வெளித் தோற்றத்தில், வெளியடுக்குகளில், வெளிப் பூச்சுகளில்.. காணப்படும் ஊழல், இலஞ்சம், அதிகாரத் துஸ்பிரயோகம், வீண் விரயம், பழிவாங்கல்கள், கொலைகள் தொடங்கி அரசியல் சட்டத்தை மதிக்காத எல்லாவிதமான மனிதவிரோத அசிங்கங்களையும் கொண்ட அரசில்
1.சமூகத்தின் அடிநிலையிலுள்ள மக்கள் அரசை அணுகுவதென்பதை சாத்தியமற்றதாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்கள் அரசிடமிருந்து அசிங்கங்களையும், அவமானங்களையும் எதிர்கள்ளும் அதேநேரம், பாலியல் இலஞ்சத்தைக் கோருமளவுக்கு அரசமைப்பு சீரழிந்தது. மத்தியதர வர்க்கத்துக்குக் கீழ் வாழுகின்ற, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையிது.
2.அரசு மற்றும் அதிகார வர்க்கமோ அதி சொகுசு வாழ்க்கைக்குள் தன்னை தகவமைத்துக் கொண்டு, திமிராக அடாத்தாக எதையும் மதிக்காது வாழ்ந்து வருகின்றது.
3.அன்னிய நிதி மூலதனமோ மக்களின் வரிப்பணத்தின் பெரும் பகுதியைச் சூறையாடிச் செல்லுகின்றது.
4. இலங்கையின் மிகப் பெரிய பணக்கார வர்க்கமோ, மக்களின் வரிப்பணத்தை தமதாக்கிக் கொள்வதுடன், பல்வேறு மோசடிகளிலும் ஈடுபடுகின்றது.
5. அரசு நிர்வாகமானது மதவாதம், இனவாதம், பிரதேசவாதம், சாதிய வாதம் .. மூலம் மக்களை பிரித்தாள்வதென்பது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் புரையோடியுள்ளது.
6.பாடசாலைகளில் பகுத்தறிவற்ற கல்வி, அறிவு சார்பற்ற கல்விமுறை என்பது.. மதக்கல்வி, மதவழிபாடுகள், மதப்பிரச்சாரங்கள்… மூலம், மாணவர்களைப் பகுத்தறிவுக்கு எதிரானதும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாதபடியாகவும் ஊழல் அதிகாரத்துக்கு அடிபணியும் அடிமைகளுமாகவே உற்பத்தி செய்கின்றது.
7. இப்படிப் பற்பல
இப்படி இலங்கை அரசைச் சுற்றி பல்வேறு உண்மைகளிருக்க, ஊழல்வாதிகளையும், அதிகாரிகளையும் சட்டத்தின் முன்கொண்டு வருவதன் மூலம், பிரச்சனைகளைத் தீர்க்க தேசிய மக்கள் சக்தி முனைகின்றது.
அதாவது சட்டத்தின் ஆட்சிமுறை பின்பற்றப்படாமையே, நாட்டின் பிரச்சனைகளுக்கான காரணம் என்று காட்ட முற்படுகின்றனர். பொருளாதாரக் சமூகக் கட்டமைப்பு, பிரச்சனைகளுக்கு காரணமல்ல என்பதன் மூலம், ஆட்களை மாற்றி ஊழலுக்கான அமைப்புமுறையை மாற்றமின்றி பாதுகாக்க முனைகின்றனர். நபர்கள் தான் பிரச்சனை, அமைப்புமுறையல்ல (சிஸ்ரமல்ல) என்கின்றனர்.
பொருளாதாரக் கட்டமைப்பின் மேலடுக்குகளிலுள்ள ஊழலைப் பற்றி பேசும் தேசிய மக்கள் சக்தி, பொருளாதார அடிக்கட்டுமானத்தை அப்படியே தொடர்ந்து பாதுகாக்க விரும்புகின்றது.
இது எப்படி என்பதை கார்ல் மார்க்ஸ் கூற்றிலிருந்து பார்ப்போம். "கம்யூனிசம் எந்த மனிதனிடமிருந்தும் சமுதாயத்தின் உற்பத்திப் பொருள்களைத் கையகப்படுத்திக் கொள்ளும் அதிகாரத்தைப் பறிக்கவில்லை. கம்யூனிசம் செய்வதெல்லாம், அந்தக் கையகப்படுத்தல் மூலமாக மற்றவரின் உழைப்பை அடிமைப்படுத்தும் அதிகாரத்தைத்தான் அவனிடமிருந்து பறிக்கிறது." கார்ல் மார்க்ஸ்சின் இந்தக் கூற்று தேசிய மக்கள் சக்தி எத்தகைய முதலாளித்துவம் என்பதை அம்பலமாக்குகின்றது. "மற்றவரின் உழைப்பை அடிமைப்படுத்தும் அதிகாரத்தை" முதலாளிகளிடம் விட்டு விட்டு, முதலாளிகளைப் பாதுகாக்கின்ற பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றது.
இந்த அரசியல் நிலைப்பாடு, Nஐ.வி.பி. அரசியல் ஊழல் மூலம் வந்தடைந்திருக்கின்றது. ஜே.வி.பி. தங்கள் கடந்தகால வர்க்க அரசியலைக் கைவிட்டதன் மூலம் சீரழிந்திருக்கின்றது.
1965 களில் Nஐ.வி.பி. குட்டிபூர்சுவா இளைஞர்களின் கனவுகளை அடிப்படையாகக் கொண்ட, தேசிய முதலாளித்துவ அரசியலை முன்னெடுத்தது. 1971, 1989-1990 களில் ஆயுதப் போராட்டத்தை நடத்தியவர்கள், படிப்படியாக 2000 க்குப் பின்பாக இனவாதக் கட்சியாக சீரழிந்து, 2010 களில் முதலாளித்துவக் கட்சியாக தன்னை மாற்றிக்கொண்டதுடன், இன்று தேசிய மக்கள் சக்தியாக தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றது.
இந்த அரசியல் சீரழிவை எதிர்த்து "மற்றவரின் உழைப்பை அடிமைப்படுத்தும் அதிகாரத்தை" முதலாளிகளிடம் விட்டுவிடாது தனதாக்கிக் கொள்ளும் வர்க்க அரசியலை முன்வைத்த புரட்சிகர பிரிவுகள் Nஐ.வி.பி.யில் இருந்து வெளியேறியதுடன், மக்கள் போராட்ட முன்னணியில் ஒரு அணியாக தன்னை இன்று முன்னிறுத்தி நிற்கின்றது.
இந்த வகையில் அரசியல் உள்ளடக்கம் - வேறுபாடுகள் என்பது, மக்கள் கோரும் மாற்றத்தை இரண்டு வெவ்வேறு உலக கண்ணோட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி நிற்கின்றது.
இந்த வகையில் தேசிய மக்கள் சக்தி உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சியாக சீரழிந்துள்ளது. டொலர் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு, ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தை தீர்வாக முன்வைக்கின்றது.
இங்கு டொலர் பொருளாதாரமே இலங்கையின் தேசியக் கொள்கையாக இருக்க வேண்டும் என்பது, ஏகாதிபத்தியங்களின் கொள்கை. இந்த வகையில் தேசிய உற்பத்தியென்பது ஏற்றுமதிக்கானது. முதலாளித்துவ உலகவொழுங்கு, இதையே கட்டமைத்துள்ளது. இந்த உலகப் பொருளாதார முதலாளித்துவத்தை முன்னிறுத்தி, அதை பாதுகாக்கும் பொறுப்பையேற்று ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி, டொலர் பொருளாதாரத்தை தனது இலக்காகக் கொண்டுள்ளது.
ஏகாதிபத்திய சமூகப் பொருளாதார உலக ஒழுங்கில் இயங்கும் இலங்கை சமூகப் பொருளாதாரத்தை மாற்றி, இலங்கையில் உழைக்கும் மக்களின் சமூகப் பொருளாதாரத்தைக் கட்டமைக்குமா என்ற கேள்வியில் இருந்து தான், உண்மையான மாற்றத்திற்கான சமூகப் பொது அடித்தளத்தை இனம் காணமுடியும்.
உலகமயமாதல் பொருளாதாரத்துக்கு பதில் தேசியப் பொருளாதாரத்தை தேசிய மக்கள் சக்தி மறுதலிக்கின்றது. மாறாக ஏகாதிபத்தியப் பொருளாதார கட்டமைப்பைப் பாதுகாக்கும் வண்ணம், அதன் மேலடுகளிலுள்ள கறைகளை அகற்றி அதற்குப் புது வண்ணங்களையிட விரும்புகின்றது. பழைய அதே ஆட்சியை, புது முகங்களைக் கொண்டு தொடரவுள்ளனர்.
இதை மூடிமறைக்கவும், தாங்கள் பூசி மூடிமறைக்கும் கறைகளைக் காட்டி, இதைச் செய்யக் கூடிய இடத்தில் தாம் மட்டுமே இருக்கின்றோம் என்ற அரசியலை முன்வைத்து வெற்றி பெற்று இருக்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார இலக்கென்ன? பொருளாதார இலக்காக இருப்பது, அதிகளவில் டொலரை திரட்டுவது தான். சர்வதேச நிதிமூலதனத்தின் வட்டியையும் முதலையும் திருப்பிக் கொடுக்கும், ஏகாதிபத்திய உலக ஒழுங்கை நிலைநாட்டவே தேசிய மக்கள் சக்தி முனைகின்றது.
இதற்குத் தடையான ஊழலும், ஊழல் அடிப்படையிலான அரசியலுமே காரணம் என்பதே தேசிய மக்கள் சக்தியின் கொள்கை. உலக முதலாளித்துவத்தை தங்கள் அரசியல் பொருளாதார கொள்கையாக ஏற்றுக் கொள்ளும் அதேநேரம், தேசிய முதலாளித்துவத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை முன்னிறுத்துகின்றனர்.
இதனாலேயே "செழுமையுடையவர் மேலும் செழுமையடைவதில் எமக்குப் பிரச்சனையில்லை, ஆனால் ஏழ்மையாக இருப்பவர் மேலும் ஏழ்மையாவதை விரும்பவில்லை" என்கின்றனர்
தொடரும்
19.10.2024
- சமூக மாற்றத்தை மறுதலிக்கும் தேசிய மக்கள் சக்தி . - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 3
- கள்ளரை வெளியேற்ற அனுரவுக்கு ஆதரவு" தெரிவிக்க வேண்டுமா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும்-பகுதி - 2
- மக்களின் குரலாக யார் இருக்கின்றனர்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் பகுதி - 1
- ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்
- பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஜே.வி.பி. குறித்த கற்பனைகளும் நிஜங்களும்.
- ஜே.வி.பி. மீதான அரசியல் அழுத்தங்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்
- தமிழ் தேசியமும் - சாராயக் கடையும் - பொலிஸ் அதிகாரமும்
- யாருக்கு வாக்களிக்க வேண்டும்!? ஏன்!? எதற்காக!?
டொலர் பொருளாதாரமா? தேசியப் பொருளாதாரமா? - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 4
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode