்வதும், சோவியத் வரலாறு முழுக்க நீடித்ததைக் காட்டுகிறது. இது சீன வரலாற்றிலும் விதிவிலக்கல்ல. இது உலகளாவிய ரீதியில் எல்லா அரசியல் போக்கிலும் காணப்படுகின்றது. திட்டமிட்ட சதிகளும், இராணுவத் தாக்குதல் மூலம் ஆட்சி கவிழ்ப்புக்கான திட்டங்கள் தீட்டியதையும், இரகசிய நடவடிக்கைகளும், கூட்டங்களும் நடந்தது என்பதை முதன் முதலில் அப்பட்டமாக நான்காம் அகிலம் எற்றுக் கொள்ளுகிறது, மற்றவர்களை அதை எற்றுக் கொள்ளக் கோருகின்றது. நான்காம் அகிலம் மீள மீளக் கோரும் போது, வரலாற்றில் அதை மறுத்து வந்தது நிர்வாணமாகிறது. உண்மையில் இதை ஏன் டிராட்ஸ்கியம் எற்றுக் கொள்ள கோருகிறது? அரசியல் ரீதியாக டிராட்ஸ்கியத்தின் வெற்றிடம் மாற்று அற்றது. மாறாக அது முதலாத்துவ மீட்சியாக இருந்தது. உலகளவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசுகள் முதலாளித்துவ மீட்சியாக நடந்த நிலையில், மார்க்சிய மீதான சிதைவுகளின் மேல் தமது சொந்த சதியை ஒரு மாற்றாக காட்டுவது இன்றைய டிராட்ஸ்கிய அரசியலாக இருப்பதால், சதிகளின் உண்மை முகங்கள் வெளிவருகின்றன. அத்துடன் சோவியத்யூனியனில் சதிகளில் ஈடுபட்டோர் தத்தம் நிலையை சாட்சியத்துடன் வெளிக் கொண்டு வருவதும் இன்று நிகழ்கிறது. டிராட்ஸ்கியம் உண்மையில் மார்க்சியம் அல்லாத அரசியலற்ற வெற்றிடத்தில் முதலாளித்தவ மீட்சியையே சதிகளாக கட்டமைக்கப்பட்டது. அவை இன்று பாசங்கற்ற வடிவில் நிர்வாணமாகி வருகின்றது.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13