Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கூடங்குளம்: திரு.உதயகுமாருடன் நேர்காணல். இடிந்தக்கரையில் இருந்து.

கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்களின் போராட்டத்தை மத்திய ஆட்சியாளர்கள், வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலில் நடப்பதாகவும், மக்கள் பணம் வாங்கிக்கொண்டு போராடுகிறார்கள் என்றும் கொச்சை படுத்திவருகின்றனர்.இதோடு கூடங்குளம் அணு உலையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் புளுகிவருகின்றனர்.

 

இந்தச் சூழலில் கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய உயர்திரு உதயக்குமார் அவர்கள் சூறாவளிக்கு அளித்த நேர்காணலை

கீழே தருகிறோம்!

 

1. கூடங்குளத்தில் அணு உலை அமைக்கம் திட்டத்தை எந்த ஆண்டில் இருந்து எதிர்த்து வருகிறீர்கள்?என்ன,என்ன வடிவங்களில் எதிர்த்து போராடி வருகின்றீர்கள்?

1997-98 காலகட்டத்தில் இருந்து இந்த கூடங்குளத்திற்கு எதிரான ஒரு லிப்ட் சர்வ் வச்சிருந்த நான், கம்யுனிசம் வாட்ச் அன் கவர்னர் மானிட்டர் அப்படிங்கர ஒரு லிப்ட் சர்வ் அதுல கூடங்குளம் சம்பந்தமான செய்திகளை தொகுத்து ஒரு செய்தி மடல் மாதிரி தொகுத்து போட்டு கொண்டு இருந்தேன் அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன்.இத்திட்டம் தொடங்கப்பட்ட 1988-89 காலக்கட்டதிலேயே இதற்கு எதிராக நாகர்கோவிலில் பல முயற்சிகள் செய்து இருக்கிறோம்.பிறகு சோவியத் ரஷ்யா சிதறுண்ட பிறகு,கோர்ப்பசோவ் பதவி இழந்த பிறகும்,ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பிறகும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.அதற்கு பிறகு 1997-98 காலகட்டத்தில் இதற்கு எதிரான லிப்ட் சர்வில் செய்திகளை தொகுத்து போட்டுகொண்டு இருந்தேன்..பிறகு 2001-ல் திரும்பவும் நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த பிறகு 2001 நவம்பர் மாதம் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை மதுரையில்       தொடங்கினோம். இதில் இருந்து தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறோம்.

2.அணு உலையால் மீன்வளம் எந்தளவிற்கு பாதிக்கப்படும்?

மீன் வளம் எந்தளவுக்கு பாதிக்கிறது என்றால் அணு உலையின் மையப்பகுதியை கோர் என்று சொல்லுவார்கள்,அதை குளிர்விப்பதற்கு கடலில் இருந்து தண்ணீர் எடுப்பார்கள்.அந்த தண்ணீர் அணு உலையை சுற்றிவரும் போது சூடாகிவிடும்.பின்பு கடலில்  கொட்டுவார்கள்அப்படி கொட்டும் போது,அணு சக்தி துறை என்ன சொல்லுகிறது என்றால் தண்ணீர் 7 டிகிரி தான் சூடாகும் என்கிறது.கல்பாக்கத்தில் 12 டிகிரி தண்ணீர், சூடாகிறது.இந்த தண்ணீரை தொடர்ந்து 24 மணி நேரமும்,வாரத்தில் 7 நாட்களும்,வருடத்தில் 365 நாட்களும் முழுவதும் கடலில் கொட்டும் போது நிச்சயம் அது கடலில் மாற்றத்தை உண்டுபண்ணும்.அந்த தண்ணீரில் கதிர்வீச்சு இருக்கும்.அந்த தண்ணீரில் கதிர்வீச்சு அளவு குறைவாக இருக்கிறது என்று சொன்னாலும் சிறு துளி பெருவெள்ளம் என்பது போல் கொஞ்சம், கொஞ்சமாக சிறுக,சிறுக 60 ஆண்டுகளில் இதன் கதிர்வீச்சும் அதிகமாகிவிடும்.இந்த சூடான ,கதிர்வீச்சு கலந்த  தண்ணீர் 60 ஆண்டுகள் கடலில் விடுவதால் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.கதிர்வீச்சால் கடலுக்கு ஆபத்தில்லை என்று சொல்லுவது பொய்.

அதே மாதிரி உப்பகத்தி ஆலை(Desalltation paln) 4 இடத்தில் வைத்துள்ளார்கள்,இதில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு 350 கண மீட்டர் உப்பும்,அமிலங்களும் வெளிவரும்.இது 4 ஆலைகளில் இருந்தா அல்லது ஒரு ஆலையில் இருந்தா என்பது தெரியவில்லை.இப்படி ஒரு மணி நேரத்துக்கு 350 கண மீட்டர் உப்பும்,அமிலங்களும்,கழிவுகளும் உற்பத்தி செய்து இதையும் கொண்டு போய் கடலில் கொட்டினால்,இவைகள் கடலில் உப்பும்,அமிலத்தன்மையும் நிச்சயம் அதிகரிக்கும்.இதனால் இப்பகுதியில் உள்ள மீன் பிடி கிராமங்கள் மீன் பிடி தொழில் நிச்சயம் பாதிக்கப்படும்.அதாவது மீன் வளம் குறையும்,அப்படியே மீன் கிடைத்தாலும் நோய்வாய் பட்டு இருக்கும்.கல்பாக்கத்தில் உள்ள மீனவர்கள் சொல்கிறார்கள், ”எங்கள் பகுதியில் மின்வளம் குறைந்துவிட்டது பல வகையான மின்கள் கிடைப்பதில்லை”, என்று கூறுகிறார்கள்.அங்கு கல்விரால் மீன்கள் தான் கிடைக்கிறது,இதை மக்கள் விரும்பி சாப்பிடுவதில்லை,அப்படியே கிடைத்தாலும் அது நோய்வாய் பட்டு கிடைக்கிறது என்கிறார்கள்.ஆகையால் இந்த கூடங்குளம் அணு உலை செயல்பட ஆரம்பித்தால் இப்பகுதியில் உள்ள தூத்துக்குடி,கன்னியாகுமரி,திருநெல்வேலி மாவட்ட மீன்பிடி தொழில் நிச்சயம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

3.அணு உலையால் விவசாயத் தொழிலில் என்ன,என்ன பாதிப்பு ஏற்படும்?

இதே மாதிரி தான்.கடலில் எப்படி இந்த கழிவுகளை கொண்டு போய் விடுகிறார்களோ,அதே மாதிரி தான்.அதாவது புகை போக்கிகளில் இருந்து ’ தொடர்ச்சியாக தினசரி வெளியேற்றுதல்’ என்ற முறையில் சாதாரணமாகவே கழிவுகள் வெளிவரும்.அதில் அயோடின்,சிசியம்,ஸ்ராந்தியம்,டெலோரியம் இந்த மாதிரியான கதிர்வீச்சு தன்மை கொண்ட தனிமங்கள் காற்றில் கரைந்து,மிதந்து கொண்டே இருக்கும்,அன்று காற்று எந்தப்பக்கம் வீசுகிறதோ அந்த பக்கம் போய் இந்த கதிர்வீச்சு கணிமம் மண்ணில் போய் விழும்.கொஞ்சம் தப்பி வானத்துக்கு போகும்,அப்படி போவது கூட மேகங்களில் அமர்ந்திருந்து விட்டு மழை தண்ணீர் மூலம் மண்ணை அடைகிறது.இது போல தொடர்ந்து 60 ஆண்டுகள் நடைபெறும் போது மண்ணும் கதிர்வீச்சு தன்மையுள்ள மண்ணாகும்.இந்த மண்ணில் விளையும் பயிர்களும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும்.பசு மாட்டின் பால் கதிர்வீச்சால் பாதிக்கப்படும்.நாம் சாப்பிடும் காய்கறிகள்,பழங்கள் என அனைத்து உணவு பொருட்களும் இப்படி விஷமாகி போகும்.இதனால் நிச்சயம் விவசாயம் பாதிக்கப்படும்.

4.அணு சக்தி சுற்றுச் சூழலை எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்?

சுற்றுச்சூழல் என்று பார்க்கும் போது மேலே கூறியது போல், காற்று நாசமாகி போகிறது.காற்றில் கதிர்வீச்சு பொருள் மிதந்து வருகிறது.கடல் நாசமாகிப்போகிறது.நிலம் பாழாகிறது.நிலத்தடி நீர் பாழாகிறது.இப்படி ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பாழாகிப் போகும்.

5.சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதால் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

இப்படி பாதிப்புக்கு உள்ளாகும் போது,இது 60 ஆண்டுகளுக்கு நம்  மண்ணும்,தண்ணீரும்,காற்றும்  தொடர்ந்து கதிர்வீச்சால் பாதிக்கும்.இதனால் நமது உணவு சங்கிலி(food chain) ஆன உணவிற்குள்ளும் கதிர்வீச்சு போகும்.இதனால் நாம் உண்ணும் உணவு,காற்று,குடிக்கின்ற தண்ணீர் அனைத்தும் விஷமாகும்.இதனால் நிச்சயமாக பலவித நோய்கள் உருவாகும்.பலவிதமான நோய் என்று பார்க்கும் போது கதிர்வீச்சு நோய்(Radiational ill) முக்கியமானது.கதிர்வீச்சு என்று பார்க்கும் போது அது எல்லோர் உடலும் ஏற்றுக்கொள்ளாது.

அது வந்தால் எல்லோருக்கும் காய்ச்சல்,தலைவலி,வயிற்றுப்போக்கு வரும்.கதிர்வீச்சு அதிகமாகும் போது தோல் கருத்து புண்ணாகிப்போகும்.உடல் அளவில் பலமாக இருப்பவர்கள் நாளடைவில் கதிர்வீச்சின் தாக்கத்தால் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி புற்று நோய் ஏற்படும்.இவர்களின் குழந்தைகள் புற்றுநோய்,மனவளர்ச்சி குறைபாடு,உடல் உறுப்புகள் குறைபாடு உடையவர்களாக பிறப்பார்கள்.

உதாரணமாக கைகால் குட்டையாக,விரல்கள் குட்டையாக அல்லது குறைவாக இருக்கும்.ரத்த புற்று நோய்,ஒருக்கண்ணோடு பிறக்கும்.இப்படி ஏராளமான பாதிப்புகள் ஏற்படும்.ஒட்டுமொத்தமாக மனிதர்களின் வாழ்வில் அமைதி,நல்வாழ்வு அனைத்தும் பாதிக்கப்படும்.

6.அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்படும் சுற்றுச்சூழலை மீண்டும் சரி செய்ய முடியுமா?

செய்யலாம்,ஆனால் அது மிகவும் சிரமமானப் பணியாகும்.செர்னோபில் விபத்து நடந்து பக்கத்து நாடுகளான பெலுரு,லாட்வியா,எஸ்டோனியா போன்ற நாடுகளில் எல்லாம் கதிர்வீச்சு கழிவுகளின் படிவம் படிந்து, அந்த நாடுகளின் மண்வளம் பாழாகிவிட்டது.அதற்கு பல லட்சம் டாலர் செலவு செய்து அம்மண்ணை சுத்தம் செய்து, கதிர்வீச்சு இல்லாத உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

இப்போது ஜப்பானிலுள்ள புகுஷிமாவில் விபத்து நடந்து 9 மாதங்கள் ஆகப்போகிறது.அங்கு புவியின் மேலடுக்கு மண் நீக்கப்பட்டு கதிர்வீச்சு இல்லாத மண்ணாக்க முயற்சி செய்கிறார்கள்.ஆனால் இதற்கு மிகப்பெரிய பொருட் செலவு பிடிக்கும்.நம்மை போன்ற ஏழை நாடுகள் இது போன்ற தேவையற்ற செலவு செய்ய முடியாது.அப்படியே செய்தாலும் அது 100 சதவீதம் சுத்தமானதும் அல்ல.

7.மக்களை இந்த போராட்டத்தில் இவ்வளவு உணர்வு பூர்வமாக பங்கேற்க வைக்க

எப்படிப்பட்ட வழிமுறைகளை கையாண்டீர்கள்?

2001-ல் இருந்து கிட்டதட்ட ஒவ்வொரு மாதமும் கடலோர கிராமங்களுக்கு சென்று இளைஞர் அமைப்புகள்,பெண்கள் அமைப்புகள்,மீனவ சங்கங்கள்,விவசாய அமைப்புகளில் இந்த அணுமின்நிலையம் வந்தால் என்னென்ன ஆபத்துகள் வரும் என்பதைப்பற்றி பேசினோம்.அணுக்கதிர் வீச்சு என்றால் என்ன,அணுக்கரு பிளவு,சேர்ப்பு என்றால் என்ன,புற்றுநோய் இப்படி பல அடிப்படை தகவல்களை மக்களிடம் கொடுத்துள்ளோம்.இதை தொடர்பணியாக 11 ஆண்டுகள் செய்தோம்.இதன் மூலம் மக்களுக்கு அடிப்படை தகவல்கள் சென்று சேர்ந்தது.இவ்வாறு நடந்துகொண்டு இருக்கும் போதே புகுஷிமா அணு உலை விபத்து நடந்தது.இதனால் நாங்கள் கூறியது அனைத்தும் உண்மை என்று மக்கள் தெரிந்து கொண்டனர்.ஆகையால் நாங்கள் சொன்னது அனைத்தும் வெறும் சவடால் அல்ல என்பதை மக்கள் தெரிந்து கொண்டனர்.மேலும் நாங்கள் வேறு ஆதாயத்துக்கோ,தேர்தலில் நின்று ஓட்டுவாங்குவதற்கோஅல்ல, என்று இதன் அடிப்படையில்தான் மக்கள் இந்த போராட்டத்தில் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வது வேறெந்த ஆதாயங்களுக்கும் அல்ல.தமது சொந்த வாழ்வையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக்கொள்வதர்குத்தான்.

8.இந்தப் போராட்டத்தில் மீனவ மக்கள் மட்டும் பங்கேற்கிறார்களா?விவசாயிகளும் பங்கேற்கிறார்களா?

மீனவ மக்கள் அதிக அளவில் பங்கேற்கிறார்கள்.இதற்கு காரணம் மீனவ மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை கொண்டவர்கள்.அவர்களுக்குத்தான் தெரியும்,இயற்கை கெட்டுப்போனால் தமது வாழ்வும் எதிர்காலமும் போய்விடும் என்று.அதனால்தான் அவர்கள் போராட்டத்தில் பெருமளவுன் பங்கேற்கிறார்கள்.

அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் இந்த போராட்டத்தை ஆரம்பத்தில் தவறாக நினைத்தார்கள்.பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.இது மீனவர்களின் பிரச்சனை என்று எண்ணினார்கள்.குறிப்பாக,தலித்,முஸ்லிம் கிராமங்களுக்கு போனால் அவர்கள் தமது பிரச்சனையில்லை என கருதினர்.

புகுஷிமா அணு உலை விபத்திற்கு பிறகுதான் நமது,விவசாயமும் இதன் மூலம் தமது வாழ்வும் பாதிக்கப்படும் என்று உணர்ந்துகொண்டனர்.தாம் உற்பத்தி செய்யும் விலைபொருட்கள்,விலை போகாது அப்படியே போனாலும்,போதிய விலைகிடைக்காது,என்பதையும் உணர்ந்தனர்.

ஆனால் அணுசக்திதுறை 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை தருவோம்.பேச்சுப்பறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவருவோம்,இதனால் இப்பகுதி வளர்ச்சி அடையும் என்று பொய் சொன்னார்கள்.இது பொய் என்று மக்கள் உணர்ந்த பிறகு அணுசக்திக்கு எதிரான போராட்டத்தில் பெருமளவு கலந்துகொண்டார்கள்.

9.அணு உலை இயற்கை சீற்றத்தினால் மட்டும் பாதிப்பு ஏற்படுமா?மனித தவறுகளாலும் பாதிப்பு ஏற்படுமா?

மனித தவறுகளாலும் பாதிப்பு ஏற்படும்.செர்னேபில் அணு உலை விபத்து முழுக்க மனிதத் தவறுகளால் நடந்தது.

இந்திய உள்ள அணு உலைகளிலும் பல சிறு,சிறு விபத்துகள் மனிதத்தவறுகளால் நடந்துள்ளது.பெரும்பாலான விபத்துகள் மனிதத்தவறுகளால்தான் நடக்கிறது.

இந்தியாவில் அணு உலைகளில் இருந்து வெளியேறும் கன நீரை குடிநீரில் கலக்கவிட்டு,அதனால் என்ன,என்ன வியாதிகள் ஏற்படுகிறது,என்ன சோதனையும் நடந்துள்ளது.இந்தியாவில் மனிதத் தவறுகள் தெரியாமல் மட்டுமல்ல,தெரிந்தே திட்டமிட்டும் நடந்துள்ளது.

10.அணு உலையில் இயல்பாகவே விபத்துக்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளதா?

மனித தவறுகள்,இயற்கை சீற்றம் ஆகியவற்றோடு இயல்பாகவே விபத்துக்கள் நடக்கலாம் என்று இப்போது கூடங்குளத்தில் உள்ள விஞ்ஞானிகளும்,அதிகாரிகளும் சொல்கிறார்கள்.இப்போதே பல குழாய்கள் துருபிடித்துவிட்டது.ரஷ்யாவில் இருந்து கொண்டுவரப்படும் உதிரிப்பாகங்கள் தரமற்றவைகளாக உள்ளன.இதனாலும் விபத்துக்கள் ஏற்படும்.மேலும்,இப்போதைய சோதனையின் போதே மனித கால் அளவு தடிமனான ஒயர்கள் எரிந்துவிட்டன என்று சொல்கிறார்கள்.இப்படி பல தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.நன்றி!

-சூறாவளிக்காக இடிந்தகரையில் இருந்து, முகிலன்.

 

குறிப்பு:நேர்காணலின் ஒலி வடிவையும் கீழே இணைத்துள்ளோம்.

 

Voice000.amr

 

நன்றி: சூறாவளி