Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பாலியல் வன்முறை (குற்றம்) மனிதப் பண்பா!?

குற்றங்கள் குறித்து பேசும் போது தனிமனிதனின் சமூகப் பொறுப்பு எவ்வளவுக்கு முக்கியமானதோ, அதேயளவுக்கு சமூகமும் அதற்கு பொறுப்பாகும். குற்றங்களுக்கு சமூகம்; பொறுப்பேற்காது, தனிமனிதனை மட்டும் குற்றவாளியாக காணும் சிந்தனைமுறைமை முதலாளித்துவக் கண்ணோட்டமாகும. தனிமனிதனை குற்றவாளியாக வரையறுக்கும் இந்த முதலாளித்துவ சிந்தனைமுறைமைதான், பெண்கள் மீதான பாலியல் ரீதியான கருத்தியல் வன்முறைகளின் போதான எதிர்வினையாக இருக்கின்றது.


இதனால் குற்றங்கள் குறித்த கண்டனங்கள், குற்றங்களை ஒழிப்பதில்லை. தனியுடமை சிந்தனைமுறையாக இருக்கின்றது. இனம், மதம், சாதி, பால்.. என்று குறுகிய கண்ணோட்டத்தில் சிந்தித்துக் கொண்டும், வாக்குகளைப் போட்டுக் கொண்டும், சமூகத்திற்கு கேடான ஒரு விடையத்துக்கு எதிர்வினையாற்றுவது என்பது, ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பொதுவான மனிதப் பண்பிலிருந்து எழுவதல்ல.


இந்த வகையில் பாலியல் குற்றங்கள் முதல் பாலியல்ரீதியான கருத்தியல் நிந்தனைகளுக்கு எதிரான குரல்கள் எல்லாம் ஆணாதிக்கத்துக்கு எதிரானதாக கருதுவது கூட, ஆணாதிக்கம் தான். ஆணாதிக்க சமூக அமைப்புமுறை என்பது, கட்டற்ற பாலியல் வன்முறையை அனுமதிப்பதில்லை. இந்த ஆணாதிக்க தனியுடமை சமூக அமைப்பு, தனக்கான சட்ட வரைமுறைகளைக் கொண்டு இருக்கின்றது. இதனால் கண்டனங்கள் பெண்ணியல் நோக்கில் இருக்க வேண்டியதில்லை, ஆணாதிக்க நோக்கிலும் கண்டிக்க முடியும். இந்த வகையில் ஆணாதிக்க சட்ட வரம்பு முறைமைகளில் இருந்து வருவது தான், பெரும்பாலான கண்டனங்கள்.


ஆணாதிக்கமானது பெண்ணை பாலியல் "ஒழுக்கத்தின்" அடிப்படையில் "புனித பண்டமாகவோ" அல்லது சந்தைக்கேற்ற "கவர்ச்சி பண்டமாகவோ" முன்னிறுத்திப் பூசிக்கின்றது. இதற்கு தனிமனித வக்கிரங்கள் மூலம் கேடுவரும் போது, ஆணாதிக்கம் கண்டிக்கின்றது. இங்கு இந்த ஆணாதிக்க சிந்தனை கூட, பாலியல் வன்முறையை, மொழிரீதியான பாலியல் வன்முறையை கண்டிக்கின்றது.


உதாரணமாக அண்மையில் ராதாரவி நயன்தராவை "பாலியல் பண்டமாக" முன்னிறுத்திய போது, எழுந்த கண்டனங்கள் எல்லாம் ஆணாதிக்கத்துக்கு எதிரானதா? இல்லை. மாறாக ஆணாதிக்க சமூக கட்டமைப்பை பாதுகாக்கும் கண்டனங்களே. இதை நாம் கேள்விக்குள்ளாக்க முடியாதா? பெண்ணியத்தின் பெயரில் கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்று கூறும் ஆணாதிக்க போலிப் பெண்ணியல்வாதிகள் இருக்கின்றனர்.

இதே ராதாரவி சின்மயியின் மீ-ரூவுக்கு எதிராக பாலியல் ரீதியாக ஊளையிட்ட போது, நயன்தராவுக்காக கண்டனங்கள் தெரிவித்த பெரும்பான்மையினர் சின்மயிக்கு எதிராகவே இருந்தனர். இங்கு இனம், மதம், சாதி, வர்க்கம், பால் .. என்று பல சமூக முரண்கள் சார்ந்து, கண்டனங்கள் கூட வேறுபடுகின்றது. இதுவா ஆணாதிக்கத்துக்கு எதிரான குரல்?


காலாகாலமாக ராதாரவியின் சினிமா மொழியே ஆணாதிக்கமாகவே இருந்த போது, அது ரசிக்கப்பட்டது, ரசிக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட ராதாரவியை உருவாக்கியது எது? பெண்ணை பாலியல் உடலாக காட்சியாக்கி, அதைச் சந்தைப்படுத்தும் சினிமா தான். அதாவது சினிமாவில் பெண் உடல் ஆன்மாவாகவும், கலையாகவும், சந்தைப்பொருளாகவும் இருக்கின்றது. அதாவது ஆணாதிக்கச் சினிமாவின் மொழியே, பெண் உடல்தான். பெண்ணை உடலாக காட்சியாக்கும் ஆணாதிக்க வியாபார ஊடகத்;தை யாரும் கண்டிக்கவில்லை, மாறாக தனிமனிதனான ராதாரவியை மட்டும் கண்டிக்கின்றது, குற்றவாளியாக முன்னிறுத்துகின்றது. அதன் மூலம் ஆணாதிக்க சினிமாவையே பாதுகாக்கின்றது.


பெண் உடலைக் காட்டி (உடை முதல்..) நடிக்கும் பெண்ணின் ஆணாதிக்கம் பற்றி, எந்தக் கண்டனக்காரர்களும் மூச்சுக் கூட விடவில்லை. இங்கு கண்டனங்கள் கூட, ஆணாதிக்கத் தன்மை கொண்டவையே. ராதாரவி தனிமனித சமூகப் பொறுப்பில் இருந்து வரம்பு மீறியதை மட்டும் கண்டிக்கும் அதேநேரம், சமூக வடிவிலான குற்றத்துக்கு அனைவரும் உடந்தையாக இருக்கின்றனர். அதாவது தனிமனிதனை குற்றவாளியாக்கும் கண்டனங்கள் மூலம், தங்கள் ஆணாதிக்கத்தை மூடிமறைக்கின்றனர்.


இங்கு ஆணாதிக்கத்தின் உடலாகவே நயன்தரா காட்சிப்படுத்தப்படுவது ஒருபுறம், மறுபக்கம் நயன்தாரா தன்னை உடலாகத்தான் காட்சிப்படுத்துகின்றார். இங்கு தனிமனித சமூகப் பொறுப்பு நயன்தராவுக்கு இருப்பதை அவர் மறுப்பதும், அதன் அடிப்படையில் நயன்தராவை கண்டிக்க மறுப்பதும் கூட ஆணாதிக்கம் தான்.


உதாரணத்துக்கு இதுபோல் பெண் உடை குறித்து இரு வேறு ஆணாதிக்க கண்ணோட்டங்களும் காணப்படுகின்றது.
1.ஆணாதிக்க "கலாச்சார" உடையை பெண்ணுக்கு வலியுறுத்தும் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கமானது. தனது குறுகிய மனப்பாங்கான இனம், நிறம், சாதி, பால், மதம் .. சார்ந்து தான் அதைக் கோருகின்றனர்.


2.எல்லாவற்றையும் நவதாராளவாதமாக்கும் சந்தை, பெண்ணின் உடலை "கவர்ச்சிப் பண்டமாக்கி" காட்டுகின்றது. இதற்கு அமைவான ஆணாதிக்க உடையை சந்தை உற்பத்தி செய்வதும், அதை பெண்ணின் "சுதந்திரமான" தெரிவாக முன்னிறுத்திக் காட்டுவதும் ஆணாதிக்கமாக இருக்கின்றது. இந்த சந்தைக்குரிய ஆணாதிக்க பாலியல் உடையை கேள்விக்குள்ளாக்குவதை ஆணாதிக்கமாக கருதும் அளவுக்கு, சந்தை ஆணாதிக்கத்தை பெண்ணியமாக முன்னிறுத்தி வழிநடத்துகின்றது.


இங்கு பெண் உடை குறித்து எதிர்மறையான இந்த இருவேறு ஆணாதிக்க கண்ணோட்டங்களும் தான், பெண்ணியத்தின் பெயரில் பொதுவாக முன்வைக்கப்படுகின்றது. இரண்டையும் எதிர்த்தல்ல. இதுபோல் தான் பாலியல்; குற்றங்களும், கருத்தியல் நிந்தனைகளும்; பொதுவாக அணுகப்படுகின்றது.


குற்றங்கள் சமூகத்தின் விளைபொருளே ஒழிய, மனிதப் பண்பல்ல. மனிதனாக மனிதன் பரிணாமமடையக் காரணமாக இருந்த உழைப்பு, தனியுடமையாகி மனித கூட்டத்தை சுரண்;டும் கருவியாகியுள்ளது. பிறர் உழைப்பைச் சுரண்டும் முறைமையைப் பாதுகாக்கவே, வர்க்க அரசுகள் தோன்றின. சுரண்டலை பாதுகாக்கும் வர்க்க அரசுகளாகி, அரசுகளை பாதுகாக்க பிற சமூக ஒடுக்குமுறைகள் தோன்றின.


இப்படி இயற்கைக்கு முரணாக மனிதனை மனிதன் சுரண்டும் ஒடுக்குமுறையும், அந்த சூழலுமே குற்றங்களுக்கான தோற்றுவாயாக இருக்கின்றது. பிறர் உழைப்பை திருடுவதே மனித அறங்களானது. இந்த சுரண்டலான தனியுடமை சமூக சட்ட அமைப்புமுறைமைகளை மீறியவை குற்றங்களாகின்றது. சமூகப் பொறுப்பற்ற தனிமனித வக்கிரங்கள், மனித குலத்துக்கு எதிராக, தீங்கை விளைவிக்கும் அளவுக்கு தண்டனைக்குறிய குற்றங்களாக மாறுகின்றது. இதைத் தண்டிக்கும் அரசு எதுவாக இருக்கின்றது? உதாரணமாக பாலியல் குற்றத்தை அரசு தண்டிக்கும் போது, அது ஆணாதிக்கத்துக்கு எதிரான அரசாகிவிடுகின்றதா? இல்லை.


இனம், மதம், நிறம், சாதி, பால் .. மூலம் மனித கூட்டத்தினை முரணாக்க ஒடுக்கும் சுரண்டும் வர்க்கத்தின் நலனை முன்நோக்காகக் கொண்டு ஆள்வதுதான் அரசாக இருக்கின்றது. மனித பிளவுகளை முன்னிறுத்தி வர்க்க அரசுகளைப் பாதுகாக்கவும், மூலதனத்திற்கான புதிய சந்தைகளைப் பிடிக்கும் யுத்தங்களையும் தோற்றுவிப்பது சுரண்டும் வர்க்க அரசுகளின் பணியாகும். மனித கூட்டத்துக்கு எதிராக இன்னொரு மனித கூட்டத்தின் ஒடுக்குமுறைகளின் போது வெம்பிய தனிமனிதர்கள், தனிமனித குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இந்த தனியுடமை சுரண்டல் அமைப்புமுறை தான், தனிமனித குற்றங்களை தோற்றுவிக்கின்றது. இந்த வகையில்

1.மனித கூட்டத்துக்கு எதிரான இன்னொரு மனித கூட்டத்தின் குற்றங்கள் சட்டவடிவம் பெற்றதாகவும்
2.தனிமனித குற்றங்கள் சட்டவிரோத தன்மை கொண்டதாகவும் வரையறுப்பதே, இந்த சுரண்டல் அமைப்பு முறைமையாகும். இந்த இரு குற்றங்களும் இரண்டு வகையில் பரிணாமமடைகின்றது.


1.உடல் மற்றும் உடமை மீதான வன்முறையாகவும்
2.மனித சிந்தனை மீதான கருத்தியல் வன்முறையாகவும்


சுரண்டலை பாதுகாக்கும் அரசானது உடல் மற்றும் உடமை மீதான தனிமனித குற்றங்களை தண்டிக்கும் சட்டத்தைக் கொண்டு இருக்கின்றது. அதேநேரம் இனம், மதம், சாதி, நிறம், வர்க்கம் சார்ந்து விதிவிலக்கு பெற்று இயங்குவதே, இன்றைய நவதாராளவாத அமைப்பு முறைமையாகியும் வருகின்றது. இனம், மதம், சாதி, நிறம், வர்க்கம் சார்ந்த அரசியல், ஆளும் அதிகாரத்துக்கான உறுப்பாக்கி தனிமனித குற்றங்கள் கூட தண்டனையில் இருந்து விதிவிலக்கு பெற்றுவிடுகின்றது.


அதேநேரம் மக்கள் கூட்டம் மற்றொரு கூட்டத்தின் மீதான குற்றங்கள் தண்டிக்கப்படுவது என்பது, தனியுடமை முறைமைக்கே முரணானதாகிவிடும். பிறர் உழைப்பை திருடுவது குற்றமல்ல என்று வரையறுக்கும் போது, பிற ஒடுக்குமுறைகள் அதற்காகவே நிகழ்த்தப்படும் போது, சுரண்டல் வர்க்கத்தின் முன் அவை குற்றமற்றதாகின்றது.இங்கு தனியுடமை சிந்தனைமுறைமையைக் கொண்ட மனிதனின் சாரமே பிறரை ஒடுக்குவதன் மூலம் வாழ்வது தான். இங்கு இருந்து தான் பால், இனம், சாதி, நிறம் சார்ந்த, வன்மம் கொண்ட, எதிர் வன்முறைகள் எழுகின்றது.


இது பெண்ணை பாலியல் ரீதியாக மட்டுமல்ல, பிற இன மக்களை இன ரீதியாக, மத ரீதியான சாதி ரீதியாக, நிற ரீதியாக தாக்குகின்றது. அவதூறுகளைப் பரப்புகின்ற மனித இழிசெயல்களாக மாறுகின்றது. சமூக வலைத்தளங்களின் வருகையுடன், இந்த மொழி ரீதியான இழி பண்பு வீரியமடைந்த பண்பாக கூர்மையடைகின்றது.

இந்த வன்முறையானது பெண்ணுக்கு நடக்கும் போது மட்டும் பேயாட்டம் போடும் கூட்டம், இனம், மதம், நிறம், சாதி.. சாhந்து நடக்கும் போது கள்ள மௌனம் சாதிக்கின்றது. இதே போல் பெண் உடல் மீதான வன்முறைகளின் போது நடக்கின்றது. அதாவது பாலியல் வன்முறை குறித்து பேசுவோர், இனம் மதம், நிறம், சார்ந்து நடக்கும் வன்முறையின் போது மௌனம் சாதிக்கின்றனர். இதில் ஒன்றை சார்ந்து நியாயப்படுத்துவது அல்லது கண்டிப்பது நடக்கின்றது.


சமூகக் கேடுகளை ஒரேவிதமாக அணுகாது, பெண்ணென்றால் மட்டும் பேசுகின்றதன் பின்னால் இருப்பது கூட ஆணாதிக்கக் கண்ணோட்டம் தான். இந்த வகையில்

1.ஒரு மனிதன் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக குரல் கொடுப்பதற்கும், ஒன்றுக்கு எதிராக மட்டும் குரல் கொடுப்பதற்கும் இடையில் வேறுபாடு உண்டு.
2.பொதுவான சிந்தனைமுறைமைக்கு எதிராக குரல் கொடுக்காது, தனித்த குற்றம் மீது மட்டும் குரல் கொடுப்பது, நவீன ஒடுக்குமுறை (ஆணாதிக்க) வடிவம்.
3.தன்னை மனிதனாக முன்னிறுத்தாது இனம், மதம், சாதி, பால், நிறம் சார்ந்து குரல் கொடுப்பது கூட நவீன ஒடுக்குமுறை (ஆணாதிக்க) வடிவம் தான்.


முடிவாக
குற்றத்திற்காக தனிமனிதனை தண்டிப்பதுடன் சமூகத்தின் கடமை முடிந்து விடுகின்றது என்று கூறுவதே, தனியுடமையிலான அரசு கட்டமைப்பு மட்டுமின்றி, சிந்தனைமுறையுமாகும். இதைத்தான் தனியுடமை சமூக அமைப்புமுறைமையைப் பாதுகாக்கும் அரசுகள் கூறுகின்றன. இன்று போலி இடதுசாரியம் முதல் போலிப் பெண்ணியம் கதைக்கின்றவர்கள் பலர், இதையே வழி மொழிகின்றனர். குற்றங்களைக் கண்டிப்பதன் மூலம் இடதுசாரியமும், பெண்ணியமும் .. முடிந்து விடுகின்றதா? குற்றங்களுக்கும் சமூகத்திற்கும் தொடர்பில்லை என்று, குற்றங்களை கண்டிக்கும் எம்மை அதற்கு பொறுப்பாக்க முடியாது என்கின்றளவில், குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கும் சிந்தனைமுறையென்பது சமூகக் கேடானது.


மனிதன் சமூக மனிதனாக வாழும் போது, குற்றங்களும் மறைந்துவிடும். இதன் பொருள் மனிதன் சமூக மனிதனாக வாழமுடியாத ஒடுக்குமுறைகள் தான், தனிமனித குற்றங்களின் தோற்றுவாயாகும்.


ஒடுக்கும் சமூக அமைப்புமுறையே குற்றங்களின் தோற்றுவாயாக இருந்த போதும், தனிமனிதனுக்கு தன்னளவில் தனக்கும், பிறருக்கும் தீங்கு செய்யும் உரிமை கிடையாது. அதற்கான தண்டனை பெற்றாக வேண்டும்.