Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

போர்க்களங்களில் இருந்து திரும்பாதவர்களின் தாய்மார்களுக்காக...

டேய் தம்பி நீ எங்கேடா போனாய்

ராத்திரியல்லோ வாறனெண்டனி அட

ராத்திரியல்லோ வாறனெண்டனி...

 

மீனில் ஓரு குழம்பும் இறாலில் ஒரு சொதியும்

ஆக்கி வைச்சுக் காத்திருந்தேன்... உனக்காக

இரவு காத்திருந்து விழித்திருந்தேன்

இரவு பகலாக....

 

வெளிநாடு போன சனங்கள்

வீடு எல்லாம் வந்து போயினம்

தனிநாடு காணப் போன

உன்னையேன் இன்னும் காணோம்.

செல்வச்சந்திரன் வாத்தியாற்ரை

சின்னப் பொடியனும் வந்து போனான்

பொல்லாத உன் நினைவை

அள்ளியவன் தந்து போனான். அட தம்பி

 

குண்டு வீழ்ந்த கோவிலெல்லாம்

கொடியேற்றம் நடக்குதிங்கே

குடிசையாய்யிருந்த இடங்கள்

கோபுரமாய் உயருதிங்கே

நானிருந்த கொட்டிலெல்லாம்

நாதியாய் போச்சுதிங்கே

நானழுத கண்ணீரெல்லாம்

மழையாய் ஒழுகுதிங்கே. அட தம்பி....

 

போர்கள் தந்த கொடுமை போதும்

மூப்புப் பிணி வறுமை போதும் இனி

நானிழக்க ஒன்றுமில்லாத

நாதியற்ற வாழ்க்கை போதும்.

பூவிழந்து பொட்டிழந்து

புன்னகையும் தான் இழந்து

பொல்லாத போரினாலே

என் புருசனையும் இழந்தேன் அட தம்பி

 

சிங்களவன் தமிழன் என்ற

இனபேதம் இனி வேண்டாம்.

இந்துக்கள் முஸ்லீம் என்ற

மதவெறியும் எழ வேண்டாம்

இல்லை என்ற சொல்லொன்று

இல்லாமல் ஒழிய வேண்டும்

இந்தப் பொல்லாத பூமியெங்கும்

சமஉரிமை வேண்டும்.

 

-இந்தப்பாடலின் ஒளி நாடாவினை கேட்க கீழே உள்ள தொடுப்பில் அழுத்தவும்

https://www.facebook.com/100006178998240/videos/1548322148717070/?pnref=story