Language Selection

பி.இரயாகரன் -2024
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அரசமைப்பில் மதத்தின் தலையீடு தொடங்கி, காலில் விழவைக்கும் அடிமைத்தனம் வரை காணப்படுகின்றது. இப்படி இருக்க, இதன் மீதான தேசிய மக்கள் சக்தியின் கொள்கையென்பது, சந்தர்ப்பவாத அரசியலாக இருக்கின்றது. "வளமான நாடு அழகான வாழ்க்கை" என்று மக்களுக்கு வாக்குறுதியளிக்கும் கொள்கையறிக்கையானது, முரணற்ற முதலாளித்துவ ஜனநாயகத்தையே மறுதலிக்கும் வண்ணம், தங்களைத் தாங்களே மூடிமறைக்கின்றனர்.
அரசு, அரசு தலைவர்கள்.. தங்கள் மத நம்பிக்கையை முன்னிறுத்திப் பொதுவெளியில் செயற்பட முடியுமா? என்ற கேள்விக்கு தேசிய மக்கள் சக்தியின் பதிலென்ன?

இன்று
1.அரச தலைவர்கள், அரச அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் .. பல அரசு சார்ந்த அமைப்புகளில்,  தங்கள் தனிப்பட்ட மத நம்பிக்கையை அல்லது ஒரு குழுவின் நம்பிக்கையை முன்னிறுத்தி நிற்பதை அரசு தொடர்ந்து அனுமதிக்கப் போகின்றதா?
2.அரச நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் …  எங்கும் மதத்தை முன்னிறுத்திய வழிபாடுகளை தொடங்கி சடங்குகள் வரை தொடர்வது எந்த வகையில் சரியானது?
3.திறப்பு விழாக்களை தொடங்கி அடிக்கல்லை நாட்டுவது வரை, மதம் சார்ந்த மூடநம்பிக்கையை அனுமதிப்பதென்பதன் வழி, மதம் சார்ந்த அரசாக, அரசு இருக்கமுடியுமா?
4.கல்விக்கூடங்களில் மதம் சார்ந்த உடைகள், மத அடையாளங்கள் மூலம் மாணவர்களை, மக்களைப்  பிளப்பதை அனுமதிக்குமா?
5.வீதிகளில் மத அடையாளங்களை நிறுவுவது, மதம் சார்ந்த ஒலி மாசுக்களைக் கொண்டு பொதுவிடங்களை (மூடநம்பிக்கையை பரப்பும் அத்துமீறல்கள்) துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்குமா?
 
இப்படி மதம் சார்ந்த மூடநம்பிக்கையை கலாச்சாரத்தின் பெயரில் பொதுமைப்படுத்துவது, முன்னெடுப்பது, கட்டாயப்படுத்தப்படுவது.. என்பது, அரசு என்ற வகையில் பொது இடங்களில் அரச நிறுவனங்களில்  .. அனுமதிப்பது என்பது அரசியல் ஊழலாகும். அறிவியலுக்கு புறம்பான நம்பிக்கையை எந்த வகையிலும், எந்த நோக்கிலும் திணித்தாலும், அதுவொரு ஊழல்.
மனிதனை மற்றொரு மனிதனின் காலில் விழக் கோருவது என்பது, அடிமைத்தனத்தை ஊட்டி வளர்ப்பதாகும். கோயில்களில், பாடசாலைகளில், அதிகாரவிடங்களில், அரசியல்வாதிகளின், மதவாதிகளின் .. காலில் விழவைக்கும் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகள், எல்லாவிதமான  ஊழலுக்கான பொது அரசியல் அடித்தளமும், அதற்கான சமூக அடிமைத்தனமுமாகும்.
        
இந்தக் கேள்விக்கு, இந்த நடைமுறைக்கு தேசிய மக்கள் சக்தியின் பதிலென்ன? மதம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் கொள்கையென்ன? "வளமான நாடு அழகான வாழ்க்கை" என்ற தலைப்பில் வெளியான தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம், மதம், இனம்… சார்ந்த கொள்கைகளில் வெளிப்படையற்ற தன்மையையே கொண்டிருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி தன்னை மூடிமறைத்துக்கொண்டு, இனவாத, மதவாத ..வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கமே, இங்கு முதன்மை பெற்றுள்ளது. இப்படியான அரசியல் ஊழல் மூலம் தன்னை வெளிப்படுத்தியுள்ளது.
தனிமனித மத நம்பிக்கை தொடங்கி மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட மதம், மத நம்பிக்கை மீதான அரசின் கொள்கையென்ன? தனிமனித நம்பிக்கை, அரசின் கொள்கையாக இருக்க முடியுமா? அரசு மதம் சார்ந்ததாக இருக்கமுடியுமா?
இலங்கை மக்களைப் (உலக மக்களைப்) பிளந்து ஒடுக்கியதில், மதத்தின் பங்கு தனித்துவமானது. மதம் அரசியலில் தலையிடுமளவுக்கு, மதமே ஊழல்மிக்கதாக காணப்படுகின்றது. மதம் போதிக்கும் கோட்பாட்டைக் கடந்து, அரசில் மதத்தின் தலையீடு என்பதே ஊழல்தான்;. இந்த ஊழல் பற்றி, தேசிய மக்கள் சக்தியின் கள்ள மௌனம் எதைக் குறிக்கின்றது?
இலங்கையில் பொருளாதார ஊழலென்பது, இனம் மதம், சாதி, பிரதேசவாதங்ளுடன் கூடியது. ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத வண்ணம், ஒரு நாணயத்தின் இருபக்கமாகும். பொருளாதார ஊழல் பற்றிப் பேசும் தேசிய மக்கள் சக்தி, மறுபக்கமான அரசியல் ஊழலை முன்வைப்பதில்லை.
இன, மத, சாதிய .. ரீதியான ஒடுக்குமுறைக்கு தமக்குப் பங்கில்லை என்று சொல்வதல்ல மக்கள் அரசியல். மாறாக  
1.இன, மத, .. ஒடுக்குமுறைகளை எதிர்த்து அரசியல் ரீதியாக கடந்தகாலத்தில் என்ன செய்தார்கள்!?
2.தங்கள் அரசில் இன-மத கூறுகளுக்கு, எந்த இடமுமில்லை என்பதாக வெளிப்படையாக எதையும் முன்வைக்கவில்லை.
3.கடந்தகால பொருளாதார ஊழலில் ஈடுபட்டவர்கள், இன மத சாதி.. ரீதியாக மக்களைப் பிளக்கும் அரசியல் ஊழல்களிலும் ஈடுபட்டவர்கள். இப்படியிருக்க ஒரு பக்கத்தை மட்டும் முன்வைப்பது ஏன்?
இதை மூடிமறைத்த சந்தர்ப்பவாத அரசியலென்பது, ஊழலுக்கான பொது அடித்தளம்;. மதமென்பது ஊழலற்றதாகவும், அரசுடன் இணைந்திருக்க முடியும் என்ற பொதுக்கருத்தியல், ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரானது. 
இந்த வகையில் 
1.தத்துக்கும் அரசுக்குமான உறவென்ன?
2.அரசு மதத்திலிருந்து விலகி இருக்குமா?
3.மதம் தனிமனித நம்பிக்கை என்ற அடிப்படையில், மதத்தை அரசிலிருந்து விலக்கிக் கையாளுமா?
4.மதம் மூலம் முன்வைக்கும் மூடநம்பிக்கைகளை அரசும் தொடருமா? 
5.கல்வி நிறுவனங்களில், அரசு நிறுவனங்களில் மதம் என்ன பாத்திரத்தை வகிக்கும்?
6.கல்வியில் மூடநம்பிக்கையை கற்றுக் கொடுப்பது தொடருமா?
7.அறிவைப் புகட்ட வேண்டிய கல்விக் கூடங்கள், பல்கலைக்கழங்கள் வழிபாட்டிடமாக, மத அடையாளங்களை வெளிப்படுத்து; இடமாகியிருப்பதைத் தொடர்ந்து அனுமதிக்குமா?
8.இப்படிப் பல உண்மைகள் மேல் பற்பல கேள்விகளுண்டு.
தேசிய மக்கள் சக்தியின் வெளிப்படையற்ற அரசியல் கொள்கை, அரசியல் ஊழலுக்கான பொது அடிப்படைகளைக் கொண்டுள்ளது.

தொடரும்
25.10.2024

1.யார் செழுமையடைய போகின்றார்கள்? மக்களா!?-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 5
2.டொலர் பொருளாதாரமா? தேசியப்  பொருளாதாரமா?-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 4
3.சமூக மாற்றத்தை மறுதலிக்கும் தேசிய மக்கள் சக்தி-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 3
4.கள்ளரை வெளியேற்ற அனுரவுக்கு ஆதரவு" தெரிவிக்க வேண்டுமா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும்-பகுதி - 2
5.மக்களின் குரலாக யார் இருக்கின்றனர்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் பகுதி - 1
6.ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்
7.பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஜே.வி.பி. குறித்த கற்பனைகளும் நிஜங்களும்.
8.ஜே.வி.பி. மீதான அரசியல் அழுத்தங்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்
9.தமிழ் தேசியமும் - சாராயக் கடையும் - பொலிஸ் அதிகாரமும்
10.யாருக்கு வாக்களிக்க வேண்டும்!? ஏன்!? எதற்காக!?