Sat12022023

Last updateSun, 19 Apr 2020 8am

ஊமைக் காதல்...... (சிறு கதை)

நான் இவ்வளவு காலமும் செய்த வேலைகளிலே, இப்படி ஒரு சந்தோசம், ஒருபோதும்; எங்கும் கிடைத்ததில்லை, அப்படியொரு சந்தோசமான வேலை.

சாதாரண ஒரு குழந்தைப் பராமரிப்புத் துறை தான் எனக்குத் தெரிந்த, பிடித்த தொழில். ஆனால் இந்தப் பராமரிப்புத் தொழிலோடு ஒரு உதவியாசிரியராக ஒரு மூன்றோ நாலோ மணித்தியாலம் வேலை செய்ய முடியுமா என்று கேட்ட போது வியப்பாக இருந்தாலும் மிகவும் ஆனந்தமாகவும் இருந்தது.

எனது நிலையை உணர்ந்த அதிபர் ஜயோ பயப்படாதே......? மூன்றாம் நாலாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு உதவுது தான் உன் வேலை.

சந்தோசமாய் ஏற்றுக் கொண்டேன்.

அது ஒரு நீண்ட வயல்வெளிக் கிராமம். அதிலே ஒரு சின்னப் பாடசாலை. ஒரு சிறு சுப்பமாக்கற். பக்கத்திலே சின்னாய் ஒரு சலூன், ஒரு சின்ன பஸ்தரிப்பு. பெரிய பெரிய நீண்ட நெடுத்த மரங்களைக் சுற்றிக் கொண்ட ஒரு சின்னச் சேர்ச். அடிக்கடி அந்தப் பக்கமாகவும் இந்தப்பக்கமாகவும் ஓடித் திரியும் ரக்ரர்கள். இது தான் நான் கண்ட அந்தக் கிராமம்.

இந்தப் பாடசாலையிலே நான் தான் ஒரு கறுப்பன். அழகன் கதாநாயகன். பெரியாக்களிலிருந்து சிறிய குழந்தைகள் வரை எல்லோரும் அன்பாகவும் ஆதரவாகவும் பழகினார்கள். ஏதோ பொருட்காட்சிச் சாலையில் வைத்த பொருட்களைப் பார்ப்பது போல சில பேர் என்னை வினோதமாகப் பார்ப்பதையும் நான் உணராமலும் இல்லை.

தங்களது பேரக் குழந்தைகளை கூட்டிக் கொண்டு போக வரும் வயோதிபர்கள் நான் தங்கள் மொழியைக் கதைப்பது தங்களுக்குப் பெருமையாகவும் சந்தோசமாவும் இருப்பதாகக் குறிப்பிட்டு மகிழ்வார்கள்.

ஓ... உன்னுடைய நிறம் மிகவும் ஆழகானது பார்ப்பதற்கு கவர்ச்சியாய் இருக்கிறது என்றும் இப்படி ஒரு கலருக்காகத் தானே நாங்கள் எத்தனையோ சூரியக் குளியல் குளிச்சாலும் வருகுதேயில்லை என்று சில கிழவிகள் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்கள்.

காலையின் முதன் மணித்தியாலங்கள் பாடசாலையிலும்; அதன் பின்னர் பாராமரிப்பு நிலையங்களிலும் எனது காலம் கழிந்து கொண்டு போனது. நாட்கள் கிழமைகளாகி மாதங்களும் பல கடந்து வந்தது. நிறையப் பிள்ளைகளும், பிள்ளைகளின் பெற்றோர்களும் என..... அந்தக் கிராமத்து பல வயோதிபர்கள் கூட எனக்கு நல்ல நண்பர்களாகினர்.

ஒரு நாள் பாடசாலை முடிந்து பராமரிப்பு நிலையத்துக்கு வந்து கொண்டிருக்க மிக்கேல் சோர்ந்தபடி தலையைத் தொங்கப் போட்ட படி வழியிலில் நின்றான்.

மிக்கேல்... மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு கெட்டிக்கார மாணவன். என் மேல் அதிக பாசம் கொண்டவன். நான் தான் தன்னுடைய பெஸ்ட் பிறண்ட் என்று எல்லோர் மத்தியிலும் பெருமை கொள்ளுபவனும், எனக்கும் நன்கு பிடித்தமானவன்.

என்னைக் கண்டதும் என் கையைப் பிடித்தபடி "உனக்காகத் தான் காத்துக் கொண்டு நிக்கிறன். எனக்கு ஒரு பெரிய பிரச்சினை..  அதை நீ தான் தீர்த்து வைக்க வேண்டும் அந்த நம்பிக்கையில் தான் நிக்கிறேன்" என்றபடி ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டான்.

வா... முதலிலே உள்ளே போவோம் பின்னர் வெளியே வந்து ஆறுதலாய் கதைப்போம் என்று உள்நுழைந்து மற்யை எனது சக உத்தியோகத்தர்களுக்கு காய் சொல்லி விட்டு அங்கேயிருந்த வெளித் தோட்டத்தின் வாங்கில் அமர்ந்து கொண்டோhம்.

அப்படி என்ன தான் பிரச்சினை மிக்கேல்.

"உனக்கு ஸ்ரெலாவைத் தெரியும் தானே."... ஆம் என்று தலையாட்டினேன்... "இப்ப அவளுக்கு என்ன...மிக்கேல்"...

இல்லை அவள் என்னிடம் வந்து "நான் உன்னை விரும்புகிறேன் நீ என்னை விரும்புகிறாயா......" என்று கேட்டு, உன் நல்ல பதிலுக்கா காத்திருப்பேன் என்று சொல்லி விட்டுச் சென்றுவிட்டாள்... அது தான் எனக்கு குழப்பமாயிருக்கு.... "உனக்குத் தெரியும் தானே நான் ஏற்கனவே மற்றில்லாவை காதலிப்பது".....?

இதை அவளுக்கு எப்படிச் சொல்வது...?

ஸ்ரெலாவும் மிகவும் நல்லவள். அழகானவள், அவள் இரகசியமாய் என்னைக் கவனிப்பதை நான் பல முறை உணர்ந்தேன். அவளது புன்னகையும் அவள் என்னை வந்து நெருங்கிப் பழகியதும் அற்புதமானவை தான். ஆனால் அவளுக்கு உடனே இல்லை என்ற பதிலைச் சொன்னால் அவள் வாடிப்போவாள் அல்லவா.... அது தான் உன் உதவி என்றான்.... ஏமாந்து போனேன் என்று அவள் நோகக் கூடாது....ம் என்றான்.

இது எனது முதற் காதல் இதனால் நானும் நோகக் கூடாது.

இங்கே இந்த சின்ன வயதுக்காலங்களில் இவள் என் காதலி, இவன் என் காதலன் என்று எல்லோரும் மிகவும் சாதரணமாகச் சொல்பது இயல்பு மிகவும் இயல்பானது.... ஆனால் இவனோ....

மிக்கேல் மிக்கேல்...

எனக்கு டக்கென்றது நெஞ்சு. இவன் வெறும் ஒன்பது வயது மாணவனா....? இவனுக்குள் இத்தனை உணர்வுகளா.......? அவன் கதைத்த முறையும் அவனது பாவமும் அவனது உணர்வும் உண்மையாகவே எனக்குப்பட்டது. இவனுக்கு நான் எப்படி எடுத்து விளக்குவது.

மிக்கேல்... எனக்கு கொஞ்ச அவகாசம் கொடு.. நானும் யோசிச்சுப்போட்டு வந்து உனக்கு நல்ல பதிலைச் சொல்லுகிறன் என்ற போது தலையை அசைத்தபடி விலகிச் சென்று கோக்காட் (ஒரு வகை விளையாட்டுக் கார்) ஒடிக் கொண்டிருந்த மற்றக் குழந்தைகளோடு போய் இணைந்து கொண்டான்.

காதல் என்பது இந்தச் சின்ன வயசிலிருந்தே எல்லோருக்கும் ஆரம்பிக்கின்றது. காதல் என்பது இயற்கையானது. இயல்பானது. இது தான் உண்மை. இதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.

ஆனால் எம்மவர் மத்தியிலும் பழங்காலத்துக் காதல் புராணக்காதல் புனிதக் காதல் என்றும் ஒருக்கா வந்தா இது திருப்பி வராது என்று, மூளைச் சலவைகள் செய்யப்பட்டு, பயப்படுத்தப்பட்டு இருட்டுக்குள்ளே புதைக்கப்பட்டு தாழ்க்கப்படுகின்றோம்.

எங்களின் எத்தனையோ பேரின் காதல் கனவுகளும் நினைவுகளும் வெளிப்படுத்தத் தெரியாமலேயே அடியோடு அழிக்கப்படுகின்றது.

ஆனால் இவர்களோ இந்தச் சின்ன வயதிலிருந்தே தங்களது மெல்லிய நுண்ணிய உணர்வுகளையும் அன்பையும்  சுதந்திரமாகவும் பகிரங்கமாகவும் பகிர்ந்து கொள்ள அனுமதியிருக்கு.

அதற்கும் மேலாக இந்த மிக்கேலோ தான் காதலிப்பதை விட தன்னைக் காதலிக்கும் இன்னொருபவளும் நோகக் கூடாது, வாடக் கூடாது என்று நினைக்கும் இந்தப் பக்குவத்தை இந்த மனித நேயத்தை அந்த மனநிலையை என்னால் எண்ணியே பார்க்க முடியாமல் இருக்கிறது.

முப்பது முப்பத்ரெண்டு வயது தாண்டியும் இன்னுமே திருமணம் செய்யாமல் அப்படியே இன்னும் முதிர்கன்னியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது ஒரு அத்தானின் மகள் ஜெயந்தியும், அவளைப் போன்ற எமது நாட்டுப் பெண்களும் என்னில் ஒருகணம் வந்து போனார்கள். தங்கள் சகோதரிகளுக்காய் மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து போய்  தங்கள் காதலையும் தியாகம் செய்து இன்னும் திருமணம் செய்யாமல் வாழும் இளைஞர்களும் எனது நினைவில்.

மனிதன் காதலை உணரத் தொடங்கிய காலத்திலிருந்தே காதலை தன்னால் முடிந்தளவு கொண்டாடிக் கொண்டு தான் இருக்கின்றான். இருந்தும் இவ்வளவு கொடுமைகளும் துனபங்களும் அழிவுகளும் அட்டுழியங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தக் காதலும் அன்பும் தான் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றது.

எப்படி மிக்கேலுக்கு விளங்கப்படுத்துவது என்று யோசிக்கத் தொடங்கினேன்.

 -முற்றும்