Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தம்புள்ள அம்மன் கோயில் இடிப்பும், இரண்டு செய்திகளும்

தம்புள்ள அம்மன் ஆலயம் மகிந்துவின் சிங்கள, பெளத்த இனவாத அரசினால் இடிக்கப்பட்டிருக்கிறது. பெளத்த புனிதபிரதேசத்திற்கு இக்கோயில் அமைந்திருக்கும் இடம் தேவை என்று காரணம் காட்டி இடித்திருக்கிறார்கள். அத்துடன் அக்கோவிலைச் சுற்றி வாழும் நாற்பது தமிழ் குடும்பங்களும் வெளியேற வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். நாட்டை கொள்ளையடித்து மக்களை வறுமைக்கு தள்ளும் இலங்கையின் ஆட்சியாளர்கள் மக்களை ஒருவரோடு ஒருவர் பகை கொள்ள வைப்பதற்காக இன, மதக்கலவரங்களை உண்டாக்குகிறார்கள். வெள்ளைக்காரர்களிற்கு வால்பிடித்து, மதம் மாறி தங்களது பெயரைக் கூட ஜூனியஸ் ரிச்சார்ட் ஜெயவர்த்தனா, சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா என்று வைத்துக் கொண்டவர்கள் தான் காற்று திசை மாறிய போது மறுபடி மதம் மாறி சிங்கள மொழிக்காகவும், பெளத்த மதத்திற்காகவும் உயிரை விடப் போவதாக ஊளையிட்டார்கள்.

இலங்கையின் பெளத்த சிங்கள இனவாதிகள் பெளத்தமக்களின் காவலர்களாக தம்மை காட்டி கொள்வதற்காக தமிழ், முஸ்லீம் மக்களை கொலை செய்கிறார்கள். தமிழ்மொழியின் மீது, தமிழ், முஸ்லீம் மக்களின் சமயங்களின் மீது தாக்குதல்களை செய்கிறார்கள். மறுபுறத்தில் இலங்கை அரசின் எலும்புத்துண்டுகளிற்கு அலையும் தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகள் இலங்கை மக்களின் எதிரியான இந்த அரசை காப்பாற்றுவதற்காக தமிழ், முஸ்லீம் மக்களிடையே பிரச்சனைகளை மூட்டி விடுகிறார்கள்.

முதலாவது செய்தியைப் பார்ப்போம். "வடக்கில் இருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை அங்கு மீளக் குடியமர்த்துமாறு தேசிய சுதந்திர முன்னணியின் துணை அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவத்திற்கான அமைப்பு முஸ்லிம்கள் சிலரை திரட்டி கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கான அமைப்பின் ஏற்பட்டாளருமான மொஹமட் முஸ்ஸாமில், வடக்கு, கிழக்கை இணைக்க எடுக்கும் முயற்சிக்குள், தமிழ் இனவாத மற்றும் பிரிவினைவாத தேவைகள் இருக்கின்றன. இரு மாகாணங்கள் இணைக்கப்படுவதால் முஸ்லிம் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை" என்றார்.

இவருக்கு இந்த அரசினால் முஸ்லீம் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவது தெரியவில்லை. பள்ளிவாசல்கள் இடிக்கப்படுவது தெரியவில்லை. புலிகளை அழித்து விட்டோம் நாடு முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று மகிந்து முழங்கியதும் தெரியாத பால்குடி இது. முஸ்லீம் மக்களிற்காகத் தான் இந்த ஆர்ப்பாட்டத்தை இவர் நடத்தினாராம். நம்புங்கள். இல்லாவிட்டால் சகல அதிகாரங்களும் கொண்ட மகிந்துவிடம் போய் வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்தப்பட வைக்க வேண்டும் கேட்க தெரியாமல் தெருவிலே போய்க் கத்துமா?

இரண்டாவது செய்தியைப் பார்ப்போம். பொதுநலவாய மாநாட்டுக்கு, "இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வருவாரேயானால், அவர் தம்புள்ளைக்கு சென்று உடைக்கப்பட்ட அம்மன் ஆலய வளாகத்தை பார்வையிட வேண்டும் எனவும் அவருடன் சேர்ந்து பொதுநலவாயத்தின் தலையாய நாடான பிரித்தானியாவின் பிரதமர் கமரூனும் செல்ல வேண்டும்" என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

என்னத்தை சொல்லுறது. தம்புள்ளை கோயிலை காட்டிறதோடை காங்கிரசின் ஆக்கிரமிப்பு ராணுவத்தாலே தமிழ் பகுதிகளிலே இடிக்கப்பட கட்டிடங்களையும் பார்க்கச் சொல்லலாம். அதுக்கு பிறகும் சிங்கிற்கு நேரம் இருந்தால் சிங்கு, மகிந்துவோடு சேர்ந்து கொலை செய்த வன்னி மக்களின் எலும்புக்கூடுகளை காட்டலாம். இலங்கையின் மக்களையும், பண்பாடுகளையும் அழித்த பிரித்தானிய காலனித்துவாதிகளின் நேரடி வாரிசான டேவிட் கமரோனிற்கு பழைய இடிபாடுகளையும், கல்லறைகளையும் காட்டலாம். காலனித்துவத்தின் கொடுமைக்கு வாழும் சாட்சியங்களான மலையக மக்களை காட்டலாம்.