Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"ஒப்பரேசன் லிபரேசன்" - வடமராட்சியைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம் -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 50)

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 50

வடமராட்சி "லிபரேசன்-ஒப்பிரேசனுக்கு" தலைமை தாங்கிய பிரிகேடியர் கொப்பேகடுவ

"ஒப்பரேசன் லிபரேசன்" - வடமராட்சியைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம்

"தீப்பொறி"ச் செயற்குழுவுக்குள் தவறான அரசியல் போக்குகளும், தவறான முடிவுகளுமே மேலோங்கி வளர்ந்து கொண்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.

இருந்தபோதும் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட்டும் அதேவேளை தவறான அரசியல் போக்குகளுக்கும், தவறான முடிவுகளுக்கும் எதிராக செயற்குழுவுக்குள்ளிருந்தே தொடர்ச்சியாகப் போராடுவதென தீர்மானித்தேன். தோழர் சுனிமெல்லை "தீப்பொறி"க் குழுவுடன் இணைத்துக் கொள்ள முடியாது என்ற செயற்குழுவின் முடிவானது அதன் உள்ளடக்கத்தில் முழுமையான இனவாதக் கண்ணோட்டத்தின்பாற்பட்டதென்பதோடு தம்மை இடதுசாரிகள் என அழைத்துக் கொண்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் பலர் எப்படி இனவாதம் என்ற சகதிக்குள் காலடி எடுத்து வைத்திருந்தனரோ அதையொத்த ஒரு செயலாகவே காணப்பட்டது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இடதுசாரிகள் பலர் இனவாதிகளாகக் காணப்படுகின்றனர் என கூறிக் கொண்டிருந்த நாமும் கூட இப்பொழுது அதே பாதையில் பயணிக்கத் தொடங்கியிருந்தோம்.

அத்துலத்முதலி-அமைச்சர்

தோழர் சுனிமெல்லை சந்தித்துப் பேசி செயற்குழுவின் முடிவைத் தெரிவிப்பதற்கு டொமினிக்கை (கேசவன்) வவுனியாவுக்கு அனுப்பிவைப்பதென செயற்குழு முடிவெடுத்தது. கண்ணாடிச் சந்திரன், விசுவப்பா, ரஞ்சன் ஆகியோர் "தீப்பொறி" க் குழுவிலிருந்து வெளியேறியிருந்தபோது எமக்கிருந்த ஆட்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வேண்டி கடின உழைப்புக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த டொமினிக் (கேசவன்), தனக்கிருந்த பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் எம்முடன் இணைந்து "தீப்பொறி" பத்திரிகை" புதியதோர் உலகம்" நாவல் என்பனவற்றை வீடு வீடாக சென்று மக்கள் மத்தியில் விநியோகிப்பதில் முன்னின்று செயற்பட்டிருந்தார். இப்பொழுது "தீப்பொறி" செயற்குழுவின் முடிவையடுத்து தனது "சொந்தப் பாதுகாப்பை"யும் பொருட்படுத்தாது யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு செப்பனிடப்படாத காட்டுப்பாதைகள் வழியாக வருவதற்கு தயாரானார். அடர்ந்த காடுகளை ஊடாகச் செல்லும் சேறும் சகதியும், குண்டும் குழியும் நிறைந்த பாதைகள் வழியாக சயிக்கிளில் டொமினிக் (கேசவன்) என்னுடன் வவுனியா வந்து சேர்ந்தார். இத்தகைய நீண்டதொரு தூரத்துக்கு டொமினிக் (கேசவன்) சைக்கிளில் சென்றிருந்தது கிடையாது என்பதால் டொமினிக்கை பொறுத்தவரை அது ஒரு நீண்ட பயணமாகவே இருந்தது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து

டொமினிக்கின் (கேசவன்) வவுனியா வருகையை அடுத்து தோழர் சுனிமெல்லினுடனான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் "தீப்பொறி" செயற்குழு உறுப்பினர்களான டொமினிக்கும்(கேசவன்) நானும் கலந்துகொண்டிருந்தோம். தோழர் சுனிமெல் தனது கருத்துக்களையும், தனக்கு தென்னிலங்கையில் இருக்கும் பாதுகாப்புப் பிரச்சனைகளையும் எடுத்துக் கூறியதோடு "தீப்பொறி"க் குழுவுடன் இணைந்து செயற்பட விரும்பும் தனது முடிவையும் கூடவே தெரிவித்திருந்தார். தோழர் சுனிமெல்லினுடைய கருத்துக்களை செவிமடுத்த டொமினிக் (கேசவன்) "தீப்பொறி" செயற்குழுவின் முடிவை தோழர் சுனிமெல்லிடம் தெரிவித்தார். அதாவது, சுனிமெல் தென்னிலங்கைக்கு சென்று சிங்கள மக்கள் மத்தியில் செயற்படுவதன் மூலம் அவர் ஒரு இனவாதியல்ல என நிரூபிக்க வேண்டும் என்பதே அம்முடிவாகும். டொமினிக்கால் (கேசவன்) தெரிவிக்கப்பட்ட "தீப்பொறி" ச் செயற்குழுவின் முடிவைக் கேட்டுக்கொண்டிருந்த தோழர் சுனிமெல் சற்றுப் பொறுமையிழந்தவராக உணர்ச்சிவசப்பட்டவரானார். "அப்படியானால் என்னை ஒரு இனவாதி என்கிறீர்களா?" என அவரால் அடக்கிக்கொள்ள முடியாத ஆவேசத்துடன் எம்மீது கேள்வி எழுப்பினார். "இனவாதி என்று நாம் உங்களைக் கூறவில்லை, சிங்கள மக்கள் மத்தியில் சென்று செயற்படுமாறு தான் கூறுகிறோம்" என டொமினிக்(கேசவன்) தோழர் சுனிமெல்லுக்குப் பதிலளித்தார்.

ஆனால், நாம் தோழர் சுனிமெல்லிடம் கூறிய கருத்து அல்லது செயற்குழுவின் முடிவு எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும். "தென்னிலங்கை சென்று சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்டு தோழர் சுனிமெல் ஒரு இனவாதியல்ல என்று நிரூபிக்க வேண்டும்" என்பதானது முழுமையான இனவாதக் கருத்தேதான் என்பதை ஒரு பள்ளிச் சிறுவனால் கூடப் புரிந்து கொள்ள முடியும். இத்தகையதொரு கருத்துக்கு நாம் எவ்வளவு தான் கவர்ச்சிகரமாக விளக்கம் கொடுத்தாலும் அதன் சாராம்சம் அல்லது அதன் கருப்பொருள் இனவாதமே தான்.

டொமினிக்கால் (கேசவன்) தெரிவிக்கப்பட்ட செயற்குழுவின் முடிவால் தனது பொறுமையை இழந்தவராகக் காணப்பட்ட தோழர் சுனிமெல் "தீப்பொறி"க் குழு குறித்த தனது கருத்தை முன்வைத்தார். "நீங்கள் இடதுசாரிகள் அல்ல, பச்சை இனவாதிகள்" என தோழர் சுனிமெல் எம்மை விமர்சித்தார். "உங்கள் போன்றவர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதைவிட நான் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டாலோ, அல்லது ஜே.வி.பியால் கொலை செய்யப்பட்டாலோ கூடப் பரவாயில்லை தென்னிலங்கைக்கு செல்கிறேன்" எனக் கூறிய தோழர் சுனிமெல் எம்முடனான சந்திப்பை இடையில் முறித்துக் கொண்டவராய் தென்னிலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்.

தோழர் சுனிமெல் குறித்த விடயத்தில் எமது அரசியல் கருத்து மட்டுமல்ல, எமது முடிவும் கூட தவறானதென்பதில் சிறிதும் ஐயத்திற்கிடமில்லை. கடந்த காலங்களில் சிங்கள இடதுசாரிகள் பலர் குறித்து நாம் பல விமர்சனங்களைக் கொண்டிருந்தோம், அவர்களில் பலர் பேரினவாதிகளாக மாறிவிட்டனர் எனக் கூறினோம். உண்மைதான். ஆனால் இப்பொழுது எமது அரசியல் கருத்துக்கள், எமது முடிவுகள் எதைக் காட்டி நிற்கின்றன? நாமும் கூட எம்மை இடதுசாரிகள் என அழைத்துக்கொண்டு இனவாதிகளாக அல்லவா எம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். சிங்கள பேரினவாதத்திற்கெதிராக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கென உளசுத்தியுடன் எம்முடன் இணைந்து கொண்ட ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தோழரை இனவாதி என்று முத்திரை குத்தும் எமக்கு சிங்கள இடதுசாரிகள் குறித்துப் பேசுவதற்கான தார்மீக பலம் இல்லை என்றே கூறவேண்டும். ஏனெனில் நாமும் கூட அதே இனவாதம் என்ற –தமிழ் இனவாதம் - என்ற கடிவாளத்தை பிடித்தவர்களாக எம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்தோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதலுக்கான பழிவாங்கலாக ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக தம்மை அர்ப்பணித்துப் போராடப் புறப்பட்ட ஏனைய இயக்கப் போராளிகள் பலர் கொன்றொழிக்கப்பட்டது நடைபெற்று முடிந்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடூரங்களைக் கண்ணுற்றிருந்த அல்லது அறிந்திருந்த ஏனைய இயக்கங்களில் அங்கம் வகித்திருந்து செயற்பாடற்றிருந்த போராளிகள் பலர் தமது பாதுகாப்புக் கருதி வடக்குக்-கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேறத் தொடங்கினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் சந்தேகிப்பவர்களை கைது செய்வதற்கும், அவர்களை தமது வதைமுகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து கொலை செய்வதற்குமான தமது தமிழ் மக்கள் மீதான ஏகப்பிரதிநிதித்துவ உரிமையை நிலைநாட்டிக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் ஏனைய இயக்கங்களில் செயற்பட்டிருந்த உறுப்பினர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டதையடுத்து எம்முடன் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த சண்முகநாதன், தர்மலிங்கம், சுரேன், காசி(ரகு) போன்றோர் வவுனியா வந்து சேர்ந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தாமல்லாதவர்களைச் சுத்திகரிக்கும் செயற்பாட்டைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

புளொட்டின் இராணுவப் பொறுப்பாளராக செயற்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் புளொட் இயக்கம் தடை செய்யப்பட பின் செயற்பாடுகள் எதுவுமற்றிருந்த சின்னமென்டிஸை கைது செய்து படுகொலை செய்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், புளொட்டின் மாணவர் அமைப்பில் செயற்பட்டிருந்தவர்களான கவிராஜ் (சிவகுமார்), குரு(குருபரன்) உட்பட பலரை விசாரணை என்ற பெயரில் கைது செய்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனும், தமிழீழ தேசிய ஜனநாயக முன்னணியின் (NLFT)மத்தியகுழு உறுப்பினராகச் செயற்பட்டவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் "ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் முக்கிய பங்குபற்றியவருமான பிறைசூடி இரயாகரன் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் கடத்திச் செல்லப்பட்டது குறித்தும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயகத்திற்கான போராட்டம் குறித்தும் தொடர்ச்சியாக மௌனம் சாதித்துவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய ஈழவிடுதலை இயக்கங்களை அழித்து அவற்றிற்கு தடை விதித்ததன் பின்னான கடத்தல் சம்பவமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பிறைசூடி இரயாகரன் கடத்தல் சம்பவம் அமைந்திருந்தது.

ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாக அழித்தொழித்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து எழுந்த ஜனநாயகத்துக்கான போராட்டங்களையும், மாணவர் போராட்டங்களையும் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கெதிரானதாகவும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் அதை முன்னெடுக்கும் ஒரே தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரானதெனவும் கருத்து வெளியிட்டிருந்ததுடன், "துரோகி"களை களையெடுப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான இலங்கையின் இனவாத அரசோ, அதன் பாதுகாப்புச் செயலாளர் லலித் அத்துலத் முதலியோ, இலங்கையின் இராணுவத் தளபதிகளோ தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கான தமது திட்டங்களை தீட்டிக் கொண்டிருந்தனர். மே 27, 1987 தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த வடமராட்சி பகுதியைக் கைப்பற்றி அங்கிருந்து யாழ்ப்பாணக் குடாவைக் கைப்பற்றும் நோக்கில் "ஒப்பரேசன் லிபரேசன்" என்ற பாரிய இராணுவ நடவடிக்கையை இலங்கை இராணுவம் ஆரம்பித்திருந்தது.

பலாலி இராணுவ முகாமிலிருந்து டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரத்ன போன்ற இராணுவத் தளபதிகளின் வழிகாட்டலில், தொண்டைமானாறு மற்றும் வல்வெட்டித்துறை இராணுவ முகாமிலிருந்தும் தாக்குதல் நடத்தியவாறு வெளியேறிய இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான கடும் மோதலின் பின் வடமராட்சியின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்தது.

இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இந்த மோதலின் போது பெருமளவுக்கு பொதுமக்களே பாதிக்கப்பட்டனர். தாமல்லாத அனைத்து ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களையும் அழித்தொழித்து "வெற்றி"யீட்டியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை இராணுவத்தின் "ஒப்பரேசன் லிபரேசன்" நடவடிக்கைக்கு முகம் கொடுக்க முடியாதவர்களாய் "வெற்றிகரமாக" பின்வாங்கிக் கொண்டிருந்தனர். பலத்த இழப்புக்களுடன் இலங்கை இராணுவத்துக்கு வடமராட்சியில் கிடைத்த வெற்றியானது தனது இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதற்கான உந்துதலை கொடுத்திருந்தது.

இலங்கை இராணுவத்தின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் நடவடிக்கையையும், அதில் இலங்கை இராணுவம் கண்ட முன்னேற்றத்தையும் இந்தியா தனது நலன்களுக்கு – தமிழ் மக்களின் நலன்களுக்கல்ல – பாதகமானதொன்றாக இனம் கண்டுகொண்டது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசின் அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கையால் நீண்டகாலமாக "கவலை" கொண்டிருந்த இந்திய அரசு, 1983 இலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கையையடுத்து ஈழவிடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியது மட்டுமல்லாமல் அவ்வவ்போது "ஆலோசனை"களையும் வழங்கியிருந்தது. ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு இந்திய அரசு "ஆலோசனை" வழங்குவதன் மூலம் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசுக்கு நெருக்குதல்களை கொடுத்து அடிபணிய வைக்கமுடியும் என்ற இந்திய அரசின் நோக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுராதபுரத்தில் அப்பாவிச் சிங்கள மக்கள் பலிகொள்ளப்பட்ட சம்பவம் பெரிதும் துணைபுரிந்திருந்தது. அனுராதபுரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவிச் சிங்கள மக்கள் படுகொலையால் "கலங்கி" நின்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு இந்திய மத்தியஸ்துவத்துடனான திம்புப் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த போதிலும் அப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிவுற்றிருந்தது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசு "ஒப்பரேசன் லிபரேசன்" நடவடிக்கையை வடமராட்சியில் ஆரம்பித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்தவேளை அவ்வெற்றியின் தொடர்ச்சி இந்தியாவின் நீண்டகால நலன்களுக்கு பாதகமாக அமையும் எனக் கண்டுகொண்ட இந்திய அரசு தனது பக்கத்திலிருந்து காய்களை வேகமாக நகர்த்தத் தொடங்கியது.

இலங்கை பிரச்சனையில் அதிக "அக்கறை" இந்தியாவுக்குத்தான் உண்டெனக் கூறிக்கொண்ட இந்திய அரசு, இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட "ஒப்பரேசன் லிபரேசன்" நடவடிக்கையால் பாதிக்கப்புட்ட மக்கள் மீது "அக்கறை" கொண்டு "மனிதாபிமான" உதவிகளை ஜூன் 02, 1987 கப்பல்கள் மூலமாக அனுப்பி வைத்தது. இக்கப்பல்கள் இலங்கை கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.

ஆனால் இலங்கைப் பிரச்சனையில் தலையீடு செய்வது என்ற தீர்க்கமான முடிவின் அடிப்படையில் செயற்பட்டுவந்த இந்திய அரசு, ஜூன் 04, 1987 இலங்கையின் இனப்பிரச்சனையில் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது. இந்திய விமானப்படை விமானங்கள் இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கையின் விமானப் பரப்புக்குள் நுழைந்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென உணவுப் பொதிகளை வானில் இருந்து வீசின. "ஒப்பரேசன் பூமாலை" என அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கை தமிழ் மக்களுக்கான "மனிதாபிமான உதவி" என்ற பெயரில் இடம்பெற்றது. இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட "ஒப்பரேசன் பூமாலை" இலங்கையின் இறையாண்மையை மீறிய ஒரு செயலாக அமைந்திருந்ததுடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்திருந்தது. இதன் மூலம் தமிழ் மக்களின் ஆபத்பாண்டவனாக இந்தியா தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இந்தியா குறித்து தமிழ் மக்கள் கொண்டிருந்த கனவுகள் நனவானது போன்றதொரு உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டது. ஆனால் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்ததுபோல் விடயங்கள் எதுவும் நடந்தேறிவிடவில்லை.

(தொடரும்)

30/03/2012

41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41

42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42

43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43

44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44

45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45

46.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 46

47.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 47

48.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 48

49.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 49