Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பன்றிகளால் பறக்க முடியும்!!!

இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணத் தயாராக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருவதாகவும் அருட்தந்தை இமானுவேல் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணை நடத்துவதாக அளித்துள்ள உறுதிமொழிக்காக இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கை தொடர்பான ஜெனீவா விசாரணை அறிக்கை வரும் செப்டெம்பரில் வெளியாக இருக்கின்ற சூழ்நிலையில், அந்த அறிக்கையை முக்கிய வரலாற்று ஆவணமாகக் கருதி அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் எஸ்.ஜே. இமானுவேல் கூறினார்.

ஆம், மாதம் மும்மாரி பொழியப் போகின்றது. வழுக்கை ஆற்றில் தேனும், பாலும் பாய்ந்து ஓடப் பண்ண மைத்திரி அரசு; மகியங்கனை வேடர்களிடம் தேனும், மட்டக்களப்பு எருமைகளிடம் பாலும் வாங்கி வருகிறது. பரமண்டலத்தில் இருக்கும் பிதாவின் அற்புதங்களை அப்பலோவில் போகாமலே, ஆராய்ச்சி பண்ணாமலே கண்டு பிடிக்கும் "அருட் தந்தை" இலங்கை மண்டலத்தில் இருக்கும் மைத்திரிபால சிரிசேனாவின் அருங்குணங்களை கண்டு பிடிப்பதில் அதிசயம் எதுவும் இல்லை. இலங்கையில் இரத்த ஆறு ஓடிய போது வராத ஐக்கிய நாடுகள் சபை இனி விசாரணை நடத்தி கொல்லப்பட்ட தமிழர்களிற்கு நீதி பெற்றுத் தரும், கொலை செய்த மகிந்த ராஜபக்ச கும்பலை தூக்குக் கயிற்றில் தொங்க விடும் என்று அருள்வாக்கு சொல்லும் அய்யாவிற்கு இது ஒன்றும் பெரிய விடயமில்லை.

அன்று, முள்ளிவாய்க்காலில் மக்கள் ஒரு துளி நீர் இன்றி, உயிர்மூச்சு விட ஒரு பிடி சோறு இன்றி தவித்த போது அமெரிக்கா வரும், ஐரோப்பா வரும் அழிவில் இருந்து காப்பாற்றுவார்கள் என்று கதைகள் சொன்னார்கள். உலகம் முழுக்க கொலைகள் செய்கிறவர்கள்; இலங்கையின் இனவெறி, மக்கள் விரோத அரசுடன் சேர்ந்து தமிழ்மக்களைக் கொன்று கொண்டு இருந்தபோது அவர்களை நம்பச் சொல்லி அப்பாவி மக்களை பலியிட்டார்கள். புலிகளின் கதை முடித்தார்கள்.

இன்று மைத்திரியின் மக்கள் விரோத அரசை நம்பச் சொல்லி அடுத்த அத்தியாயத்தை தொடங்குகிறார்கள். முதலாளித்துவ கொள்ளையர்களின் அரசான இலங்கை அரசினால் இலங்கையின் எல்லா இனமக்களையும் போல சுரண்டப்படும், ஒடுக்கப்படும் ஏழைச் சிங்கள மக்களை தமிழ்மக்களின் எதிரிகள் என்று இவர்கள் கீழ்த்தரமான இனவாதக் கூச்சல் போடுவார்கள். ஆனால் இலங்கையின் மக்களை கொள்ளையிடும் மைத்திரியின் அரசு போடும் சிக்னல் பிடிச்சுப் போனதால் டீல் போடுகிறார்களாம். மக்களிற்காக தம் வாழ்வு துறந்து போராட வந்த ஆயிரம் போராளிகளை துரோகிகள் என்று கொலை செய்தவர்கள் இன்று தமிழ்மக்களை மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து கொலை செய்த மைத்திரி சிரிசேனாவையும், சரத் பொன்சேகாவையும் நம்பச் சொல்கிறார்கள்.

ஒரு பாடல் முடியும் வரியில் அடுத்த பாடல் தொடங்குவதை அந்தாதி என்று தமிழ்க்கவிதை மரபு சொல்லும். இலங்கை வானொலி அதை பாட்டுக்குப்பாட்டு என்று சொல்லும். இம்மானுவேல் விட்ட இடத்தில் சுமந்திரன் தொடர்கிறார். 278 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விரைவில் விடுதலை செய்ய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளாராம். நீதி அமைச்சருடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று அய்யா சொல்கிறார். ஆண்டுக்கணக்காக இருட்சிறைகளில் எம் சகோதர, சகோதரியர் வாழ்வைத் தொலைத்து வாடி வதங்குகிறார்கள். குற்றம் எதுவும் செய்யாமலே, வழக்கு எதுவும் இல்லாமலே எம்மக்களை கொடுஞ்சிறைகள் சங்கிலிகளில் பிணைத்துள்ளன. இவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களாம்.

சிறைச்­சா­லை­களில் தடுத்­து ­வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து அர­சியல் கைதிகளையும் விடு­தலை செய்­யக் கோரி சம உரிமை இயக்­கத்­தினால் அண்மையில் கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்­பட்­டது. (அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்) இதன்­போது ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த 14 வய­து­டைய சிறுமி ஒருத்தி கண்ணீர் மல்கச் சொன்னாள், எனது அம்­மாவின் பெயர் சசி­தரன் தங்கமலர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவர் கைது­செய்­யப்­பட்­டார். ஒரு வருடமாக விசாரணைகள் எதுவும் இன்றி தடுத்­து வைக்கப்பட்டிருக்கிறார். எனக்கு நான்கு சகோ­த­ரிகள், அவர்கள் அனை­வரும் திருமணம் முடித்து விட்டனர். இவ்­வா­றான நிலையில் எனது வீட்டில் நான் மட்­டுமே தனி­மையில் எனது தாயைப் பிரிந்து தவிக்­கின்றேன். எனது அம்­மாவை பிரிந்து வாழும் என்னால் எனது கல்­வி­யையும் தொடர முடியாமல் எனது எதிர்­கா­லமும் கேள்விக்குறியா­கி­யுள்­ளது. இங்கு இருக்கும் அனை­வ­ரையும் நான் மன்­றாடி கேட்­கின்றேன். எப்­ப­டி­யா­வது என் அம்மாவை மீட்­டு­த்தா­ருங்கள்

இந்த சின்னஞ்சிறு குஞ்சிற்கு இலங்கை அரசை நம்பச் சொல்லும் இம்மானுவேலும், சுமந்திரனும் என்ன சொல்லுவார்கள். தமிழ் மண்ணில் எந்த ஒரு சுவடும் இல்லாது மடிந்து போன எம்மக்களிற்கு என்ன மறுமொழி சொல்லுவார்கள். மரணித்துப் போனவர்களை நினைத்து மடிந்து கொண்டிருப்பவர்களிற்கு என்ன மறுமொழி சொல்லுவார்கள். காணாமல் போனவர்கள் ஒரு நாளில் கதவை தட்டக் கூடும் என்று காத்துக் கொண்டிருப்பவர்களிற்கு என்ன மறுமொழி சொல்லுவார்கள். அப்பா எங்கே, அம்மா எங்கே என்று அழும் நம் குழந்தைகளிற்கு என்ன மறுமொழி சொல்லுவார்கள்.

பொன்னம்பலம் இராமநாதன், கணபதிப்பிள்ளை காங்கேசர் பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம், சம்பந்தன் என்று அத்தனை பேரும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சிங்கள இனவெறித் தலைமைகளுடன் சேர்ந்து இலங்கையின் ஏழை மக்களை எமாற்றியதை இவர்கள் தொடருகிறார்கள். சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரும் போராட்டம், வித்தியாவின் மரணத்தை தொடர்ந்து மக்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்த போராட்டம் என்று மக்கள் அரசியல்மயப்படுவதை தடுப்பதற்காகவே இவர்கள் பொய்கள் சொல்கிறார்கள். பன்றிகளால் பறக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

ஆனால் பொய்களும், புனைவுகளும் உண்மைக்கு முன்பு, வாழ்வின் யதார்த்தத்திற்கு முன்பு வெகுநாட்கள் நிற்க முடியாது. அன்று பிணைத்திருந்த சங்கிலிகளை உடைத்து மக்கள் வீதிக்கு வருவார்கள். அவர்களை எதுவும் பிரித்திருக்காது. அவர்களது கைகள் இணந்திருக்கும். விடுதலையின் பாடல் இரவும், பகலும் ஓங்கி ஒலிக்கும். மலைகளின் முகடுகளிலும், கானகத்தின் மரங்களிலும், கடற்கரை வெளிகளிலும் செஞ்சுடர் ஒளி வீசும்.