Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

விகாரைகளைத் திணிக்கும் சிங்கள பெளத்த இனவெறி அரசு

விளக்குக் கம்பங்களைக் கண்டால் நாய்கள் காலைத் தூக்கும். தமிழ்ப் பிரதேசங்களில் எங்கு இடம் கிடைத்தாலும் இலங்கை அரசும், அதன் காவல் நாய்களான இராணுவமும் புத்தனைத் தூக்கி வந்து விகாரைகள் கட்டுகிறார்கள். கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் கோவிலிற்கு அருகில் இலங்கை இராணுவம் மிகப் பெரிய விகாரை ஒன்றை கட்ட முயற்சிகளை எடுத்துள்ளது. நயினாதீவில் இருக்கும் நாகவிகாரையில் நூறு அடி உயரத்திற்கு புத்தனின் சிலை ஒன்றை அமைக்க போகிறார்கள்.

தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் பெளத்த சிங்கள மக்கள் தாம் வழிபடுவதற்காக பெளத்த விகாரைகளை கட்டுவது என்பது அடிப்படையான ஜனநாயக உரிமை. ஆனால் தமிழ் மக்களைக் கொன்றவர்களும், ஏதுமறியா அப்பாவிகளை இன்று வரை சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களான இலங்கை அரசும் அதன் இராணுவமும் பெளத்த மதத்தை சேர்ந்த ஒரு தனி மனிதர் கூட இல்லாத இடங்களில் எல்லாம் விகாரைகளையும், புத்தரின் சிலைகளையும் திணிப்பது தமிழ் மக்களின் மீதான பெளத்த சிங்கள இனவெறி அடக்குமுறையின் தொடரும் நிகழ்ச்சி நிரல்.

இராணுவம் வழிபடுவதற்கும், தமிழ்ப் பகுதிகளிற்கு வரும் பெளத்த சிங்கள மக்கள் வழிபடுவதற்கும் இந்த விகாரைகளை கட்டுகிறார்கள் என்பதாக வைத்துக் கொள்வோமாயின் இராணுவத்தில் குறிப்பாக கடற்படையில் அதிகமாக இருக்கும் சிங்கள கிறிஸ்தவர்களிற்காகவோ அல்லது தமிழ்ப் பகுதிகளிற்கு வருகை தரும் சிங்கள கிறிஸ்தவ மக்களோ வழிபடுவதற்கு எந்தவொரு கிறீஸ்தவ ஆலயத்தையும் இலங்கை அரசோ அல்லதோ இராணுவமோ இன்று வரை கட்டியதாக இலங்கையின் வரலாற்றிலேயே இல்லை.

ஏனென்றால் இவை பெளத்த சிங்கள இனவெறி அரசுகள். ஆனால் இந்த அரசுகளும், அதிகார வர்க்கமும் உண்மையிலேயே கெளதம சித்தார்த்தனின் போதனைகளை, அவனின் அகிம்சை வழியை கண் கண்ட பாதையாக உணர்ந்ததினால் தான் பெளத்தத்தை தூக்கிப் பிடிக்கிறார்களா? தமது தாய்மொழி சிங்களமொழியின் மீது தணியாத தாகம் கொண்டுதான் "சிங்களம் மட்டும்" அல்லது "சிங்கள மொழிக்கே முதலிடம்" என்று வெறி கொள்கிறார்களா?

இல்லை, போத்துக்கீசர் இலங்கை வந்து நாட்டைப் பிடித்தபோது ஏழைகள் சமுக ஏற்றத்தாழ்வில் இருந்து விடுபடவும், கல்வியைப் பெறுவதற்கும் மதம் மாறினார்கள். இலங்கையின் சிங்கள அதிகார வர்க்கம் போர்த்துக்கேச அதிகாரத்துடன் கூட்டுச் சேர்வதற்காக கத்தோலிக்கராக மாறியது. பின்பு ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்னும் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் இலங்கையை ஆக்கிரமித்த போது சிங்கள உயர்மட்டம் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களாக மதம் மாறினர். ஆங்கில மொழியை கற்று நடை, உடை பாவனைகளை ஆங்கிலேயர் அடியொற்றி நடந்தனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு பாராளுமன்றத்தில் அதிகாரத்தை பிடிப்பதற்காக பெரும்பான்மை பெளத்த சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அவர்கள் மறுபடியும் பெளத்தர்களாகி சிங்கள பெளத்த பெருமை பேசுகிறார்கள்.

சிங்கள பெளத்த இனவெறியின் தத்துவ ஆசிரியனான அநகாரிக தர்மபாலாவின் இயற்பெயர் டொன் டேவிட் கேவவித்தாரன; இலங்கையின் முதல் பிரதமர், மலையக மக்களின் குடியுரிமையை பறித்தவனின் பெயர் டொன் ஸ் ரீபன் சேனநாயக்கா; பிரதமரும், "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" என்ற சட்டத்தைக் கொண்டு வந்த இனவெறியனின் பெயர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா; தமிழ் மக்களின் மேல் இருமுறை இனக்கலவரத்தை கட்டவிழ்த்து விட்டவன் யூனியஸ் ரிச்சார்ட் ஜெயவர்த்தனா; யாழ்ப்பாண நூல்நிலையத்தை எரித்த கயவன் லயனல் காமினி திசநாயக்கா; காமினியோடு சேர்ந்து நூல்நிலையத்தை எரித்தவனும், எண்பத்துமூன்று கலவரத்தின் போது ஜெயவர்த்தனாவின் காடையர் கூட்டத்தின் தலைவனாக வன்முறை செய்தவனும், "சிங்களவர்களே, பெளத்தத்தை காக்க கிளர்ந்து எழுங்கள்" என்ற இனவெறி புத்தகத்தை எழுதிய வாழ்நாள் இனவாதியின் பெயர் சிறில் மத்தியு; தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தவன் பேர்சி மகேந்திரா ராஜபக்ச என்னும் மகிந்த ராஜபக்ச.

இவ்வாறு ஆக்கிரமிப்பாளர்களிற்கு வால் பிடிப்பதற்காக மதம் மாறியவர்கள், பெயரைக் கூட மாற்றியவர்கள் தான் இந்த சிங்கள பெளத்த காவலர்கள். 1971 ஆண்டிலும், 1987 - 1989 ஆண்டுகளிலும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த இலட்சக்கணக்கான போராளிகள் இலங்கை அரசுகளால் கொல்லப்பட்டனர். இப்போராளிகளில் பெரும்பான்மையானவர்கள் வறிய பெளத்த சிங்களக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். பெளத்த சிங்கள நாட்டின் காவலர்கள் என்று இனவெறி பேசி இலங்கை மக்களை பிரித்து வைத்திருக்கும் இவர்கள் பசி, பட்டினி, வறுமை என்பவற்றிற்கு எதிராக கிளர்ந்து எழுந்த ஏழைச் சிங்கள மக்களைக் கொல்ல கொஞ்சமும் தயங்கவில்லை.

மதங்கள் என்றைக்கும் அதிகாரங்களின் பக்கம் நின்று மக்களை ஒடுக்குமே தவிர பிரச்சனைகளிற்கு தீர்வை ஒரு போதும் தரப்போவதில்லை. அயோத்திதாசரும், அம்பேத்காரும் கெளதம சித்தார்த்தனின் பகுத்தறிவு சிந்தனைகளை ஆராய்ந்து அறிந்து ஒடுக்கப்பட்ட மக்களிற்கு பெளத்தமே தீர்வு என்றனர். ஆனால் கெளதம சித்தார்த்தனின் சிந்தனைகளை அதிகார வர்க்கம் என்றைக்கோ இறுகிய மதமாக மாற்றி விட்டது. அயோத்திதாசர் சென்னையில் "சாக்கிய புத்த கழகத்தை" கூட்டிய போது இனவெறியாளன் அநகாரிக தர்மபாலா அங்கு உரையாற்றினான். இலங்கையில் முஸ்லீம், தமிழ் மக்களிற்கு எதிராக பேசுபவன், இந்தியாவின் ஒடுக்கப்படும் மக்களிற்கான மதமாக புத்தசமயத்தை முன் வைக்கும் இரட்டை வேடத்தை மதத்தினால் மட்டுமே செய்ய முடியும்.

இனப் படுகொலையாளன் மகிந்தாவின் கொலையாட்சிக் காலத்தில் தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் விகாரைகள், புத்தர் சிலைகள் என்பன அமைக்கப்பட்டன. இன்றைய மைத்திரி சிறிசேனா - ரணில் விக்கிரமசிங்கா ஆட்சிக் காலத்திலும் அவை தொடர்கின்றன. இலங்கையின் மக்கள் விரோத அரசுகள் பெளத்த சிங்கள வெறியை வைத்து மக்களைப் பிரிக்கும் அரசியலை என்றைக்கும் கை விடப் போவதில்லை என்பதைத் தான் இவை காட்டுகின்றன. இந்த அரசிற்கு தான் "நல்லாட்சி" நற்சான்றிதழும், தேர்தலில் ஆதரவும் தருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. எந்தச் சுவரிலே போய் முட்டுவது?