Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒரு பிரியாவிடை

தமிழ்க் கவிதையுலகின் மிக முக்கிய ஆளுமையான சண்முகம் சிவலிங்கம் மறைந்து விட்டார். ஒரு பிரியாவிடை என்னும் இக்கவிதை அவரிற்கு அவரே எழுதிய ஒரு கல்வெட்டு. மாணிக்கங்களை இழந்து போகிறேன், வளநதிகளை விட்டுச் செல்கிறேன், அது என்வரையில்தான், உங்களிற்கு நான் முகமற்ற ஒரு நிழல் என்ற வரிகள் சங்ககால கவிதைகளை நினைவூட்டும். வருமானவரியும், இறப்பும் தான் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை என்ற ஒஸ்கார் வைல்டின் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஒரு வெய்யில் சுடர்ந்தது, ஒரு மெல்லிய காற்று வீசியது, அவர் போய் விட்டார்.

ஒரு பிரியாவிடை

உங்கள் சேட்டில்
ஒட்டியிருந்த தூசியைப்போல்
என்னைத் தட்டி விடுங்கள்
போய் விடுகிறேன்
உங்கள் ஏளனத்திற்கு இலக்காக இருந்த
ஒரு காலிப்பயல்
பிடரியில் குதி அடிபட
ஓடிப்போகிறான்
பார்த்துச் சிரியுங்கள்
இன்னும்
உங்கள் கோர்த்த கரங்களிற்கு வெளியேதான்
நீங்கள் அவனை வைத்திருந்தீர்கள்
உங்கள் நெஞ்சங்களை
அவனால் அரவணைக்க முடியவில்லை
உங்கள் இனிய புன்னகையை
நீங்கள் அவனுக்கு அளிக்கவில்லை
உங்கள் பலம் பொருந்திய வியூகங்களின் முன்
அவன் என்ன
சாணம் உருட்டிய பீ வண்டு.

சில முகங்களே
சில முகங்களே
நீங்கள் என்னில்
ஏமாந்து போனீர்கள் என்பதை
உங்கள் வெறுத்த முகங்களிலும்
வெளிறிய பார்வைகளிலும்
என்றோ நான் அறிந்து கொண்டேன்
நான் போய் வருகிறேன்
என் சுவடும் தெரியாது

மாணிக்கங்களை இழந்து போகிறேன்
வளநதிகளை விட்டுச் செல்கிறேன்
அது என்வரையில்தான்
உங்களிற்கு நான்,
சனக்கும்பலில் ஒரு நொடிக்குள்
உங்களைக் கடந்து போய் விட்ட
ஒரு கால் அல்லது ஒரு கை,
ஒரு பிடரி அல்லது முதுகு,
முகமற்ற ஒரு நிழல்

எல்லாம் ஒரு நொடியில்தான்
பின்னர் அதுவும் இல்லை
ஒரு பெருவெளியின் சிறுமணல் கூட இல்லை
என் வெறுமையில்
நான் அற்ற அந்த 2x5.5 வெளியில்,
அங்கு
இனி
ஒரு வெய்யில் சுடரும்
ஒரு மெல்லிய காற்று வீசும்
நான் போய் விட்டேன்
ஓம் ஓம்
உங்களுக்கு நினைவிருக்காது.