Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இவங்கள் இதுக்கு சரிப்படமாட்டான்கள்

அறுவைதாசனிற்கு இரவில் கால்கள் குறண்டி இழுத்து வலிக்கும். ஒரு அரைமணி நேரத்திற்கு உயிர் போகுற மாதிரி இருக்கும். புரண்டு,புரண்டு படுத்து கால்களை தடவி விட்டால் கொஞ்சம் குறையும். மனிசியை காலை பிடித்து விட சொல்லுவோம் என்று மெதுவாக சுரண்டி கூப்பிட்டான். முழிச்சிருக்கிற நேரம் முழுக்க ஸ்கைப்பிலே அலட்டிக் கொண்டு இருந்து விட்டு நித்திரை கொள்ளுற போது தான் என்ரை நினைப்பு வந்ததாக்கும், பேசாமல் படும் என்று யாழினி எரிந்து விழுந்தாள். அறுவைதாசனும் கூட்டாளிகளும் முன்பு தொலைபேசியில் அரசியல் கதைப்பார்கள். இப்ப விஞ்ஞான வளர்ச்சியில் ஸ்கைப்பில் ஒவ்வொரு இரவும் ஏழு, எட்டு பேர் கூடி உலகத்து பிரச்சனைகள் முழுக்க அலசி, ஆராய்ந்து கலைவார்கள். நாங்கள் செய்யிற ஆய்வுகள் எதுவும் இவளுக்கு விளங்குதில்லையே, எப்பவும் மண்டை கழண்டவங்கள் மாதிரியே நினைச்சுக் கதைக்கிறாள். அதுவும் நான் கால்வலியிலே காலை பிடிச்சு விட கூப்பிட்டால் இவள் என்னத்தை நினைச்சு கோபப்படுகிறாள் என்று கவலைப்பட்டான்.

தான் கேள்விப்பட்டிராத பழத்தை கொண்டு வருபவனிற்கு பரிசு, தனக்கு தெரிந்த பழத்தை கொண்டு வருபவனிற்கு சவுக்கடி என்று ஒரு போட்டியை அறிவித்த அரசனிடம் அன்னாசிப்பழத்தை கொண்டு போய் காட்டி சவுக்கடி வாங்கியவன் சந்தோசமாக சிரிச்சானாம். ஏண்டா சிரிக்கிறாய் என்று கேட்டதற்கு அன்னாசிப்பழம் கொண்டு வந்த எனக்கே இவ்வளவு அடி என்றால் பின்னாலே ஒருவர் பலாப்பழத்தோடை நிக்கிறார் அவற்றை கதியை நினைச்சுப் பாத்தேன் என்றானாம். அது மாதிரி பதினொரு மணிக்கு படுக்கைக்கு போகிற எனக்கே இந்த நிலமை என்றால் அதுக்குப் பிறகும் அரசியல் ஆய்வு செய்யும் மற்றவர்களின் கதியை யோசித்துப் பார்த்தான். மனிசிமாரிட்டை எவ்வளவு அடி வாங்கினாலும் தாங்கிக் கொண்டு சளைக்காமல் அடுத்த நாளும் கூடிக் கதைக்கும் தன் தோழர்கள் ரொம்ப நல்லவங்கள் என்று பெருமிதம் கொண்டான். ஆஊ என்று வலியில் முனகியபடியே நித்திரையாகிப் போனான்.

காலையில் எழுந்து காலைப் பிடித்தபடியே தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தான். பக்கத்து வீட்டுக்காரர் மதிலால் தலையை நீட்டிய படி என்ன ராத்திரி முழுக்க ஆ ஊ எண்டு ஒரே சவுண்டு. அடங்கவே மாட்டீரா என்று கண்ணடிச்சார். அட நாசமாப் போறவனே அவனவன் வலியிலே துடிக்கிறான். நீ இப்பிடிக் கேக்கிறியே இந்த ரணகளத்திலேயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பா என்று சத்தம் போட்டான். அந்த நேரம் பார்த்து அய்யாமுத்து கவலை தோய்ந்த முகத்தோடு வந்து சேர்ந்தான். ஏண்டா சோர்ந்து போய் இருக்கிறாய் என்று அறுவை கேட்டான். எனக்கு தெரிந்த ஒருத்தரை இண்டைக்கு சந்தித்தேன். அப்ப அவர் அரசியல் அறிவில்லாமல் இருக்கிறாய் என்று என்னை திட்டி விட்டு நான் எல்லா புத்தகங்களையும் மூலத்திலே படிக்கிறேன் உனக்கு சும்மா வாசிக்க என்ன கஸ்ரம் எண்டு கோபப்பட்டார். அவர் என்னை திட்டினது கூட பரவாயில்லை, ஆனா அவரிற்கு மூலம் வந்ததிற்கு தான் கவலைப்படுகிறேன் என்றான். அட கட்டையிலே போறவனே அவருக்கு மூலமும் இல்லை, வயித்துப்போக்கும் இல்லை. அவர் அந்த புத்தகங்களை முதலில் வெளிவந்த மொழியிலேயே வாசிக்கிறார் எண்டதை தான் அப்பிடி சொன்னவர். ஆனால் இதுவும் அய்யர்மார் வேதங்களை நாங்கள் மட்டும் தான் படிப்போம், சமஸ்கிருதம் தேவபாசை என்று சொல்வது போல, குர்-ஆனை அரபியிலே படிப்போம் என்று முஸ்லீம்கள் சொல்வது போல எந்த விதமான அர்த்தமும் இல்லாத புலம்பல் தான்.

மார்க்ஸ் மூலதனத்தை DAS CAPITAL என்று ஜேர்மன் மொழியிலே எழுதினார். அதை ஜேர்மன் மொழி தெரிந்த எவரும் வாசிக்கலாம். கிட்லர் கூட அதை வாசித்திருப்பான். அதை வாசிப்பதால் மட்டும் ஒருவன் மார்க்சியவாதி ஆகி விட முடியாது. அவனது தனிப்பட்ட வாழ்க்கையிலும்,பொதுவாழ்க்கையிலும் நேர்மையாகவும் மக்கள் சார்ந்தும் இருக்கிறானா என்பதே மார்க்சிசம். மார்க்சிஸ்ட்டு என்று சொல்கிற ஒருவன், நான் படித்திருப்பதால் பெரிய ஆள், அவர் படிக்கவில்லை மண்டையிலே ஒண்டும் இல்லை என்று சொல்ல மாட்டான். அப்படிச் சொல்பவன் மக்கள் விரோதி. நாங்கள் பிரம்மனின் தலையிலே இருந்து வந்தவர்கள், அதனால் உயர்ந்த சாதி புனிதமானவர்கள் சூத்திரர்கள், பிரம்மனின் காலிலே இருந்து வந்தவர்கள் தாழ்ந்தவர்கள் பஞ்சமர்கள் தீண்டத்தகாத சாதி அசுத்தமானவர்கள் என்று நால்வருணக் கொடுமைகளை புனிதம் என்று ஊளையிடுவது போல, இதுவும் மக்கள் விரோதத்தன்மை தான். நான் படித்து பட்டம் பெற்றவன், இவர்கள் கூலி வேலை செய்பவர்கள் என்று சொல்வது யாழ்ப்பாணத்து பிற்போக்கு சமுதாய வாழ்க்கை முறையின் தொடர்ச்சி. நான் டொக்டர், எனது மகன் பொறியியலாளன் என்று பெருமை பேசுவது அவைகள் படிப்பு, தொழில் என்று இல்லாமல் அந்தஸ்து என்று நினைக்கும் மண்டை கழண்ட சிந்தனை. அது மாதிரித் தான் நான் அரசியல் படிச்ச பிள்ளை என்பதும்.

இதே மாதிரித் தான் இன்றைக்கு இலங்கையிலே இனவாத அரசை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுக்கின்ற முன்னிலை சோசலிச கட்சி, புதிய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளை விமர்சிக்கிறோம் என்று சிலர் முட்டையிலே மயிர் புடுங்குவதும், இவர்களிற்கு அக்கட்சிகளின் சரி பிழைகளை பேசுவது நோக்கமல்ல. மிகக்கொடுமையான இலங்கை அரசை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுக்கும் இக்கட்சிகளின் மீது ஆக்கபூர்வமான விமர்சனங்கள் கட்டாயமாகத் தேவை. ஆனால் வெளிநாடுகளில் கம்பியூட்டர்களின் முன்னிருந்து புரட்சிமயிர் புடுங்கும் இவர்களின் நோக்கம் அதுவல்ல. இத்தனைக்கும் இவர்கள் இந்த கட்சிகளை தொலைபேசியிலும், மின்னஞ்சல்களிலும் துரத்தி பிடிக்க முயற்சித்தவர்கள். அது வரைக்கும் குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா என்று பஜனை பாடியவர்கள். அக்கட்சிகள் இவர்களின் பிரமுகர் அரசியலை, பிழைப்புவாத போக்குகளை ஏற்றுக்கொள்ளாததால் தான் இன்று அவதூறு மழை பொழிகிறார்கள். என்ன, ஏது என்று சொல்லாமலே இவனுகள் இதுக்கு சரிப்பட்டு வர மாட்டானுகள் என்று புலம்புகிறார்கள்.

அறுவை மூச்சு விடாமல் கத்தி விட்டு திரும்பி பார்த்தால் அய்யாமுத்துவை காணவில்லை. உள்ளே யாழினியிடம் இவனிற்கும் மூலக்கொதியோ இந்த கத்து கத்துறான் என்று கேட்டுக் கொண்டு நின்றான் அய்யாமுத்து.