Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அண்ணே!! நீங்க ஒரு சிரிப்பு கம்யுனிஸ்ட்டு

அன்னை பூமியை, கடல் தாயை, இயற்கையோடு இணைந்து வாழும் ஏழை மனிதர்களின் எளிய வாழ்க்கையை அழிக்க வேண்டாம் என்று தம் உயிர் வாழும் உரிமைக்காக போராடிய அந்தோணிசாமியும், சகாயமும் படுகொலை செய்யப்பட்டார்கள். பணக்காரர்களினதும், அரசியல்வாதிகளினதும் காலை நக்கும் தமிழ்நாட்டு காவல்துறை கம்மனாட்டிகள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று பாராமல் எல்லோரையும் தாக்குகிறார்கள். கொலைகாரர்களிற்கும், கொள்ளைக்காரர்களிற்கும் சிறைசாலையில் கூட விருப்பமான உணவுகளை வாங்கிக்கொடுக்கும் காவல்துறை நாய்கள், ஏழைகளின் ஒருவேளை கஞ்சியைக்கூட காலில் போட்டு மிதிக்கின்றார்கள்.

நாட்டின் வளர்ச்சி, தேசபக்தி என்று எல்லாக்கட்சி நரிகளும் ஒத்த குரலில் ஊளையிடுகின்றன. நாட்டை விற்பவன் தேசபக்தன், நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் கட்சித்தலைவன்கள், தலைவிகள்.

ஏழைமக்கள் கட்டியிருக்கும் கோவணத்தைக் கூட கழட்டி வித்து காசு சேர்க்க, நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு அலையும் இந்த பன்னாடைகள் உழைப்பாளிகளிற்கு, தொழிலாளிகளிற்கு வாழ்க்கை நடத்த பணம் எப்படி வந்தது என்று கேள்வி கேட்கிறார்கள். ஜெயலலிதாவின் அடிமையும், தேவர்சாதி மாபியாக்களான சசிகலா கும்பலின் சாதிக்கூட்டு சமதர்மவாதியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் ரெளடிக்கூட்டத்துடன் சேர்ந்து தமிழ்நாட்டு மக்களின் விடிவுக்கு பாடுபடும் இந்திய கம்யுனிஸ்ட்டுக் கட்சியின் தலைவருமான தா.பாண்டியன் என்ற மாபெரும் போராளி கூடங்குளத்தில் போராடும் மக்களைப் பார்த்து கேட்கிறார், "போராடினால் எல்லாம் கிடைத்து விடுமா" என்று. உண்மை தான். அவர் ஜெயலலிதாவின் காலைப்பிடித்து தமிழ்நாட்டு விவசாயிகளிற்கு காவேரியில் தண்ணீரையும், கடலில் இலங்கை கடல்படையினரால் கொல்லப்படும் கடல்தொழிலாளர்களிற்கு உயிர்பாதுகாப்பையும், விலைவாசி உயர்வினால் பட்டினி கிடக்கும் ஏழைகளிற்கு மூன்று வேளையும் அறுசுவை உணவை வாரி வழங்க இருக்கும் போது, தேவையில்லாமல் போராடினால் அவரிற்கு கோபம் வரத்தானே செய்யும்.

ஈழ மக்களிற்காக அண்ணன் குரல் கொடுத்த ஒரு மேடையில் பின்ணணியில் ஈழ அகதிகளை தடுப்புமுகாம்களில் சிறை வைத்த பாசிசக்கோமாளி எம்.ஜி.ஆரின் படம். முன்ணணியில் நான் பாப்பாத்தி தான் என்னை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது (அதென்னவோ உண்மை தான்) என்று தமிழக சட்டசபையிலேயே பிராமணத்திமிர் பேசிய, "வன்னிப்போரின் போது போர் என்றால் சாகத்தான் செய்வார்கள்" என்று மகிந்துவுடன் சேர்ந்து சாவிற்கு சந்தோசப்பட்ட பாசிசத்தாய் ஜெயலலிதா. அண்ணன் எந்த இடத்திலும் கட்சியை விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதற்கு சாட்சியமாக சிவப்புத் துண்டை சிம்பாலிக்காக கழுத்திலே போட்டுக்கொண்டு வாயெல்லாம் பல்லாக ஈழமக்களிற்காக போராடி ஈழவரின் கண்ணீர் துடைத்தவர் அவர். கூடங்குளத்தில் அணுமின்நிலையம் வேண்டாம் என்று அண்ணன் போராடுவதென்றால், பின்ணணியில் அதைக்கட்டும் ரஸ்சியாவின் புட்டினின் படம் இருக்கும். அனைத்துலக நிறுவனங்களிற்கு இந்தியாவை விற்கும் அன்னை சோனியாவின் காலைப்பிடித்தபடி அவர் போராடுவார்.

தமிழக சட்டசபையிலே சில இடங்களை பெறுவதற்காக யாருடனும் கூட்டு வைக்க தயங்காத கொள்கை வீரர்கள் இவர்கள். கருணாநிதியின் கட்சி, எம்.ஜி.ஆரின் கட்சி, ஜெயலலிதாவின் கட்சி என்று எந்த கருமம் பிடிச்ச கட்சியென்றாலும் நாலு இடம் தந்தால் சரி. கீழ்வெண்மணியில் விவசாயத்தொழிலாளர்கள் தன்னை எதிர்ப்பதா என்று வெறிபிடித்து தொழிலாளர்களின் உடல் கருகி, உயிர் வெந்து போக தீயிட்டுக் கொளுத்திய நாயுடு, சிறையிலிருந்து வெளிவந்த போது முதல் ஆளாகப்போய் வரவேற்ற மூப்பனாருடன் கூட கூட்டு வைக்கத் தயங்காதவர்கள் இவர்கள்.

ஜெயலலிதா கடந்த சட்டசபைத்தேர்தலின் போது இவர்களை கழட்டி விட்ட போது இவர்கள் தேடி ஓடிய தலைவர் விசயகாந்து. மூன்றாம்தர திரைப்படங்களில் நடித்த நாலாந்தர நடிகர் தான் இவர்களிற்கு அரசியல் வழிகாட்டி. மார்க்சும், ஏங்கெல்சும் முதலாளித்துவத்தை விளக்கினர், அதன் தொடர்ச்சியாக ஏகாதிபத்தியத்தை ஆய்வு செய்தார் லெனின். அந்த அரசியல், சமுக விஞ்ஞானப்படிப்பெல்லாம் உண்மையான கம்யுனிஸ்ட்டுக்களிற்கு. சிரிப்புக் கம்யுனிஸ்ட்டுக்களான எங்களின் தலைவன் என்று நடிகையின் தொப்புளில் ஆயில் இல்லாமல் ஆம்லெட்டு போடுவது எப்படி என்று ஆராய்ச்சி செய்த அறிவுக்கொழுந்தை காட்டிய ஒப்பற்ற சிந்தனையாளர்கள் இவர்கள்.

வலதுசாரிக்கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து வலதுசாரிகளும், இடதுசாரிகளும் ஒன்று தான் என்ற மயக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தினார்கள். மக்களிடம் இயல்பாக எழுகின்ற போராட்டங்களை காட்டிக் கொடுத்தார்கள். இன்று ஏழை, எளிய மக்கள் தம் வாழ்வை, உணவும், உறையுளும் உவந்து தரும் உலகை, அலை எறிந்து ஆரவாரிக்கும் நீலக்கடலை காக்க போராடுவதையே எதிர்க்கும் அளவிற்கு சீரழிந்து விட்டார்கள். ஆனால் மக்களின் முதுகின் மேல் ஏறி சவாரி செய்ய நினைத்தவர்கள் தான் காலச்சுழற்சியில் குப்பைத்தொட்டிக்குள் குப்புற விழுந்தார்கள் என்பது வரலாறு காட்டும் நிதர்சனம்.

-21/10/2012