Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று கூறுவது தவறா!?

இஸ்லாமிய பயங்கரவாதம் என்று கூறுவது தவறு, இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது, இப்படி மழைக்கு முளைத்த காளான்கள், இடதுசாரியத்தின் பெயரில் உளறுகின்றனர். இந்தியாவில் இந்துப் பயங்கரவாதம் குறித்தும், காவிப் பயங்கரவாதம் குறித்தும், பார்ப்பனிய பயங்கரவாதம் குறித்தும் பேசும் இந்திய இடதுசாரி அரசியலுக்கு முரணாக, இலங்கை இடதுசாரிகள் பயங்கரவாதத்தின் மூலத்தை மறுதளிக்க முனைகின்றனர். பார்ப்பனியம், வெள்ளாளியம் .. என்று, சாதிய சிந்தனையைக் கூறக் கூடாது என்று எப்படி வாதிடப்படுகின்றதோ, அப்படித்தான் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று கூறக் கூடாது என்கின்றனர்.

நாங்கள் எங்கள் சமூகத்தை சாதியச் சமூகம் என்கின்றோம். அப்படி கூறக் கூடாது என்பது, தான் நவீன இடதுசாரியமோ?

இன்னொரு தரப்பு இஸ்லாமியப் பயங்கரவாதம் குறித்து வெளியார் தலையிடக் கூடாது, நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்கின்றனர். இதை இடதுசாரிகள் என்று கூறிக்கொள்வோர் மீளப் பதிவிட்டு, மற்றவர்கள் கதைப்பதை நிறுத்துமாறு மறைமுகமாக கோருகின்றனர். இதைத்தான் இந்தியாவில் காப்பரேட் காவி பாசிசத்தின் அடியாள் படையாக இயங்கும் தமிழ்நாட்டு பொலிசார் கூட, வெளியார் போராடக் கூடாது என்று கூறி வன்முறையை ஏவுகின்றது. இதைத் தான் இஸ்லாமியத்தின் பெயரில் முன்வைக்கின்றனர். வர்க்கப் போராட்டத்தை அரசியல் நடைமுறையாக கொண்டிராத இடதுசாரிகளும் முன்வைக்கின்றனர்.

இந்த இடதுசாரியமானது மிக இலகுவாக ஏகாதிபத்திய மற்றும் உள்ளுர் ஆட்சி அதிகாரத்தின் பின்புலமே, நடந்த பயங்கரவாதத்தின் பின்னனி என்று திரித்து காட்டி விடமுனைகின்றனர். இதன் மூலம் மத அடிப்படைவாதம் முதல் மதப் பயங்கரவாதம் வரை, தனக்கான சொந்த நிகழ்ச்சிநிரலைக் கொண்டுள்ளதை மறுக்க முனைகின்றனர். இதை மறுப்பதன் மூலம், மக்கள் பண்பாட்டுக்கான நடைமுறை சார்ந்த அரசியல் நிகழ்ச்சியை மறுப்பதுதான், கையறுபட்டுக் கிடக்கும் இலங்கை இடதுசாரியத்தின் வர்க்கத் தன்மையற்ற அரசியல் வெளிப்பாடாகும்.

மதவாதம் தொடங்கி மதப்பயங்கரவாதம் வரை வர்க்க ரீதியாக சுரண்டும் வர்க்கத் தன்மை கொண்டது என்பது, அது நவதாராளவாத உலகமயமாதலின் அங்கம் என்பது அரிவரி அரசியல். இதைச் சொல்லி வர்க்கத் தன்மையற்ற தங்கள் இடதுசாரிய நிலையை தக்கவைக்க முனைகின்றனர்.

மத அடிப்படைவாதம் முதல் மதப் பயங்கரவாதம் வரை, தனக்கான சொந்த நிகழ்ச்சிநிரலைக் கொண்டிருப்பதை மறுப்பது என்பது, அதற்கு எதிரான அரசியல் செயற்திட்டத்தை மறுப்பது தான். இதுதான் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதையே, கற்பனையானதாக கற்பிக்க முனைகின்றது.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்று கூறுவது இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தும், எமக்கு இடையில் உரையாடலைத் தடுக்கும் என்று கூறுவதன் பொருள், மதவாதங்களை அனுசரித்துக் கொண்டு புரட்சி செய்வது குறித்துக் கற்பனை செய்வது தான். இதன் மூலம் பேஸ்புக்கில் பற்பொடி போட உதவும்.

தன் சொந்த மதம் சார்ந்த பயங்கரவாதத்துக்கு எதிராக உரத்து குரல் கொடுத்து போராடாத சமூகம், அந்த பயங்கரவாதத்துடன் தன்னை பினைத்துக் கொண்டுள்ளது என்பது பொருள்.

சிலர் குறித்த மதப்பிரிவு ஒன்றுக்கு எதிராக முன்பு போராடியதை எடுத்து போட்டு, வரலாற்றை திரித்து தங்கள் வர்க்கத் தன்மையற்ற இடதுசாரி லேபல் வாழ்க்கையை நிறுவ முனைகின்றனர்.

இஸ்லாமிய சமூகத்தில் பல்வேறு மதப்பிரிவுகளும், மத அடிப்படைவாதங்களும் இருப்பதுடன், ஓன்றையொன்று எதிர்த்துப் போராடுகின்ற மதவெறிக் கூத்துக்களை கொண்டு, இடதுசாரியம் குளிர்காய முனைவது பகுத்தறிவுவாதமல்ல.

மதவாதம், மத அடிப்படைவாதம், மதப் பயங்கரவாதம் எல்லாவற்றையும் எதிர்த்து இஸ்லாமிய சமூகமும், இஸ்லாமில் இருந்து விலகிய பகுத்தறிவுவாதிகளும், நாத்திகர்களும் போராடி இருக்கின்றார்களா எனின், இல்லை. இஸ்லாமிய மதவாத சகதிக்;குள் முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சி என்பது, எதிர்ப்பின்றி அரங்கேறியதே வரலாறு. இந்த பின்னணியில் இஸ்லாமிய மதவாத தேர்தல் கட்சிகளும், மதவாத வாக்களிப்புகளும் நடந்தது என்பது உண்மை.

ஒரு சமூகத்தின் பெயரில் செயற்படும் அடிப்படைவாதம், பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாத மூடிய மதவாத சமூகம், பிற சமூகங்களை எதிரியாகவே முன்னிறுத்தி தான் இயங்குகின்றது என்பதே தான் உண்மை. அதற்கு விளக்கப் பிடித்துக் காட்ட இடதுசாரியத்தின் பெயரில் முனைவது என்பது, வர்க்க அரசியலை நீர்த்துப் போகச் செய்வதுதான்